மகளின் திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் மாணிக்கம் இதய நோயால் உயிரிழந்து விட்டார்.
சுபத்ரா படிப்பை முடிக்கும் தறுவாயில் ராஜேஷுடன் திருமணம் பேசலாம் என வேதவல்லி இம்முறை பேச்சைத் தொடங்க, அதற்குள் சம்பந்தி வீட்டிலிருந்து ராஜேஷுக்கு பெண் அமைந்து விட்டதாக சொல்லி அழைப்பு கொடுக்க வந்து விட்டார்கள்.
அவ்வளவுதான் வேதவல்லி மீண்டும் ஒரு ருத்ர தாண்டவம். மருமகளை ஒரு வழியாக்கி விட்டார். செல்வம் என்ன எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை.
அவர் வாய்க்கு பயந்தும், வீட்டில் உண்டாக்கும் கலவரத்துக்கு பயந்தும் தேவராஜனும் எதுவும் எதிர்த்துப் பேசுவதில்லை.
தாமரையும் சுபத்ராவிடமிருந்து தன் தம்பி தப்பியதே போதும் என்ற மனநிலையில் இருந்தவள் வேதவல்லியின் கோபத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கத்தினால் கத்திவிட்டுப் போகட்டும். பதில் கொடுத்தால் இன்னும் தான் கத்துவார் என புரிந்து மாமனார், கணவனின் வழியையே தாமரையும் பின்பற்றி அமைதி காத்து நிராகரிக்கத் தொடங்கி விட்டார்.
வேதவல்லியின் கூத்து பத்தாதென்று சுபத்ரா காதலிக்கிறேன் என்று வந்து நின்றாள். வேதவல்லி என்ன எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை மகள். கணவனையும் மகனையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்த வேதவல்லியால் மகளை அடக்க முடியவில்லை. விளைவு காதல் திருமணம், அவனோடு வாழ்ந்த வாழ்க்கை கசப்பு என சுவற்றில் அடித்த பந்து போல சுபத்ரா ஆறு மாதத்தில் வீட்டிற்கு வந்து விட்டாள்.
இப்பொழுது சுபத்ரா பார்வைக்கு ராதிகா வாழ்க்கை எவ்வளவோ நல்ல இடத்தில் இருப்பது போலத் தோன்றியது.
திருமூர்த்தி படித்தவன், திருமணம் முடிந்ததும் ராதிகாவிற்கு அரசு வேலை கிடைக்க அந்த ஊருக்கே இவனும் சென்று வேறு இடத்தில் வேலைக்குப் போகிறான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை என அவளின் வாழ்க்கையைப் பார்க்கப் பார்க்க அத்தனை நிறைவாகத் தோன்றியது.
செல்வம் தான் உயிரோடு இருக்கும்போதே சொத்தை சரி சமமாகப் பிரித்து மூன்று பிள்ளைகளுக்கும் தந்துவிட வேண்டும் என நினைத்தார். அதற்குள் சுபத்ரா திருமண தோல்வி என வந்து நிற்க அவளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டியதாகிப் போய்விட்டது.
மருமகனுடன் சேர்த்து வைக்க அவர் எவ்வளவோ முயன்றார். ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை. மனைவி போலவே மகளும் இருக்கிறாளே என்ற கவலை ஒருபக்கம், என்ன இருந்தாலும் பெற்ற மகள் ஆயிற்றே அவள் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற தவிப்பு மறுபக்கம். அந்த கவலை தந்த பாதிப்பிலேயே சொத்தை பிரித்துத் தர வேண்டும் என்று எண்ணி இருந்தவர் அதை செய்யாமலேயே இந்த உலகத்திலிருந்து தவறி விட்டார்.
ஆனால், தேவராஜனிடம் சொல்லி இருக்கிறார். ராதிகாவிற்கான பங்கைத் தந்துவிட வேண்டும் என்று! உன் அம்மா மறுப்பாள், அவள் பெரிதாக நாடகம் ஆடுவாள். ஆனால், தங்கைக்கான பங்கை மறக்காமல் தந்துவிட வேண்டும் என்று அழுத்தி சொல்லியிருக்கிறார்.
இந்த சூழலில் தான், தந்தையும் மறந்து விட்டாரே தங்கைக்கு அவளுக்கு சேர் வேண்டிய சொத்தினை பிரித்துத் தர வேண்டும் என்று தேவராஜன் ராதிகாவை வீட்டிற்கு வர சொல்லியிருக்க, முறையாக என்னென்ன சொத்து. அதை எப்படி பிரித்துக் கொள்ளலாம் என இரு தங்கைகளிடமும் அம்மா, மனைவி முன்பு தேவராஜன் கலந்தாலோசித்தார்.
“அவன் தான் கூப்பிட்டான்னா நீயும் நாக்கை தொங்க போட்டுட்டு வந்துடுவியா? இதெல்லாம் உங்க பெரியப்பா உழைப்பு. உங்க அப்பா செஞ்ச வேலைக்கு நீங்க இங்கே தங்குனதுக்கும், உன்னை படிக்க வெச்சு கட்டி கொடுத்ததுக்குமே சரியா போச்சு… இன்னும் வேணும்ன்னு பேராசை பிடிச்சு வந்து உட்கார்ந்தா என்ன அர்த்தம்? சம்பாரிக்க வழியில்லாம இருந்தா இப்படித்தான் யாரு தான் பிச்சை போடுவாங்கன்னு பார்த்துட்டே தான் இருக்கணும்…” என கண்டபடி வேதவல்லி பேசிவிட,
முதலில் எதற்கு அண்ணன் அழைத்தான் என்றே ராதிகாவுக்கு தெரியாது. இப்பொழுது பெரியம்மா வழக்கம் போல தன் விஷ நாக்கால் இவ்வாறு தூற்ற, “பெரியம்மா… உங்க வயசுக்கு மரியாதை தந்தா உங்க பேச்சு எப்பவும் முறையாவே இருக்கிறது இல்லை…” என அதிருப்தியுடன் ராதிகா எதிர்த்துப் பேசினாள். முகத்தில் அத்தனை வெறுப்பு!
“வாயை பாரு… வாயை… பெரியவங்கன்னு மரியாதை இல்லாம எப்படி எதிர்த்து பேசற… அது தானே அம்மா, அப்பா இல்லாத அநாதை நாய்க்கே இத்தனை எகத்தாளம்… இன்னும் எல்லாரும் உயிரோட இருந்திருந்தா சொல்லவே வேண்டாம்…” என வேதவல்லி அதற்கும் திட்டினார். ராதிகாவின் முகமே வாடி விட்டது.
“பெரியவங்க பெரிய மனுஷத்தனமா பேசாட்டி அப்படித்தான் மா பதில் வரும். நீங்க கொஞ்சம் பேசாம இருங்க…” என தேவராஜன் அன்னையைக் கடிந்தபடி, மீண்டும் பேச்சைத் தொடங்க,
ராதிகாவோ மிகவும் கண்டிப்பான குரலில், “எனக்கு நம்ம வீட்டு சொத்தை பிரிக்கிறதில் விருப்பம் இல்லைண்ணா. நமக்கு இருக்கிறது அப்பாங்க கட்டி வெச்ச இந்த வீடும், நம்ம தொழிலும் தான்… இதை எப்படி பிரிப்பீங்க? வீட்டை வித்தா இல்லை தொழிலை பிரிச்சா? எதுவா இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லை. வீடு உங்களுக்குத்தான். ஏன்னா அப்பா, பெரியப்பா, பெரியம்மா வரை எல்லாரையும் நீங்க தான் பார்த்துக்கிறீங்க… இந்த வீட்டு மேல கடன் வாங்கி தான் நம்ம மூணு பேரு கல்யாணத்தப்பவும் செலவை சமாளிச்சோம். அந்த கடனையும் நீங்க தான் கட்டுனீங்க. அப்பறம் எப்படி நாங்க வீட்டு மேல பங்கு கேட்க முடியும்? தொழில் இப்பவும் ஓரளவுக்கு தான் போயிட்டு இருக்கு… அது விஸ்தாரமாகணும்ன்னா தொழிலை பிரிக்காம இருக்கணும். எங்களுக்கு வேணுங்கிறதை நாங்க சம்பாரிச்சுக்கிறோம்ண்ணா. என் பங்கா எனக்கு எதுவும் வேண்டாம்” என உறுதியாக ராதிகா சொல்லிவிட,
தாமரைக்கு அவள் பேச்சில் அப்படியொரு பிரமிப்பு. எப்படி நிமிர்வோடு இந்த பெண் இருக்கிறது என அவளின் தன்னம்பிக்கையை வியந்தார். ஆனால், வீட்டுப் பெண்ணுக்கு உரியதைச் செய்து தானே ஆக வேண்டும். எப்படியாவது பேசி சமாளித்து அவளுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
ராதிகா இத்தனை பேசியதும் திருமூர்த்தியின் போலி வேஷத்தை நம்பி தான்! அவனுக்கும் தங்கள் சொத்தின் மீது ஆசை இருக்கும் என தெரியாதவள் அவனிடம் கலந்தாலோசிக்காமலேயே இவ்வாறு பேசிவிட அவனுக்கு உள்ளுக்குள் எரிந்தது.
அவனது வன்மமான பார்வையை சுபத்ரா கண்டு கொண்டாள். அவளுக்கு என்னவோ அப்படி ஒரு சந்தோசம். தன் வாழ்க்கை மட்டும் மலரும் முன்பே கருகியிருக்க, இவளுக்கு இப்படி ஒரு வாழ்வா என்று உள்ளுக்குள் புகைச்சலுடன் இருப்பவளுக்கு ராதிகாவின் இந்த முடிவால் அவர்களுக்குள் சண்டை வெடிக்கும் என உள்ளுக்குள் குதூகலம்!
அதோடு திருமூர்த்தியின் தோற்றமும் நன்றாக இருக்க, இவளுக்கு எல்லாம் வந்த வாழ்வை பாரேன் என உள்ளுக்குள் புகைச்சல் இருந்து கொண்டே இருந்தது.
தேவராஜன் தங்கையின் பேச்சை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்படி சொல்லாத ராதி. அப்படின்னா தொழில்ல வர லாபத்துல பங்கா தந்துடறேன்…” என்றதும் வேதவல்லியின் முகம் கடுக்க, திருமூர்த்தியின் முகம் பிரகாசமானது.
“அண்ணா… நான் தான் வேண்டாம்ன்னு சொல்லறேனே! உங்க உழைப்புக்கு நான் பங்கு வாங்கினா எனக்கு கஷ்டமா இருக்கும். இந்த பேச்சை இத்தோட முடிச்சு விடுங்க…” என்று முடிவாக சொல்லி விட்டாள்.
ஆனால், அதுவரை தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் அதன்பிறகு சிறு சிறு இடர்கள் தொடங்கியது. சென்னை வந்துவிட்டு சென்றதிலிருந்து திருமூர்த்தி கைப்பேசியில் அதிக நேரம் செலவழித்ததும், அடிக்கடி வெளியூர் செல்வதும் நடந்தது.
ஆரம்பத்தில் வேலை என நினைத்தவளுக்குப் போகப்போக அதன் வேறுபாடு புரிந்தது. விளைவு சுபத்ரா கர்ப்பம் என வந்து நின்றார்கள். உடனே விவாகரத்து கொடு என ராதிகாவை நெருக்கினார்கள். யாரிடம் சொல்வாள் அவள்?
அண்ணன் தேவராஜனை தான் அழைத்தாள். அவனும் வந்து இருவரையும் அடித்து பிரச்சினை தான் பெரிதானது.
சுபத்ராவும் திருமூர்த்தியும் உறுதியாக இருக்கவே, ராதிகாவுக்கும் இப்படி தடம் மாறிய கணவன் தேவையே இல்லை என்னும் விரக்தி. வாழ்க்கையின் மிகப்பெரிய அடியை தாங்கிக்கொண்டு விவாகரத்து தந்து விட்டாள். அவள் விவாகரத்து வழங்கிய பிறகு தான் தெரிந்தது கர்ப்பம் என்று பொய் சொல்லித் தான் இவளை நெருக்கியிருக்கிறார்கள் என்று. மனிதர்களின் போலித்தன்மை புரிந்து மனம் கசந்தது.