“அம்மா பி பிளாக்கில் பர்ஸ்ட் பிளோர்ல ரூம் நம்பர் 112 ல தான் அப்பா இருக்காங்க. நீங்க போங்க எனக்கு கொஞ்சம் வெளிய போக வேண்டியது இருக்கு…” என சொன்ன மகனை முறைப்புடன் பார்த்தவர்,
“இப்ப கூட உனக்கு வேலை தான் முக்கியம்…” என அவர் கடிந்து கொள்ள,
“ம்ப்ச் சொன்னா கேளுங்கம்மா… நான் இப்ப உடனே கிளம்பணும். என்ன விஷயம்ன்னு நானே வந்து எல்லாத்தையும் விளக்கமா சொல்லறேன். முதல்ல உங்க வீட்டுக்காரரை கவனிங்க போங்க…” என அனுப்பி வைத்தவன், காரை எடுத்துக் கொண்டு ஜீவனாவின் விடுதிக்குத் தான் சென்றான்.
அவன் எண்ணியது சரியே என்பது போல மொத்த மூட்டை முடிச்சுகளையும் கட்டிக்கொண்டு புறப்பட்டு நின்ற ஜீவனாவை ஆயாசமாகப் பார்த்தான்.
விடுதியை இப்பொழுதே காலி செய்கிறேன் என அங்கிருந்த ஹாஸ்டல் வார்டனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அவர் பதிலுக்கு என்னவோ ரூல்ஸ் பேசிக்கொண்டிருந்தார்.
அமைதியாக இவன் சென்று அவளின் பின்னே நிற்க, “நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?” என அந்த வார்டன் இவனை பார்த்து விசாரிக்க, ஜீவனாவும் இவனை திரும்பிப் பார்த்துவிட்டு, உடனே முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இவங்களை பிக்கப் பண்ண தான் வந்தேன். என்ன பிரச்சினை மேம்?” என கௌதமன் விசாரிக்க, “நீங்க ஏன் பிக்கப் பண்ண வந்திருக்கீங்க? நீங்க யாரு?” என அந்த அம்மா குறுக்கு விசாரணை செய்தார்.
“மேம்… இவரோட கசின் தான் நான். என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க” என இவன் கொஞ்சம் கடுப்பான குரலில் கேட்டதும், “பாருங்க சார், ஜாயின் செய்யும் போதே காலி செய்யணும்ன்னா ஒரு மாசத்துக்கும் முன்னாடியே சொல்லணும்ன்னு சொல்லி தான் இருக்கோம். இப்ப என்னன்னா இந்த பொண்ணு வந்து ஒரு மாசம் தான் ஆச்சு. அதுக்குள்ள காலி செய்யறேன்னு சொல்லுது… எப்படி எங்களால உடனே அட்வான்ஸ் திருப்பி தர முடியும்?” என புகார் சொல்ல,
“திடீர்ன்னு எங்க அப்பா… அதாவது ஜீவனாவோட தாய் மாமாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு மேம்… இப்ப என்ன அட்வான்ஸ் அமௌண்ட் தர லேட் ஆகுமா?” என இவன் கேட்டுக்கொண்டிருக்க,
“ம்ப்ச்… உன்னை யாரு இப்ப இங்கே பஞ்சாயத்துக்கு வர சொன்னது? இவங்ககிட்ட அட்வான்ஸ் இப்ப வாங்கலைன்னா அப்பறம் இழுத்தடிச்சுட்டே இருப்பாங்க…” என அவனிடம் மெதுவான குரலில் கடிந்து கொண்டாள்.
“இப்ப என்ன நடந்துடுச்சுன்னு நீ பெட்டியை கட்டிட்ட? என்னை பார்த்தா உனக்கு பாவமா தெரியலையாடி?”
“உன் கூட பஞ்சாயத்து பேச எல்லாம் எனக்கு நேரம் இல்லை. நான் எங்க அம்மாவை பார்க்க போகணும்… முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு…” என அவள் திட்ட, அவன் அப்படி கேட்டுக் கொள்வானா என்ன?
“என்னையும் கூட கூட்டிட்டு போ. எனக்கும் அத்தையை பார்க்கணும்” என்றான் பிடிவாதமான குரலில்.
“எங்க இருந்து திடீர்ன்னு உனக்கு அத்தை முளைச்சாங்களாம்? இப்ப கிளம்ப போறியா இல்லையா” என அவள் கோபப்பட்டாள்.
“சார்…” என அவர்களின் பேச்சைக் கலைத்தார் அந்த வார்டன். “இப்ப எங்களால உடனே பணத்தைத் திருப்பி கொடுக்க முடியாது…” என அவர் கௌதமிடம் சொல்ல,
“ரூல்ஸ் படி எவ்வளவு பிடிக்கணுமோ அதை பிடிச்சிட்டு மீதியை இப்பவே கொடுங்க…” என ஜீவனா பிடிவாதமாக நின்றாள்.
அந்த வார்டன் மேடம் என்ன பேசியும் வேலைக்கு ஆகவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்த பணத்தைக் கறாராக வாங்கிக்கொண்டு தான் அங்கிருந்து கிளம்பினாள்.
கூடவே நடந்தபடி, “நல்லா பிடிவாதம் பிடிக்கிற… இதே மாதிரி பிடிவாதம் பிடிச்சு என்னை எப்படியாச்சும் கல்யாணம் பண்ணிக்க பேபி…” என சொன்னவன், அவள் எதிர்பாராத நேரம் வேகமாக அவளின் டிராலியை வண்டியில் ஏற்றி மூட, அதைப் பறிக்க வந்தவளின் ஹேண்ட் பேகையும் பறித்து அவனது வண்டியின் பின்சீட்டில் போட்டிருந்தான்.
“கெளதம்… என்ன விளையாட்டு இது? முதல்ல என் லக்கேஜ் எடுத்து கொடு… நான் ஆட்டோ பிடிச்சு போகணும்” என அவள் சத்தம் போட,
“ரயில்வே ஸ்டேஷன் போகணுமா? பஸ் ஸ்டாண்ட் போகணுமா? எங்கே போறதா இருந்தாலும் நானே டிராப் பண்ணறேன். உன்கிட்ட பேசியே ஆகணும். அடம் பிடிக்காம வண்டியில ஏறு” என கௌதமன் உறுதியாய் சொல்லிவிட, அவளோ வண்டியில் ஏற மறுத்து கோபத்தில் மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
சில நிமிடங்கள் நீண்ட பிறகும் இருவரும் இறங்கி வரவில்லை. “ஏன் என்கூட பேசினா உன் மனசு மாறி ஊருக்கு போகாம என்கூடவே இருந்துட போறியா என்ன?” என சீண்டினான்.
“ரொம்ப பழைய டிரிக்… இந்த லக்கேஜ் இல்லாம என்னால போக முடியாதுன்னு நினைக்கிறியா நீ? போன் போதும் ஜி பே பண்ணிக்குவேன்” என எரிச்சலாக சொல்ல, அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
“இப்ப என்கூட வரதுல என்ன பிரச்சினை உனக்கு? இப்பவே கையோட கடத்திட்டு போயி உனக்கு தாலி கட்டிட போறேனா?”
“நமக்கு ஒத்து வராதுன்னு உனக்கு புரியுமா புரியாதா? நான் இங்கே வேலைக்கு வந்ததே தப்புன்னு நினைச்சுட்டு இருக்கேன். இதுல உன்னை காதலிப்பேன் கல்யாணம் செய்வேன்னு எல்லாம் இமேஜின் பண்ணாத…” என சொன்னவளின் கண்களையே ஆழ்ந்து பார்த்தவன்,
“காதல் இவ்வளவு பெயின் தரும்ன்னு தெரியலைடி. ரொம்ப ஹர்ட் ஆகுது. உனக்கும் என்னை பிடிச்சிருந்தும் என் காதல் கை கூடாதுன்னு என்கிட்ட நீ திரும்பித் திரும்பி சொல்லும் போது…” என அவளை ஆழ்ந்து பார்த்துச் சொன்னவனின் விழிகளைத் தான் அவளுமே பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் மிக மெலிதாக நீர் கூட சேர்ந்திருந்தது.
இவனுக்கு இத்தனை வலி தருகிறதா என் நிராகரிப்பு! அவள் மனம் அங்கேயே சிக்கிக்கொண்டு தவித்தது.
“உண்மையா உனக்கு என்னை பிடிக்கலையா?” என்று கெளதம் கேட்டபோது அவன் குரலுக்கும் பார்வைக்கும் தன்னையறியாமல் கட்டுப்பட்டவள் போல அவனையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சொல்லு… எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லிடு. ஏன்னா உனக்கு பிடிக்கலைன்னு உறுதியா தெரிஞ்ச அப்பறமும் நான் உன் பின்னாடி சுத்தறது அநாகரீகம் இல்லையா?” என்றவன் கேட்டபோது அவள் பதில் சொல்லத் திராணி கூட இல்லாமல் எச்சில் விழுங்கினாள்.
“சொல்லு உன் மனசுல நான் இல்லாம தான் மாமா பொண்ணை பத்தி நான் கேலியா பேசினத்துக்கு நீ அத்தனை கோபப்பட்டியா? இன்னும் சொல்லப்போனா அந்த கோபத்துல தான் நீ என்கிட்ட முதல்முறை பேசி இருக்க… அப்பறமும் ஏன்டி என்னை தவிக்க விடற? ரொம்ப வலிக்குதுடி… என் காதலை சொல்ல முடியலை… உன்கிட்ட மனசு விட்டுப் பேச முடியலை… நீ ஊருக்கு போனா எங்கே உங்க அம்மாவுக்காக அவங்க பார்த்து வெச்சிருக்க மாப்பிள்ளையை கட்டிக்க சம்மதம் சொல்லிடுவியோன்னு மனசு அடிச்சுக்குதுடி… ம்ப்ச் என் நிலைமையை எப்படி உனக்கு சொல்லிப் புரிய வைக்க…” என்றவன் இயலாமையுடன் தலையைக் கோதிக் கொண்டான்.
அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம். மனம் பிசைந்தது. இவனை காதலிக்கிறாளா என்று கேட்டால் அப்படி உறுதியாக அவளால் எதுவும் சொல்லிவிட முடியாது. காலையில் அம்மா பேசியத்தைப்பற்றி யோசிக்கும் போது கூட இப்பொழுதே திருமணம் செய்துகொள்ள முடியாது என்று தான் யோசித்தாள். அந்த நேரம் இவன் வந்து காதல் சொன்னபோது கூட எரிச்சல் தான். ஆனால், இப்பொழுது யோசிக்கையில் இவன் மீது மனம் சலனப்பட்டிருப்பதை அவள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
“இப்ப என்னை நீ கல்யாணம் செஞ்சுக்கிறதால என்ன கெட்டு போயிடும்ன்னு நினைக்கிற? இத்தனை காலமும் அத்தையை அவங்க பிறந்த வீட்டுக்கே வர முடியாம எங்க பாட்டி செஞ்ச சதியை முறியடிக்க முடியும். அவங்களுக்குன்னு சேர வேண்டிய சொத்து பணம் எதையும் தராம ஏமாத்திட்டு இருக்காங்களே அதை ஒன்னுமே இல்லாம செய்ய முடியும். காரணமே இல்லாம பிரிஞ்சு இருக்கிற அண்ணன், தங்கச்சியை ஒன்னு சேர்க்க முடியும்… இப்ப இதுல என்ன நடக்கிறது உனக்கு சம்மதம் இல்லாம இருக்கு…” என்று பேசியவனின் குரலில் அவளுள் பெரும் தடுமாற்றம்.
அவள் அமைதியாகவே இருக்க, “எதாவது பேசுடி… இப்படி மௌனமா இருந்து என்னை வதைச்சிட்டே இருக்க…” என்று கெளதம் இயலாமையுடன் சொல்ல, “என்னால எதுவும் யோசிக்க முடியலை கெளதம். பிளீஸ் நான் ஊருக்கு போகணும்” என்று மட்டும் மெதுவான குரலில் சொன்னாள்.
“பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கூட நான் வர கூடாதா?” என்று அவன் கேட்டதும் அவளின் முகம் வாடியது. “சரி அப்செட் ஆகாத… போயிட்டு வா… ஆனா எங்க அப்பாவுக்கு சரி ஆனதும் நாங்க வருவோம்…” என்று உறுதியாகச் சொல்ல, அவள் சரி என்றும் சொல்லவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை.
சென்னைக்கு என்னென்ன கனவுகளோடு வந்தாளோ அதற்கு எதிர்ப்பதமாக மனம் முழுக்க பாரத்துடன் மீண்டும் சேலம் நோக்கி தாயைத்தேடி ஒரு பயணம்!