8

சிவப்பு திரவம் உள்ளே இறங்க  தன் மனதிலிருக்கும் வேதனையை நண்பர்களிடம் கொட்டிக் கொண்டிருந்தான் சசி மித்ரன்.

” என்ன பண்றதுன்னு தெரியல மச்சான்.. சினிமாக்குள்ள வர வரைக்கும் என்னடா சினிமா பெரிய பொல்லாத சினிமா.. நம்ம கிட்ட தான்  கதை இருக்கே. ஒரு புரொடியூசர் புடிச்சா நாளைக்கே டைரக்டர். இத்தனைக்கும் ரெண்டு ஷார்ட் பிலிம் பண்ணியாச்சு. அதுல ஒன்னு அவார்ட் வின்னிங். ஆனா அதெல்லாம் யாரும் மதிக்க மாட்றாங்க..

எங்க அப்பா.. அந்த ஆளு நினைச்சா  கண்டிப்பா என்னால படம் பண்ண முடியும். பெரிய பெரிய ஆளுங்கள எல்லாம் எங்க கடையோட கஷ்டமர்.. அவரோட ஃப்ரெண்ட்டு. ஒரு வார்த்தை சொன்னா ஏதாச்சும் சான்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கு. டைரக்டர் வேணாடா. அட்லீஸ்ட் அசிஸ்டன்ட் டைரக்டராவது ஆகலாம். இந்த ஆளு கல்லை முழுங்கன மாதிரி பேசாம இருக்காரு. இதுல தினம் வீட்டுல பிரச்சனை வேற.

என்ன செய்யறதுன்னு தெரியல மச்சான். வீராப்பா ஒரு வருஷம் டைம் கேட்டேன். இப்போ அந்த ஒரு வருஷம் முடியப்போகுது. நான் கூட ஈஸியா  ட்ரை பண்ணலாம் கிடைக்கலைன்னா மூவ் ஆன் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா இதுக்குள்ள கால விட்ட பின்னாடி தான் தெரியுது  சினிமா தான்டா எனக்கு எல்லாமே. என்னால அவ்வளவு ஈஸியா இதை விட்டுட்டு” கிளாசில் மீதமிருந்த திரவத்தை வாயில் சரித்தான் சசி மித்ரன்..

அவனை சுற்றியிருந்த நண்பர்கள் அனைவருமே சினிமாவில் ஏதோ ஒரு துறையில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தான். சிலர் ஏற்கனவே சினிமாத்துறையில்  கிடைத்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

சசியின் புலம்பலை கேட்ட விமல் அவன் சினிமாவில் எடிட்டிங் துறையில் இருக்கிறான்.

” சசி புலம்பாத. நான் ஒரு காண்டாக்ட் கொடுக்கிறேன். எனக்கு தெரிஞ்சவர்தான். படம் எடுக்குறது இன்ட்ரஸ்னு சொல்லிருக்காரு. சோ உனக்கு செட்டாகுதானு பாரு. எதுவுமே இல்லாததுக்கு ஒரு ட்ரை பண்ணி பாரு. இப்பவே ஒரு டெஸ்ட் போட்டு விடு. நைட் ஆயிருச்சு எப்படியும் நாளைக்கு காலையில தான் ரிப்ளை பண்ணுவாரு. அப்படி பண்ணலன்னா நீயாவே ஃபோன் பண்ணி கேளு. என் பேர சொல்லு அவரே கூப்பிடுவாரு.. முக்கியமான விஷயம் அவர் சொல்ற டைம்ல கரெக்டா போய் அங்க நில்லு.. உனக்கு அத பத்தி சொல்லணும்னு அவசியம் இல்ல நாலு மணின்னு சொன்னா மூனுக்கே போய் நிப்ப..” விமல் கொடுத்த எண்ணை சசி தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து கொண்டான்.

கூடவே விமல் கூறியதைப் போல  அந்த நபருக்கு தன்னைப் பற்றிய விபரங்களை குறுஞ்செய்தியாக அனுப்பியும் வைத்தான்..

வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி சென்று விட்டதாக இரண்டு டிக் காட்டியது.. அது காலை வரை வெண்மை நிறத்திலேயே இருந்தது..

” என்னடா ப்ளூ டிக் காட்டவே இல்ல. சரி நாமளே கால் பண்ணி பார்ப்போம்” காலையில் சசி அந்த நபருக்கு அவனே அழைத்தான்.

முதல் முறை ரிங் முழுதாக சென்று அடங்கியது. சசி நம்பிக்கையை விடவில்லை மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தான்.. இப்பொழுதும் முழுதாக ரிங் சென்று முடிந்தும் அழைப்பை ஏற்காமல் இருக்க சரி சிறிது நேரம் கழித்து முயற்சித்து பார்க்கலாம் என்று  அவனுக்கு அந்நேரம் தோன்றிய கதை பற்றிய குறிப்புகளை உடனே குறித்து வைத்துக் கொண்டிருந்தான்.

கதைக்குள் சென்று விட்ட பிறகு ஒரு மணி நேரம் எப்படி கழிந்தது என்று அவனுக்கே அறியவில்லை. திடீரென்று மீண்டும் அந்த நபரின் ஞாபகம் வந்துவிட திரும்பவும் அவருக்கு அழைத்தான்.

இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது..

“ஹெலோ” கரகரப்பான கட்டை குரல் எதிர்பக்கம் கேட்டது.

” சொல்லுப்பா இப்பதான் உன் மெசேஜ் படிச்சேன். காலையில ரெண்டு மூணு வாட்டி போன் பண்ணிருக்க. யாரு விமல் கொடுத்தானா”

” சார் ஆமா சார்” பணிவாக பேசினான் சசி.

” சரி மதியம் ஒரு நாலறைக்கு வா.. லொகேஷன் எங்கன்னு விமல் கிட்ட கேளு.. ஆப் அன் ஹவர் உனக்கு டைம். ” அழைப்பு துண்டிக்கப்பட உடனே விமலுக்கு அழைத்து  நடந்தவற்றை கூறி முடித்து அலுவலக  விலாசத்தை வாங்கிக் கொண்டான்.

உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது..

அடுத்த கணமே  கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. வெளியே ஓடிப் போனான்.

விசாலாட்சி ஊறுகாய் பாட்டிலை கீழே போட்டு அது உடைந்து  அந்த இடம் எங்கிலும் பரவி கிடந்தது.

“ம்மா என்னமா”

” என்ன எழவோ தெரியலடா கை வழுக்கிடுச்சு.. ” நம்பிக்கை பிறந்த அடுத்த நொடியே அதில்  மண்ணை அள்ளி கொட்டுவதை போல இந்த சம்பவம் நடக்க சசியின் மனம் சில வினாடிகள் உடைந்து,சிதறிய ஊறுகாய் போல பிசுபிசுத்தது.

பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொண்டவன் மீண்டும் கதைக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்..

தன்னுடைய ராசியான பேர்ல் யெல்லோ நிற ஷர்ட்டை மாற்றியவன் மணல் நிற கால் சராய் அணிந்து  ஒருமுறை கண்ணாடியில் தன்னைத்தானே சரி பார்த்துக் கொண்டான்..

கதைக்காக பிரித்தியாகமாக வரையப்பட்ட ஸ்டோரி போர்டையும் எடுத்துக் கொண்டான்.

தன்னுடைய கருப்பு நிற யமஹா ஆர் எக்ஸில் தயாரிப்பாளரின் அலுவலகத்தை நோக்கி பறந்தான்.

நான்கு முப்பதுக்கு அவர் வர சொல்லிருக்க  மூன்று நாற்பதற்கே  அவரின் அலுவலகத்திற்கு சென்று ரிசப்ஷனில் காத்திருந்தான்.

அவனுக்கு முன்னாடி இருவர் அமர்ந்திருந்தார்கள்.. அவர்களைப் பார்த்து சினேகமாக சிரித்தான். வரவேற்பு அறையில் இருந்த ஒரு பெண்

” உங்க பேரு.. என்ன ப்ரொபோஸ்காக வந்து இருக்கீங்க சார்..” கேட்டதும்

வேகமாக எழுந்து அந்த பெண்ணை நோக்கி நடந்தவன்
” சார் நாலு முப்பதுக்கு வர சொன்னாரு.. ஸ்டோரி டெல்லிங்”

” ஓகே சார் உங்க பேரு கான்டக்ட் நம்பர எழுதிருங்க” என்றபடி அவன் முன்னால் ஒரு நோட்புக்கை நகர்த்தினாள். சசி அவள் கூறியவற்றை எழுதியவன் மீண்டும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான். கதையைப் பற்றி தனக்குள் உரு போட்டுக் கொண்டான்.

அவனுக்கு முன்னிருந்த இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தயாரிப்பாளர் அறைக்குள் சென்று வர  இறுதியாக சசியின் முறை வந்தது.

மணி சரியாக நான்கு முப்பது.. தங்க நிற கண்ணாடி சட்டத்தின் பின்னால்  கணக்கிடும்  பார்வையோடு முகம் தேஜஸில் மிளிர ஒயிட் அண்ட் ஒயிட் பேண்ட் ஷர்டில்  ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கே அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னால் சுவரில் பத்தடி உயரத்தில் சாய்பாபா படம் மாட்டப்பட்டிருந்தது.

அந்த அறையே ஜவ்வாது வாசத்தில் மண மணத்தது. சசி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அவன் கால்கள் புல்லரித்தன.

” வாங்க தம்பி”என்று வாய் நிறைய வரவேற்றார்.

” வாங்க தம்பி உட்காருங்க டீ காபி ஏதாவது சாப்பிடுறீங்களா.. ” அவர் முன்பு அமர்ந்த சசி தன்னம்பிக்கையோடு

” இல்ல சார் அதெல்லாம் ஒன்னும் வேணா”

” அப்ப சொல்லுங்க என்ன மாதிரி கதை பண்ண போறீங்க.. இதுக்கு முன்னாடி ஏதாச்சும் கதை பண்ணிருக்கீங்களா. ஏதாச்சும் படத்துல வொர்க் பண்ணிருக்கீங்களா ஷார்ட் பிலிம் ஏதாச்சும்”

” சார் நான் ரெண்டு ஷார்ட் பிலிம் பண்ணி இருக்கேன். கதை சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் நான் விஷுவல் உங்களுக்கு காட்டுறேன் சார்.. “

“என்ன ஜார்னர்ல பண்ண போறீங்க”

“ரியலிஸ்டிக்”..

“சார்..”சசி எழுந்து நின்றான்..

“என்னப்பா”

“இல்ல சார்.. நின்னுட்டு சொன்னா தான் சார் எனக்கு சொல்ல வரும்”..

“சரிப்பா”

சசி.. கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சத்தை எடுத்து உதட்டில் வைத்து முத்தமிட்டு கதை சொல்ல தொடங்கினான்.

“சார் ஹீரோ ரொம்ப சாதாரணமானவன். படிப்புல சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல. வீட்டில பிரஷர். ஃபேமிலிக்காக ஏதோ ஒரு டிகிரி எடுத்து படிச்சு முடிக்கிறான். படிச்ச படிப்புக்கு அவனுக்கு வேலை கிடைக்கல. அவனும் நாயா பேயா வேலை தேடி அலைஞ்சு வீட்டில ஒரு வாய் சோறு திங்க முடியாத அளவுக்கு பேச்சு வாங்கி கடைசியில மனசு நொந்து  படிச்ச படிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு வேலைக்கு போறான்.

படிச்ச படிப்புக்கு தான் வேலை கிடைக்கல கிடைச்ச வேலையாவது ஒழுங்கா செய்யலாமுன்னு பார்த்தா அங்க இருக்குற எல்லாரும் அவன டோமினேட் பண்றாங்க. வேலை இடத்திலேயும் ஒரு பொலிடிக் நடக்குது..

ரொம்ப டிப்ரசன்குள்ள போறான். யார்கிட்டயும் சொல்ல முடியல. அடுத்தவன் கிட்ட கைகட்டி வேலை செய்றது சுத்தமா அவனுக்கு செட் ஆகல. சரி சொந்தமா ஒரு தொழில் செய்யலாம்னு யோசிச்சு மீன் வளர்ப்பு படிக்க போறான்.. கோர்ஸ் கம்ப்ளீட் ஆனதும்  லோன் கேட்டு பேங்க் பேங்காக ஏறி இறங்குறான். எல்லா பேங்க்லையும் உன்கிட்ட அடமானம் வைக்க என்ன இருக்குனு கேக்குறாங்க. திறமை மட்டும் தான் கையில இருக்குன்னு  எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு அவன் கெஞ்சறான்.

திறமையோடு சேர்த்து பணமும் கொடுக்கிறவங்களுக்கு  லோன் கிடைக்குது. திறமையை மட்டும் வச்சுக்கிட்டு இவன் வெறும் கையோட நிக்கிறான். வயசு ஏறிக்கிட்டே போகுது. வீட்டில வேலைக்கு போகலன்ற பிரஷரோட சேர்த்து  கல்யாணம் பண்ற பிரஷரும் சேர்ந்துக்குது.

உருப்படியா ஒரு வேலை வெட்டி இல்லாதவனை எந்த பொண்ண கல்யாணம் பண்ணனும்னு இவன் சண்டை போடுறான். என்னால லைஃப்ல ஜெயிக்காம கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்றான். அவங்க அம்மா எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி  எப்படியோ அவனை சம்மதிக்க வைக்கிறாங்க.

விருப்பமே இல்லாம அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள்  அந்த பொண்ணு இவன் மேல  பாசமா இருக்க இவனுக்கும் மனசு மாறுது.. அந்த பொண்ணோட அப்பா  ஓட்டல் பிசினஸ் வச்சு கொடுக்குறாரு. இவனுக்கு விருப்பமே இல்லனாலும்  பொண்டாட்டி மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு  கொஞ்ச நாள் அந்த பிசினஸை பார்க்கிறான்.

பொண்டாட்டி கன்சீவ் ஆகி அவன் அப்பா ஆகுறான். குழந்தை பொறக்குது. லைஃப் அப்படியே மூவ் ஆகுது.. குழந்தை வளருது. ஒரு நாள் அந்த குழந்தை கேக்குது.. அப்பா எம்பிஷனா என்னப்பானு.. அவன் என்னன்னு பதில் சொல்லுவான்.. அவனோட ஆசை கனவு எல்லாமே வேற. இந்த சொசைட்டி அவனுக்கு கொடுத்தது அவன் மேல திணிச்சது வேற.

ஆரம்பத்திலிருந்து அவனோட மனசையும் விருப்பத்தையும் புரிஞ்சு அதுப்படி அவனை வழி நடத்திருந்தா இந்நேரம் அவனும்  அவனுக்கு பிடிச்ச துறையில நல்லா வந்திருப்பான். இப்படி மாமனாரோடு தயவுல வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்க மாட்டான்..

இந்தியாவுல ஒரு பையன் பிறந்துட்டாலே  வீடு கட்டறதுல இருந்து கூட பொறந்தவங்கள கர சேர்க்கிற வரைக்கும் எல்லாமே அவன் தலையில தான். தாய்மாமென்ற பேர்ல கொள்ளை அடிக்கிறாங்க.

கடன உடன வாங்கி கூட பொறந்தவங்களுக்கு செய்யறான். ஆனா அவன் குடும்பம்? அவன் பொண்டாட்டி பிள்ளைக்கு யார் செய்றா? நம்ம ஹீரோ எல்லாத்தையும் யோசிச்சு பார்க்கிறான். இருக்கிறது ஒரு லைப்.. இன்னமும் அவனுக்கு டைம் இருக்கு. சோ அவனுடைய எம்பிஷன நோக்கி போறான். அவ எம்பிஷனை அடைஞ்சானா இல்லையான்னு தான் கதையே..” சசி அந்த கதாபாத்திரமாகவே தன்னை உணர்ந்து முழுதும் நடித்தே காட்டினான்.

கதையைக் கேட்ட தயாரிப்பாளர்  பாராட்டும் விதமாக இலகுவாக இரண்டு முறை கைதட்டினார்..

” கதையெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஹீரோ இருக்காரு.. வில்லன் யாரு ஹீரோயின் யாரு.. படத்துல ஃபைட் இருக்குதா. குத்து பாட்டு இருக்குதா. ரொமான்டிக் சீன் இருக்குதா.. சேசிங் இருக்குதா..” இப்படி அவர் விடாமல் கேள்வி கண்களை தொடுக்க சசி பதில் சொல்லாமல் நின்றான்.

” சார் இது ஹீரோ லைப் சம்பந்தப்பட்ட கதை சார்.. இங்கே ஹீரோ ஹீரோயின் எல்லாம் இல்ல சார் எல்லாருமே கேரக்டர்ஸ்.. சிட்டுவேஷன் தான் சார் வில்லன். அவங்க எப்படி அத கடந்து வராங்கன்னு தான் நான் படத்துல சொல்ல வரேன்.

” நீ சொல்ல வர சரி. ஆடியன்ஸ் எப்படி எடுத்துப்பாங்க.. இப்போ நான் கேட்ட கேள்வி எல்லாமே ஆடியன்ஸ் கேட்பான்.. கமர்சியலா கதையை மெருகேத்து. ஒரு வில்லனை உருவாக்கு. ஒரு சேசிங் உருவாக்கு. ஒரு ரொமான்டிக் சீன வையி. இப்படி எதார்த்தமான இந்த கதையை கமர்சியலா மாத்துப்பா. அப்பதானே காசு பாக்க முடியும்.. “

சசிக்கு தூக்கி வாரி போட்டது.

” சார் என்னுடைய ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் வேற சார். நான் சொல்ல வர ஃபிளாசாபி நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையுமே ஒரு இந்திய குடிமகன் அனுபவிக்கிற வலி சார். இது சாதாரண கமர்சியல் படம் இல்ல சார். காலத்துக்கும் நிலைச்சு நிக்கிற கல்ட் மூவி சார். இது ஒரு ட்ரெண்ட் செட் உண்டு பண்ணும் சார்.”

“ச்சே ச்சே இந்த சோதனை முயற்சி எல்லாம் பண்றதுக்கு நிறைய ஆளு இருக்காங்க. கமர்சியல் படம் எடுக்க தான் நான் காத்துட்டு இருக்கேன். அதையே கமர்சியல் ஆக்கு.  எடிட்டர் விமல் சொன்னானு உன்னை வர சொன்னேன். இதுக்கு மேல உனக்கு நான் நல்லது செய்யணும்னா “

ஒரு லேமினேஷன் செய்யப்பட்ட லிஸ்ட்டை தூக்கி சசியின் முன்பு போட்டார்.

” போன பத்து வருஷமா வந்த கமர்சியலா ஹிட்டான படத்தோட லிஸ்ட் இது.. முடிஞ்சா எல்லா படத்தையும் பார்த்து அதுல இருக்கிற நல்ல சீன்ஸ எல்லாம் உனக்கு ஏத்த மாதிரி உன் கதையில கொண்டு வா. இதெல்லாம் சக்சஸ் ஃபார்முலா. அவ்வளவுதான் என்னால முடியும். ” லிஸ்ட்டை பார்த்த சசி

” சரி சார் ட்ரை பண்றேன்.. ” லிஸ்ட்டை தொட்டுக் கூட பார்க்காமல்  சென்றான் சசி. வெளியே வந்து பார்க்கும் போது அவனைப் போலவே கனவுகளை சுமந்து, கதைகளின் உயிர் கொடுக்கும் அன்னையாய் அங்கே இன்னும் மூவர் அமர்ந்திருந்தார்கள்.

வேகமாக வெளியே வந்த சசி தன்னுடைய பைக்கை எட்டி உதைத்தான்.. ஆத்திரம் தொண்டை வரை அடைத்தது. ஆனால் இங்கே பணிவு மிகவும் அவசியம்..

வேகமாக வண்டியில் ஏறி அமர்ந்த சசி அதனை உயிர்பிக்க முயற்சித்தான். வண்டி செல்ஃப் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் உதைத்தான்..

“ச்சே”என்று வண்டியிலிருந்து இறங்கியவன் அதனை உருட்டி கொண்டே நடக்க ஆரம்பித்தான்.. வானம் கறுத்து பேய் மழைக்கான அடையாளமாக பொட்டு பொட்டாக தூறல்கள் படுவேகமாய் பூமியை வந்தடைந்தன.. வானத்தை அண்ணாந்து பார்த்த சசி வேகமாக நடக்க ஆரம்பித்தான்..

அப்பொழுது ஒரு குரல்.

“ஹேய் மழைடி.. கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் போ” என்கிற குரலைத் தொடர்ந்து

“இல்லடி.. இந்த பஸ் மிஸ் பண்ணிட்டா  மழைல பஸ் கிடைக்கிறது கஷ்டம். நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்..” என்றபடி குடையை விரித்து  அதன் கீழ் தோகை மயிலாக  அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள் தென்றல்..

பைக்கை மெல்ல உருட்டி கொண்டிருந்தவன் தென்றலை பார்த்ததும் செல்ப் எடுக்காத வண்டிக்கும் நேரம் காலம் தெரியாமல் பெய்து கொண்டிருந்த மழைக்கும் மனதார நன்றி கூறினான்.