அங்கு வேதவல்லியோ ராதிகா இனி இங்கு வந்து போய் இருக்கக் கூடாது அது சுபத்ராவின் வாழ்வைப் பாதிக்கும் என்று மனசாட்சியே இல்லாமல் மகன், மருமகளிடம் பேசினார்.
“ஏம்மா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா? அவளோட வாழ்க்கையை அபகரிச்சுட்டு எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால பேச முடியாது. உங்க பொண்ணுக்கெல்லாம் ஊருல ஆம்பிளையா கிடைக்காது. போயி அக்கா புருஷன் தான் வேணும்ன்னு கர்ப்பமா இருக்கேன்னு பொய் சொல்லி இழுத்துட்டு வந்திருக்கா… அந்த பாவம் எல்லாம் அவளை சும்மா விடாதும்மா” தேவராஜன் ஆதங்கத்தில் பேச,
“சொந்த தங்கச்சியை விட உனக்கு அவ பெருசா போயிட்டாளா? அது தானே அவ புள்ளைக்கு காது குத்துன்னு தெரிஞ்சதும் ஓடி ஆடி வேலை செய்யறது என்ன? நகை வாங்கி போடறது என்ன? இதே என் புள்ளை கல்யாணத்துக்கு மூணாவது மனுஷன் மாதிரி ஒதுக்கம்… உன்னை எல்லாம் எப்படித்தான் நான் பெத்தேனோ?”
“ஆமா உங்க பொண்ணு நினைச்சப்ப எல்லாம் நினைச்சவன் கூட கல்யாணம் செய்வா… நான் மான ரோஷம் இல்லாம கல்யாணம் செஞ்சு வைக்கணுமா?” என இருந்த எரிச்சலில் சொல்லி விட்டார்.
“ச்சீ நாயே! என்ன பேச்சு பேசற… இந்த மாதிரி பேசற வேலை வெச்சுட்டேனா உன் தங்கச்சின்னு ஒருத்தியை தலையில தூக்கி வெச்சுட்டு ஆடறியே அவளை சந்தி சிரிக்க வெச்சுடுவேன் பார்த்துக்க. என்ன என்னால முடியாதுன்னு பார்க்கறியா? உன் மாமியார்காரி அந்த ஆள் மயக்கிய பார்த்து பிடிச்சு போயி உன் மச்சான்னுக்கு அவளை கட்டி வைக்கணும்ன்னு ஆசைப்பட்டா… சும்மா விடுவேனா நான்… அதுதான் அவளுக்கும் திருமூர்த்திக்கும் காதல்ன்னு கதை பரப்பி விட்டேன். என் கதையை மீறி வேற மாப்பிள்ளையை உங்களால பார்க்க முடிஞ்சதா? நான் நினைச்சா அவ பேரை எந்த லெவலுக்கும் கெடுக்க முடியும்” என ஆங்காரமாக பேச,
தேவராஜனும் தாமரையும் வாயடைத்துப் போய் விட்டனர். ‘ச்சே! என்ன பொம்பிளை இது எல்லாம்?’ என அவர்களுக்கு வெறுத்தே போனது.
“இப்ப சொல்லறேன் கேட்டுக்க… அவளும் இங்க வர கூடாது. நீங்களும் அவளை போயி பார்க்கக் கூடாது. அப்பறம் அவளுக்கு என்ன நடக்கும்ன்னு என்னால உத்தரவாதம் தர முடியாது” என்று மனதளவில் பலவீனப்படுத்த,
அவருக்குத் தங்கையை அப்படியே விட எப்படி மனம் வரும்? அன்னையிடம் சண்டை போட்டுப் பார்த்தும் பயன் இல்லை.
சரி என்னவும் செய்து கொள்ளட்டும் எனவும் உறுதியாக முடிவெடுக்க முடியவில்லை. தங்கையை இங்கேயே அழைத்து வந்து பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தாலும் திருமூர்த்தி வந்து போய் இருக்கும் வீடு என்பதால் அவளுக்கு நிம்மதி இருக்காது. அங்கே இருக்கும் இடத்திலும் இவர் மூலம் பெயர் கெட்டுப்போனால்… அவள் பாவம் ஒரு பெண் குழந்தையையும் வைத்துக்கொண்டு என்ன செய்வாள் என மனம் கலங்க,
“அவளை அவ புருஷன் கிட்ட இருந்து உங்க மக பிரிச்சா… சொந்த அண்ணன் கிட்ட இருந்து நீங்க பிரிக்கிறீங்க… ஆனா, என் தங்கச்சிக்கு யாரோட ஆதரவும் வேண்டாம் மா… அவ சுயம்பு மாதிரி. அவ எப்படி வாழ்ந்து காட்டறான்னு பாருங்க…” என அன்னையிடம் சொன்னவர், தங்கைக்கு என்ன மாதிரி எடுத்து சொன்னாரோ தெரியவில்லை. அதன்பிறகு இருவரும் தொடர்பில் இல்லை.
ஆனால், இன்று வரையும் குறையாத பாசத்தோடு தான் இருவரும் இருக்கிறார்கள்.
எந்த பெண்ணை இங்கு வரக்கூடாது என வேதவல்லி சட்டம் பேசினாரோ அதே பெண்ணையும் அவள் பெற்ற ரத்தினத்தையும் தேடி சில வருடங்களில் சுபத்ராவும் திருமூர்த்தியும் செல்ல தொடங்கினர்.
இருவருக்கும் குழந்தையே அமையவில்லை என்பதோடு ஏகப்பட்ட உடல்நலக்கேடு! பணம் எத்தனை சம்பாரித்தாலும் கையில் நிற்பதே இல்லை! குழந்தை ஏக்கம் தான் அதிகம்!
சொந்த பந்தம் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்பது போல பேச… பெண் பாவம் துரத்துகிறது என்று எண்ணி மகளைத் தேடி ஓடுவதும், ஒரு நாளுக்கு போலி வேஷம் போடுவதுமாக இருப்பார்கள். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராதிகாவை மனம் நோகடிப்பதும், மட்டம் தட்டுவதும் தான் அவர்களுடைய வேலையே!
ஆனால், ஜீவனாவுக்கு போலி வேஷம் புரியாதா… அம்மாவை அவர்கள் மனதளவில் பலவீனப்படுத்துவதையும் நோகடிப்பதையும் பார்த்துத் தானே வளர்கிறாள். அவளுக்கு பெருமளவு வெறுப்பு தான் அவர்களிடம்!
மொத்த கதையையும் தனக்குத் தெரிந்த அளவில் சொல்லிவிட்டு, “உங்க மாமன் எதுக்கு ஜீவனாவை இங்கே கூட்டிட்டு வந்தான்னு தான் எனக்கு தெரியலை” என்று மருத்துவர் ராஜேஷ் முடித்தார்.
“ஐயே! மாமா…” என்று மொத்த கதையையும் கேட்டுவிட்டு அலறி விட்டான் கௌதமன்.
“ஏன் கெளதம் என்ன ஆச்சு?” என ராஜேஷ் புரியாமல் கேட்க,
“மாமா இவளை ஒரு மாசமா எனக்கு தெரியும். என் மேல இருக்க கோபத்துல மேடம் நேத்து வரை ஒரு வார்த்தை கூட பேசினதே இல்லை… இன்னைக்கு தான் இருந்திருந்து கொஞ்சம் பேச தொடங்கினா… இப்ப இவங்க அம்மாவுக்கு இத்தனை அநியாயம் நடந்ததை தெரிஞ்சா எப்படி இனி என்கூட பேசுவா சொல்லுங்க… உங்களை யாரு இவ என் கூட இருக்கும் போது கதையை சொல்ல சொன்னது?” என புலம்பலாகத் தொடங்கியவன், கடைசியில் எகிறினான்.
அவர் நிறுத்தாமல் சிரிக்க, “என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என காய்ந்தான்.
“டேய்! டேய்! நானா சொல்லறேன்னு சொன்னேன். நீயா தான கேட்ட… அதுவும் எதுவா இருந்தாலும் இவளுக்கும் தெரியட்டும்ன்னு சொன்ன?” என ராஜேஷ் வம்பிழுக்க,
“இப்ப உங்ககிட்ட இவ்வளவு விலாவரியா யாரு கேட்டாங்க…” என அவரை திட்டியவன், அதிர்ச்சியுடன் நின்றிருந்த ஜீவனாவை நோக்கி, “இங்கே பாரு ஜீவி எது நடந்திருந்தாலும் சரி… இனி நான் எப்பவும் உன் பக்கம் தான்…” என்றான் நம்பிக்கையுடன்.
“ஆனா உங்க பக்கம் நிக்க எனக்கு விருப்பம் இல்லை…” வெறுப்போடு மொழிந்தவளை அதிர்ச்சியுடன் நோக்கினான்.
“என்னடி பேசற? பெரியவங்க பிரச்சினைக்கு நான் என்ன செய்வேன்?” என பரிதாபமாகக் கேட்டான்.
“இங்கே பாருங்க… எங்க அம்மா உங்களை எல்லாம் வேண்டாம்ன்னு தானே இருக்காங்க… முதல்ல எங்க அம்மாவை இவங்க என்ன சொல்லி மிரட்டறாங்கன்னு தெரிஞ்சுக்க நான் சென்னை வந்தது பெரிய தப்பு… இப்ப அவங்க வேண்டாம்ன்னு ஒதுங்கி இருக்கிற உங்க கூட எல்லாம் நான் பேசி, பழகி… இல்லை இனி இது போதும். இனியும் எங்க அம்மாவை நோகடிக்க என்னால முடியாது. இனி எதுவா இருந்தாலும் நான் எங்க அம்மா கூட தான் இருப்பேன்” என்றாள் உறுதியாக.
“ம்ப்ச்… இப்ப என்ன ஆயிடுச்சுன்னு…” என கௌதமன் சலிக்க, “இன்னும் என்ன ஆகணும்? எங்க அம்மா இவ்வளவு காலமும் தனியா தானே என்னை வளர்த்தாங்க… இனி மட்டும் எதுக்கு சொந்தம்ன்னு சொல்லிட்டு நீங்க எல்லாம்… இதுவரை நாங்க எப்படி இருந்தோமோ இனியும் அப்படியே இருந்துக்கறோம்… எங்க அம்மாவை மேலும் மேலும் நோகடிக்க என்னால முடியாது…”
“ஜீவனா… நீ… அது வந்து… உனக்கு இவனை பிடிச்சிருக்காம்மா?” என ராஜேஷ் கேட்டு நிறுத்த, அவள் அதிர்ந்தாள்.
சிறிது தடுமாறியவள், “அதெல்லாம் எதுவும் இல்லை அங்கிள். அப்படி எல்லாம் நான் யோசிச்சதே இல்லை” என சொன்னவளின் முகத்திலும் குரலிலும் உறுதியில்லை.
“உன் வாய் தான் அப்படி சொல்லுது மா… ஆனா உன் தடுமாற்றம் அது ஏன்னு யோசி…”
“அங்கிள் பிளீஸ்… எனக்கு இப்ப என் மைண்ட் புல்லா எங்க அம்மா தான்… இத்தனை காலமும் இவங்க எல்லாம் வேண்டாம்ன்னு தூரம் இருந்தவங்க இப்ப எதுக்காக நான் இங்கே வரேன்னு சொன்னதுக்கு மறுப்பு சொல்லாம விடணும்? அதோட எனக்கு அவசரமா மாப்பிள்ளை பார்க்கிறாங்கன்னா…” என்றவளின் முகமே பயத்தில் வெளிறிப் போனது.
“ஹே ஜீவி… ரிலாக்ஸ்… கண்டிப்பா நீ பயப்படற மாதிரி எதுவும் இருக்காது…” அவளின் கரத்தை தன் கரங்களுக்குள் பொதித்து வைத்து அழுத்தம் தந்து கௌதமன் சமாதானம் சொல்ல வேகமாக அவன் கையை உதறி அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.
அவளின் அச்சம் அர்த்தமற்றதாக இருக்க வேண்டும் என்று தான் அவனுக்கும் எண்ணம். அதற்காகத் தன்னை இத்தனை தூரம் நிராகரிக்க வேண்டுமா என்னும் கடுப்போடு அவளைப் பார்த்தான்.
முகம் திருப்பி நின்றிருந்தாள். அவளுக்கும் தன்னை பிடிக்கிறது என்ற அடையாளமாய் சற்று முன் மாமன் மகளைப்பற்றி பேசியதற்குக் கோபம் கொண்டிருந்தவள் இப்படி சிலுப்பிக்கொண்டு நின்றால் என்ன அர்த்தமாம்?
இவளை சரிகட்டி… இவள் அன்னையை சரிகட்டி… எல்லாமே மலைப்பாக இருந்தது. என்ன செய்து கரம் கோர்ப்பானோ பொறுத்திருந்து பார்க்கலாம்.