இடையில் தேவா தர்ஷினியை திருமணம் செய்து கொண்டான் காதலித்து.. தர்ஷினியின் குடும்பம் பெரிய கோடீஸ்வர இடம்.. சோமசுந்தரம் விசாலாட்சிக்கு தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல இளைய மகன் வரன் தேடியது பெரும் நிம்மதியை கொடுத்தது.
தேவா திருமணத்தின் போது தென்றல் அனுபவித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.. வீடு முழுவதும் உறவினர்கள் நிறைந்திருக்க அத்தனை பேர் முன்னிலையில் வைத்து தென்றலை அழைத்தார் விசாலாட்சி.
” இந்தா.. இப்படி மூளி முங்காரியா நின்னு வந்திருக்கிறவங்க முன்னாடி என் மானத்தை வாங்காத. உன்ன மாதிரியே உன் பிள்ளைங்க ரெண்டும் பஞ்ச பரதேசியா நிக்குதுங்க.. எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ இப்படி ஒருத்தி என் வீட்டு மூத்த மருமகளா வந்து வாச்சிருக்கா. நீயும் போட்டுகிட்டு உன் பிள்ளைகளுக்கும் உருப்படியா போட்டு விடு. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு நகை குறையாம எப்படி கொடுத்தேனோ அப்படியே எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுக்குற..” மருமகளும் பேரப்பிள்ளைகளும் கழுத்தோடு இருக்கிறார்கள் என்பது உருத்தியிருந்தால் அதை தனியாக கொடுத்திருக்கலாமே?
அவருடைய பணப்பகட்டையும் காருண்ய உள்ளத்தையும் காட்டுவதற்கு உறவினர்கள் முன்னிலையில் வீட்டு மருமகளை அவமானப்படுத்தினார்..
” என்னதான் சொல்லு விசாலம் உன்ன மாதிரி மனசு யாருக்கு வரும்? நமக்கு ஈக்குவலான இடத்தில பொண்ணு பாத்துருந்தா இந்நேரம் நம்ம பையன் இப்படி நொடிஞ்சு போயிருப்பானா.. அவனோட மாமனாரு காச கொட்டி கொடுத்து மருமகன ஒரு நிலைக்கு கொண்டு வந்திருக்க மாட்டானா.. அவசரப்பட்டு ஊர்ல இல்லாத பேரழகிய போய் பார்த்து இருக்கான் உன் மகன்.. ” உறவுக்காரி வேண்டுமென்றே விசாலாட்சியை ஏற்றி விட
” எல்லாம் என் தலையெழுத்து.. நம்ம பேச்சை இங்க யாரு கேக்குற.. எப்படி வாழ வேண்டிய பிள்ளை குடிச்சி குட்டிச்சுவரா போறத பார்த்தா பெத்த வயிறு பத்தி எரியுது…ம்ம்ம்” பெருமூச்சு விட்ட விசாலாட்சி இன்னும் தென்றல் அந்த நகையை கையால் தொடாமல் வெறித்து பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டனப் பார்வை பார்த்தார்.
” உனக்கு ஒரு விஷயத்தை பத்து தடவை சொன்னாதான் காதுல விழுவுமா. எடுத்துட்டு போடி உள்ள.. ” தென்றல் மாமியாரை நேர் பார்வை பார்த்தாள்..
” பரவால்ல அத்தை.. பேன்சி நகை வாங்கி வச்சிருக்கேன்.. அது போதும்.. பிள்ளைங்க கண்டிப்பா தொலைச்சிடுவாங்க. இப்ப இருக்கிற நிலைமைக்கு என்னால உங்களுக்கு இதெல்லாம் திரும்ப கொடுக்க முடியாது” குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் தென்றல்.
தன்னை உறவுகள் முன்பு அவமானப்படுத்தியதாக இன்னும் மருமகள் மீது துவேஷம் கொண்டார் விசாலாட்சி.. தேவா அண்ணன் குடும்பத்திற்கு விலையுயர்ந்த ஆடைகளை தான் வாங்கிருந்தான் திருமணத்திற்கு..
தென்றல் அதனையும் ஏற்க மறுக்க” இதெல்லாம் முறைதான்.. வாங்கி கொடுத்து தானே ஆகணும். எனக்காக எடுத்துக்கோங்க ” அந்த வீட்டிலேயே தேவா மிகவும் நல்லவன். அவ்வப்போது தென்றலுக்காக அம்மாவிடம் வக்காலத்து வாங்குவதும் அவன் தான். அண்ணன் கண்டுகொள்ளாத பிள்ளைகளை தன்னுடைய குழந்தைகளாக பாவித்து அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, அவர்களுக்கு பிடித்தமானதை வாங்கி தருவது, வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அவர்களோடு விளையாடுவது என்று நல்ல சிறிய தந்தையாக நடந்து கொண்டான்.
திருமணத்திற்கு பின் அவனுடைய நல்ல குணங்கள் அவனுக்குள்ளேயே சமாதியாக்கப்பட்டன. தர்ஷினி பிறவியிலேயே திமிர் பிடித்தவள். அவள் வீட்டில் கொட்டி கிடந்த செல்வம் அவளோடு சேர்த்து அவள் அகங்காரத்தையும் வளர்த்து விட்டது.
தேவா அவர்களின் நகைக்கடையோடு சேர்த்து மாமனாரின் சொத்துக்களையும் வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டான்.. பூங்கொடி பூங்குழலி இருவரிடமும் தேவா பாசமாக பழக அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்தாள் தர்ஷினி..
ஒரு முறை பூங்கொடி படியிலிருந்து தவறி விழ காலில் அடிபட்டது. சசி வீட்டில் இல்லை. குழந்தை வலி பொறுக்காமல் வீறிட்டு அழ அந்நேரம் மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த தேவா உடனே பூங்கொடியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் அண்ணியோடு. அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.
திரும்ப அவர்கள் வீட்டிற்கு வந்ததும் பூகம்பம் வெடித்தது.
” என்னமோ உன் பிள்ளைக்கு அடிபட்ட மாதிரி குடுகுடுன்னு ஓடுற.. அப்படி என்ன அக்கறை அந்த பிள்ளை மேல.. காலுல லேசா அடி. ஒரு ஆட்டோ புடிச்சு அவங்களால தூக்கிட்டு போக முடியாதா. இல்ல குடிச்சிட்டு ஊர சுத்திட்டு இருக்காரே உங்க அண்ணன் அவருக்கு போன் பண்ணா வரப்போறாரு..
சாப்பிடறது கூட விட்டுட்டு அப்படி என்ன உனக்கு அவங்க பிள்ளையை தூக்கிட்டு ஓடுறது.. அந்தப் பிள்ளை என்ன உனக்காக பொறந்துச்சு” நாக்கில் நரம்பில்லாமல் தர்ஷினி பேச அதனைக் கேட்டுக் கொண்டிருந்த விசாலாட்சிக்கே மனதில் சுருக்கென்றது.
தென்றல் குழந்தையை இறுக்கமாக கட்டியணைத்தபடி கண்ணில் நீரோடு நிற்க தேவா அவமானம் தாங்க முடியாமல் தர்ஷினியை அடித்து விட்டான்.
” அறிவு இல்ல உனக்கு.. சின்ன குழந்தை அதுக்கு அடிப்பட்டு ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனது அவ்ளோ பெரிய விஷயமா.. உன் அண்ணன் பிள்ளைங்க கீழே விழுந்தா நீ பார்த்துட்டு வேடிக்கை பார்ப்பியா.. அதுக்கு போய் என்னையும் அவங்களையும் சேர்த்து வச்சு.. ச்சே.. எவ்ளோ கேவலமான புத்தி உனக்கு..” தர்ஷினி கணவன் கைநீட்டி அடித்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டாள். மருமகளை சமாதானப்படுத்த சென்ற விசாலாட்சி அவள் போட்ட கூச்சலை கண்டு பயந்து ஒடுங்கி விட்டார்..
ஒரு மணி நேரமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவள் உடனடியாக கிளம்பி தாய் வீடு சென்றாள்.. அடுத்த அரை மணி நேரத்தில் வரிசை கட்டி கார்கள் விசாலாட்சி வீட்டு முன்பு வந்து நின்றன. பஞ்சாயத்து கூடியது. சோமசுந்தரம் தகவல் தெரிந்து அடித்து பிடித்து ஓடி வந்தார்.. அவர்கள் அனைவரும் மாறி மாறி காட்டுக் கூச்சலிட்டு சின்ன விஷயத்தை இடியாப்ப சிக்கல் ஆக்கினார்கள்.. இனி தங்கள் மகள் இந்த வீட்டிற்கு வர மாட்டார் என்றும் தேவா அங்கே வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்கள்.
விசாலாட்சி சோமசுந்தரம் இருவரும் ஆடி போனார்கள்.. தேவா இருதலை கொள்ளி எறும்பானான். தர்ஷினி அந்நேரத்தில் கரு உண்டாகி இருந்ததால் தேவாவினால் அவளை உதறித் தள்ள முடியவில்லை. அதேசமயம் வீட்டோடு மாப்பிள்ளையாக தன்மானத்தை இழந்து மாமனார் வீட்டில் சொகுசாக வாழ்வதற்கும் அவன் மனம் இடம் தரவில்லை.
இறுதியாக இனி அண்ணன் குடும்ப விஷயத்தில் தான் தலையிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்தவன் மாமனார் வீட்டிற்குச் சென்று தர்ஷினியை கையில் காலில் விழுந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.. அன்றிலிருந்து தென்றலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான். குழந்தைகள் அவனைக் கண்டு ஓடி வந்தாலும் சின்ன சிரிப்போடு கடந்து விடுவான்..
என்றாவது தர்ஷினி இல்லையென்றால் குழந்தைகளோடு விளையாடுவான்.. மற்ற நேரமெல்லாம் கடிவாளம் கட்டிய குதிரையின் நிலை அவனுக்கு.
வீட்டில் இவ்வளவு அமளித் துமலி நடந்தும் எதையும் கண்டுகொள்ளாமல் தனி ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் சசி மித்ரன்..
அவ்வப்போது மற்ற இயக்குனர்களின் படத்திற்கு கோ டைரக்டராக வேலை செய்வான். அதில் வரும் பணத்தை மனைவியிடம் பாதியும் மீதியை அவன் குடியிலேயே செலவழித்தான்..
அவனுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் சினிமாவில் கோளாச்சி கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக அவனது தன்னம்பிக்கை அழிந்தது.
அவனுடைய கனவு அவனாலே அழிந்து கொண்டிருந்ததை அவன் கிஞ்சித்தும் உணரவில்லை.. அந்த பெரிய வீட்டில் வாடகை பிரச்சினை மட்டும் தென்றலுக்கு இருந்ததில்லை. மற்றபடி அவள் குழந்தைகள் மற்றும் அவளின் கணவன் உணவுகள் கூட சம்பளத்தில் ஒரு பகுதியை மாமியாரிடம் கொடுத்து விடுவாள் தென்றல்.
” ஏன் விசாலம் மருமக கொடுத்து தான் இங்க நிறைய போகுதா.. ” சோமசுந்தரம் மனம் பொறுக்க முடியாமல் விசாலத்தைக் கேட்க
” உங்களுக்கு என்ன வந்துச்சு? ஓசில உட்கார்ந்து தின்னா கொழுப்பு எடுத்துரும் கழுதைக்கு.. ” கணவன் வாயை அடைத்து விட்டார்.
மற்றபடி வெளிவேளையும் பார்த்துக் கொண்டு வீட்டிலும் வேலை செய்வது தென்றலின் அன்றாட கடமைகளில் ஒன்றாகியது. குழந்தைகள் படிப்பு செலவு மருத்துவச் செலவு இப்படி ஒவ்வொரு செலவும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்ல விழி பிதுங்கி நின்றாள் தென்றல்..
குடிக்காத போதெல்லாம் குழந்தைகளிடமும் தென்றலிடமும் நன்றாக பேசுவான் சசி. சில நேரங்களில் கையில் காசிருக்கும் போது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது செல்வான்..
பிள்ளைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க மனைவியின் கரத்தைப் பிடித்த தலை குனிந்து அமர்ந்திருப்பான்.
“ஸாரி டா.. என்னால நீ ரொம்ப கஷ்டப்படுற. உன் வயசு பொண்ணுங்க எல்லாம் எப்படி எப்படியோ இருக்கும்போது நீ மட்டும் ரெண்டு பிள்ளைகள வச்சுக்கிட்டு.. உனக்கும் ஆசை இருக்கும்ல..” தென்றல் அமைதியாகவே இருப்பாள். கத்தி ஆர்ப்பரித்து அவன் கையை தட்டி விட்டு என்ன பிரயோஜனம்?
குரலை உயர்த்தினால் அந்த நேரம் அடங்கிப் போவான். மது எனும் அரக்கன் அவனுள் சென்ற பின் அவனும் அசுரனாகி போவான்..
பெரும்பாலான நேரம் மது அருந்தி விட்டு அவன் புலம்புவதை தென்றல் கேட்டுக் கொண்டிருப்பாள்.
” என்ன மன்னிச்சிடு செல்லம்.. நான் வேணும்னே குடிக்கல. நான் ரொம்ப அன்லக்கி டி.. சரியான தரித்திரம் புடிச்சவன். அப்பன் காசுல வாழ கூடாதுன்னு எனக்குன்னு ஒரு கனவு. எனக்குன்னு ஒரு குடும்பம். எல்லாமே சரியா தான போனுச்சு.. அப்புறம் ஏன்.. என்ன ஆச்சு.. எதனால இப்படி.. “
புலம்பிக் கொண்டே உறங்கி விடுவான்.. கடந்த இரண்டு வருடங்களாக மற்ற இயக்குனர்களிடம் வேலை செய்வதையும் நிறுத்தி விட்டான். முழு நேரமாக அவனுடைய கதையைப் பற்றிய சிந்தனை மட்டுமே அவனுக்குள். எப்படியாவது அவன் கனவை அடைந்துவிட வெறி.
அந்த வெறியில் மனைவி குழந்தைகளை பற்றி இதயத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பாசமும் காதலும் மறைந்து போயின. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் நிலையில் சசி இல்லை. குடும்ப பாரம் முழுக்க முழுக்க தென்றல் தலையில்..
முன்பெல்லாம் தன்னுடைய செலவை தானே எப்படியாவது சமாளித்துக் கொண்டிருந்த சசி இப்பொழுது முழுக்க மனைவியை சார்ந்து வாழ தொடங்கினான்..
பணம் வந்த போது மனைவிக்கு தங்கத்தில் திருமாங்கல்யம் வாங்கி அணிவித்து விட்டிருந்தான் சசி.. அது முதல் கொண்டு அடகு வைத்து விட்டாள்.. அந்த அளவிற்கு அவளின் குடும்பம் வறுமையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்தது. அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவேன் என மார் தட்டி அழைத்து வந்தவன் முக்கால் வாசி நேரம் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என சொல்லாமல் சொல்லும்படி நடந்து கொண்டான்.
கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறோடு ஆபீஸ் வேலை வீட்டு வேலை என்று முப்பத்தி இரண்டு வயதிற்குள் ஒரு வழியாகிவிட்டாள் தென்றல்..
அவளுக்கிருந்த ஆறுதல் எல்லாம் அத்தை மாதவியின் வீடு.. முதலில் எல்லாம் ஹரிதாஸிற்கு தென்றல் குழந்தைகளோடு அங்கே வருவது பிடிக்காது. பின் நாளடைவில் அந்த வெறுப்பும் மறைந்து போனது..
பணத்தட்டுப்பாடு ஏதாவது தென்றலுக்கு வந்தால் ஒன்று மாதவி உதவி செய்வார். இல்லையென்றால் அகிலன் கொடுத்து உதவுவான்.
திரும்ப அக்கடத்தை தென்றல் அடைக்க முயலும் போது அவர்கள் வாங்கவே மாட்டார்கள். இருந்தும் தென்றல் வற்புறுத்தி பணத்தை கொடுத்து விட்டு வருவாள்.
மகாராணியாக வாழ வேண்டிய பெண் பஞ்சத்தில் அடிபட்ட பரதேசியாக தன் முன்னாள் அமர்ந்திருக்க கண்ட மாதவிக்கு அடி வயிரெல்லாம் பற்றி எரிந்தது.
” இப்படி ஒரு புருஷன் உனக்கு தேவையா? அந்த நாதாரியை தூக்கி எறிஞ்சுட்டு வான்னு சொன்னாலும் கேட்க மாட்ற.. உன் அப்பா கிட்ட போய் நேர்ல பார்த்து பேசிட்டு வான்னு சொன்னாலும் காதுல போட்டுக்க மாட்ற. அப்படி என்னதான் உனக்கு பிடிவாதமோ தெரியல. உயிர் மட்டும் தான் உன் உடம்புல மிச்சம் இருக்கு. அதையும் இன்னும் கொஞ்ச நாள்ல உன் புருஷன் வாங்கிடுவான். இந்த ரெண்டு பிள்ளைங்கள அனாதையா விட்டுட்டு போய் சேர போற பாரு.
அவனுக்கு என்ன பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை.. ஜம்முனு அவன் ஆத்தாக்காரி அவங்க தகுதிக்கு தோதா ஒரு பொண்ண பாத்து கட்டி வச்சுருவா. தென்றல்னு ஒருத்தி அவன் வாழ்க்கையில இருந்ததையே மறந்திடுவான்.. நீ நம்பலனா பாரு நான் சொல்றது தான் ஒரு நாள் நடக்க போகுது..” அத்தையின் ஆதங்கம் தென்றலுக்கு புரிந்து தான் இருந்தது.
” வேற என்ன செய்ய சொல்றீங்க.. இது நானா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அனுபவிச்சு தான் ஆகணும். அவன் சம்பாரிச்சு கொடுக்கும்போது சந்தோஷமா தானே இந்த வாழ்க்கை இருந்துச்சு. இப்போ ஒரு கஷ்டம் வரும்போது அவனை விட்டுட்டு என்ன ஓட சொல்றீங்களா.. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்னோட அம்மா அப்பாவை விட்டு ஓடலையே. அவர் கூடவே நின்னு அந்த கஷ்டத்துல இருந்து அவரை மீட்டுக் கொண்டு வந்தாங்க தானே..
நீங்க பார்த்துக்கிட்டே இருங்க அத்தை. அவனுக்கும் ஒரு காலம் வரும். இன்னிக்கு என் புருஷனை கேவலமா பேசினா வாயெல்லாம் அன்னைக்கு அவன தூக்கி வச்சு பேசும். இப்போ நான் பட்டுட்டு இருக்கிற கஷ்டம் எல்லாம் ஒரு நாள் காணாம போகும்.. ” கண்களுக்கு எட்டாத புன்னகை ஒன்றை தென்றலின் பதிலாக இருந்தது.