36

சசியின் கோபம் தென்றலுக்கு  புரிந்தாலும் அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

” எதுக்கு இப்படி வீணா டென்ஷன் ஆகுறீங்க.. உங்களுக்கு தான் நிம்மதி இல்லாம போகும்..”

” நானும் எத்தனை வருஷமா பாக்குறேன் எப்போ சொத்த பத்தி வாயைத் திறந்தாலும் கப்புன்னு அவங்க வாய் மூடிடும்.. நீயும் அவங்கள மாதிரி நான் இந்த சொத்துக்காக ஆசைபடுறேன்னு நெனச்சியா.. ” அவளால் எப்படி அம்மாதிரி நினைக்க முடியும்? சொத்து முக்கியமென்றால்  எப்பொழுதும் அதனை தனியாக பிரித்து எடுத்து குடும்பத்தோடு அவன் சென்றிருப்பானே.. அந்தப் பணத்தில் அவனே சொந்தமாக படத்தை தயாரித்திருப்பானே..

வழக்கம்போல தென்றல் அமைதியாகவே அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே அடைத்து கிடந்ததெல்லாம் வெளியே வந்தது அவனுக்கு.

” ஒரு மனுஷன் கஷ்டப்படும்போது எனக்கு என்னனு எட்ட நின்னுட்டு, இப்போ முன்னேறி மேல வந்ததும் கூட வந்து ஒட்டிக்கிற உறவெல்லாம் அவசியம் தானா.. இவங்களுக்கு வெக்கமாவே இல்லையா.. இவங்களுமே கஷ்டப்பட்டுருந்தா நான் இதை பெரிய விஷயமா எடுத்து இருக்க மாட்டேன்.. ஆனா நல்லா தானே இருக்காங்க.. என் அப்பா நினைச்சிருந்தா நான் இத்தனை வருஷம் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லையே..

அப்படின்னா என்ன அர்த்தம் அவங்களுக்கே என் மேல நம்பிக்கை இல்லை? ஒரு வியாபார குடும்பத்துல பொறந்தா  நாமளும் வியாபாரியா இருக்கனும்னு தலையெழுத்தா என்ன? ஏன் அதை விட்டுட்டு வேற தொழில் பார்த்தா தெய்வ குத்தம் ஆயிடுமா..

எனக்கு மனசு விட்டு போச்சு தென்றல்.. இத்தனை வருஷம் நான் எதனால தெரியுமா அமைதியா இருந்தா.. நம்ம குடும்பம் அதாவது நீ நான் நம்ம பிள்ளைங்க.. இந்த குடும்பத்தை கட்டிக் காப்பாத்துனது யாரு நீ மட்டும் தான்.. பேருக்கு தான் நான் ஆம்பளன்னு இருக்கேன்.. ஆனா எனக்கும் சேர்த்து சோறு போட்டது நீதான். இன்னைக்கு என்னோட வெற்றியை என் குடும்பம் பங்கு போட்டுகிட்டு வெக்கமே இல்லாம ஈனு இளிக்கிது..

இதெல்லாம் பாக்குறப்ப எனக்கு பத்திக்கிட்டு வருது. உண்மையா அந்த வெற்றி எனக்கு கூட சொந்தம் இல்லை. அதுக்கு சொந்தக்காரி நீ மட்டும் தான்..

இந்த வீட்டிலருந்து வெளியே போயிட்டா  வாடகை அது இதுன்னு இன்னும் உனக்கு கஷ்டம் மேல கஷ்டம். அதுக்காக எத்தனை வருஷம் நான் செஞ்சதுக்கு நியாயப்படுத்தல. போனது போகட்டும். இவங்க சொத்தும் வேணா சுகமும் வேணாம்.. தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம் பேத்திக்கு சொந்தம்னு வருவாங்க..

இத்தனை வருஷம் கழிச்சு என் திறமைக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. என் பிள்ளைகளுக்கு என்னால சொத்து சேர்க்க முடியும்.. எல்லாத்தையும் அவங்களுக்கே எழுதி கொடுக்க போறேன். எப்படியோ வச்சுகிட்டு நல்லா இருக்கட்டும். நீ என்ன சொல்ற”.. எல்லா முடிவுகளையும் அவனே எடுத்து விட அவள் என்னதான் வாய் திறப்பாள்?

” இது உங்க தாத்தா சொத்து இதுல முடிவு சொல்ல எனக்கு என்ன இருக்கு? எதுவாயிருந்தாலும் யோசிச்சு செய்ங்க.. ” முடித்துக் கொண்டாள் தென்றல்..

“செல்லம் இனிமே நீ வேலைக்கு போகணுமா.. வீட்ல இருந்த பிள்ளைகளை பார்த்துக்கோயேன்..” இத்தனை வருடங்கள் கழித்து  இப்பொழுதுதான் உனக்கு தெரிகிறதா என்று கேட்க துடித்த நாவை சிரமப்பட்டு அடக்கி கொண்டாள் தென்றல்.

” கொஞ்ச நாள் போகட்டும்”

அதோடு அந்த பேச்சை சற்று ஆறப் போட்டிருந்தார்கள் அனைவரும்.. தென்றலின் பெற்றோருக்கு சந்தோஷம்.  மகள் வாழ்வு இனி நன்றாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

சசிக்கும் அடுத்த படம் பெரிய கதாநாயகனை வைத்து உடனே கிடைத்தது.. அவன் அந்த வேலையாக பம்பரமாய் உழன்றான்.

சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அனைவரும் வீட்டிலிருக்கும் போது  சோமசுந்தரம் பேச்சை ஆரம்பித்தார்..

” சசி, இதுக்கு மேல உன்னோட கடைக்கும் சேர்த்து தேவாவால உழைக்க முடியாது. எனக்கும் வயசாகிட்டே இருக்கு. உன் பேர்ல இருக்குற கடையை தேவாவுக்கு மாத்தி கொடுக்க போறேன்.. இப்ப கூட ஒன்னு கெட்டு போல..நீ  சினிமாவ மூட்டை கட்டிட்டு வியாபாரத்தை பார்க்கிறாயா?” சசி ஒரேடியாக மறுத்து விட்டான்..

அடுத்து வந்த நாட்களில் சசியின் பெயரிலிருந்த கடையையும், அவன் தாத்தா அவளுக்காக கொடுத்த சொத்துக்களையும்  முறையாக தந்தை மற்றும் தம்பி பெயரில் மாற்றிக் கொடுத்தான்.. விசாலாட்சி மருந்துக்கும் கூட வாய் திறக்கவில்லை. குடும்ப உறவுகளை எண்ணி மனம் வெறுத்து போனது அவனுக்கு..

ஆனாலும் மனதில் புது தெம்பு பிறந்தது.. மனைவி குழந்தைகளை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினான். தனியாக ஒரு அப்பார்ட்மெண்ட் பார்த்தான்.. தென்றல் வேலையை விட்டு நின்றாள்.. அவளும் குடும்பத்துக்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்திருந்தாள்..

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களுக்கென்று ஒரு தனி வீடு, அவர்கள் குடும்பம்  இந்த சந்தோஷத்தை நம்புவதற்கே தென்றலுக்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டது.

  குடும்பம் சில வேலைகளில் சிறையாவதும், சில வேலைகளில் சிறகாவதும்  குடும்ப உறுப்பினர்களை பொறுத்தது.

அந்த வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு சோமசுந்தரம் சரி விசாலாட்சியும் சரி  சசி குடும்பத்தை தண்ணீர் தெளித்து விட்டார்கள்.. ஒருமுறை கோவிலில் அந்த வீட்டில் வேலை செய்யும்  மரகதத்தை பார்த்தாள் தென்றல்..

அவள் வாயிலாக தர்ஷினிக்கும் விசாலாட்சிக்கும் எந்நேரமும் சண்டை என்றும் அதனால் வீட்டு வேலை தோட்ட வேலைக்கு பழையபடி ஆட்கள் வந்து விட்டார்கள் என்றும் தெரிந்து கொண்டாள்..

சசியிடம் அதைப்பற்றி அவள் மூச்சு விடவில்லை. ஊர் வம்பு பேசுவது அவளுக்கு பிடிக்காது. மரகதம் அவளைப் பார்த்து மகிழ்ச்சியில் தானாக விஷயத்தை போட்டு உடைக்க  வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

” அந்த பொம்பளைக்கு நல்லா வேணும்.. உலகம் முழுக்க தேடினாலும் உன்னை மாதிரி ஒருத்தி மருமகளா கிடைப்பாளா.. வீட்டு வேலை வெளி வேலைனு மனுஷியா மாடா நீ.. இப்போ தெரியும் உன்னோட அருமை.. பணக்கார மருமக கிட்ட இடி சோறு வாங்கி திங்கும் போது  உன்ன நெனச்சுக்குவா.. ” மாதவி மனம் பொறுக்காமல் பொறுமினார்.

என்னதான் சசியும் அகிலனும் பழையபடி பேசிக் கொண்டாலும்  முன்பிருந்த அந்த இணக்கம் அவர்களுக்குள் மறைந்து போனது. அவ்வப்போது  சசி அதனை மனைவியிடம் குறிப்பிட்டான்.

” என் மேல தான் தப்பு.. நான் தான் துரோகம் பண்ணிட்டேன்”இது சசி.

” அவன் இன்னும் பழசை மறக்கல.. நான் பேசினாலும் அவன் முன்ன மாதிரி பேச மாட்றான்..”இது அகிலன்..

நடுவில் தென்றலுக்கு முழிப் பிதுங்கியது.. தென்றல் தனி வீட்டிற்கு சென்ற பிறகு அவளின் பெற்றோர்கள் ஒரு நாள் வந்து மகளோடு தங்கி விட்டுச் சென்றார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் அன்றைய நாள் முழுவதும்  மாமனார் மாமியாரோடு  பொழுதைப் போக்கினான் சசி மித்ரன்.

பிள்ளைகளுக்கு தினமும் கொண்டாட்டம் தான். எதற்கெடுத்தாலும் உட்காராதே நிற்காதே ஓடாதே என்று கத்திக் கொண்டிருக்கும் பாட்டி வீட்டிலிருந்து விடுதலை. கூடவே எந்நேரமும் தென்றலின் வாசம்.

எப்பொழுதுடா பள்ளிக்குச் சென்று வருவோம் என்கிற நிலையில் இருந்தார்கள் பிள்ளைகள். புதிதாகத் தென்றலுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து விட்டான்.. பிள்ளைகளை பள்ளியில் விடுவது எடுப்பது, ஓய்வு நேரங்களில் அவர்களோடு மாதவி வீட்டிற்கு செல்வது கோவிலுக்கு செல்வது என்று தென்றல் நேரங்கள் இறக்கை இல்லாமல் பறந்தது.

புதிதாய் திருமணம் முடிந்தது போல சசியும் தென்றலை சுற்றி வந்தான்.. அவ்வளவு பெரிய வீட்டில் அவர்களுக்கு இல்லாத தனிமை  இரண்டு பெட் ரூம் உள்ள  வீட்டில் அவர்களுக்கு கிடைத்தது..

பிள்ளைகளுக்கு ஒரு அறையும் இவர்களுக்கு ஒரு அறையும்.. அவனிடம் பழைய சசியை பார்த்தாள் தென்றல்..

என்னதான் புதுப்படவேலை தொடங்கினாலும், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மனைவியோடு தன்னுடைய முழு நேரத்தையும் ஒதுக்கினான். இத்தனை வருடங்கள் பிள்ளைகள் மனைவியை தவிக்க வைத்தவன் தன்னாலானவரை அன்பை கொட்டினான்..

கிட்டத்தட்ட போன படம் ஆரம்பித்ததிலிருந்து தாம்பத்தியம் என்பதே அவர்களுக்குள் மறக்கடிக்கப்பட்டிருந்தது.. அன்று சசியால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. ஆபீஸில் அமர்ந்திருந்தவனுக்கு தலை வின் வின்னென்று  வலித்தது.

கிட்டத்தட்ட காலையிலிருந்து இருபதிற்கும் மேற்பட்ட “டீ”க்களை குடித்து விட்டான். தலைவலி அதிகமானதே தவிர குறையவில்லை.. தன்னுடைய முதன்மை அசிஸ்டன்ட் டைரக்டரான  அவனுடைய நண்பன் தீரனை அழைத்து பேப்பர் ஒர்க்கை பார்க்கச் சொன்னவன்  சிறிது நேரம் வீட்டிற்கு சென்று விட்டான்.

மணி நண்பகல் பண்ணிரென்டு முப்பது.. காலிங் பெல் சத்தம் கேட்டதும் கதவை திறந்த தென்றலுக்கு கணவனை அந்நேரத்தில் அங்கே கண்டது வியப்பாக இருந்தது.

அவன் சோர்ந்த முகத்தை பார்த்ததும் ” என்னாச்சுங்க” கதவை திறந்தாள்.

எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தான்.. அவனின் சோர்ந்த முகம் தென்றலுக்கு  அவனின் நிலையை உணர்த்தியது. பேசாமல் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான் மெத்தையில். பின்னோடு சென்று அவனை தொந்தரவு செய்யாமல் அவன் குடிப்பதற்கு ஆரஞ்சு பழச்சாறு தயாரித்து எடுத்துச் சென்றாள்.

“சசி..”

“ம்ம்ம்” அவன் விழித்திருந்தான் விட்டத்தை பார்த்தபடி.

” சாப்பிடுற டைம்.. சாப்பாடு பண்ணிட்டுருக்கேன்.. கொஞ்சமா ஜூஸ் குடிங்க ” பாதி சமையலில் அவசரமாக பேசினாள் தென்றல்..

எழுந்து அமர்ந்தவன் ஒன்றும் பேசாமல் பழச்சாரை வாங்கிப் பருகினான்..

” ஒர்க் டென்ஷனா..” மனம் பொறுக்காமல் கேட்டாள்.

அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி இருந்தவன் ” நீ என் பக்கத்துல தான் இருக்க.. ஆனா உன்னை விட்டு ரொம்ப தள்ளிப்போன மாதிரியே இருக்கு.. ” ஆத்மார்த்தமாக கூறினான்.

” எப்படி சொல்றீங்க”

” முன்னாடி எல்லாம்.. எனக்குள்ள ஒரு தாழ்வு மனசுருக்கும்.. நாம வேலை செஞ்சு பொண்டாட்டி பிள்ளைகளை நல்லா வெச்சிருக்கணும்னு பார்த்தா இங்க எல்லாமே தலைகீழா நடக்குதுன்னு.. ஆனா அப்ப கூட நீ என் கூட பக்கத்துல இருக்குற மாதிரி எப்பவும் எனக்கு தோணும்.. இப்போ நான் நினைச்ச மாதிரி என் பொண்டாட்டி பிள்ளைகளை நல்லா தான் பாத்துக்குறேன்..

ஆனாலும் என்னால  சரியா சொல்ல முடியல.. என் மனசு எதையோ தேடுது.” நடுத்தர வயதிற்கு வந்துவிட்ட பிறகும்  அவன் மனம் எதைத் தேடுகிறது என்பதை வாய் திறந்து மனைவியிடம் சொல்ல முடியாமல் தவித்தான்..

தென்றலுக்கு அவன் கூற வருவது முழுதாக புரிந்தது.. தங்களுக்குள் நின்று போயிருந்த தாம்பத்தியத்தை குறிப்பிடுகிறான் என்று..

” இன்னும் நீங்க என்ன லவ் பண்றீங்களா”

“என்ன”

” இன்னும் உங்களுக்கு என் மேல லவ் இருக்கா” கசங்கிய நைட்டியில் வியர்வை வடிய அமர்ந்திருந்தாள் அவள்..

” என்னடி இப்படி கேக்குற.. ரெண்டு புள்ள பெத்துட்டேன்..”

” அதனாலதான் கேட்கிறேன் இன்னும் உங்களுக்கு என் மேல லவ் இருக்கா.. ” அவன் புரியாமல் பார்க்க எழுந்து சமையலறைக்கு சென்றாள். விட்ட சமையலைத் தொடர்ந்தாள்.

சசிக்கு புரிந்ததும் புரியாததும் போல இருந்தது. அதற்கு மேல் இருப்புக் கொள்ளாமல் அவள் பின்னால் சமையல் அறைக்கு சென்றான்.

” நான் ஏதாச்சும் வெட்டி தரேன்”

” ஒன்னும் வேணாம் எல்லாம் முடிஞ்சுது.. ” இருந்துமே அங்கிருந்து அகலாமல்  திண்டில் ஏறி அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தென்றலின் இதயம் முரசு கொட்டியது. கை அதன் போக்கில் வேலை செய்ய கண்கள் அவ்வப்போது கணவனை தொட்டு வந்தது.

” என்னாச்சு இவனுக்கு.. மனசுல டீனேஜ் பையனு நினைப்பா..” முதல் முறை  பதினாறு வயதில் அவனைப் பார்த்த போது  மனதில் ஏற்பட்ட குறுகுறுப்பு இப்பொழுது வந்து தொலைத்தது.

” ஏழு கழுதை வயசில என்ன வெட்கம்.. கருமம் கருமம்.. ” மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

“நீங்க ஏன் இங்க உக்காந்து இருக்கீங்க..”

” நான் உன்னை ஏதாச்சும் பண்ணேனா.. நான் பாட்டுக்கு உக்காந்துருக்கேன்.. “பாவி மகன் அநியாயம் செய்தான்..

அவன் முன்னால் சென்று நிற்கும் மனதை இழுத்து பிடித்து வேலைகளில் கவனம் வைத்து  ஒரு வழியாக சமையலை முடித்து விட்டாள். வியர்வை ஆறாய் பெறுகியது..

எப்பொழுதும் சமையல் வேலை முடிந்ததும் தென்றல் குளித்து விடுவாள்.. இன்றும் அவனிடம்

” நீங்க பசிச்சா சாப்பிடுங்க நான் போய் குளிச்சிட்டு வரேன்.. “

” இல்ல நீயும் வா.. “.. அதன் பிறகு தென்றல் குளிக்கச் சென்றாள்.. அவனுடைய பார்வையும் அதன் நோக்கமும் அவளுக்கு புரியாமல் இல்லை. கடமைக்காக அரங்கேறிய தாம்பத்தியம்  அவளுக்குள் எந்த விதமான சிலிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. பூங்கொடி பிறந்த பிறகு  கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள்  இயந்திரத்தனமான தாம்பத்தியம் மட்டுமே அவர்களுக்குள்  நிகழ்ந்து கொண்டிருந்தது.

சிலிர்ப்பு துடிப்பு எதுவுமே இல்லாத  மரக்கட்டை தாம்பத்தியம். வெத்து உடல்கள் உரசிக்கொள்ள உடல் சூட்டை மட்டும் தணித்துக் கொண்டு  உறங்கிய இரவுகள் பல..

குடும்ப பாரத்தில் கழுதையாக அவள் மாறி போக  கணவனின் தேடலுக்கு கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது..

கடந்து வந்த பாதையின் சுவடுகள் இன்னும் அவள் மனதில் ஆறாத வடுவாய்.. தனியாக வந்த பிறகுதான் பூங்கொடியின் சிகிச்சையை பற்றிய யோசனை மீண்டும் வந்து ஒரு பக்கம் செக்கப் போய்க்கொண்டிருக்கிறாள்..

எதையெதையோ யோசித்தவளின் மனம்  அவளிடம் கொஞ்சமே கொஞ்சம் உன்னையும் நினைத்துப் பார் என்று கெஞ்சியது..

பொதி மாடை விட  மோசமாக இத்தனை ஆண்டுகள் அவள் கடந்து விட்டாள். பாரம் குறைந்து அவளைப் பற்றிய நினைவுகள்  கணவனின் ஒற்றைப் பார்வையில் வெளிவந்தது.

நீண்ட நேரம் ஷவர் அடியில் நின்ற அவள்  ஒரு முடிவோடு வெளியே வந்தாள்.

அவள் நிறத்தை தூக்கி காட்டும் விதமாக  சந்தன நிற காட்டன் சேலையை எடுத்து உடுத்தினாள். ஈர கூந்தலை விரித்து விட்டாள். நெற்றி வகுடில் குங்குமம் வைத்தாள்.. பிறை நெற்றியில்  வட்டமாய் செந்தூரம்..

கூந்தலின் நுனியில் நீர் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தது. அனைத்தையும் ஒரு ஓரமாய் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் சசிமித்ரன்.

அவனுக்குமே அவளை முதன்முதலாக பார்த்த உணர்வு. கூடவே குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொண்டது. பல வருடங்கள் கழித்து செம்மை பூசி நின்றும் மங்கையின் முகத்தினை கண்டான்.

தன்னால் தன்னவள் அனுபவித்த வேதனைகள் அவன் கண்முன் வந்து போனது.. சூரியனைக் கண்ட பனி போல அவனது உணர்வுகள் அனைத்தும் நீர் தெளிக்கப்பட்ட அமிழ்ந்து போனது..

அடுத்து என்ன என்று அவளுக்கும் புரியவில்லை.. அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான்..

மௌனங்கள் மட்டுமே அங்கே கீர்த்தனை பாட, மந்திரக்காரியின்  மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல அவளை நோக்கி இழுத்து வரப்பட்டான் சசி மித்ரன்.

எப்பொழுது இருவரும் கட்டிக் கொண்டார்கள்?எப்பொழுது இருவரும் முத்தமிட்டார்கள்? எப்பொழுது அவளை அவன் கையில் தாங்கினான்? எப்பொழுது அவளை அவன் படுக்கையில் கிடத்தினான்? எப்பொழுது இருவரின் ஆடைகளும்  அங்கே தேவையற்று நீக்கப்பற்றன? எப்பொழுது ஒருவருக்குள் ஒருவர் இருவரென்று கலக்கத் தொடங்கினார்கள்? இப்படி பல எப்போழுது அந்த இடத்தில் நிரம்பி வழிந்தாலும் அப்பொழுது அவர்கள் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அவர்களையே அங்கே தேடிக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் உண்மை..

இன்னும் கொஞ்ச காலம்தான்.. அதுவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காதலை இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று விதி அரக்கத்தனமாக அவர்களைப் பார்த்து சிரித்தது..