ஈ.சி.ஆர்., சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த மிகப்பெரிய ரிசார்ட் அது! அந்த பொன் மாலைப் பொழுதில் கண்ணைப் பறிக்கும் ஒளி அலங்கார தோரணங்கள் அவ்விடத்தின் அழகைப் பன்மடங்கு உயர்த்தி காட்டியதோடு, அதன் ஆடம்பரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே சிறு சிறு குரோட்டான்ஸ், அதன் மேல் படர்ந்து ஒளிர்ந்து கொண்டிருந்த அலங்கார மின்விளக்குகள், மிகவும் மெலிதாக கசிந்து வந்து கொண்டிருந்த இசை என அனைத்தும் அந்த மாலை மங்கி இரவு கவிழத் தொடங்கிய இருள் பொழுதின் ரம்மியத்தை இன்னும் கூட்டிக் கொண்டிருந்தது.
பளீர் வெண்ணிற சேட்டின் துணியால் அழகாக கவர் செய்யப்பட்டு, அதன் மேலே அடர் சிவப்பு வண்ண வெல்வெட் துணி கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த டேபிள்கள், சேர்கள் எல்லாம் ஆங்காங்கே வட்ட வடிவினில் போடப்பட்டிருக்க, ஒவ்வொரு பகுதியிலும் கூட்டத்திற்குத் துளியும் குறைவில்லை.
தந்தையின் விருப்பத்திற்காக அந்த விருந்திற்கு தயாராகி வந்திருந்த போதிலும் அங்கே மனம் ஒன்றி பங்கு கொள்ள முடியாமல் ஜீவனா தடுமாறிக் கொண்டிருந்தாள்.
எப்பொழுது இங்கிருந்து செல்வோம் என்று உள்ளுக்குள் படபடத்துக் கொண்டிருந்தவளுக்கு, வெளியில் இன்முகமாக இருக்க வேண்டிய கட்டாயம். அவளின் தந்தை திருமூர்த்திக்காகவும், சிற்றன்னை சுபத்ராவிற்காகவும்!
இதுதான் அவள் பங்கு பெரும் முதல் தொழில்முறை விருந்து என்பதாலோ என்னோவோ விழாவிற்குக் கிளம்பும் போது வெகு ஆர்வமாகத்தான் கிளம்பினாள். ஆனால், இங்கு வந்து இந்த கூட்டத்தைப் பார்த்த பிறகு… இங்கு வந்திருந்தவர்களின் செழுமையும், பந்தாவும் அவளுக்கு தன்போல ஒரு விலகலைக் கொடுத்தது.
யாருமே இயல்பாக நடந்து கொள்வது போலத் தோன்றவில்லை. போலி பகட்டும் பந்தாவுமாக சுற்றித் திரிபவர்களிடம் அவளால் ஒன்றவும் முடியவில்லை. அவள் வளர்ந்த விதம் முற்றிலும் வேறாயிற்றே!
வைன் வண்ணத்தில் ஸ்லீவ்லெஸ் சல்வார் ஒன்றை இந்த பார்ட்டிக்காக அணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமாக அதே வண்ணத்தில் ஸ்ட்ரைட் கட் பேண்ட். சல்வாரிலும், பேண்ட்டிலும் தங்க ஜரிகைகள். இரண்டுக்கும் பொருத்தமாகத் தங்க வண்ணத்தில் டிரான்ஸ்பரெண்ட் துப்பட்டா… அவளின் பளிங்கு மேனிக்கு அந்த உடை அத்தனை பொருத்தமாக இருந்தது.
அளவான ஒப்பனை, கண்ணை உறுத்தாத வகையில் ரோஸ் கோல்ட் நெக்லெஸ், கர்ல்ஸ் செய்யப்பட்டு பிரீயாக விடப்பட்டிருந்த கூந்தல் என கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிர்ந்தாள்.
அவள் வயதொத்த பெண்களோ உடலை இறுக்கிப் பிடித்திருந்த தொடை வரையிலான உடைகளில் வலம் வந்து கொண்டிருக்க இவள் மட்டும் அந்த கூட்டத்தில் ஆட் ஒன் அவுட் போல தனித்துத் தெரிந்தாள்.
மற்றவர்களின் பார்வையிலேயே ‘பட்டிக்காடு’ என்கிற முத்திரை தெள்ளத்தெளிவாகத் தெரிய… இவளுக்கு அதில் எல்லாம் எந்த தாழ்வுமனப்பான்மையும் வரவில்லை.
தனக்கு அவர்களுடைய தோற்றமும் செய்கைகளும் செயற்கையாகத் தெரிவது போல… அவர்களுக்கு என் தோற்றம் பட்டிக்காடு மாதிரி தெரிகிறது போல என்று எண்ணிக் கொண்டாள்.
தந்தை அறிமுகப்படுத்தியவர்கள் அனைவரிடமும் இன்முகமாகப் பேசியவளுக்கு அவளின் தந்தை கொஞ்சம் வேறுபுறமாக நகரவும் தான் ஆசுவாசமே! சுபத்ரா ஏற்கனவே அங்கிருந்த கூட்டத்தோடு ஐக்கியமாகியிருந்தார்.
ஜீவனா இதுதான் சாக்கென்று கொஞ்சம் தள்ளி வந்து ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டாள். தனியாக வெறுமனே அமர போர் அடிக்கவே, ஒற்றைக் கையை நாடியில் கொடுத்தபடி அமர்ந்து கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கத் தொடங்கியவளுக்கு அது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. பொழுதும் நன்றாக போனது.
நான்கைந்து பெண்கள் நின்றிருந்த கூட்டத்தில் அவர்களின் உடை, நகை, ஹேண்ட்பேக் ஆகியவற்றின் விலைகளைப் பற்றி அலசல் போய்க்கொண்டிருந்தது போலும்… தங்களுடையது தான் சிறந்தது, உலகத்தில் இதுபோல எங்குமே கிடைக்காது என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தவர்களை சிறு புன்னகையுடன் பார்த்தபடி பார்வையை திரும்பியவள், அவர்களுக்கு சற்று தள்ளி ஐம்பது வயதைக் கடந்த வயதான ஒருவர் அந்த பெண்களைக் கண்ணிலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். கையில் மதுக்குடுவை… கண்ணில் காமம்… என அவர் நின்றிருந்த தோற்றம் இவளுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
முக சுளிப்புடன் வேறு பக்கம் பார்வையிட, தந்தை அவருடைய தொழில்முறை நண்பர்களுடன் சேர்ந்து மதுவோடு ஐக்கியமாகி விட்டது புரிந்தது. பதற்றத்துடன் சித்தி சுபத்ராவை தேட அவளின் கையிலும் மது அரக்கன் அழகாகத் தவழ்ந்து கொண்டிருந்தான்.
‘இதற்காகத்தான் அம்மா வேண்டாம் என்று சொன்னார்கள் போல…’ என எண்ணிய ஜீவனா பெருமூச்செறிந்தாள். தந்தையும் சித்தியும் நிதானத்துடன் இருந்தால் பரவாயில்லை என்று அவளின் மனதில் கவலை சூழ்ந்தது.
ஜீவனா அவளின் அன்னை ராதிகாவிடம் வளர்ந்தவள். தாயும், தந்தையும் விவாகரத்து பெற்று விட்டனர். அன்னை சேலம் மாவட்டத்தில் அரசாங்க பள்ளியில் ஆசிரியை, தந்தை அவரது இரண்டாம் மனைவியுடன் சென்னையில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் பார்ட்னராக இருக்கிறார்.
சுபத்ரா தொழிலதிபர் ஒருவரின் மகள். அவருக்கும் இது இரண்டாம் திருமணம் தான்.
ஜீவனாவும் சிவில் இன்ஜினியரிங் தான் படித்தாள். அதில் ஆர்வம் அதிகம். மொத்த வேலைகளும் அத்துப்படி என்றபோதும் இன்டீரியர் டிசைனிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம். அது தொடர்பாகத் தான் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை. படிப்பை முடித்து ஓராண்டு காலம் சேலத்தில் வேலை பார்த்து வர, அவளின் தந்தையின் ஆசைக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் தான் அவர் நிறுவனத்திலேயே வேலை பார்க்க சென்னைக்கு வந்திருக்கிறாள்.
இங்கு வந்தும் தந்தையுடன் தங்க விருப்பம் இல்லை என்று சொல்லி ஹாஸ்டலில் தான் தங்கிக் கொண்டிருக்கிறாள்.
திருமூர்த்திக்கு அதில் விருப்பமில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் இப்படியாவது மகளுடன் கொஞ்ச நாட்கள் இருக்க முடிகிறதே என்ற எண்ணத்தில் ஒப்புக் கொள்வதாக ஜீவனாவிடம் கூறினார்.
அவளுக்கு அவர் சொல்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இத்தனை நாட்கள் மகள் என்றாலே பாரமாக நினைப்பவருக்கு, இப்பொழுது என்ன பாசம் கூரையை உடைத்துக் கொண்டு கொட்டுகிறது என்கிற சந்தேகம் தான்!
ஆனால், மறுக்கவும் முடியவில்லை. அப்பாவும், சித்தியும் இதற்கும் அம்மாவை தான் திட்டுகிறார்கள். என்னவோ இவளுக்கு மூளையே இல்லாதது போல… அம்மா சொல்லி தான் இவர்களுடன் வேலைக்கு வர மறுப்பதாக அவர்கள் கட்டும் கதையை அப்படியே புறக்கணிக்கத் தான் ஆரம்பத்தில் தொடங்கினாள்.
ஆனால், சுபத்ரா கொஞ்சம் கூட இங்கீதமே இல்லாமல், “எங்கே பொண்ணை சென்னைக்கு அனுப்பி வெச்சா… அவர் இங்கே வர மாட்டாருன்னு நினைக்கறீங்களா?” என்று ராதிகாவிடம் கேட்டு அவரை முகம் சுளிக்க வைத்தார். இதற்கும் தந்தை, மகள் சந்திப்பே பொதுவான இடத்தில் தான் நிகழும். அங்கு ராதிகா வருவது கூட இல்லை. அப்படி இருந்தும் ஒரு பொதுவான குடும்ப விசேஷத்தில் சந்திக்க நேர்ந்தபோது இப்படி கேட்பவரை என்னவென்று சொல்வது?
சுபத்ராவின் பேச்சை எதேச்சையாகக் கேட்க நேர்ந்த ஜீவனாவிற்கு அப்படி ஒரு ஆத்திரம். ‘ச்சே! இவர்களிடம் எல்லாம் ஏன் அம்மா பேச்சு கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்…’ என்று கோபமாக வந்தது.
அம்மாவிடம் விசாரித்தால், “அதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாதுடா… நீ நினைக்கலாம் இவங்க சங்காத்தமே வேண்டாம்ன்னு நாம மொத்தமா ஒதுங்கி போயிடலாம் தானேன்னு… அம்மாவும் உங்க அப்பா என்னை வேண்டவே வேண்டாம்ன்னு சொல்லிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பறம் திரும்பி வர மாட்டாருன்னு தான் நினைச்சேன். ஆனா அப்படி நடக்கலை… கொஞ்ச வருஷத்துல உன் மேல உரிமை இருக்குன்னு வந்தாங்க… உன்னை அப்பப்ப பார்க்க விடணும்ன்னு கேட்டாங்க… சட்டத்துலேயும் அதுக்கு வழி இருக்கே… அதுதான்…” என்று பெருமூச்சை விட்டவர்,
“என்ன யாராவது எதையாவது சொல்லியிருப்பாங்க… பெத்த புள்ளையை தவிக்க விட்டுட்டான் அப்பறம் என்ன செஞ்சாலும் உருப்படுமா? அந்த பாவம் எல்லாம் சும்மா விடுமான்னு… அவங்க ரெண்டு பேரு கையில பணம் புலங்கறப்ப எல்லாம் எதுவும் உறுத்தாது… அதே பணம் குறைஞ்சா போதும் யாரு என்ன சொன்னாலும் பாவம் பண்ணிட்டோம், பெண் பாவம் பொல்லாததுன்னு பயந்துட்டு இங்கே ஓடி வந்துடறாங்க… நாம விலகி போனா… கோர்ட்டுக்கு போறேன்னு சொல்லுவாங்க இல்லையா அவங்களுக்கு தெரிஞ்ச அளவுல மட்டமா எதையாவது செஞ்சு வைப்பாங்க… எல்லாம் உனக்கு ஒரு கல்யாணம் செய்யற வரை… விடு பொறுத்து போயிடலாம். இவங்க கிட்ட வம்பு வளர்த்து நம்ம சாதிக்க போறது என்ன?” என்று ராதிகா சொல்லிவிட, ஜீவனாவுக்கு தான் என்ன சொல்வது என்று புரியவில்லை.