1

வானம் பொத்துக் கொண்டதோ என எண்ணும் வண்ணம் மழை கொட்டி தீர்த்தது. இரவு மணி ஏழு.ஒரு காலத்தில் மழை என்றால் புள்ளிமானாய் மழையில் நனைய துள்ளி ஓடிய கால்கள் வெரூன்றி ஒரே இடத்தில் நிற்க கண்களோ சலிப்போடு மழையை வெறித்தன..

காலம் கடக்கையில் சில நேரம் விருப்பு வெறுப்பும் மாற்றம் கொள்கிறது.. இயற்கையின் விதி போலும். மீண்டும் ஒரு முறை மணி பார்க்க இதற்கு மேலும் இங்கே காத்திருக்க முடியாதென்ற முடிவுக்கு வந்தவள் தன்னுடைய கைப்பை சகிதம் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அலுவலகதிலிருந்து..

“என்னமா தென்றல்? எப்படி போவ நீயு? உன் வீட்டுக்காரு வந்துட்டாரா?”அலுவலக காவலாளி மணியம் கேட்க சிரிப்பு வந்தது தென்றலுக்கு.

இந்நேரம் அவனுக்கு தன் நினைவு கூட இருக்குமா தெரியவில்லை. இந்த பேய் மழையில் அவளுக்காக வந்து நிற்க போகிறானா? ஐயோ ஐயோ..

“இல்லண்ணே நான் போய்க்குவேன்”அந்த வயதான காவலாளி தென்றல் முகத்தில் எதை கண்டாரோ நொடியில்

“குடை வெச்சிருக்கியாம்மா.. நான் வேணும்னா போய் ஆட்டோ புடிச்சினு வரவா”அந்நிய ஆடவருக்கு இருக்கும் அக்கறை ஏன் கொண்டவனுக்கு இல்லை?எத்தனை பட்டாலும் புதிதாய் வாங்குவது போல் மனம் அடி பட்டு சுருண்டது.

“ஆட்டோ வேணாண்ணே.. பிள்ளைங்க கொஞ்சம் திங்க்ஸ் கேட்ருந்தாங்க. வீட்டுக்கும் பொருள் வாங்கனும். குடை.. என்கிட்ட இல்லையே.. உங்க கிட்ட இருக்கா”.. என்றவளை கனிவாய் நோக்கிய காவலாளி  தன்னுடைய பெரிய குடையை எடுத்து தென்றலிடம் கொடுத்தார்.

” சாமான் எல்லாம் நாளைக்கு வாங்கிக்க கூடாதா? இந்த மழையில எப்படி ஒரு கைல குடைய வெச்சிகிட்டு பொருள்
வாங்கிட்டு வீட்டுக்கு போவம்மா?”

“போய்தான் ஆகணும்.. பிள்ளைங்க என்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்கண்ணே.. சரி நான் கிளம்புறேன்..” இரவல் குடையோடு கிளம்பினாள் தென்றல் என்கிற இளந்தென்றல்.

மழை நேரம் என்பதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் கூட்டம் மழைக்கு பயந்து கடைகளின் வராண்டாவில் தஞ்சம் கொண்டிருந்தது.. அவர்களைத் தாண்டி சென்று குழந்தைகள் கேட்ட பொருட்களையும் வீட்டுக்கு தேவையானதையும் வாங்கியவள், மழையையும் பொருட்படுத்தாமல் ஆட்டோ பிடித்து  வீட்டிற்கு சென்றாள்.

ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டதும் ஓடி வந்தாள் பூங்குழலி..தென்றலின் முதல் மகள்.

“ஹேய் கொடி அம்மா வந்துட்டாங்க..” ஆர்ப்பாட்டத்தோடு வரவேற்ற மகளை கனிவான புன்னகையோடு எதிர் நோக்கினாள் தென்றல்.

அதற்குள் அக்காவின் குரலை தொடர்ந்து தென்றலின் இரண்டாவது மகள் பூங்கொடியும் வெளியே வந்து விட்டாள் கையில் குடையோடு..

பத்து வயதான குழலி, தென்றல் சுமந்து கொண்டிருந்த பாரத்தில் பாதியை தான் சுமந்து கொண்டாள்.

ஆட்டோவிற்கு பணம் கொடுத்த தென்றல் மகளின் பக்கம் திரும்பி ” ஹேய்.. நீ கேட்ட திங்ஸ் இந்த பையில இருக்கு.. “

” அதெல்லாம் உள்ள போய் பாத்துக்கலாம் நீ வாம்மா.. மழையில நின்னுட்டு இருக்க சளி பிடிக்க போது..”குழலி கூற, எட்டு வயதான கொடி  தன்னுடைய உயரத்திற்கு சம்பந்தமே இல்லாத அளவிற்கான பெரிய குடையை விரித்து அம்மாவும் அக்காவும் நனைந்து விடக்கூடாது என எக்கி குடை பிடித்துக் கொண்டிருந்தாள்..  அவளின் உயரத்திற்கு குழலி குடைக்குள் அடங்க  தென்றல் சிரித்துக் கொண்டே நடந்து வந்தாள்.

” நாளைக்கு திங்ஸ் எல்லாம் வாங்கி இருக்கலாம் இல்லம்மா.. எதுக்கு இந்த மழையில போய் எல்லாம் வாங்கின..” வழக்கம் போல பெரிய மகளின் அக்கறையில் தென்றலின் தொண்டை அடைத்தது.. வீட்டு வாசலில் பொருட்களை வைத்தவள் கொடியின் கரத்திலிருந்து குடையை வாங்கி ஒரு ஓரமாக வைத்தாள் மழை நீர் சொட்டுவதற்காக.

மற்ற குழந்தைகளாக இருந்திருந்தால் ஏன் அவளும் குழந்தை பிரயத்தை தாண்டி வந்தவள் தானே?  அம்மாவோ அல்லது அப்பாவோ வேலை முடிந்து கையில்  பொருட்கள் அடங்கிய பையோடு வந்தால் முதல் வேலையாக தனக்கு என்ன வாங்கி வந்தார்கள் என்று தான் தேடுவாள்..

ஆனால் அவளின் பிள்ளை  முற்றிலும் வேறுபட்டு பத்து வயதிலேயே பக்குவம் அடைந்திருந்தது.. இவ்வளவு நேரம் இருந்த அலைச்சல் மறைய மகளின் அக்கரையில் மனம் குளிர்ந்து போனது.

சிரித்துக் கொண்டே  வீட்டிற்குள் நுழைந்தவள்  முதலில் கண்டது தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்த மாமியார் விசாலாட்சியை.. இடியே விழுந்தாலும் அவர்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டிக்கு மட்டும் ஓய்வு என்பதே கிடையாது..

மருமகளை திரும்பிப் பார்த்தவர் “ம்ம்ம் மணி இப்பவே எட்டு.. நீ குளிச்சிட்டு வந்து சமைக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும். சட்டு புட்டுனு சமைச்சுட்டு அப்புறம் போய் குளி..” பாட்டியை முறைத்துக் கொண்டு நின்றாள் குழலி..

காலையிலிருந்து வெட்டியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமே தன்னுடைய வேலையாக செய்து கொண்டிருப்பவர் அந்த வீட்டில் குனிந்து நிமிர்ந்து ஒரு வேலை பார்க்க மாட்டார். அதிகாலையில் எழுந்ததிலிருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சமைத்து அனைத்து பாத்திரங்களையும் ஒழித்து விட்டு படுக்கையில் விழும் வரை  அத்தனையும் தென்றல் தான் செய்ய வேண்டும்..

சுடச்சுட பாட்டியை பேசுவதற்காக வாய் திறந்தவளிடம் “இந்தாடா செல்லம்.. அம்மா உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..” மகளின் மனம் அறிந்த திசை திருப்பினாள் தென்றல்.. பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் வகைகள் பிஸ்கட்டுகள் ஐஸ்க்ரீம் கூட வாங்கி வந்திருந்தாள்..

கூடவே புது கலர் பென்சில்ஸ், ட்ராவிங் புக்ஸ் அனைத்தும் பிள்ளைகள் கேட்டதை வாங்கி வந்திருந்தாள்.. மேலும் சம்யாங் நூடுல்ஸ் (கொரியன் மேகி) சீஸ் வாங்கி வந்திருக்க அதனைக் கண்ட குழலியின் முகம் பூவாய் மலர்ந்தது.

“அம்மா.. இப்பவே இந்த நூடுல்ஸ் செஞ்சு குடுமா..” கண்கள் ஆசையில் மின்ன  கேட்ட குழலியின் விருப்பத்தை உடனே நிறைவேற்றிக் கொடுக்கத்தான் தென்றலும் ஆசைப்பட்டாள்.

” என்னது அது.. ” எழுந்து வந்து மருமகள் வாங்கி வந்திருந்த பொருட்களை  நோட்டமிட்ட விசாலாட்சி

“என்ன” மீண்டும் விசாரித்தார்.

“இது கொரியன் மேகி அத்தை பிள்ளைங்க ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டாங்க..” மாமியாருக்கு விளக்கினாள் தென்றல்.

” சின்ன பிள்ளைங்க கண்ணுல பாக்குற எல்லாத்தையும் கேக்குங்க. பெரியவங்க நாம தானே எது நல்லது எது கெட்டதுன்னு வாங்கி தரணும். சம்பளத்தை கையில வாங்கின உடனே இப்படி தற்குறித்தனமா முடிகிறது சரியாவா இருக்கு? ஏன் உன் பிள்ளைகளுக்கு இட்லி தோசை உள்ள இறங்காதா? இப்படி தாம் தூம்னு செலவு பண்ணா  பாதி மாசத்துல  கைய பிசைஞ்சிட்டு நிக்கணும். பொட்ட பிள்ளைகளை பெத்து வச்சிருக்க நாளைக்கு அதுங்களுக்கு நல்லது கெட்டது செய்ய இப்ப இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வை..”என்றவர்

” எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு மூளையே கிடையாது. உன் பிள்ளைக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருக்க.. வீட்டில இன்னொரு பிள்ளையும் இருக்கு. அந்தப் பையன் வந்தா ஏங்கி போய்ட மாட்டானா.. ஏன் தான் உனக்கு இந்த கெட்ட புத்தியோ தெரியல.. ச்சே” அவரது அபாண்டமான பழி சொல்லை கேட்டு மௌனமாக நின்றாள் தென்றல்..வருணுக்கு சேர்த்தல்லவா அவள் வாங்கி வந்திருந்தாள்..

“எங்க நான் தைலம் கேட்டனே”.. தான் வாங்கி வர சொன்னதை கேட்டார்.. அமைதியாக அவர் வாங்கி வர சொன்னதை எடுத்து நீட்டினாள் தென்றல்.

” என்ன இத்தனூண்டு இருக்கு.. இதை தேச்சா கால் வலி போயிருமா?.. சரியா வாங்கிட்டு வந்து இருக்கியா.. அன்னைக்கு  சரோஜா வேற எதையோ காட்டின மாதிரி இருக்கே.. ” சந்தேகமாக தைல பாட்டிலை திருப்பிப் பார்த்தார் விசாலாட்சி.

” சரோஜா அத்தை இந்த தைலத்தை தான் காட்டுனாங்க என்கிட்ட போட்டோ கூட இருக்கு. நீங்க முத கால்ல தேய்ச்சு பாருங்க அத்தை..அப்புறம் இந்த தைலம் தேய்ச்சுட்டு சுடுதண்ணி ஒத்தடம் கொடுக்கணுமாம்.. அப்பதான் மருந்து வேலை செய்யும்னு கடையில சொன்னாங்க” செயல்முறை விளக்கம் கூறினாள் தென்றல்..

” சரி சரி அப்புறமா சுடு தண்ணி வச்சுரு.. ” தன்னுடைய பொருள் வந்ததும் அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தார் விசாலாட்சி.

பிள்ளைகளுக்கு தான் வாங்கி வந்த பொருட்களை காட்டிலும் அந்த ஒற்றைத் தைலம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் என்பது மனதில் சுருக்கென்று தைத்தது..

முகம் வாடி நின்ற குழலியின் தலையை வருடியவளின் இடையை கட்டிக் கொண்டாள் கொடி..  அவளின் கையில் நனைந்த அம்மா துடைத்துக் கொள்ள துண்டு இருந்தது.. தினமும் சின்ன பிள்ளைகளின் மனதை இப்படி உடைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணமே இல்லாமல்  உலாவிக் கொண்டிருக்கும் விசாலாட்சியை என்ன சொல்வது..

கொடி கொடுத்த துண்டை வாங்கி தலையை துவட்டி கொண்டவள்  சின்ன மகளுக்கும் தான் வாங்கி வந்த பொருட்களை கொடுத்து விட்டு

” குழலி ஐஸ்கிரீம் நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்.. எடுத்துட்டு போய் பிரிட்ஜ்ல வை.. “

“அம்மா ரமேன்” நிராசையோடு வெளி வந்தது குழலின் குரல்.

” அம்மா நாளைக்கு செஞ்சு தரேன்.. இன்னைக்கு உனக்கு ரொம்ப பிடிச்ச  சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா.. ஓகேவா” வேலை அதிகம் தான் இருந்தாலும் மகளின் மனதை திசை மாற்ற தென்றலுக்கு வேறு வழியில்லை. உடனே முகம் மலர்ந்தாள் குழலி.

கண்கள் கணவனை தேடியது.. பொருட்களை எடுத்துக்கொண்டு  சமையலறையில் நுழைந்தாள். அவளுக்கு உதவியாக  பொருட்கள் அடங்கிய மற்றும் ஒரு பையை தூக்கிக்கொண்டு  குழலி பின்தொடர

“செல்லம் அப்பா எங்கடி”.. மகள் தூக்கி வந்த பொருட்களை வாங்கி வைத்தபடி கேட்டாள் தென்றல்.

“அப்பாவா.. அவரு மொதயே வெளியே போயிட்டாரு.. அம்மா அப்பா இன்னைக்கு ரொம்ப கோபமா இருந்தாரு. யார்கிட்டயும் சரியா பேசல.” தானறிந்த தகவலை தாயிடம் கூறிய குழலி தங்கையோடு விளையாட சென்று விட்டாள்.

கை அதன் போக்கில் வேலை செய்தாலும் கணவனின் இன்றைய கோபத்திற்கான காரணத்தை பற்றி மூளை யோசித்தது.. மழையில் நனைந்தது வேறு விடாமல் தும்மல் போட வைத்தது.

சிறிது நேரம் ஓய்வுக்கு உடல் கதறி அழுதாலும் அதனை பெரிதும் பொருட்படுத்தாமல் மளமளவென்று சமையல் வேலைகளை முடித்தாள் பூந்தென்றல்.

சமைத்த உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு முன்னறையில் போடப்பட்டிருந்த உணவு மேஜையில் அடுக்கி வைத்தாள்.. ஜக்கில் குடிப்பதற்கு மீண்டும் தண்ணீர் நிரப்பி வைத்தாள்.. சாப்பாட்டுத் தட்டுகள் குவளைகள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்று ஒரு முறை சரி பார்த்தாள்..

“அத்தை சாப்பாடு ரெடி ஆச்சு..” பேரர் கணக்காக உணவு தயாராகி விட்டதை கூறிய மருமகளை எரிச்சலாக நோக்கினார்  விசாலாட்சி..

” நல்ல கட்டத்துல தான் நீ கூப்பிடுவியா.. டிவி பாத்துட்டு இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியல..  ஒரு பத்து நிமிஷம் ஆகட்டும்” சீரியலில் மாமியார் மருமகளை கொடுமை செய்வதை கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய மாமியாரை இயலாமையோடு நோக்கியது தென்றலின் கண்கள்.