அதன் பின்னர் ஒரு மாதம் மனோஜோ அல்லது வெள்ளைச்சாமியோ எந்தக் குடைச்சலும் கொடுக்கவில்லை. அதில் அவர்கள் விலகிவிட்டார்கள் என்று தப்பாகப் புரிந்து கொண்டனர் இவர்கள். அதனால் ஹரீஷை கூட எப்போது முடியுமோ அப்போது வா, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
அன்று குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று ராகவியின் பெற்றோர்கள் யோசித்தார்கள். ஆனால் ராகவியால் அன்று கோவிலிற்குப் போக முடியாத நிலை வர, போக வேண்டும் என்று யோசித்த பிறகு போகாமல் இருக்கக் கூடாது என்று நினைத்து ராகவியின் பெற்றோர்கள் மட்டும் கிளம்பினார்கள்.
அவர்கள் அவர்களது காரில் தான் சென்றார்கள். ஆனால் அவர்கள் சென்ற ஒரு மணிநேரத்திலே ராகவிக்கு அவர்களுக்கு விபத்து நடந்து விட்டது என்றும் இருவரும் சம்பவ இடத்திலே இறந்து விட்டார்கள் என்றும் செய்தி வர, ராகவி துடித்துப் போய்விட்டாள். அதில் அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாள். அவளைக் காண அங்கு வந்த சுவாதி அவள் மயங்கிக் கிடைப்பதைப் பார்த்துத் தண்ணீர் தெளித்து விட்டு சசிகலா மற்றும் ராஜாராமிற்குத் தகவல் தர, அனைவரும் ஓடி வந்து விட்டார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்த விபீஷணனால் ராகவியை எவ்வாறு தேற்றுவது என்று புரியாமல் முழித்தான். இருந்தாலும் ஓர் அளவு அப்போதைய நடப்பைப் பற்றிக் கூறி அவளைத் தேற்றி அவளது பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்கைச் செய்ய வைத்தான் விபீஷணன்.
இன்றோடு ராகவியின் பெற்றோர்கள் இறந்து பதினாறாம் நாள் காரியமும் முடிந்த நிலையில், அவளது அத்தைகள் இருவரும் பிரச்சனையை ஆரம்பித்து இருந்தார்கள். அவளைத் தங்களுடன் அழைத்துக் கொள்கிறோம் என்று தான் பிரச்சனையை ஆரம்பித்து இருந்தார்கள்.
அது சாதாரண விஷயம் தான். ஆனால் அவர்கள் ராகவியின் பெற்றோர்கள் உயிருடன் இருந்த போது அவர்களுடன் ஒட்டி உறவாடவில்லை. இப்போது திடீர் என்று அவர்கள் ராகவியைத் தாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்று கூறும் போது விபீஷணன் அவர்களைச் சந்தேகமாகப் பார்த்தான்.
“அப்படிப் பார்க்காத தம்பி. நாங்க எங்க தம்பி உயிரோட இருக்கும் போது அவனைக் கண்டுக்கலை தான். ஆனால் அதுக்காக அவன் எங்க தம்பி இல்லைனு ஆகிடாது. அதே மாதிரி ராகவியும் எங்க மருமகள் இல்லைனு ஆகிடாது. எங்களுக்கும் அவள் மேல பாசம் இருக்கு. அப்படி உனக்கு நம்பிக்கை இல்லாட்டி நாங்கள் வேணா நீங்க நம்புற வரைக்கும் இங்கேயே இருக்கோம்.” என்று அவர் கூற, விபீஷணனால நம்பாமல் இருக்க முடியவில்லை.
சசிகலா மற்றும் ராஜாராம் முதற்கொண்டு அனைவரும் அவர்களை நம்பினர். அவர்களால் ராகவியைப் பார்த்துக் கொள்ள முடியும். இருந்தாலும் கொஞ்சம் சுற்றுப்புறம் மாறினால் ராகவி சற்று தெளிவு அடைவாள். அதே போல் அவர்களும் இதே சென்னையில் தான் இருக்கப் போகிறார்கள் என்று நம்பி ராகவியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
ராகவி முதலில் சம்மதிக்கவே இல்லை. விபீஷணன் தான் அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான். அவன் சொன்ன ஒரே காரணத்திற்காக அவளும் அவர்களுடன் சென்றாள். அது தான் அவள் செய்த தப்பே.
கிட்டத்தட்ட இருபது நாட்கள் அவர்கள் ராகவியைத் தங்கத் தட்டில் வைத்துத் தான் தாங்கினார்கள். அவர்களது அன்புச் சற்று நிம்மதியாகவும் கொஞ்சம் அவளது பெற்றோரின் இறப்பிலிருந்தும் வெளிவர வைத்தது. அவளும் அவர்களை நம்பி அவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள்.
அவள் அவர்களை நம்புகிறாள் என்று தெரிந்து கொண்டதும் அவர்களது வேலையைச் செய்ய ஆரம்பித்தார்கள். அவளை அவர்கள் அங்கு அழைத்து வந்ததே எப்படியாவது பேசியோ இல்லை கட்டாயப்படுத்தியோ அவளை மனோஜிற்குத் திருமணம் செய்து வைப்பது தான் அவர்களது திட்டமே!!
அவளது பெற்றோர்கள் இறந்தவுடனே மனோஜ் அவளது அத்தை இருவரையும் அவர்களது கணவர்களையும் சந்தித்து பேரம் பேசியிருந்தான். ராகவியைத் தனக்குத் திருமணம் செய்து விட்டாள் அவர்களுக்கு இருக்கும் கடனை அடைக்கப் பணம் தருவதாக அவன் கூறியிருந்தான். அதற்குத் தான் நல்லவர்கள் போல் வேஷம் போட்டு ராகவியை அழைத்துச் சென்றார்கள்.
இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அவர்களுக்கு நேரம் வந்து விட்டது. அவர்களது திட்டத்தின் படி ராகவியிடம் பேசி அவளைக் கோவிலிற்கு அழைத்து வர வேண்டும். அங்கு அவள் சாமி கும்பிடும் போது மனோஜ் அவள் கழுத்தில் தாலி கட்டிவிடுவான். அதன் பிறகு அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று யோசித்திருந்தனர். இது தான் அவர்களது திட்டம்.
அன்று நாள் நல்ல நாளாக இருக்க, அதுவும் ராகவியின் பெற்றோர் இறந்து ஒரு மாதம் கடந்திருக்க, அவளை மெதுவாகப் பேசி கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் ராகவி இவர்களது திட்டத்தை அன்று காலையில் அவர்கள் பேசும் போது கேட்டுவிட்டாள். அதை விபீஷணனிடம் அவள் தெரிவிக்க எண்ணி அவனுக்கு அழைக்க, அவனோ அறுவை சிகிச்சை அறையிலிருந்ததால் அவனால் அவளது அழைப்பை எடுக்க முடியவில்லை.
அதனால் ராகவியே ஒரு முடிவை எடுத்து அவர்களுடன் போவது போல் அன்று கோவிலிற்குச் சென்றாள். எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவள் யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல, எதிரில் ஒரு பெண்மணி பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். வேண்டும் என்றே அவர் மேல் மெதுவாக மோத, அவரது கையிலிருந்த சக்கரை பொங்கல் அவள் மேல் கொட்டிவிட்டது.
“அச்சோ சாரி ஆண்டி. நான் தெரியாமல் இடிச்சிட்டேன்.” என்று ராகவி மன்னிப்புக் கேட்க, அந்தப் பெண்மணியோ அவளை முறைத்துப் பார்த்து விட்டுச் சென்றார்.
“அத்தை நீங்க இருங்க, நான் போய் க்ளீன் பண்ணிட்டு வரேன்.” என்று அவள் கூற, அவர்களும் அவளைச் சந்தேகிக்காமல் அனுப்பி வைத்தனர். அதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு வேகமாகக் கோவிலை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விபீஷணனின் வீட்டிற்கு வந்தாள்.
சரியாக அவள் வந்த நேரம் விபீஷணன் அவளுக்கு அழைக்க, ராகவியும் நடந்ததை அவனிடம் கூற, அடுத்த நிமிடம் கிளம்பி வந்து விட்டான் விபீஷணன்.
“ராகவி உனக்கு ஒன்னும் ஆகலை தான?”
“இல்லை விபி!! ஆனால் எனக்குப் பயமா இருக்கு. அவன் திரும்ப ஏதாவது பிரச்சனை பண்ணுவான்னு எனக்குத் தோணுது!!” என்று அவள் பயப்பட, விபீஷணன் தான் அவளுக்கு ஆறுதல் கூற வேண்டியதாகிப் போனது.
“இங்க பார் ராகவி, நீ பயப்படாத!!நான் ஹரீஷ்கிட்ட பேசி உடனே வரச் சொல்றேன். இல்லாட்டி நீ அங்க போக என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுவோம். அந்த மனோஜ்னால ஒன்னும் பண்ண முடியாது.” என்று விபீஷணன் கூறினான்.
ஆனால் மனோஜ் சாதாரணமாக அதை விட மாட்டான் என்று விபீஷணன் யோசிக்க மறந்தான். ராகவி தங்களுடன் தான் இருக்கிறாள் என்று சற்று அசமந்தமாக இருந்து விட்டான்.
அதன் விளைவு, விபீஷணன் சென்று கொண்டிருக்கும் போது அவனது வண்டியை லாரி விட்டு ஏற்ற, கொஞ்சம் சுதாரித்ததால் விபீஷணன் அந்த விபத்திலிருந்து தப்பித்தான். அவனுக்கு அடி எதுவும் படவில்லை. அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரியாமல் போய்விட்டது.
ஆனால் விபீஷணன் இது மனோஜின் வேலை என்று புரிந்து கொண்டான். அவனைத் தவிர்த்து வேறு யாரும் அவனுக்கு எதிரி கிடையாது. அப்போது தான் விபீஷணனிற்குப் புரிந்தது அவன் தான் ராகவியின் காதலன் என்று மனோஜ் நினைத்துத் தான் இதைச் செய்துள்ளான் என்று புரிந்து கொண்டான் விபீஷணன்.
அதை வைத்தே எப்படியாவது ராகவியை ஹரீஷிடம் சேர்க்க வேண்டும் என்று விபீஷணன் ஹரீஷிடம் பேச, அவனால் நிலைமையைப் புரிந்து துடித்துப் போய் விட்டான். இருந்தாலும் அவனால் உடனேக் கிளம்பி வர முடியவில்லை. காரணம் அப்போது அந்த நாட்டில் கோரோனா தொற்று பாதிப்பால் விமானம் அனைத்தும் ரத்து செய்திருந்தனர். அதனால் அவனால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட, ஹரீஷே அதற்குத் தீர்வுக் கூறினான்.
அதாவது விபீஷணன் இப்போதைக்கு ராகவியை திருமணம் செய்தது போல் ரெஜிஸ்டர் செய்து விட்டால், மனோஜ் ராகவியை தொந்தரவு செய்ய மாட்டான் என்று கூறினான். முதலில் இருவரும் முற்றிலுமாக அதை மறுத்து விட்டனர்.
“நான் நிஜமா கல்யாணம் பண்ணிக்க சொல்லலை!! இது ஒரு பொம்மைக் கல்யாணம் தான். படத்துல நடக்கிற மாதிரி. இந்த க்வரன்டின்(quarantine) இல்லைனா நானே வந்து உன்னைக் கூப்பிட்டுப் போயிருப்பேன். இது உன்னோட பாதுகாப்புக்காக மட்டும் தான்.” என்று அவனே இருவரையும் சமாதானப்படுத்த வேறு வழியின்றி தான் அந்தத் திருமணம் அதுவும் சட்டப்படி மட்டுமே. கையெழுத்து மட்டும் தான் அவர்கள் இருவரும் போட்டார்கள். வேறு எந்தச் சடங்கும் அங்கு நடக்கவில்லை. ராகவியின் நன்மைக்காகவே விபீஷணன் வீட்டிலும் ஒத்துக் கொண்டார்கள்.
விபீஷணனிற்கும் ராகவிக்கும் திருமணம் நடந்துவிட்டதைத் தெரிந்து கொண்ட மனோஜ் ஆத்திரமடைந்தான். அவனிற்கு அவள் கிடைக்காமல் போனதில் ஏமாற்றம் தான். அவனது அப்பா கூட விபீஷணனை வெட்டிச் சாய்த்து விட்டு அவளை அழைத்து வரேன் என்று கூறினார். ஆனால் அவனோ அவள் இப்போது எச்சில் பழம் எனக்குத் தேவையில்லை என்று விட்டுவிட்டான்.
இதை அவன் கூறி முடித்ததும் நந்தனாவின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இது உண்மையாகத் தான் இருக்குமா என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்தனர்.
“உங்களுக்கு நம்பிக்கை இல்லாட்டி நான் ராகவிக்கு கால் பண்ணித் தரேன். நீங்களே கேளுங்க.” என்று கூறி ராகவிக்கும் அழைக்கப் போக, அவனைத் தடுத்தார் நடராஜன்.
“நீங்க இவ்ளோ சொல்லும் போது எங்களுக்குப் புரியுது. அதை விட நந்தனா உங்களை நம்புறா. என் பொண்ணு கண்டிப்பா தப்பானவரா சூஸ் பண்ணிருக்க மாட்டானு நான் நம்புறேன். சரி உங்க வீட்டுல இந்தக் கல்யாணத்துக்கு என்ன சொன்னாங்க?” என்று கேட்க, அவனுக்கும் நந்தனாவிற்கும் மிகுந்த சந்தோஷம்.
வேகமாக,”அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க சரினு சொன்னால் நல்ல நாள் பார்த்து உங்ககிட்ட பேச வரேன்னு சொன்னாங்க.” என்றான் விபீஷணன்.
“நந்நனா கேலண்டர் எடுத்துட்டு வா.” என்று அவர் கூற, அவள் வேகமாக எழுந்து சென்று எடுத்துக் கொண்டு வந்து தந்தாள்.
நடராஜன் ஒரு தேதியைக் குறிப்பிட்டுக் கூற, சந்தோஷமாக அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான் விபீஷணன்.