40

சசிக்கு மன அழுத்தம் கூடியது.. ஒரு கட்டத்திற்கு மேல் மிகச்சரியாக தவறான ஒரு முடிவை எடுத்தான். தென்றல் கிணற்று நீர். எங்கே போய் விடப் போகிறாள்? ஆகையால் இப்பொழுது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

தென்றல் அவனிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதும் அவனுக்கு சாதகமாகவே அமைந்தது.. தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டது போலவே  படம் நல்ல வசூலை வாரிக் குவிக்க வேண்டும் என்பதற்காக மேதினியை அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று வந்தான்..

அவர்கள் தரப்பு எதிர்பார்த்தது போலவே பெரும் பேச்சு பொருளாகியது. வீட்டிற்கு வருவதை தவிர்த்தான். அவனுடைய நேரங்கள் அலுவலகத்தில் கழிந்தது..

” என்னடி இதெல்லாம்? எந்த நேரத்துல பொறந்த நீ? உனக்கு விடிவே வராதா.. எனக்கே சீ போனு ஆயிருச்சு. முன்னாடி எல்லாம் பஞ்ச பாட்டு பாடிகிட்டு இருந்த. இப்ப கோடி கோடியா காசு இருந்தும் அவன் போயிட்டான் எளசா ஒருத்திய பாத்துகிட்டு.. எத்தனை தடவை சொன்னேன்.. பஞ்சத்துல   அடிபட்ட பரதேசி மாதிரி இருக்காதடி.. அவனே கூத்தாடுற பையன்.. தழுக்கு மொழுக்கா ஒருத்தியை பார்த்தா பின்னாடி ஓடிற போறானு..

என் புருஷன பத்தி எனக்கு தெரியும்.. ஒரு நாள் நீங்க எல்லாரும் என் புருஷனை பத்தி பேசுவீங்கன்னு வாய் கிழிய பேசுன.. இப்போ ஊரே உன் புருஷன பத்தி தான் பேசுது.. உன்னோட மட்டுமா முடியுது. வெளியே எங்கேயும் தலை காட்ட முடியல. ஒரு கல்யாணம் காட்சி போக முடியல. யாரைப் பாரு  உன் அண்ணன் மக புருஷன் எவளோ ஒரு நடிக்க பின்னாடி ஓடிட்டானானு நாக்க தொங்க போட்டுட்டு அலையுதுங்க..அடுத்தவன் வீட்டில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க.

ஆட்டக் கடிச்சி மாட்ட கடிச்சி மனுஷனை கடிச்ச கதையா கடைசியில உன் அடி மடியில கைய வெச்சிட்டான். நீ என்ன பண்ண போற? உனக்கு சூடு சொரணையே கிடையாதா..” மாதவி ஆத்திரம் தீரும் மட்டும் பொறிந்து கொட்டினார்.

அகிலனும் வான்மதியும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.. வான்மதியின் மகனை  மடியில் கடத்தியபடி அந்த பிஞ்சு கரங்களை வருடி கொடுத்துக் கொண்டிருந்தாள் தென்றல்.

“ம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா.. எதுவும் நடக்குறதுக்கு முன்னாடியே பேசி பேசியே அத பெருசா ஆக்குறது தான் உன் வழக்கம். இதுக்கா நீ வந்த” அகிலன் மாதவியை அடக்கினான்.

” ஆமா எல்லாரும் சேர்ந்து என் வாய அடக்குங்க..ஊர் வாய அடக்க முடியுமா..”

” தோ பாருடி.. உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காத. நாங்கல்லாம் இருக்கோம். அப்படி ஒன்னும் அம்போனு விட்டுற மாட்டோம். என்ன ஏதுன்னு அவன் கிட்ட நியாயம் கேட்போம்.. தாலி கட்டுன பொண்டாட்டி நீ. உனக்கு இல்லாத உரிமையா. எவளோ ஒருத்தி வந்து ஆண்டு அனுபவிக்கிறதுக்கா  இத்தனை வருஷம் நீ நாயா கஷ்டப்பட்ட.. ” மாதவிக்கு மனம் பொறுக்கவில்லை.

தென்றலின் கஷ்டத்தை உடனிருந்து பார்த்தவர். இப்பொழுது தான் அவள் வாழ்வில் மெய்யான தென்றல் வீசுவதை உணர்ந்து சற்று சந்தோஷமாக இருக்க, இடியாக வந்து விழுந்தது சசியின் செய்தி.

விஷயம் கேள்விப்பட்ட உடனே பரசுராம் கிளம்பினார். அவருடைய போதாத காலம் வாசுகி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கால் பிசங்கி விட்டது.. பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும்  காலை தரையில் ஊன முடியவில்லை. மருத்துவர் குறைந்தது ஒரு வாரத்திற்காவது  படுக்கையில் ஓய்வெடுக்க கூறி விட்டார்.

” தென்றல் என்னமா கண்ணு என்னென்னமோ விஷயம் எல்லாம் வெளிய வருது” பயத்தை உள்ளடக்கிய குரலில் பேசினார் பரசுரம்.

” அப்பா.. தயவு செஞ்சு இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க. எனக்கே ஒரு விஷயம் சரியா தெரியாது அப்போ நான் எப்படி அதை பத்தி பேச முடியும். அம்மாவ பாத்துக்கோங்க. உடனே கிளம்பி வந்து பஞ்சாயத்து பண்ற அளவுக்கு இப்போ ஒன்னும் நடக்கல. எதுவாயிருந்தாலும் நான் பாத்துக்கிறேன். ” தந்தைக்கு தைரியம் கொடுத்தாள் தென்றல்..

பரசுராமை போல மாதவி அடங்கிவிடவில்லை. அவருடைய பிறவி குணம் அதிரடியாக வேலை செய்தது. மாமியார் சகட்டுமேனிக்கு கத்திக் கொண்டிருக்க சகோதரி பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காய் அமர்ந்திருக்க கண்ட வான்மதி

” அத்தை.. அக்கா ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது. அவ நினைச்சிருந்தா எப்பவோ கிளம்பி புள்ள குட்டிய தூக்கிக்கிட்டு அப்பா வீட்டுக்கு வந்திருப்பா. எவ்ளோ பிரச்சனை வந்தாலும்  தனியா தானே போராடுனா. அவளுக்கு தெரியும் அவ என்ன செய்றா ஏது செய்றான்னு.. உங்கள மாதிரி பெத்தவங்க ஒரு விஷயத்தை மறந்து போயிடுறீங்க. எங்களுக்கும் அறிவு இருக்கு. காலம் முழுக்க நீங்க எங்களுக்கு ஆலோசனை சொல்லிக்கிட்டு நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்க முடியாது.

சொந்தமா அவளே ஒரு முடிவெடுக்கட்டும். இது அவளோட குடும்ப விஷயம் அவ பேசட்டும். நீங்களோ நானோ நடுவுல யார் பேசினாலும் பிரச்சனை பெருசா ஆகும். கொஞ்சம் அமைதியா இருங்க” வழக்கம்போல தன்னுடைய முதிர்ச்சியான பேச்சால் அத்தையின் வாயை அடைத்தாள் வான்மதி..

என்னதான் இருந்தாலும் மாதவிக்கு மனம் கேட்கவில்லை. கிளம்பும் போது கூட  ” எல்லா நேரத்துலயும் அமைதி கை கொடுக்காதுடி. பேசுற இடத்துல பேசித்தான் ஆகணும். ” மருமகளுக்கு ஆலோசனை கொடுத்து விட்டு சென்றார்.

குழலி அவ்வப்போது தாயிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்..

” அம்மா.. எதுக்கு அப்பாவ பத்தி சோசியல் மீடியால என்னென்னமோ சொல்றாங்க. அப்பா கூட இருக்கிற அந்த ஆன்ட்டி ஒரு ஹீரோயின் தானே.. “

“ம்ம்ம்” மகளுக்கு தலைவாரிக் கொண்டு ஆமோதித்தாள் தென்றல்.

” எனக்கு அந்த ஆன்ட்டியை சுத்தமா பிடிக்கல. அப்பா அந்த ஆண்ட்டி கூட இருக்காரா. அதனாலதான் வீட்டுக்கு வர மாட்டாரா.. என்னம்மா நான் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்ற” பிடிவாதமாக பதிலுக்கு காத்திருந்தாள் பூங்குழலி.

தென்றல் மகளை அழுத்த திருத்தமாக பார்த்தாள். குழலியின் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

” சொல்லு என்ன கேட்கணும்.. உனக்கு என்ன தெரியும்” மகளை தன் அருகே இருத்தி நிதானமாக பேச தொடங்கினாள் தென்றல்.

“அவ யாரு”..

“ஸ்ஸ் அவங்க உன்ன விட வயசுல மூத்தவங்க. அம்மா இப்படி தான் உனக்கு மரியாதை சொல்லிக் கொடுத்தேனா..”

முகத்தை தொங்க போட்டுக்கொண்டு ” நீ பேச்ச மாத்தாத.. எனக்கும் ஓரளவு  நடக்கிறது புரியுது”..

” என்ன புரியுது”

” அப்பா அந்த ஆண்ட்டி கூட போயிடுவாரா.. இனிமே நம்ம கூட இருக்க மாட்டாரா.. ” சிதறு தேங்காயை உடைத்தது போல கேட்டு விட்டாள்.

” அம்மாவுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கிறியா..’

” எதுக்குமா” சின்னவளுக்கு புரியவில்லை.

“ப்ளீஸ் டா”.. தாயின் கண்களில் எதைக் கண்டாலோ  மகள் அமைதியாகி விட்டாள்..

நாட்கள் வேகமாக நகர  மறுவாரமே சசி, மேதினியை வைத்து இயக்கிய படம்  வெளி வெளி வந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. எங்கு பார்த்தாலும் சசி மேதினி பற்றிய பேச்சுகள் தான்.

தயாரிப்பாளருக்கு போன உயிர் திரும்பி வந்த தருணம்.

“சசி.. ரொம்ப நன்றிப்பா.. இப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு.. என்னோட அடுத்த படத்தையும் நீ தான் டைரக்ட் பண்ற..”

“சார்.. இப்ப நான் அந்த மூடுல இல்ல. ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கேன்.”

” சரிப்பா பிரேக் எடுத்துட்டு வா” சசி பேச்சை முடித்துக் கொண்டான். அவனது என்ன முழுவதும் குடும்பத்தை சுற்றியே வட்டமடித்தது.

ஷூட்டிங்கின் போதெல்லாம் சில சமயம் வீட்டிற்கு செல்லாமல் நாள் கணக்கில் கூட அலுவலகத்தில் தங்கியிருக்கிறான். குழந்தைகளைப் பற்றியோ தென்றலை பற்றியோ அவன் அக்கறை காட்டியதில்லை. இப்போதெல்லாம் அவனின் மனது  அவர்களுக்காக என்று தானாய் சமாதானமாகிவிடும்.

இம்முறை வீட்டிற்கு செல்லவே பலமாக யோசித்தான்.. ஏதோ ஒன்று அவனை  மேற்கொண்டு யோசிக்க விடாமல் தடுத்தது. நிலைமையைச் சொல்லி புரிய வைக்கலாம் என்கிற எண்ணத்தோடு, வீட்டிற்கு கிளம்பி விட்டான். பிள்ளைகளுக்கு கை நிறைய தின்பண்டங்கள்.

என்ன நினைத்தானோ தென்றலுக்கு துளிப் பூக்கள் என்றால் மிகவும் விருப்பம். அழகான பூங்கொத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வழக்கம் போல அவன் தலை கண்டதும் கொடி ஓடி வந்தாள். குழலி அமைதியாக அவனைப் பார்த்து சிரித்தாள்.

கொடிக்குத் தான் வாங்கி வந்த அனைத்தையும் கொடுத்தவன்
“டேய் என்ன பண்ற.. அப்பாவை மிஸ் பண்ணியா” குழலிக்கும் தான் வாங்கி வந்தவற்றைக் கொடுத்தான்.

வாங்கிக் கொண்டவள் ” ஏம்பா ஒரு போன் கூட பண்ணல.. நீங்க எங்களை மிஸ் பண்ணவே இல்ல தானே” மகளின் குரலில் வேற்றுமை எட்டிப் பார்த்தது. அவள் குரலில் அந்நிய தன்மை அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்டவன்  மன்னிப்பு கேட்கும் ரீதியில் மகளை ஏறிட்டான்.

” ஒர்க் பிஸிடா.. ” மனம் பொய் என்று அலறியது.

” பார்த்தேன் பா” ஒரே வார்த்தையில் அவன் நெஞ்சில் ஆணி அடித்து விட்டாள் பூங்குழலி.. மனைவியை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்கிற இறுமாப்பில் வந்தவனுக்கு மகளிடம் பேச அடுத்த வார்த்தை வரவில்லை.

அவன் வார்த்தைகள் தேடி திணறிக் கொண்டிருக்கும் போதே ஆபத் பாண்டவனாக வந்து சேர்ந்தாள் தென்றல்.

“கொடி.. குழலி.. டைம் ஆகுது போய் தூங்குங்க.. நாளைக்கு ஸ்கூல் இருக்கு.” அவளின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாமல் பிள்ளைகள் இருவரும் இரவு வணக்கத்தோடு விடை பெற்றார்கள். அப்பொழுதும் கொடி மட்டுமே சசிக்கும் முத்தம் கொடுத்து விட்டுச் செல்ல குழலி பார்வையோடு அவனை தள்ளி நிறுத்தினாள்..

பிள்ளைகளின் அறை கதவு மூடும் வரை காத்திருந்த தென்றல், கணவன் பக்கம் பார்வையை திருப்பினாள்.

இவ்வளவு நேரம் அவன் மனதில் குடி கொண்டிருந்த  கண்மூடித்தனமான தைரியம் எந்த நொடி அவனை விட்டு  மறைந்து போனது என்றே தெரியவில்லை. மனைவியின் நேர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கால்கள் நடுங்க சோபாவில் அமர்ந்து விட்டான் சசி.

” போய் குளிச்சிட்டு வாங்க சசி” சாதாரணமாக சொல்லியவள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விட்டாள்.

அவளிடம் பூங்கொத்தை கொடுக்க வேண்டும். தன்னிலை விளக்கம் தர வேண்டும் என்றெல்லாம் அவன் எண்ணிருக்க எதற்குமே அவனுடைய மனமும் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை.

விட்டால் போதுமென்று பேய் துரத்துவதைப் போல தன்னுடைய அறைக்கு ஓடி வந்து கதவை சாற்றினான். இதயம் வேகமாக துடித்தது.. அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் பார்த்தான் மேதினி  தேவையே இல்லாமல்  இரவு வணக்கம் அனுப்பி இருந்தாள்.

வந்த ஆத்திரத்தில்  போனை தூக்கி மெத்தையில் அடித்தவன்  குளிக்க சென்றான். குளிர்ந்த நீர் தலையில் விழ அவனது மனமும் சற்று அமைதி அடைந்தது.

நான் என்ன தப்பு செஞ்சேன்.. தென்றல் புரிஞ்சிப்பா.. மீண்டும் நம்பிக்கை விதை அவன் மனதில். குளித்து முடித்தவன் தெளிவான முகத்தோடு வெளியே வந்தான்.

அவனை கண்டதும் தென்றல் சாப்பாடு எடுத்து வைத்தாள். சாப்பிட அமர்ந்தவன்

” நீ சாப்டியா தென்றல்”

“ம்ம்ம் நீங்க சாப்பிடுங்க” அவள் பரிமாற அவன் வயிறார சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்து கைக் கழுவியவன், அவளை கட்டி அணைத்தான்.

தென்றல் அவனை நிதானமாக தன்னிடமிருந்து விலக்கித் தள்ளினாள்.

“என்ன” புரியாதவனை போல கேட்டான் சசி.

” நடிப்பு சொல்லிக் கொடுக்கிற நீங்க எவ்ளோ எக்ஸ்பர்ட்டா இருப்பீங்கன்னு இப்போ தான் பாக்குறேன்.. ” சவுக்கடி விழுந்ததைப் போல  அதிர்ந்து நின்றான் சசி மித்ரன்.