11

வீட்டில் யாரிடமும் பேச பிடிக்காமல் தன்னுடைய அறையில் முடங்கி கிடந்தாள்  தென்றல்..

” அம்மாவை விடு.. இந்த அப்பாவுக்கு எங்க போச்சு அறிவு.. ” நினைக்க நினைக்க அவளால் கோபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.. அவளுடைய இயல்பை மீறி நடந்து கொண்டிருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தவள், பெற்றோர் சொன்ன செய்தியை கேட்டதும் நிலை தடுமாறி போனாள்..

” ஃபோன்ல சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன அவசரம்.. காலேஜ் லீவு போட்டு வர சொல்லி இருக்கீங்க.. ” வாசுகி பரசுராமை பார்க்க அவர் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் இருந்தார்.

கணவர் இப்போதைக்கு அந்த குழப்பத்தில் இருந்து மீள மாட்டார் என்கிறதை உணர்ந்து கொண்ட வாசுகி” முக்கியமான விஷயம் அதனால தான் உன்னை உடனே கிளம்பி வர சொன்னோம்.. நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க.. இந்த போட்டோ பார்த்து பண்ணா ஓகே சொல்ற பழக்கம் எல்லாம் மாப்பிள்ளை வீட்ல இல்லையாம். எதுவாயிருந்தாலும் நேர்ல பார்த்த பின்னாடி தான் முடிவு பண்ணுவாங்களாம்..” வாசுகி பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்தார்.

அம்மா சொன்ன விஷயத்தை கிரகிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது தென்றலுக்கு..

” மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்களா? என்னமா பேசிகிட்டுருக்க? எனக்கு என்ன வயசு ஆகுது” தென்றலின் இதயம் படு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

” நாளைக்கு பொண்ண பாத்து நாளானைக்கு உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்கவா போறோம்.. இப்ப பொண்ணு மட்டும் தான் பார்க்கிறாங்க பிடிச்சிருந்தா பூ வைப்பாங்க.. மத்ததெல்லாம் அப்புறம்தான்.. எப்படியும் ஒரு ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் போனதுக்கு அப்புறம் தான் கல்யாணம்.. ” அப்போதுமே தென்றலின் மனம் ஆறவில்லை..

இருபது வயதில் அவளுக்கு திருமணமா? கனவில் கூட தன்னுடைய திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்காத தென்றலுக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்பது பரசுராமிற்கு புரிந்தது.

வாசுகி போல பட்டென்று விஷயத்தை அவரால் கூற முடியாவிட்டாலும் மகளின் அதிர்ந்த முகத்தை வைத்து இந்த திருமண செய்தி எந்த அளவிற்கு அவளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவரால் உணர முடிந்தது..

” அம்மா என்னால இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ” உச்சபட்ச தோனியில்  குரலை உயரத்தினாள் தென்றல்.

வாசுகிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. வீட்டில் கணவனோ அல்லது பிள்ளைகளோ அவரிடம் குரல் உயர்த்தி பேசக்கூடாது.. கணவனாக இருந்தால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு வாரம் பேசமாட்டார். பிள்ளைகளாக இருந்தால் அடி வெளுத்து விடுவார். சின்ன வயதில் இருந்து அம்மாவின் இந்த குணத்தை பார்த்து வளர்ந்த பிள்ளைகள் இருவருமே எப்பொழுதும் குரலை வாசுகியிடம் உயர்த்தியது கிடையாது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருந்ததில்லை.

மாமியார் இறந்த பிறகு வீட்டில் நடக்கும் முதல் நல்ல விஷயம். எடுத்து எடுப்பில் மகள் அபசகுனமாக குரல் உயர்த்த வாசுகிக்கு கடுப்பாக இருந்தது.

” இப்ப எதுக்கு கத்துற.. அப்பா முன்னாடி இப்படித்தான் மரியாதை இல்லாம குரலை ஏத்தி பேசுற.. இதுதான் நான் உனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தேனா.. “

” அதுக்காக நீங்க என்கிட்ட கேட்காம இவ்ளோ பெரிய முடிவு எடுப்பீங்க.. அது எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கணும்னு உங்களுக்கு புரியலையா.. “

” என்ன அதிர்ச்சி.. ஸ்கூல்ல சேர்க்கும்போது  உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் என்ன சொல்லிருக்கேன்.. இந்த காதல் கத்திரிக்காய் இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது.. பெத்து வளர்த்த எங்களுக்கு உங்களை நல்லபடியா கட்டி கொடுக்க தெரியும்.. உங்க மனசுல படிப்பு மட்டும் தான் இருக்கணும். சொன்னனா இல்லையா.. ” அதை மனதில் வைத்து தானே இத்தனை வருடங்கள்  எந்தவித சலனங்களுக்கும் இடம் கொடுக்காமல் தென்றல் இருந்தாள்..

இருந்தாள் என்றால்? இறந்த காலத்தில் அவளது மனமே பதில் சொல்ல தென்றலுக்கு தூக்கி வாரி போட்டது. அப்படியென்றால் இப்பொழுது?

தென்றல் மௌனமாக தனக்குள் விடை தேடும் முயல வாசுகி அந்த மௌனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்.

” தோ பாரு பாப்பா.. எப்பவும் அம்மாவும் அப்பாவும் உனக்கு நல்லது தான் செய்வோம். உன்னை என்ன உடனே கல்யாணம் பண்ண சொன்னமா.. இவங்க வேற யாரும் இல்ல உன் அப்பாவுக்கு நல்ல தெரிஞ்சவங்க தான்.. உனக்கும் ஜாதகத்துல இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க.. இப்போ இருந்து பார்த்தாதானே சீக்கரத்துல ஒரு நல்ல முடிவுக்கு வர முடியும்..” வாசுகியின் இந்த ஜோதிட பைத்தியம் என்றுமே தென்றலுக்கு பிடிக்காத ஒன்று.

ஆஷ்டான அவரின் ஜோதிடர் என்ன கூறுகிறாரோ அதை அச்சரம் பிசக்காமல் பின்பற்றுபவர் வாசுகி. தன்னுடைய குடும்பத்தினரையும் அவ்வழியே அழைத்துச் செல்வார். இதுவரை அந்த ஜோதிடர் குறித்து சொன்ன எதுவும் தப்பாமல் நடக்க இவை மேல் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லாத பரசுராமே மனைவியின் பேச்சை இந்த விஷயத்தில் மட்டும் தட்டாமல் நடப்பார்.

ஜோதிடரின் பேச்சை கேட்டதுமே தென்றலுக்கு புரிந்து போனது. இனி அவள் பேச்சு சபை ஏறாது.. நிமிர்ந்து ஒரு முறை பரசுராமை அடிபட்ட பார்வை பார்த்தாள். அதற்கு மேல் தாங்க முடியாத பரசுராம் வேகமாக மகளின் தலையை பாசமாக வருடினார்.

” பெரிய பாப்பா.. இதெல்லாம் நாங்க யாருக்கு செய்றோம் உனக்கு தானே.. நாளைக்கு மொத பையன் வீட்லருந்து வரட்டும். ரெண்டு பேருக்கும் செட் ஆகுதா பாருங்க.மேற்கொண்டு மத்தத  பேசிக்கலாம்.. ரொம்ப யோசிச்சு குழம்பிக்காதே.. நான் அவங்க கிட்ட சொல்லி இருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட ஸ்டடீஸ நீ கண்டினியூ பண்றது அவங்க பொறுப்புன்னு சொல்லிட்டாங்க.. ” இந்த ஒன்றிலேயே வாசுகி விழுந்து விட்டிருப்பார் என்பது தென்றலுக்கு சர்வ நிச்சயம்..

தொணதொணத்த தங்கையிடம் கூட சரியாக முகம் கொடுத்து பேசாமல் மனவேதனையோடு காணப்பட்டாள் தென்றல்.. இன்னொரு பக்கம் அவள் மனம் அறிந்து கொண்ட செய்தி அவளுக்கு உவப்பானதாக அமையவில்லை.

திருமணம் என்றதுமே அவள் மனக்கண் முன் வந்தது சசியின் முகம்.. அவன் மீது காதலாய் என்றால் அவளுக்கு பதில் தெரியவில்லை.. ஆனால் அந்த முகத்தை அவள் மறக்க நினைகையில் மீண்டும் மீண்டும் அவள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனது.

மறுநாள் பரசுராமின் நண்பர் ஜெகனின் குடும்பம் தென்றலைப் பெண் பார்க்க வந்தது.. நவீன் பையனின் பெயர்.. வீட்டிற்கு ஒரே பையன். தந்தையின் அரிசி மில்லை கவனித்துக் கொள்கிறான். கூடவே மொபைல் ஷோரூம் ஒன்றிணை வைத்திருக்கிறான்.. எந்த விதத்திலும் அவனை குறை சொல்ல முடியாது. நல்ல நிறம் நல்ல உயரம் நல்ல படிப்பு  அனைத்தையும் விட பார்ப்பதற்கு மிகவும் நல்லவனாக தெரிந்தான்.

தென்றலை பார்த்ததுமே அவனுக்கு பிடித்து விட்டது. இருவரையும் தனியாக அனுப்பி பேசி முடிவெடுக்க சொல்ல தென்றல் மௌனமாகவே இருந்தாள்.. நவீன் நிறைய பேசினான். அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மரியாதையாக வெளிவந்தன.

” அங்கிள் சொன்னாரு உங்களுக்கு ஸ்டடிஸ்னா ரொம்ப பிடிக்கும்னு. ஆஃப்டர் மேரேஜ் படிப்பை நிறுத்தணும்னு அவசியம் இல்ல. எவ்வளவு படிக்கணுமோ படிங்க. கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் தான் உங்களோட படிப்பு மத்த எல்லாமே அங்கிள் பொறுப்பு. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே என்னோட பொறுப்பு.

நீங்க படிக்கிறதுக்கு என்னால எந்த தடையும் வராது. கல்யாணம் பண்ண உடனே குழந்தை பெத்துக்கணும்னு எந்த கட்டாயமும் உங்களுக்கு கிடையாது. என்னால வெயிட் பண்ண முடியும். கண்டிப்பா ஒரு அஞ்சு வருஷத்துக்கு குழந்தை வேணாம். நீங்க மொத உங்க ஸ்டடிஸ முடிச்சுட்டு உங்களுக்கே என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணுங்க. வேலைக்கு போனாலும் சரி. வீட்ல இருந்தாலும் சரி. பிசினஸ் பண்ணாலும் சரி. எல்லாமே உங்க இஷ்டம் தான்..

பேரெண்ட்ஸ் கூட இருக்கணும்னு நீங்க நினைச்சா இருக்கலாம். இல்ல தனியா போனும்னு நினைச்சாலும் எனக்கு தனியாவே ஒரு வீடு இருக்கு. சோ மாமியார் கூட ஒண்ணா  அடுப்படி சண்ட போடுற அவசியமும் உங்களுக்கு கிடையாது.

இதுக்கு மேல எனக்கு தெரியல. என்னோட பேங்க் பேலன்ஸ் மத்த டீடைல்ஸ் எல்லாம் வேணும்னா சொல்றேன். இல்லன்னா அங்கிள் கிட்ட பேசிக்கிறேன்.

இவ்வளவு நேரம் நான் உங்ககிட்ட பேசினதிலேயே உங்களுக்கு என்னோட கேரக்டர் தெரிஞ்சிருக்கும்.. நான் ஓபன் டைப். இதெல்லாம் நான் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன் தெரியுமா, உன்னை பார்த்ததும் எனக்கு பிடிச்சு போச்சு. உனக்கும் என்ன உடனே பிடிக்கனும்னு அவசியமில்லை. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு எடு.. டேக் கேர்” அழகாய் பேசிய நவீன் சென்று விட்டான். அவன் கூறிய வார்த்தைகளையும் அவனையும் எவ்விதத்திலும் நிராகரிக்க முடியாது என்பது தென்றலுக்கு புரிந்திருந்தது.

பரசுராம் வாசுகி முகத்தை பார்த்தாலே அவர்களுக்கு இந்த சம்மந்தத்தில் பரிபூரண சம்மதம் என்று புரிந்தது.. எந்த விதத்திலும் தட்டிக் கழிக்க முடியாத ஒன்றை  பெற்றோரை எதிர்த்து எப்படி பேசுவது?

இருந்தாலும் பெண்ணின் விருப்பத்தை கேட்பது பெற்றோர்களின் கடமை அல்லவா. வாசுகி மிகவும் அவசரப்படுத்தினார். மகளைக் கட்டிக் கொடுத்த தூர அனுப்பாமல் பக்கத்திலேயே வைத்து பார்க்க விரும்பியது தாய்மனம்..

இன்னொரு பக்கம் மாதவிக்கு இன்னும் விஷயம் தெரியாது. மாதவியின் மனக்கோட்டை வாசுகி அறிந்ததே. விஷயத்தை கேள்வி பட்டால் கண்டிப்பாக  மாதவி கோயம்புத்தூருக்கு விஜயம் செய்வார்.. எப்படியாவது டிராமா போட்டு  அண்ணனின் மனதை கரைத்து அகிலனுக்கு தென்றலை மணம் முடிக்க ஏற்பாடு செய்வார். இன்று மனைவியின் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் பரசுராம் தங்கையின் நீலி கண்ணீரை கண்டால் பாகாய் உருகி விடுவார்.

தனியாக அமர்ந்திருந்த தென்றலின் பக்கத்தில் அமர்ந்தார் பரசுராம். ” சொல்லுமா நவீன உனக்கு பிடிச்சிருக்கா..” கரகரத்த குரலில் மென்மையை வரவழைத்து பேசினார் தந்தை.

” அப்பா புடிக்குது புடிக்கல இது ரெண்டத்தையும் விடுங்க. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கவே இஷ்டம் இல்ல.. நான் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகல உங்களுக்கு புரியுதா..” தவிப்போடு கேட்டாள் தென்றல்.

” என்னடி ரெடியாகல எப்படியும் இன்னும் அஞ்சு வருஷத்துல நடக்க போறது தானே. நான் உன் அப்பாவ கல்யாணம் பண்ணும் போது எனக்கு பதினாறு வயசு.” வாசுகி நடுவே புகுந்தார்.

” நீ பதினாறு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு  என்னையும் பதினாறு வயசுல கல்யாணம் பண்ணி வச்சியா.. இல்ல தானே.. உன்னோட குருட்டு ஜோசியக்காரன் சொன்னானு உடனே என்ன கல்யாணம் பண்ணி வைக்க ஆடுற.. “

“தென்றல்” பரசுராமின் கண்டிக்கும் குரல் தென்றலை அடக்கியது..

” உனக்கு மேற்கொண்டு படிக்கணும்.. அதுதான் கல்யாணத்துக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே.. இந்த மாதிரி ஒரு இடம் அமையாது. எந்த பிக்கல் புடுங்கலும் இல்லாத குடும்பம். எங்க கண்ணு முன்னாடியே நீ நல்லா இருப்ப.. ” தன்னுடைய வாதங்கள் பெற்றோரின் முன்பு எடுபடாது என்கிறதை வேதனையோடு தெரிந்து கொண்டாள் தென்றல்..

இரண்டு நாட்கள் கோயமுத்தூரில் இருந்தவள் சோர்ந்த முகத்தோடு சென்னை வந்து சேர்ந்தாள்.. அவள் மனம் முழுவதும் தவிப்பாக இருந்தது.. காரணமே இல்லாமல் சசியின் முகம் ஓயாமல் அவள் நினைவுகளில் வந்து தொந்தரவு செய்தது..

தன்னை ஆர்வமாய் நோக்கும் அவனது கண்களும், தன்னை கண்டதும் மலரும் அவனது இதழ்களும்  அழியாத ஓவியமாய் அவள் மனதில் தோன்றி மறைய தென்றல் நிலை தடுமாறி போனாள்..

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவளின் மன வேதனையையும் தவிப்பையும் நீட்டிக்க மூன்றாவது நாள் அவளது நிலைக்கான பதிலை தென்றல் புரிந்து கொண்டாள்..

தொடரும்