தலைக்குள் அவனின் கதைகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. அன்று காலை கூட அவனுக்கும் அவனின் தகப்பன் சோமசுந்தரத்திற்கும் இதனால் ஒரே கலவரம் வீட்டில்.. பெற்றோரின் பேச்சை மீறும் பிள்ளையல்ல சசி.. அவர்கள் சொன்னது போல தான் அவனின் வாழ்க்கை இந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை இருந்தது. அனைவருக்கும் ஒரு கனவு இருப்பது போல சசியின் கனவு சினிமாவாகி போனது அவனை சுற்றியுள்ளவர்களுக்கு பெரும் துயரமாகி போனது..
” விசாலாட்சி சொர்ண மாளிகை ” என்ற பெயர் தாங்கிய கடைக்குள் நுழைந்தார் சோமசுந்தரம்..
இன்று நகரின் பிரசித்தி பெற்ற நகைக்கடையாக இக்கடையை கொண்டு வருவதற்கு அவர் பட்ட பாடு அந்த ஈசன் மட்டுமே அறிவார். மாமனாரின் சொத்துதான். ஆனால் அதன் உழைப்பு சோமசுந்தரத்தினுடையது..
இரண்டு மகன்கள் பிறந்ததுமே ஒரே கடையாக இருந்ததை தன்னுடைய கடின உழைப்பால் இரண்டாக மாற்றினார் சோமசுந்தரம். தனக்கு பிறகு இரண்டு மகன்களும் கடைக்காக அடித்துக் கொள்ளக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையே இதற்கு காரணம்..
என்ன செய்து என்ன? தான் சாசுவாதமாக இருக்கும் போதே தன்னுடைய மகன்களை கடையின் முதலாளியாக பார்க்க வேண்டும் என்பது சோமசுந்தரத்தின் வாழ்க்கை லட்சியம். தேவாவை பற்றி அவருக்கு கவலை கிடையாது.. தாயின் தலையில் அடித்த சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் படிப்பு முடிந்ததும் நகைக்கடை பொறுப்பை எடுத்துக் கொள்வதாக.
சோமசுந்தரத்தின் கவலை முழுவதும் பெரியவனான சசி மித்ரனை சுற்றி வந்தது. அவர் கொடுத்த கெடு முடிவதற்கு இன்னும் சில மாதங்களை எஞ்சிருக்க இன்று காலை மீண்டும் தந்தை முன்பு வந்து நின்றான் சசி மித்ரன்.
ஒரு மாத காலமாக மழிக்கப்படாத தாடியும், மூன்று மாதங்களாக கத்திரியை காணாத தலைமுடியும் கண்டபடி கலைந்து கிடந்த கூந்தலை அள்ளிக் கொண்டையாக அவன் முடிந்திருந்த கோலமும் அப்படியே இட்லி தட்டை தூக்கி அவன் முகத்தில் அடிக்க வேண்டும் என்கிற வேகத்தையும் கோபத்தையும் ஒருங்கே சோமசுந்தரத்திற்கு கொடுத்தன..
எப்பொழுது பார்த்தாலும் ஏதோ ஒரு சிந்தனையில் சிக்கிக் கொண்டு தன் போக்கில் பேசிக் கொண்டிருப்பவனை காண யாருக்கு தான் பிடிக்கும்?
” ஆமா நேரா நேரத்துக்கு கொட்டிக்கிட்டு மூட்ட தூக்க போறான்ல உன் மவன்.. ஏற்கனவே அவன் கிட்ட சொல்லிருக்கேன்.சூடு சொரணை உள்ளவனா இருந்தா என் காசுல திங்க கூடாது.. ” சோமசுந்தரத்தின் வார்த்தைகள் சசியின் கோபத்தை தூண்டி விட்டது.
” ம்மா இப்ப நான் உன்கிட்ட சோறு போடுன்னு கேட்டேனா. நான் வந்த விஷயமே வேற.. ” ஒருவேளை கணவன் முன்னிலையில் பணம் கேட்டு விடுவானோ விசாலாட்சி மகனுக்கு கண்ணை காட்டினார்.
அதற்காக வரவில்லை என்பதால் தாயின் கண் ஜாடையை தவிர்த்த சசி நேரடியாக சோமசுந்தரத்தை பார்த்து ” அப்பா நான் உங்ககிட்ட தான் பேசணும்.”
அவனை நிமிர்ந்தும் பார்க்காத சோமசுந்தரம் தன்னுடைய உணவில் கவனமாக இருந்து கொண்டே ” காது கேக்குது.. நீ பேசறது இஷ்டம் இல்லனு எந்திரிச்சு ஓடவா முடியும்.. ” அதனால் தானே அவன் இந்த நேரத்தில் தந்தையின் முன்பு நிற்கிறான்.
” அப்பா நான் உங்ககிட்ட ஒரு வருஷம் டைம் கேட்டேன். ட்ரை பண்ணி பார்ப்போம் செட் ஆகலனா கடைக்கு வரலாம்னு நெனச்சேன். ஆனா என்னால அவ்வளவு சீக்கிரமா இதிலிருந்து வெளிய வர முடியும்னு தோணல.. “
சோமசுந்தரத்திற்கு வந்த ஆத்திரத்தில் இட்டிலியை மாவாக பிசைந்து கொண்டிருந்தார்.
” முடியலன்னா என்ன முடியல.. உன்னை என்ன அங்க புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்களா? என்னமோ சொன்ன ஒரே வருஷத்துல கிழிச்சு நொட்டிருவேன்னு.. “
” ஒரே வருஷத்துல கிழிச்சு நொட்டறதுக்கு சிபாரிசு வேணும்.. பெரிய நகைக்கடை ஓனர்னு பேரு இருந்தா பத்தாது.. உங்களுக்கு தெரிஞ்சவங்களே எத்தனை பேர் சினிமா ல இருக்காங்க.. நம்ம பையன் பார்த்து பண்ணுங்க அப்படின்னு ரெண்டு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சு போயிடுமா.. பாக்குற எல்லார்கிட்டயும் பேப்பர் போடுற மாதிரி என் பையன் சினிமா பைத்தியம் புடிச்சு சுத்திகிட்டு இருக்கான்..
அவன வெச்சி படம் பண்றேன்னு காசுக்கு நாமம் போட்டுட்டு என்கிட்ட வந்தா செங்கலால அடிப்பேனு நோட்டீஸ் போடாத குறையா எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கீங்க..
சரி நானாவே தேடி ஏதாவது ஒரு சான்ஸ் கிடைக்குதான்னு பார்த்தா என் நேரம் எதுவும் செட்டாக மாட்டேங்குது.. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்..” கணவனின் முகத்தைப் பார்த்ததும் விசாலாட்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
” சாப்பிடும் போது இடியே விழுந்தாலும் அவர் எந்திரிக்க மாட்டார்னு தான் இந்த நேரத்துல அவர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன். நீ கொஞ்ச நேரம் கம்முனு இருக்கியா.. ” தாயை அடக்கியவன் தந்தையை பார்த்து
” அப்பா எனக்கு சினிமா தான் லைப். உங்க நகை கடை மேல எனக்கு இன்ட்ரஸ்ட் கிடையாது. என் வழிய நான் பாத்துக்குறேன். உங்க காசுல சாப்பிடக்கூடாதுன்னு சொன்னீங்க நான் சாப்பிடல. உங்க வீட்ல தங்கக்கூடாதுன்னு நீங்க சொன்னா நான் வேற இடம் பாத்துக்கறேன்..
ஒரு வருஷம் முடியப்போகுது நான் கடைக்கு வருவேன்னு நீங்க நம்பி ஏமாறக்கூடாதுன்னு தான் இப்ப வந்து உங்க கிட்ட சொல்றேன்.. “
சிறு வயதிலிருந்தே கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த சோமசுந்தரம் ஒரு பருக்கை உணவை கூட வீணாக்க மாட்டார். அதனால்தான் அவர் சாப்பிடும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவார். அது அவர் உணவுக்கு அளிக்கும் மரியாதை. இன்றும் அதே மரியாதையை உணவுக்கு கொடுக்க தான் அவர் விரும்பினார். ஆனால் அவர் பெற்ற செல்வமே அவரின் பொறுமைக்கு வேட்டு வைக்க தயாராக இருந்தது.
சாப்பாட்டு தட்டை எடுத்து சுவரில் வீச உணவுகள் சிதறி கீழே விழுந்தன. விசாலாட்சி மிரண்டு கணவனை பார்க்க ஆவேசத்துடன் எழுந்த சோமசுந்தரம் தன் முன்னாள் நின்று கொண்டிருந்த சசியின் சட்டையை பிடித்து சாப்பிட்ட எச்சில் கையால் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து தள்ளினார்.
கணவன் மகனை அடிப்பதை கண்டு இருவருக்கும் நடுவே புகுந்த விசாலாட்சி “ஐயோ என்னங்க என்ன பண்றீங்க.. விடுங்க..விடுங்க அவன..” சோமசுந்தரம் மனைவியின் பேச்சை கேட்பதாக இல்லை. அவரைப் பிடித்து தள்ளியவர் சசியை அடிப்பதை நிறுத்தவில்லை.
விசாலாட்சி போல சசி பதறவில்லை. தந்தையின் கோபத்தை அவன் எதிர்பார்த்தே இருந்தான். அவனுக்கு பேரதிர்ச்சி என்னவென்றால் சாப்பிடும் போது சோமசுந்தரம் உணர்ச்சிவசப்பட்டது தான். இவருடைய கனவை உடைத்ததற்கு தனக்கு இந்த தண்டனை தேவை தான் என்று அனைத்து அடிகளையும் வாங்கிக் கொண்டான் அமைதியாக.
விசாலாட்சிக்கு மகன் அடி வாங்குவது பொறுக்காமல் மீண்டும் எழுந்து வந்து அழுதபடியே கணவனை பிடித்து இழுத்து ” உங்களுக்கு என்ன வெறி புடிச்சிருக்கா? தோளுக்கு மேல வளர்ந்த பையன போட்டு இப்படி அடிக்கிறீங்க? அப்படி என்ன அவன் கொலை குத்தமா செஞ்சுட்டான்? அது என்ன எழவெடுத்த படம்? நம்மகிட்ட இல்லாத பணமா? நீங்களே அவன வச்சு ஒரு படம் பண்ணா என்ன? எதுக்கு நம்ம பையன் கண்டவன் கால போய் பிடிக்கணும்… பெத்த அப்பா நீங்களே அவன நம்பாத போது அடுத்தவன் அவனை நம்புவானா.. ” கோபத்தில் விசாலாட்சியின் உடல் நடுங்கியது.
அடுத்த அறை விசாலாட்சிக்கு விழுந்தது பொரி கலங்க. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கணவனை அதிர்ந்து பார்த்த விசாலாட்சியை
” என்னடி பாக்குற? இது வேணும்னா உங்கப்பன் சொத்தா இருக்கலாம்! ஆனா இவ்ளோ தூரம் கொண்டு வந்தது யாரு? ஒத்தக்கடையாக இருந்தத ரெட்டையா மாத்துனது யாரு.. இன்னிக்கு ஊர் பூரா அம்புட்டு நகை கடை இருக்கும்போது எதுக்கு நம்ம கடையை தேடி கஷ்டமர் வராங்க.. எல்லாம் யாரால என்னோட உழைப்பு.. அவ்வளவு சீக்கிரத்துல என் உழைப்பை தூக்கி இந்த பரதேசி கிட்ட கொடுக்க சொல்றியா.. அஞ்சு காசு சம்பாதிக்க வக்கில்ல.. சினிமா பண்ற மூஞ்சா இது.. படம் பண்ண போறேன்னு சொல்லி குடிச்சு கூத்தடிச்சிட்டு இருக்கான்.. நீ வேணும்னா இவனை நம்பி எக்கேடோ கெட்டுப் போ. ஆனா இவன நம்புனதுக்கு என் கழுத்தை அறுத்துட்டான்ல.. வேணாடா நீ நகைக்கடை பக்கட்டு வரவே வேணாம்.
உன்ன நம்பி கடையில விட்டா எனக்கே தெரியாம கடையை வித்து அந்த காசை எடுத்துட்டு ஓடிருவே.. உன் வாழ்க்கையை நீயே பாத்துக்குற முடிவுக்கு வந்துட்ட. நல்லதோ கெட்டதோ நீயே பார்த்துக்கோ. உன்ன வீட்டை விட்டு அனுப்புனா உன் அம்மாவோட இம்சை தாங்க முடியாது. நம்ம குடும்பம் மானம் தான் காத்துல பறக்கும். இந்த வீட்டிலே இருந்து தொலை. முன்ன சொன்ன மாதிரி என் சம்பாத்தியத்தில நீ திங்க கூடாது.. ” சோமசுந்தரம் கோபமாக கடைக்கு வந்து விட்டார்..
அவருடைய அறையில் அமர்ந்திருக்கும் போது சோமசுந்தரத்தின் அலைபேசி அலறியது..
” வணக்கம்.. ஆமா உள்ள வந்துரு நேரா.. ” சிறிது நேரத்தில் சோமசுந்தரத்தின் அரை கதவு திறக்க உள்ளே நுழைந்தார் அவரது நெருங்கிய நண்பர் பிரகாசம்.
” என்ன சோமு காலையிலேயே கடைக்கு வர சொல்லி இருக்க.. ” நண்பனின் முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு கேட்டார் பிரகாசம்.
பிரகாசத்திடம் அனைத்தையும் கொட்டி தீர்த்தார் சோமசுந்தரம்.
” இந்த பையன் இப்படி பண்ணுவானு நான் நெனச்சே பார்க்கல? ஏதோ ட்ரை பண்றான் செட் ஆகலனா திரும்ப நம்மகிட்டயே வந்துருவானு நெனச்சிட்டு இருக்குதா இவன் இந்த ஜென்மத்துல திருந்துற மாதிரியே இல்ல. எனக்கு என்ன செய்யறதுன்னு சுத்தமா தெரியல. தலையெல்லாம் வலிக்குது.” சோமசுந்தரத்தை பார்க்கும் போது பிரகாசத்திற்கு பரிதாபமாக இருந்தது.
” இந்த கால பசங்க கிட்ட நாம எதையும் சொல்ல முடியாது சோமு. அவன் தான் தெளிவா சொல்லிட்டான்ல இது அவனோட வாழ்க்கைன்னு. இதுக்கு மேல நம்மால எதுவும் செய்ய முடியாது.. சரி எதுக்காக என்ன வர சொன்ன”
சற்று தயங்கிய சோமசுந்தரம் ” இல்ல நீ தான் நல்லா ஜோசியம் பாப்பியே.. கொஞ்சம் பார்த்து சொல்லேன் இவன் என்னதான் ஆகப் போறானு..” சோமசுந்தரத்தை பிரகாசம் ஆச்சரியமாக பார்த்தார்.
சோமசுந்தரத்திற்கு இது போன்ற காரியங்களில் நம்பிக்கை சுத்தமாக கிடையாது. விசாலாட்சி எங்கேயாவது சென்று பார்த்தால் கூட அவரை சத்தம் போடுவார். அப்படிப்பட்ட மனிதன் மகனின் எதிர்காலத்திற்கு பயந்து இத்தனை நாட்கள் அவநம்பிக்கையாக இருந்த விஷயத்தில் நம்பிக்கை வைப்பதை நினைத்து பிரகாசத்திற்கு விந்தையாக இருந்தது.
பிரகாசம் முறையாக ஜோதிடத்தை கற்றுத் தேர்ந்தவர். அவர் ஒன்று கூறினால் அது சரியாக இருக்கும். அனைவருக்கும் அவர் இது போன்ற ஜோதிடம் பார்ப்பது கிடையாது. அவருக்கு தோன்றினால் மட்டுமே சொல்வார்.
சசியின் பிறந்த தேதி நேரம் இடத்தை மட்டும் கேட்டுவிட்டு சற்று நேரம் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.. ஒவ்வொரு முறை அவர் கணக்கிடும் போதும் சோமசுந்தரத்திற்கு அடிவயிறு கலங்கியது.
ஒரு வழியாக கட்டங்களை போட்டு முடித்துவிட்டு சோமசுந்தரத்தை ஏறிட்டுப் பார்த்தார் பிரகாசம்.
” கட்டம் என்னப்பா சொல்லுது.. இந்த பையன் விளங்கிடுவானா.. சினிமா பைத்தியம் அவன விட்டு போயிடுமில்ல..” ஆர்வமாக சோமசுந்தரம் கேட்க பிரகாசம் இல்லை என தலையாட்டினார்.
” இதுக்கு மேல தான் இந்த பைத்தியம் இன்னும் ஆழமா பிடிக்க போகுது. உன் பையன் சரியான பாதையில தான் போயிட்டு இருக்கான். கலை சார்ந்த விஷயத்துல அவன் இருக்கும் போது கண்டிப்பா அவனுடைய எதிர்காலம் நல்லா இருக்க வாய்ப்பிருக்கு.”
சோமசுந்தரத்திற்கு வியர்த்து வழிந்தது.” அப்போ எப்ப தான் படம் பண்ண அவனுக்கு சான்ஸ் வரும்”.. வேறு வழியில்லாமல் பிரகாசத்திடம் கேட்டார்.
” இப்போதைக்கு ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போகும். “
” எந்த நேரத்துல பொறந்தானோ என் உயிரை வாங்கறதுக்கு.. வேற ஏதாச்சும் நல்ல விஷயம் சொல்லுதா கட்டம்.. “
” கூடிய சீக்கிரம் உன் மகன் வாழ்க்கையில ஒரு திருப்பம் வரப்போகுதுன்னு சொல்லுது.. “
” நான்தான் சொன்னேனே இந்த ஜென்மத்துல அது நடக்காது. ஒரு பொண்ணு உன் மகன் வாழ்க்கைக்குள்ள வரப்போறா. அவ வந்த நேரம் அவன் வாழ்க்கை மாறப் போகுது. சொல்லப்போனா உன் மகனுக்கு நடக்கிற ஒரே நல்ல விஷயம் அந்த பொண்ணு தான்.. ஏதாச்சும் பொண்ணு பாத்துட்டு இருக்கியா கல்யாணத்துக்கு”
“ம்க்கும் இந்த நாய்க்கு அது மட்டும் தான் குறைச்சல்.. இவனே ஒரு தண்டச்சோறு, இவனை நம்பி இன்னொரு பொண்ணு வேற வர போகுதா.. எங்க போய் முடிய போகுதோ கருமம்..” சோமசுந்தரம் தலையில் அடித்துக் கொள்ள அதே நேரம் சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு இளந்தென்றலை பார்க்கிறான் சசி மித்ரன்.