முதலில் வான்மதியிடம் பேச ஆரம்பித்தாள் தென்றல்.. வான்மதி இப்பொழுது கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறாள்..
மாதவியின் கடும் முயற்சியால் அக்கா தங்கை இருவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். தென்றலின் வாழ்வில் நடந்த சோகங்கள் அனைத்தையும் கேட்ட வான்மதிக்கு சசி மீது கடும் கோபம் எழுந்தது..
தென்றல் சசியோடு சென்ற பிறகு அவர்கள் குடும்பம் அனுபவித்த அவமானங்களும் அசிங்கங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.. அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் மூத்தப் பெண் ஓடிவிட்டால் இளைய பெண்ணின் கதி அதோ கதிதான்.. வான்மதிக்கும் அந்த கொடுமைகள் நடக்கத்தான் செய்தது.
பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்த அவளின் பெற்றோர்கள் கூட தென்றல் திருமணத்திற்குப் பிறகு அடியோடு மாறி விட்டார்கள்.. வாசுகி இன்னும் கடுமையாக வான்மதியிடம் நடந்து கொண்டார்.
முதலில் இருந்த வீட்டை வந்த விலைக்கு விற்று விட்டு கோயம்புத்தூரில் வேறு ஏரியாவுக்கு குடி பெயர்ந்து விட்டார்கள்.. பள்ளி படிப்பை வான்மதி முடித்த பிறகு கல்லூரி படிப்புக்கு கூட அவளை வெளியே எங்கேயும் அனுப்ப வாசுகி ஒத்துக் கொள்ளவில்லை.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் அவளை மேலே படிக்க வைக்க பெற்றோர் இருவருக்கும் மனமில்லை.. இதனால் பிளஸ் டூ முடிந்து இரண்டு வருடங்களாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாள் வான்மதி.. வந்த வரன் எல்லாம் தட்டி போனது.. அவளோடு படித்த தோழிகள் அனைவரும் கல்லூரியில் சிறகடிக்க அவள் மட்டும் வீட்டு சிறையில் சிக்கிக் கொண்டிருப்பது மூச்சு முட்ட செய்தது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் வாசுகியிடம் அன்று பேசிய தீர வேண்டும் என்கிற முடிவோடு அம்மாவை தேடிச் சென்றாள் வான்மதி.
பரசுராம் தெரிந்த இடத்தில் எல்லாம் வரன் பார்க்க எங்கே சொந்த காலில் நிற்க வேண்டும் என்கிற தன்னுடைய கனவு கானல் நீர் ஆகி விடுமோ என்கிற பயத்தில் அம்மாவின் உதவியை நாடினாள் வான்மதி.
” அம்மா நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. அக்காவுக்கு செஞ்ச அதே தப்பை நீங்க எனக்கும் செய்றீங்க. அவ அந்த மாதிரி போயிட்டான்னு நானும் அப்படி போயிருவேன்னு நீங்க நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்? ஒரே வயித்துல பொறந்தாலும் எனக்கும் அவளுக்கும் வேற வேற வயிறு தான்.. வேற வேற குணம் தான்..
ஒவ்வொரு நாளும் நானும் அவள மாதிரி வீட்டை விட்டு போயிருவன்னு நீங்க என்ன பாக்குறப்ப எல்லாம் உண்மையாவே வீட்டை விட்டு ஓடினா என்னன்னு தான் எனக்கு நினைக்க தோணுது..
அக்கா மேல தான் எல்லா தப்புனு நீங்க நடந்துக்கறத நினைச்சா எரிச்சலா இருக்கு. நல்லா யோசிச்சு பாருங்க உண்மையா அக்கா மேல தான் எல்லா தப்புமா? இன்னிக்கு நீங்க அவசரமா பண்ற இதே விஷயத்தை தான் அன்னைக்கு அவளுக்கும் பண்ணீங்க.. ஒரே ஒரு வார்த்தை உட்கார வச்சி எங்க கிட்ட பேசணும்னு உங்களுக்கு ஏன் தோணவே மாட்டுது..
தயவு செஞ்சு எங்ககிட்ட பேசுங்க. எங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க. பெத்த உங்களுக்கு பிள்ளைங்க கிட்ட பேச அப்படி என்ன தயக்கம்? இல்ல உங்க பேச்சை நாங்க கேட்க மாட்டோம்னு பயமா? நீங்க பேசறது நியாயமா இருந்தா கண்டிப்பா கேட்போம்மா..
படிக்க வேண்டிய வயசுல எங்க நானும் அவள மாதிரி ஓடிப் போயிருவேன் என்று அவசர அவசரமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காரு.. இப்ப நல்லா இளிச்சுகிட்டு வந்து கல்யாணம் பண்ணிட்டு போயிடுவானுங்க. நாள பின்ன ஒரு பிரச்சனை வரும்போது என்ன கேட்பான் என் புருஷன்? படிக்க வேண்டிய வயசுல எதுக்கு காலுல சுடு தண்ணி ஊத்துன மாதிரி இவ்ளோ சீக்கிரம் உங்க வீட்டுல கட்டி கொடுத்தாங்க? அப்படினா ஏற்கனவே வயித்துல எவன் கூடயாச்சும் போய் வாங்கிட்டியா? அத கலச்சி உங்க அப்பன் என் தலையில கட்டி வச்சிட்டானானு கேட்க மாட்டானா.. என்னோட ஃப்ரெண்ட் ரூபி இல்ல.. அவ அக்கா யாரோ லவ் பண்ணிட்டானே பிளஸ் டூ முடிச்ச கையோட அவங்க வீட்டிலயும் இந்த மாதிரி தான் அவசரமா கல்யாணம் முடிச்சாங்க.
அப்புறம் ஒரு பிரச்சனை வந்தப்போ ரூபியோட அக்கா புருஷன் இப்படித்தான் ரூபி அக்காவை வார்த்தையால கொலையா கொன்னு அவங்க வீட்டில விட்டுட்டு போயிட்டாராம்.. ரூபியோட அப்பா தப்பு பண்ணிட்டேன்னு சொல்லி ஒரே அழுகையாம்.. இந்த நிலைமை அப்பாவுக்கும் வரணுமா?
ஏற்கனவே நீங்களும் அப்பாவும் பேசியே வருஷகணக்கா ஆகுது. ப்ளீஸ்மா நீங்களாச்சும் நான் சொல்றதை கேளுங்க. உங்களுக்கு என்ன பயம் நான் அக்கா மாதிரி லவ்வு கிவ்ன்னு போயிருவேன்னு தானே.. உங்க மேல சத்தியம். நீங்க பாக்குற பையன தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். இதுக்கு மேல உங்க இஷ்டம். என் மேல நம்பிக்கை இருந்தா என்ன படிக்க வையுங்க.. ” தன்னுடைய நிலைமையை நீண்ட விளக்கமாக பெற்றவளுக்கு கூறியிருந்தாள் வான்மதி.
மூத்த மகளால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீண்டு வர முடியாத வாசுகி இளைய மகள் பேச்சால் மிகவும் மனமுடைந்து போனார்..
பரசுராமிடம் பேசுவதை அருதியாக நிறுத்தி இருந்தார்.. வான்மதி பேசியதை தனக்குள் ஓட விட்டு அவள் கூற்றிலிருந்த உண்மைகளை உணர்ந்து கொண்டார் வாசுகி..
மனைவி தன்னோடு பேசவில்லை என்றாலும் பரசுராம் சலிக்காமல் நடக்கும் விஷயங்களை மனைவியிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்.. அனைத்தையும் ஊமை போல கேட்டுக் கொண்டு அமைதியாக கடந்து விடுவார் வாசுகி.
அன்று வெளியே சென்றிருந்த பரசுராம் நல்ல சம்பந்தத்தோடு ஒரு மாப்பிள்ளை பார்த்து, அதனைப் பற்றி வாசுகியிடம் விவரித்தார்.
” நல்ல இடம் வாசுகி. பையன பத்தி ஒரு குறை இல்ல. ஏன் இவ்வளவு சீக்கிரம் பொண்ண கட்டி கொடுக்குறீங்கன்னு கேட்டாங்க.. அவங்க கிட்ட போய் உண்மையை மறைச்சு சொல்லிட்டு இருக்க முடியுமா. எப்படி இருந்தாலும் தெரிய போறது தானே.. அதான் பெரியவள பத்தி சொல்லி நாங்க நல்லா இருக்கும்போதே இவளையும் கரை சேர்த்திரனும்னு பாக்குறோம்னு சொல்லிட்டேன்.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மாதிரி. நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ண படிக்க வைக்கிறது எங்க பொறுப்புன்னு சொல்லிட்டாங்க. சொல்ல மறந்துட்டேனே மாப்பிள யூ எஸ் ல இருக்காரு. லீவுக்கு வராராம். கையோடு கல்யாணத்த முடிச்சிட்டு மொத மாப்பிள்ளை அங்க போயிருவாரு. அப்புறம் விசா எல்லாத்தையும் பாத்துட்டு பொண்ணயும் கூட்டிட்டு போயிடுவாராம்.” பரசுராம் அனைத்தையும் ஒன்று விடாமல் வாசுகியிடம் கூற அவர் பாத்திரம் தேய்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.
எப்படியும் வாசுகியிடமிருந்து பதில் வராது என்பதால் பரசுராம் சோர்வோடு திரும்ப
“வானு படிக்கட்டும். இப்போ அவளுக்கு கல்யாணம் வேணாம்.” திடீரென்று மனைவி பேசியதால் பரசுராம் அதிர்ந்து போனார்.. வேகமாக திரும்பி வாசுகி முதுகை வெறிக்க அவர் பாத்திரத்தை தேய்த்தபடி இருந்தார். பேசியது வாசுகியா அல்லது அவரின் பிரம்மையா என்று பரசுராம் யோசித்துக் கொண்டிருக்க கணவனின் எண்ணப் போக்கை உணர்ந்த வாசுகி தண்ணீர் குழாயை அடைத்து விட்டு கணவன் பக்கம் திரும்பி நின்றார்.
அப்பொழுதும் பரசுராமின் முகம் தெளியவில்லை. ” வாசு, தென்றல் ரொம்ப அமைதியான பொண்ணு. அவளே நெஞ்சுல இடி இறக்கிட்டு போகும்போது.. எதுக்கெடுத்தாலும் எடுத்துறிஞ்சு பிடிவாதம் பிடிக்கிற சின்னவ பேச்ச போய் நீ நம்புறியே..” முதலில் பட்ட காயத்தின் வடுவே இன்னும் மாறாத நிலையில் இன்னொரு காயத்தினை சுமந்திட பரசுராம் இதயத்தில் இடமில்லை. காயம் என்று நினைத்தாலே வலி அவர் உடல் முழுவதும் தீயாய் பரவி அவரின் ரத்த நாளங்களை முடுக்கி போட்டது.
வாசுகி கணவனை பரிதாபமாக பார்த்தார். மெல்ல பரசுராமை நெருங்கி அவர் கையை பற்றிய வாசகி ” நான் என் பொண்ண நம்புறேன்.. ” வாசுகியின் வார்த்தைகளில் இருந்த உறுதி அவர் கண்களிலும் எதிரொலித்தன.
பரசுராம் மனைவியின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்..
” எனக்கு ரொம்ப பயமா இருக்கு வாசு.. இவளும் பெரியவ மாதிரியே செஞ்சுட்டா.. நான்… நான் செத்தே போயிருவேன்”.. சின்ன குழந்தை போல மனைவியின் கரத்தைப் பிடித்து முகத்தில் வைத்தபடி கதறினார் பரசுராம்.
வாசுகிக்கும் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. தான் அழுதால் கணவனின் மன உறுதி குலைக்கப்படும் என்பதால் கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கி கொண்டார்.
சமையலறையில் நடக்கும் சம்பாஷனைகளை வெளியே நின்றபடி கேட்டுக் கொண்டிருந்த வான்மதி அந்த நொடி தனக்குள் ஒரு வைராக்கியத்தை எடுத்துக் கொண்டாள். அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்ததைப் போல அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்கே கழுத்தை நீட்டுவது என்று..
அதன் பிறகு அரை மனதாக பரசுராம், வான்மதி மேலே படிப்பதற்கு ஒப்புக்கொண்டார். தூரமாக அல்லாமல் தினமும் சென்று வருவது போல வீட்டு பக்கத்திலேயே இருந்த பெண்கள் கல்லூரியில் வான்மதி சேர்ந்தாள்.. அவள் பேருந்திலோ அல்லது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்ல கூட வீட்டில் அனுமதி கிடையாது.
பரசுராமே சென்று அவளை கல்லூரியில் விட்டு கல்லூரி முடிந்த பின்பு அழைத்து வந்தார்.. படிக்கும் காலத்தில் கூட தோழிகள் என்று யாரையும் வான்மதி வீட்டிற்கு அழைத்து வர உத்தரவில்லை..
இப்படி பல கெடுபிடிகளோடு தன்னுடைய கல்லூரி படிப்பை ஒருவாராக முடித்த வான்மதி, இளங்கலை சேர்ந்தாள்.. படிப்பதை நிறுத்தினால் எங்கே வீட்டில் திருமண பேச்சை எடுத்து விடுவார்களோ என்கிற பயம்.. படித்த கல்லூரியிலேயே ஆங்கில பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே முதுகலை படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
தென்றலின் பேச்சு அவர்கள் வீட்டில் தப்பி தவறி கூட வராது.. ஆனால் சில சமயங்களில் வான்மதி அம்மா தென்றலின் புகைப்படத்தை பார்த்து தனிமையில் அழுவதை கண்டிருக்கிறாள்..
இவர்களும் தென்றலைத் தேடி போகப் போவதில்லை.. அக்காவை பற்றி நன்கு அறிந்திருந்த வான்மதி அவளும் தன்மானத்தை தொலைத்து அம்மா வீடு தேடி வரப்போவதில்லை என்பதை புரிந்து அமைதியாக கடந்து விடுவாள்.
சசி திரைப்படம் இயக்கப் போவதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவ கண்டும் காணாமல் அதனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் அவளின் பெற்றோர்.. ஆனால் இடி செய்தியாக அந்த திரைப்படம் வெளிவராமல் போக தென்றலை நினைத்து பெற்றவர்கள் மனதிற்குள் மருகினார்கள். வான்மதிக்கு கூட அவளை நினைத்து வேதனையாக இருந்தது.
உறவுக்காரர் ஒருவர் அவர் வீட்டு திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வர
” சென்னைக்கு போயிருந்தன்பா.. மாதவிக்கு பத்திரிக்கை வைக்கணும்ல.. மாதவி சொல்லிட்டு இருந்துச்சு. நம்ம தென்றல் அங்க தான் இருக்காளாம். ரெண்டு பொட்ட பிள்ளைங்க.. ரெண்டும் பார்க்க வாசுகி மாதிரியே இருக்குன்னு.. ” விஷயத்தை கேட்ட அடுத்த நொடி வாசுகியின் கண்கள் கலங்கியது.
பரசுராமிற்கும் இதயம் பிசைந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்தார்.. பெற்றவர்களுக்கும் மகளுக்கும் இடையே உணர்வு போராட்டம் ஆழிப்பேரலையாய் பொங்கி வழிந்தாலும் யார் முதலில் பேசுவது என்கிற பனித்திரை அவர்களை விலக்கிய வைத்திருந்தது..
வருடங்கள் செல்ல தென்றல் வாழ்வில் பல மாற்றங்கள். கழுதை தேய்ந்து கட்டெறுப்பாகிய நிலையில் அவளால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெற்றவர்களை சென்று காண முடியும்? முடிந்த மட்டும் தான் நன்றாக இருக்கிறேன் என்கிற நிலைமையில் அவர்கள் மன சாந்தியோடு இருக்கட்டும் என்று தென்றல் அமைதியாகி விட்டாள்..
வான்மதி எந்த சமூக ஊடகத்திலும் கணக்கு வைத்திருக்க மாட்டாள்.. பேராசிரியை ஆன பிறகு தன்னுடைய பழைய முகநூல் கணக்கை ஒரு முறை லோகின் செய்து பார்க்க அதில் பிருந்தா அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிருந்தது தெரிந்தது.
மாதவியின் மகளான பிருந்தா திருமணம் முடிந்து கணவன் குழந்தை என்று இருக்கிறாள். அவளின் திருமணத்திற்கு அண்ணன் குடும்பத்தை அழைக்க மாதவி வந்திருந்த போது பரசுராம் தங்கையை வரவேற்க கூட மனமில்லாமல் இருந்தார். மாதவியும் அவமானப்பட்டு திரும்பினார்.
இன்னும் வாசுகிக்கு மாதவி மேல் உள்ள கோபம் தீரவில்லை. அதனை புரிந்து கொண்டிருந்த பரசுராம் தங்கையிடம் உறவு வளர்த்து மீண்டும் மனைவியின் பார முகத்தை சம்பாதிக்க விரும்பாமல் முறிந்த உறவை ஒட்ட வைக்க முனையவில்லை.
இத்தனை வருடங்கள் கழித்து பிருந்தா குறுஞ்செய்தி அனுப்பிருக்க ஒருவித குறுகுறுப்போடு அதனை திறந்து படித்தாள் வான்மதி.
கிட்டத்தட்ட அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு நான்கு வருடங்களுக்கும் மேலாகி விட்டது..
தென்றல் மாதவி வீட்டிற்கு வந்து வேலை கேட்ட சமயம் அது.. தென்றலை பற்றிய அப்போதைய நிலையை விலாவாரியாக பிருந்தா எழுதிருக்க அதனை படித்த வான்மதிக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது.
சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட தன் சகோதரியின் நிலையை எண்ணி அந்த இரவை கண்ணீரிலேயே கழித்தாள். பின் ஒரு வாரம் மனதை தேற்றியவள் பிருந்தாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். தென்றலின் எண்ணை கேட்டு.
பிருந்தாவும் வான்மதியும் பேசிக்கொள்ள ஆரம்பித்து தென்றலின் பரிமாறப்பட்டது.. அப்படியே தென்றலுக்கு அழைத்து பேச ஆரம்பித்தாள் வான்மதி.
அன்று தென்றலின் பிறந்தநாள்.. காலையில் வீட்டு வேலைகளை செய்து முடித்தவள் பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்பி விட்டு அலுவகதிற்கு வந்து விட்டாள். வேலை நெட்டி முறித்தது..
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் போன ஜென்மத்தில் நடந்தவை போல இருந்தது அவளுக்கு. சரியாக வேலை முடியும் சமயம் புது எண்ணில் இருந்து அழைப்பு வர யோசனையாக எடுத்தவளுக்கு இன்ப அதிர்ச்சி தான்.
அக்கா என்ற குரலை வைத்தே அழைத்தது யார் என்று புரிந்து கொண்டாள் தென்றல். உடன் பிறந்தவளிடம் பேச வார்த்தைகள் கொட்டி கிடந்தது. அதை அள்ளி கோர்த்து வார்த்தைகளாக வடிக்கத்தான் அவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.
தன்னுடைய இரத்தம். தனக்கான உறவு. இத்தனை ஆண்டுகளாக அவள் இதயத்திற்குள் ஏங்கி தவித்த சொந்தம்.. சின்ன வயதில் எங்கே சென்றாலும் அக்கா என்று வால் பிடித்து வந்த செல்ல தங்கை. பெற்றவர்களை பற்றி நினைத்துக் கொள்வாளோ இல்லையோ ஆனால் தங்கையை பற்றி நினைக்காத நாளில்லை தென்றல்.
பேசுவதற்கு ஒரு நொடி போதும். ஆனால் இந்த நிலையில் தான் இருப்பதை தங்கை அறிந்து கொண்டால் கண்டிப்பாக அவள் மனம் வேதனைப்படும் என்பதால் தங்கையிடம் பேசுவதைக் கூட மறந்திருந்தாள் தென்றல்.
அப்படிப்பட்ட தங்கையே என்று அவளை அழைக்க அதற்கு மேல் அவளிடம் தயக்கம் இல்லை. அழுகையோடு பல வருடங்கள் கழித்து அவள் தங்கையோடு உரையாட தொடங்க மனதில் தேக்கி வைத்திருந்த பாரங்கள் அனைத்தும் மடைதிறந்த வெள்ளங்களாக அடித்து வெளியே வரப்பட்டது.
அமைதியாக தென்றல் அழுது முடித்து தன்னை பற்றி சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்த வான்மதிக்கு சசி மித்ரன் மீது கொலை வெறியே எழுந்தது.