தன்னுடைய பெற்றோரின் மீது கடும் கோபத்தில் இருந்தான் சசி மித்ரன்.. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையோடு ஓடிக் கொண்டிருப்பவனுக்கு கால் கட்டு போட நினைத்தால் கோபம் வராதா என்ன?
அன்று கோயம்புத்தூருக்கு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க தான் சென்றிருந்தான். எதிர்பாராத விதமாக தென்றலோடு ஒரு சந்திப்பு அமைந்து அவளோடு பயணம் செய்யுமாறு விதி அவனுக்கு வழி விட்டது.. கோயம்புத்தூர் இறங்கியதுமே அவனுக்கு பெரிதாக நன்றி கூறியவள் தன் வழியில் செல்ல சசியும் நண்பனின் வீட்டிற்கு சென்றான்.. அன்றைய நாள் முழுவதும் பயண கலைப்பு தீர தூங்கி எழுந்தவன் பிரியாணி நண்பனோடு மது விருந்து என்று அந்த நாளை மிகவும் அமர்க்களமாக கொண்டாடினான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் தயாரிப்பாளர் தன்னுடைய அலுவலகத்திற்கு வர சொல்லி இருக்க கடமை உணர்ச்சி காரணமாக ஐந்து முப்பதுக்கு எல்லாம் அவர் அலுவலகத்தின் முன்பு காத்திருக்க ஆரம்பித்தான் சசி. மணி ஆறானது ஏழானது சூரியனே வந்துவிட்டது.. இன்னும் தயாரிப்பாளர் வந்து சேரவில்லை. ரிஷப்னிஸ்ட் பெண் கூட வந்து விட்டாள்.
” சார் இப்ப வந்துட்டு வாங்க நீங்க உட்காருங்க” இவனும் அவருக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தான். முதல் நான்கைந்த முறை அழைப்பை ஏற்று பதில் கூறியவர் அதன் பின்பு அவனது அழைப்பை தவிர்த்தார். சசி காத்திருப்பதை விடவில்லை.
காலை உணவையும் மதிய உணவையும் தவிர்த்தான். கையோடு கொண்டு வந்திருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டு தயாரிப்பாளருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தான்.
மதியம் மணி மூன்றாகி விட்டது. அந்த வரவேற்பாளினி சசியை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். தயாரிப்பாளர் எப்பொழுது வருவார் என்கிற விவரம் அவளுக்கும் தெரியாத பட்சத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காலையிலிருந்து அவளை கேள்விகளால் கேட்டு தொல்லை செய்ததால் சசியை கண்டாலே அவளுக்கு கிலி பிடிக்க ஆரம்பித்தது.
மாலை மணி ஆறாகி விட்டது.. சசியின் பொறுமையோடு நம்பிக்கையும் முழுதாக அவனை விட்டு சென்றது. தயாரிப்பாளர் வேண்டும் என்றே தன்னை நிராகரித்ததை அவன் புரிந்து கொண்டான்.. ஆத்திரத்தோடு நண்பனின் அறைக்கு வந்து சேர்ந்தவன் அன்று இரவே சென்னைக்கு கிளம்பினான்.
வரும்போது என்னதான் தென்றலின் அருகே தூங்குவது போல் அவன் காட்டிக் கொண்டாலும் பட்டும் படாமல் உரசும் தோள்களும் பெண்ணவளின் காற்றில் பறக்கும் காற்றை கூந்தல்களும் அவன் முகத்தை ஸ்பரிசிக்கும் போது ஏற்பட்ட குறுகுறுப்பு சசியின் அடி ஆழம் வரை மனதிற்குள் இன்பப் பெருக்கை ஏற்படுத்தியது.
அவளோடு அவன் பயணித்த ஒவ்வொரு நிமிடங்களும் என்றுமே அவனது வாழ்வில் பொக்கிஷங்களாக பூட்டி பாதுகாக்க வேண்டியவை.முதலில் உறங்குவதைப் போல பாசாங்கு செய்தவன் விடிய விடிய விழித்திருந்தான் என்றால் நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கே சிரிப்பு வந்தது..
தென்றலிடம் அசைவு அடங்கிய அடுத்த நொடியிலிருந்து சசியின் கண்கள் திறந்து விட்டது. வெறுமனே தென்றலின் முகத்தை பார்த்துக்கொண்டு எதையோ யோசித்தபடி வந்தான்.. மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் அந்த ஏகாந்த வேளையில் மாயமாய் மறைந்தே போயிற்று.
வரும்போது இருந்து இதம் மொத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கு செல்லும் போது யோசனைகள் மட்டுமே சசியின் மனதில் இடம் பிடித்தன..
வீட்டிற்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த அவனை தட்டி எழுப்பினார் விசாலாட்சி. எரிச்சலோடு எழுந்த சசி தூக்க கலக்கத்தில்
” என்னமா.. நான் உன்கிட்ட காலைல என்ன சொன்னேன்? என்னை எழுப்ப வேணாம்னு தானே சொன்னேன்..” எரிந்து விழுந்தான்.
“என்ன பேசணுமா.. தூங்கிட்டு இருக்கிறவன எழுப்பி வச்சு தான் பேசணுமா அந்த ஆளுக்கு..”
“ஸ்ஸ்ஸ் என்னடா கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அந்த ஆளு இந்த ஆளுன்னு.. அவரு சம்பாரிச்சு போட்டு தான் இந்த வீட்ல இப்ப நீ சொகுசா படுத்து தூங்கிட்டு இருக்க.. உருப்படற யாராச்சும் மத்தியானம் குப்புற படுத்து தூங்குவானா..” அவனது தன்மானத்தை சீண்டி விட்டார் விசாலாட்சி.
வாரி சுருட்டி எழுந்த சசி அம்மாவை முறைத்துக் கொண்டே நடு கூடத்திற்கு சென்றான்.. கொட்டாவி விட்டபடி சோமசுந்தரத்தின் எதிரே அமர்ந்தான்..
சோமசுந்தரத்தின் கண்கள் சுவர் கடிகாரத்தை ஒரு முறை தழுவி மீண்டது. மதியம் மணி ஒன்று முப்பது.. வேலை வேலை என்று ஓட வேண்டிய இந்த நேரத்தில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் மகனை எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தை எண்ணி மானசிகமாக தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டார்.
கொட்டாவி விட்டபடி அரை உறக்கத்தில் உட்கார்ந்திருந்த சசியை பார்க்க அவர் ரத்த கொதிப்பு எகிறியது.. எதுவும் பேச இயலாமல் தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார்.
” ம்மா.. அவர் என்னமோ பேசணும்னு சொன்ன? என்ன பேசணும்னு அவர் யோசிச்சு முடிச்சதும் என்னை எழுப்பு.. ” சோபாவில் படுக்க முயன்றான் சசி.
“டேய் டேய் இருடா.. ஏங்க என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க.. சட்டுபுட்டுன்னு விஷயத்தை சொல்ல முடியாதா உங்களுக்கு.. பீக் டைமுங்க இது. கடையில கூட்டம் அலைமோதுது.. வெட்டியா இங்க உக்காந்துகிட்டு இருக்கீங்க..” விசாலாட்சி கணவனை கடிந்து கொண்டார்.
மனைவியை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்த சோமசுந்தரம் தொண்டையை கனைத்து
” இங்க பாருடா கடைக்கு வான்னு சொன்ன அதுக்கு மொட்டை காரணம் சொல்லிட்டு ஊரை சுத்திக்கிட்டு இருக்க.. நீ படம் பண்ணுவ பெரிய டைரக்டராவனு எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது..
இப்படியே ஆள ஏச்சிகிட்டு ஊரை சுத்த தான் நீ லாயக்கு.. உன்ன மாதிரியே குட்டிச்சுவரா போறதுக்கு டீ கடைக்கு டீ கடை வாயில சிகரெடோட நிக்கிறானுங்க.” கணவர் சொல்ல வந்ததை விட்டுவிட்டு தேவையில்லாததை பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற பதைப்பு விசாலாட்சிக்கு.
சோமசுந்தரமோ சிக்காதவன் சிக்கிக் கொண்டான் என்கிற ரீதியில் சசியை விளாசிக் கொண்டிருந்தார் வார்த்தைகளால்.
” அதான் உங்களுக்கே எல்லாம் தெரியுதுல அப்புறம் எதுக்கு அவனைக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.. சீக்கிரம் சொல்ல வேண்டியதை சொல்லுங்க ” கணவனுக்கும் மகனுக்கும் இடையே புகுந்த விசாலாட்சி பேச வேண்டிய விஷயத்தை மீண்டும் ஒருமுறை கணவனுக்கு ஞாபகப்படுத்தினார்.
நினைவு வந்தவராய் சோமசுந்தரம் ” உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.. இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம்.. ” பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்தார்.
தந்தை சொன்னதைக் கேட்டு அறை உறக்கம் அரை கதா தூரம் பறந்து விட்டது சசி மித்ரனுக்கு.
” கல்யாணமா எனக்கா” புரியாத பாணியில் கேட்டான்.
” பின்ன எனக்கா.. ” நேரம் காலம் தெரியாமல் நக்கலடித்தார் சோமசுந்தரம்.
” ஓ துரை பேசுனா தான் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு நாங்க முடிவு எடுக்கணுமா.. எரும மாடு மாதிரி ஊர் மேயுரியே நாங்க பெத்து வளர்க்காமயா.. அது வேணும் இது வேணும்னு கேட்டு வாங்க தெரிஞ்சது.. அதெல்லாம் நீ சொல்லித்தான் நாங்க வாங்கி கொடுத்தோமா.. ” தந்தையின் பேச்சு இருபத்து நான்கு வயது இளைஞனான சசிக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியது.
” எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.. “
” ஏன் வேணாம்”
” புடிக்கல “
” ஏன் புடிக்கல “
” உங்ககிட்ட காரணம் சொல்லனும்னு அவசியம் இல்ல”
“எஸ் சசி மித்ரன் இனிஷியல் போட்டுக்கறல காரணம் சொல்லித்தான் ஆகணும்..” சோமசுந்தரம் விடுவதாயில்லை.
” ப்பா என்னப்பா லூசு மாதிரி பேசிட்டு இருக்கீங்க.. என்னோட வாழ்க்கை லட்சியமே படம் பண்றதுதான். சினிமால நல்ல டைரக்டர்னு பேர் வாங்கணும். இன்னும் அசிஸ்டன்ட் டைரக்டராக கூட எந்த படத்துலயும் ஒர்க் பண்ணல. அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு கமிட்மெண்ட்ட தூக்கி என் தலையில வைக்கிறீங்க.
நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு எனக்கு புரிஞ்சு போச்சு. அதுக்கு நான் ஆள் கிடையாது. என்னோட கனவு லட்சியம் மட்டும் தான் எனக்கு முக்கியம்.” குரலை உயர்த்தாமல் தன்னுடைய கருத்தை முன்வைத்தான் சசி மித்ரன்.
அவன் இம்மாதிரி எதையாவது கண்டிப்பாக கூறுவான் என்பதை முன்னமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் சோமசுந்தரம்..
திரும்பி மனைவியை பார்க்க
” சசி உன் வாழ்க்கைய உனக்கு பிடிச்ச மாதிரி பாத்துக்கோ. உங்களுக்கு என்ன தலை எழுத்தா டா கண்டவன் கிட்ட போய் தலை குனிஞ்சு நிக்க. உனக்கு என்ன இல்ல கேட்கிறேன்? சரி என்னமோ சினிமா சினிமானு பைத்தியம் மாதிரி பெனாத்திட்டு இருக்க . அது உன்னோட விருப்பம்.
ஆனா கல்யாண விஷயம் அப்படி இல்ல. நல்ல சம்பந்தம். என்னோட ஒன்னு விட்ட தம்பி சாம்பசிவம் இருக்கான்ல அவனோட பொண்ணு தான் உனக்கு பேசலாம்னு இருக்கும்.. நம்மள விட பெரிய ஆளு. அரசியல் அது இதுன்னு நல்ல செல்வாக்கு. அந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் படத்துக்கு அவங்க அப்பாவே புரொடியூஸ் பண்ண போறான்.. எதுக்கு இந்த வீண் அலைச்சல்.. ” நேக்காக பேசி மகனின் மனதை மாற்ற முயற்சி செய்தார் விசாலாட்சி.
சசியின் தன்மானம் அடி வாங்கியது. யாரிடமும் சென்று அவன் வாழ்க்கை பிச்சை கேட்கவில்லை. தன்னுடைய திறமைக்கு அங்கீகாரம் மட்டுமே அவன் தேடுகிறான்.. அதைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் மீது ஆத்திரம் தலைக்கேறியது..
ஒன்றும் பேசாமல் எழுந்தான் சசி..
” என்னடா ஒண்ணுமே சொல்லாம போற ” விசாலாட்சி சசியின் குறுக்கே வந்து நின்றார்.
” பேசுறதுக்கு ஒன்னும் இல்லன்னு அர்த்தம்.. ” தாயின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கூறினான் சசி.
” பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது”
“ஆஹ் எனக்கு கட்டி வச்ச அவங்க பொண்ண டார்ச்சர் பண்ணியே கொன்றுவேன்னு சொல்லுங்க..” எகத்தாளமான பதில் ஒன்றிணை தந்தையை நோக்கி வீசியவன் தன் அறைக்கு சென்றான்.
கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கு வெளியே சோமசுந்தரம் கத்துவது நன்றாக கேட்டது.. கொஞ்ச நேரத்தில் விசாலாட்சியின் பெயரை தொடர்ந்து அவரின் கூச்சலும். அறைக்குள் இருந்து வெளியே ஓடினான் சசி. விசாலாட்சி மயங்கி கிடந்தார் மரக்கட்டை போல.
மூச்சு சீரற்று வந்தது.
“ம்மா.. ம்மா.” அவரை தூக்கி மடிமீது போட்டுக் கொண்ட சசி தட்டி எழுப்ப முயற்சி செய்ய சோமசுந்தரத்திற்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.
“ப்பா என்னப்பா ஆச்சு”
” உன்ன பத்தி தான்டா பேசிக்கிட்டே இருந்தா திடீர்னு மயங்கி கீழே விழுந்துட்டா.. ” சசிக்கு வியர்த்து ஒழிந்தது. சின்ன வயதில் இருந்து விசாலாட்சி என்றால் அவனுக்கு உயிர்.
பேச்சு மூச்சுற்று அவர் கிடக்க
சில வினாடிகளுக்கு பின் வேகமாக எழுந்து சமையல் கட்டுக்கு சென்றவன் தண்ணீரில் எடுத்து வந்து விசாலாட்சி முகத்தில் தெரித்தான்.
கன்னத்தை தட்டி எழுப்ப மெல்ல கண் திறந்தார் விசாலாட்சி.” மா நீ மாத்திரை சாப்டியா இல்லையா.. உனக்கு இதே வேலையா போச்சு.. ” உரிமையோடு விசாலாட்சியை கண்டித்துக் கொள்ள அவரோ அவனைக் காண பிடிக்காமல் முகத்தை திருப்பினார்.
“ம்மா என்னம்மா “
” நான் நல்லா இருக்கும்போதே உனக்கு கல்யாணத்தை பண்ணி வச்சு பேரன் பேத்திகளை பார்க்கணும்னு ஆசைப்படறது தப்பா. உன் வழிக்கு நாங்க வரல. நீ எப்ப படம் பண்ணி எப்ப நான் பேரன் பேத்திகளை பார்க்கிறது. வயசு யாருக்கும் காத்திருக்காது.. உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் ” படக்கென அவரின் கையைப் பிடித்து தடுத்த சசி திருமணத்திற்கு அரை மனதாக சம்மதித்தான்.
அவன் மனதில் சுத்தமாக அமைதி இல்லை. வீட்டில் இருந்தால் பைத்தியம் பிடிப்பதைப் போலிருக்க எந்நேரமும் டீக்கடையில் அமர்ந்திருந்தான்.. அவன் மனம் முழுவதும் புயலாக சுழன்றடித்த ஒரு கேள்விக்கு தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த தென்றல் பதிலாக அமைந்தாள்..
திருமணம் அவனுக்கு கசக்கவில்லை.. தோளோடு தோள் நின்று தன்னை உணர்ந்து தனக்கு ஆதரவளித்து காதலிக்கும் ஒரு துணை இருந்தால் வாழ்க்கையில் அடுத்த அடிக்கு கண்டிப்பாக தன்னால் செல்ல முடியும் என்கிற நினைப்பு சிறிது நாட்களாக அவனுக்கு இருந்து கொண்டிருந்தது..
ஒரு பெண்ணை பார்த்து அவளை துரத்தி காதலித்து அவளோடு ஊர் சுற்றி மணிக்கணக்காக கைபேசியை கதறவிட்டு இது எதிலும் அவனுக்கு ஈடுபாடு கிடையாது. அவளைக் கொஞ்சவதிலும் அவளுக்கு பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுப்பதிலும் சுத்தமாக பிடித்தம் இல்லை..
அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனின் பாக்கெட் காலி. அவனை அவனே பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் காதல் ஒரு கேடா?
இந்த நிலையில் திருமணம் என்றதும் எங்கே சென்று முட்டிக் கொள்ளலாம் என்பது போல தான் இருந்தது.. தூரத்தில் தென்றல் கோவிலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்..
அதுவரை அவன் மனதில் சுழன்று அடித்துக் கொண்டிருந்த சூறாவளி சட்டென்று அமைதி அடைந்தது.. ஒருவேளை இந்த பொண்ண கல்யாணம் பண்ற நிலைமை வந்திருந்தா நீ இவ்ளோ யோசிச்சு இருப்பியா? மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க இல்லை என்பது தான் சசியின் ஒரே பதில்.