44

சசி மித்ரன் ஆணவத்தோடு காத்திருந்தான்.. ஆண் என்கிற ஈகோ எப்பொழுது அவனைப் பிடித்து தன்னுடைய சிறைக்குள் வைத்திருக்க ஆரம்பித்தது என்று அவனுக்கே தெரியவில்லை.. அவனறியாமல் அந்த சிறைக்குள்  சிறைப்பட்டிருந்தான்..

நான் அவள போக சொல்லல. அவ என்ன நம்பல. உலகமே வந்து சொல்லிருந்தாலும் அவ என்னை நம்பிருக்கணும்.. என்ன நம்பாதவ கிட்ட நான் தொங்கிக்கிட்டு போக முடியாது. அவளே என்னை தேடி வருவா. எப்படியும் வந்து தான் ஆகணும். இன்னும் மூணு நாள்ல ஸ்கூல் தொறக்க போது.. ஒரே வீட்ல இருந்தா  என் மூஞ்ச நீ பார்த்து தான் ஆகணும் தென்றல். என்கிட்ட நீ பேசி தான் ஆகணும். நீ பேசுனது தப்புன்னு என்கிட்ட நீ மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்..

தென்றல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் சென்று ஒரு மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் மூன்று நாட்களில் மீண்டும் பள்ளி திறக்க உள்ளது. பிள்ளைகளின் படிப்புக்காக சென்னை வாசம் மீண்டும்.

பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தென்றல்  சொல்லாமல் கொள்ளாமல்  வீட்டிற்கு வந்து நிற்க முதலில் பரசுராமுக்கு ஒன்றும் புரியவில்லை.

வேகமாக ஓடி வந்து  மகளை வரவேற்றார். பேரப்பிள்ளைகளை அணைத்துக் கொண்டார்.

” என்ன கண்ணு வரேன்னு ஒரு வார்த்தை சொல்லல.. சொல்லிருந்தா அப்பா ஏர்போர்ட் வந்து இருப்பேன்ல..வாசு.. இங்க வந்து பாரு தென்றல் வந்துருக்கா.. “

இப்பொழுது காலில் வீக்கம் பெருமளவு குறைந்திருக்க, வெந்நீரில் ஒத்தடம் கொடுத்தபடி மெத்தையில் சாய்ந்திருந்தார் வாசுகி. கணவனின் குரல் கேட்டதும்  அடித்து பிடித்து எழுந்தவர் கால் வலியையும் பொருட்படுத்தாமல் வாசலுக்கு விரைந்தார்..

“பெரியவளே.. என்னடி சொல்லாம கொள்ளாம இந்த நேரத்துல வந்துருக்க.. ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அப்பாவை ஏர்போர்ட் அனுப்பிருப்பேன் இல்ல.. பிள்ளைகளை வச்சுக்கிட்டு..” பெற்றோர் இருவரும் சொல்லி வைத்ததைப் போல ஒரே வசனத்தை பேச தென்றல் சிரித்துக் கொண்டாள்.

பெரியவர்கள் இருவருக்குமே தென்றலின் முகத்திலிருந்த காயமும், வீங்கி சிவந்திருந்த கண்களும்  நிறைய கதைகளை சொல்லியது.

பிள்ளைகள் இருவருக்கும் தாத்தா பாட்டி என்றால் உயிர். சோமசுந்தரம் விசாலாட்சி இருவரிடமும் கிடைக்காத பாசம் அம்மா வழி தாத்தா பாட்டியிடம் அளவுக்கு அதிகமாகவே கிடைத்தது..

காலில் சுற்றிருந்த பேண்ட்ஜை கழட்டி ஓரமாக போட்ட வாசுகி பம்பரமாக சுழன்று வேலை பார்க்க ஆரம்பித்தார்.

“ம்மா கால் எப்படி இருக்கு உனக்கு.. நீ பேசாம படு நான் பாத்துக்குறேன்..”

” சும்மா இருடி.. முன்கூட்டியே சொல்லிட்டு வந்திருந்தா சமச்சிருப்பேன்.. இப்ப பாரு மத்தியானம் வச்ச பருப்பு கறி தான் இருக்கு.. இது எப்படி பத்தும்..”

” ஏதாச்சும் ஆர்டர் பண்ணிக்கலாம்.. நீ பேசாம படு.. ” அம்மா வேலை செய்வதை தடுத்தாள் தென்றல்.

மனம் முழுவதும் தென்றலின் கன்னத்தில் இருந்த கைதடத்தை பற்றிய கேள்விகள் நிறைந்திருந்தாலும் முதலில் அவர்களின் வயிற்றுப் பட்டை பற்றிய கவலைதான் பெரிதாக இருந்தது வாசுகிக்கு. தென்றல் தடுத்தும் கேட்காமல் மல மலவென்று வேலைகளை ஆரம்பித்தார்.. நல்ல வேலையாக மாவு குளிர்சாதன பெட்டியில் இருந்தது..

இரண்டு வித சட்னி அரைத்து, குழந்தைகளுக்கு தோசை வார்த்து, பரசுராமை கடைக்கு விரட்டி பூங்கொடிக்கு பிடித்த நூடுல்ஸை வாங்கி வரச் சொல்லி ஆர்ப்பரித்தாள் அம்மா..பெற்றவளை பற்றி அறிந்திருந்த தென்றல் அமைதியாக சென்று அமர்ந்து விட்டாள் அவளுடைய அறையில்.

கடைக்குச் சென்றிருந்த பரசுராம் வான்மதிக்கு அழைத்தார்.

“கண்ணு தென்றல் வந்திருக்கா.. அவ கன்னத்துல அடிச்ச மாதிரி இருக்கு. கண்ணு ரெண்டும் தக்காளியாட்டம் வீங்கி கிடக்கு. உன்கிட்ட ஏதாச்சும் சொன்னாளா..”

வான்மதி தனக்குத் தெரிந்த விஷயத்தை தந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாதவி யார் என்று கேட்டு கைபேசியை பிடுங்கிக் கொண்டார்..

“ஹெலோ அண்ணே.. இந்தப் பொண்ணுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ தெரியல.. ஏற்கனவே அவ புருஷன் எவளயோ வச்சிருக்கான்னு பக்கத்துக்கு பக்கம் பரபரப்பா பேசிக்கிட்டு கிடக்கானுங்க. இந்த நேரத்துல இவ புருஷன் பக்கத்துல இருந்தா தானே சரியா வரும். இல்லனா அந்த பரதேசி பயலுக்கு ஏத்தமா ஆயிறதா.. இவ இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கா.. ஊமச்சி மனசுல என்ன நினைக்கிறான்னு தெரியல.. எதையும் வாய் திறந்து சொல்லியும் தொலைய மாட்றா. இவளால பைத்தியம் பிடிச்சுரும் போல..

நீயாச்சும் அவகிட்ட நைசா பேசி விஷயம் என்னன்னு கேளு. இப்படியே விடுறதுக்கா நாமெல்லாம் இருக்கோம்.. நீ பேசாத அண்ணி கிட்ட விவரம் சொல்லி பேச வை..” விஷயத்தை கேள்விப்பட்ட பரசுராம் மனம் கனத்து போனது.

நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அனைவரும் சாப்பிட்டார்கள். தென்றல் அமைதியாக இரண்டு தோசையோடு எழுந்து கொண்டாள். பெரியவர்கள் கவனித்தாலும் பிள்ளைகள் இருப்பதால் எதையும் வெளி காட்ட வில்லை.

இரவு குழந்தைகள் தூங்கிய பிறகு  ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோரிடம் வந்தாள் தென்றல். அம்மா பக்கத்தில் அமர்ந்தாள்..

” பிள்ளைகளுக்கும் ஸ்கூல் லீவு. ஒரு மாசம் இங்க இருந்துட்டு போறேன் பா.. ” பரசுராம் விளுக்கென்று நிமிர்ந்து பார்த்தார்.

வான்மதி திருமணம் தான் கடைசி சசி இவர்கள் வீட்டில் இறுதியாக தங்கியது. அதன் பிறகு  என்னதான் வசதி வாய்ப்பு வந்தாலும் மாமனார் வீட்டில் தங்க மாட்டான். மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு அவன் பிளைட் ஏறி விடுவான்.

ஒரு வாரம் அம்மா வீட்டில் சீராடும் தென்றல், சசி தனியாக இருப்பானே என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விடுவாள். அன்று அவள் முகத்தில் இருந்த சந்தோஷமும் மலர்ச்சியும் இன்று துணி கொண்டு துடைத்தது போல மறைந்து விட்டது.

” என்னடி நாங்க என்னென்னமோ கேள்விப்பட்டோம்.. போன வாரமே நாங்க கிளம்பி வந்துருப்போம். அதுக்குள்ள பாத்ரூம்ல வழுக்கி விழுந்து என்னென்னமோ ஆக்கி போச்சு.. என்னடி உன்ற வாழ்க்கை எங்க தான் போயிட்டுருக்கு.. கன்னத்துல என்ன காயம் உன்ற புருஷன் அடிச்சிட்டானா.. இதுக்கு தான் வீரப்பா பேசி உன்ன கல்யாணம் பண்ணிட்டு இழுத்துட்டு போனானா..

எத தொறந்தாலும் உன்ற புருஷன் மூஞ்சி தான் வந்து நிக்குது.. எதுக்குடி உன்ற புருஷனுக்கு புத்தி இப்படி போகுது.. உனக்கு என்ன குறையாம்.. காசு பணம் வந்த உடனே புத்தி மேய போகுதா.. ” வாசுகி வார்த்தைகளால் சசியை விளாசி விட்டார்.

தென்றல் வழக்கம் போல அமைதியாக இருந்தாள்.

“வாசு எதுக்கு நீ இப்படி கத்துற..கம்முனு இரு..அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க காதுல விழுந்தா என்ன நினைப்பாங்க.. பகல்ல பக்கம் பார்த்து பேசு ராத்திரி அது கூட பேசாதன்னு சொல்லுவாங்க.. நீயே நம்ம குடும்ப மானத்தை சந்திச் சிரிக்க வச்சுருவ போல. கொஞ்சம் பொறுமையா இரு.. கண்ணு இன்னும் எதுக்காக நீ அமைதியா இருக்க.. அமைதியா இருந்து உனக்கு என்ன கிடைக்கப் போகுது.. எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி நீ இப்படி இருக்கிறது தான் உன்ற புருஷனுக்கு ஏத்தமா இருக்கு..

முன்னையாவது விடு.. இப்ப உனக்கு ஒன்னுனா நான் கேட்க நாங்க இருக்கோம்..அப்படியே  விட்டுட மாட்டோம்.. என்ன நடந்துச்சுன்னு நீ சொன்னாதானே எங்களுக்கு தெரியும்.. சொல்லு கண்ணு..” பரசுவின் நிதானம்  வாசுகியின் பதற்றம் இரண்டுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தாள் தென்றல்..

நடந்த விஷயங்களை பெரியவர்களிடம் கூறி முடித்தவள்

” தயவு செஞ்சு இதுல நீங்க யாரும் தலையிடாதீங்க. என் மேல நம்பிக்கை இருந்தா  நான் என்ன முடிவெடுக்கிறனோ அந்த முடிவுக்கு நீங்க சம்மதம் சொல்லுங்க. என்னால இப்ப எதையும் யோசிக்க முடியல. என்ன விட்டுருங்க பா.. ” அழுத்தம் திருத்தமாக கூறியவள் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.

” என்னங்க இவ இப்படி சொல்லிட்டு போறா.. ரெண்டு பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கா.. அவனுக்கு என்ன ஆம்பள கொழுப்பு எடுத்து அலையுவான்… எனக்கு பக்குன்னு இருக்கு.. ” வாசுகி புலம்ப ஆரம்பித்தார்.

” கம்முனு இரு வாசு.. இப்ப நீ புலம்பி எதுவும் மாறப் போறது கிடையாது. இது அவளோட வாழ்க்கை. இதைத் தேடிக்கிட்டு அவதான். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அவ நம்மகிட்ட வரவே இல்ல. இங்க வந்து தங்குனாலும் உடனே ஓடிடுவா. இப்ப பாத்தியா ஒரு மாசம் இங்கதான்..

இதுல நீயும் நானும் பேசறதுக்கு எதுவும் கிடையாது. அவளே யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும். நம்ம பொண்ணு என்ன முடிவெடுத்தாலும் நாம அவளுக்கு துணையா நிக்கணும்.. “

” ஏங்க நீங்க ஒரு தடவை அவங்கிட்ட பேசி பாருங்க..” வாசுகிக்கு மனம் பொறுக்கவில்லை.

” என்ன பேச சொல்ற.. ரெண்டு பேரும் என்ன சின்ன புள்ளைங்களா.. அவங்களுக்கே புள்ள பொறந்து பெருசாச்சு.. பொண்டாட்டி புள்ள வேணும்னா அவன் தேடிக்கிட்டு வருவான்.. நாம போய் அவன் காலை பிடிச்சா அவனுக்கு மெதப்பாயிடும்.. நம்ம பொண்ணு மேல தப்பு இருக்கிற மாதிரி ஆயிரும்.. அவன் காலை பிடிக்கணும்னு என்ன அவசியம் கேட்கிறேன்.. ” எந்தப் பக்கம் தவறு என்று அலசி ஆராய பரசுராம் விரும்பவில்லை. அவரைப் பொறுத்தவரை  மகள் என்ன முடிவெடுத்தாலும் சரிதான். அவள் பக்கம் இருக்க வேண்டும் என்பது அவரது முடிவு.

கணவனின் கூற்றின் மேல் வாசுகிக்கு  முழு சம்மதம் இல்லாவிட்டாலும்  அதன் பிறகான நாட்களில் தென்றலை தூண்டி துருவவில்லை. முடிந்த அளவு தென்றலை நிம்மதியாக வைத்துக் கொள்ளவே பெரியவர்கள் விரும்பினார்கள். பரசுராம்  குடும்பத்தை அழைத்துக் கொண்டு  கோவில் கோவிலாக சுற்றினார்.. கொடைக்கானல் ஊட்டி சென்று வந்தார்கள்..

வீட்டில் அடைந்து கிடக்காமல் வெளியே சென்று வந்தால் நிம்மதி கிடைக்கும் என்று பெரியவர்கள் எண்ணம். அவ்வப்போது வாசுகி மாதவிடம் ஃபோனில் புலம்பி தள்ளினார்.

அம்மா வீட்டில் தென்றலுக்கு எந்த வேலையும் கிடையாது. பிள்ளைகள் இருவருமே தாத்தா பாட்டியோடு ஒன்றி விட்டார்கள். காலையிலிருந்து இரவு வரை  அம்மா வாசுகி பம்பரமாக சுழன்றார்.

தென்றல் யோசிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. பகல் முழுவதும் அவள் அழுவது கிடையாது. சிவந்திருக்கும் கண்கள் மற்றவர்களுக்கு நிறைய கதைகளை சொல்லும். இரவில் தலையணை மட்டுமே அவளின் நெருங்கிய தோழி ஆனது..

சசியின் நினைவுகளும் அவனின் தீச்சொற்களும் அவள் மனதை ஈரமற்ற பாலைவனமாக மாற்றிக் கொண்டிருந்தது. யோசித்தாள் தன்னை பற்றி தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி யோசித்தாள்.

யோசிக்க யோசிக்க நிதர்சனம் மிரட்டியது. எங்கோ எதிலோ அவள் ஏமாந்த உணர்வு. ஒரு கட்டத்திற்கு மேல் தன்னைப் பற்றிய சிந்தனையை விட்டு பிள்ளைகளைப் பற்றி நினைத்தாள்.

எல்லா பக்கமும் சாதகப் பாதகங்களை ஆராய்ந்தாள்.

பூங்குழலி நடப்பதை புரிந்து கொண்டதால்  மறந்தும் கூட தந்தையை பற்றி கேட்கவில்லை.. ஆனால் பூங்கொடிக்கு  நடக்கும் விஷயங்கள் எதுவும் புரியாததால் சசியை பற்றி கேட்டு உயிரை வாங்கினாள்.

அவனிடம் பேச வேண்டுமென்று அடம் பிடித்தாள்.. அவளிடம் பேசி சமாதானம் செய்து திசை மாற்றுவதற்குள் பெரியவர்கள் இருவருக்கும் பெண்டு கழண்டது. சின்ன பேத்தியை கண்டாலே அலறும் அளவிற்கு பரசுராம் ஆளானார்.

பூங்கொடி ஏதாவது கேள்வியைக் கேட்கும் முன்பாகவே அவள் வாயில் தின்பண்டத்தை திணித்து விடுவார் வாசுகி..

இதற்காகவே பரசுராம்  அனைவரையும் வெளியே அழைத்துச் செல்வதை கடமையாக வைத்திருந்தார். வெளிக்காட்சிகளை பார்க்கும் போது பூங்கொடி சசியை மறந்து விட்டு அதில் தன் மனதை செலுத்தினாள்.

வாசுகிக்கு கேள்விகள் கழுத்து வரை இருந்தது.. தாய் அறியாத சூலா.. பகலில் நன்றாக பேசி சிரித்தாலும் இரவில் மகள் கண்ணீர் விடுவதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. உறக்கம் இல்லாத இரவுகளின் அடையாளமாக கருவளையங்கள் அழகிய மீன் விழிகளை சுற்றி படிந்தது.

பெற்றவளின் கவனிப்பில் வயிறு வாடாவிட்டாலும்  மனதின் வேதனை அவளை மெலிய வைத்தது.

சசி தென்றல் இருவர் மட்டுமே ஆடக்கூடிய ஆடு புலி ஆட்டத்தின் முடிவை தெரிந்து கொள்ள பெரியவர்கள் திகிலோடு காத்திருந்தார்கள்..