அவனை மூன்று முறை தான் பார்த்திருக்கிறாள். அந்த மூன்று முறையிலும் அவன் அவளிடம் கண்ணியமாகத் தான் நடந்திருக்கிறான். அவனுடன் இருக்கும் போது பாதுகாப்பாக இருப்பது போல் ஓர் உணர்வு. அதே போல் அவன் அவளுக்கு முக்கியத்துவம் தருவதும் பிடித்திருக்கிறது. இப்படி அவனிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே மனம் யோசிக்கிறது. அவனிடம் குறை என்ற ஒன்றை அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை. இதெல்லாம் அவன் மேல் உள்ள காதலால் தான் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. எப்படி யோசித்தும் அவளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை, தூங்கவும் முடியவில்லை. எவ்ளோ நேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை. அதிகாலையில் தான் ஒரு முடிவுடன் கண் அயர்ந்தாள் நந்தனா.
அடுத்த நாள் எப்போதும் எழும் நேரத்தை விடச் சிறிது நேரம் கழித்துத் தான் எழுந்தாள் நந்தனா. எழுந்ததும் அவள் செய்த முதல் வேலை விபீஷணனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தான். அவள் அனுப்பிவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.
விபீஷணன் அன்று சற்று நேரமாகவே மருத்துவமனை கிளம்பிவிட்டான். அவன் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தான் நந்தனா குறுஞ்செய்தி அனுப்பினாள். அதனால் அவனால் உடனே பார்க்க முடியவில்லை. மருத்துவமனை சென்றதும் வாகனத்தை அதன் தரிப்பிடத்தில் நிப்பாட்டி விட்டு அவனது கைப்பேசியை எடுக்கும் போது தான் குறுஞ்செய்தி வந்ததைப் பார்த்தான். யார் அனுப்பி இருப்பாரகள் என்று எடுத்துப் பார்த்தவன் சத்தியமாக நந்தனா அனுப்பி இருப்பாள் என்று நினைக்கவே இல்லை.
வேகமாகக் கைப்பேசியை இயக்கி அவள் என்ன அனுப்பி இருக்கிறாள் என்று பார்த்தான். அதில் நந்தனா அவனைப் பார்க்க வேண்டுமென்றும் அவனிடம் கொஞ்சம் பேச வேண்டுமென்றும் எப்போது பார்க்கலாம் என்று கேட்டும் அவள் அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் விபீஷணனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
வேகமாக உள்ளே வந்து இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறி அவனது அறைக்கு வந்தான். அவனுடன் வேலை செய்யும் செவிலியரை அழைத்து அன்று மதியம் எதுவும் அறுவைச் சிகிச்சை செய்யும் வேலை இல்லை தான என்று ஒரு முறை உறுதிப்படுத்தி விட்டு நந்தனாவுக்கு மதியம் சந்திக்கலாம் என்றும் அவனே வந்து அவளை அழைத்துக் கொள்கிறேன் என்றும் இவன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான்.
அங்கு நந்தனா அவன் அனுப்பிய அடுத்த நிமிடம் பார்த்து விட்டாள். உடனே சரி என்று அனுப்பிவிட்டாள் நந்தனா.
அன்று மதியம் வேகமாக மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டான் விபீஷணன். நேற்று நந்தனாவை இறக்கிவிட்ட இடத்திலே அவளை அழைத்துக் கொள்கிறேன் என்று அவன் கூறியதால் அங்கு அவனுக்காகக் காத்திருந்தாள் நந்தனா.
அவளை அதிகம் காக்க வைக்காமல் ஐந்தே நிமிடத்தில் வந்துவிட்டான் விபீஷணன். அவள் முன்னால் காரை நிப்பாட்டி அவன் கீழே இறங்கி வந்து நேற்று போலவே இன்றும் அவளுக்குக் கார் கதவைத் திறக்க, ஒரு சங்கடத்துடனே அவள் ஏறி உட்கார்ந்தாள்.
அவளது சங்கடம் அவனை யோசிக்க வைத்தது. அதுவரை இருந்த சந்தோஷமான மனநிலை அப்படியே மாறிவிட்டது அவனுக்கு. எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான். அவனது அமைதி அவளுக்கு என்னவோ போல் ஆனது. அவளது மனம் ஒருநிலையில் இல்லாமல் அவளைப் போட்டு வாட்டி எடுத்தது.
“நீ சாப்பிட்டியா நந்தனா?” என்று கேட்டான்.
“இல்லை. உங்களைப் பார்த்துட்டு போனதும் தான் சாப்பிடனும்.” என்றாள் அவள்.
“ஓகே அப்போ ஹோட்டல் போகலாமா?” என்று கேட்டான் விபீஷணன்.
“ம் ஓகே.” என்று அவள் கூற, அவன் தரமான ஒரு உணவகத்தகற்கு அழைத்துச் சென்றான்.
அந்த உணவகம் மாடி கீழே என்று இரு தளத்திலும் மேஜைப் போட்டிருக்கின்றனர். கீழ் தளத்தில் எப்போதும் போல மேஜைப் போட்டிருந்தனர். மேல் தளத்தில் தடுப்புகள் அமைத்து ஒரு மேஜையில் அமர்ந்திருப்பவர்கள் மற்றவர்களுக்குத் தெரியாதது போல் அமைத்திருந்தனர். அதனால் அவளை மேல அழைத்துச் செல்லலாமென்று அவன் அவளிடம்,”மேல போகலாம்.” என்றான். அவளும் நாய்க்குட்டி போல் அவன் பின்னால் சென்றாள்.
பேரர் வந்து அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று ஆர்டர் எடுத்துக் கொண்டு போனார். அவர் போனதும் விபீஷணன் நந்தனாவைப் பார்த்து,”ம் சொல்லு நந்தனா என்ன பேசனும் என்கிட்ட?” என்று கேட்டான்.
அவனது பேச்சில் ஏதோ ஒட்டாத தன்மை தெரிய, துடித்துப் போய்விட்டாள் நந்தனா. அவனது இந்தப் பேச்சு அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளது முகம் அப்படியே உடைந்து போய்விட்டது.
“உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போயிடுச்சா?” என்று அவள் என்ன பேச வந்தாளோ அதைச் சுத்தமாக மறந்து விட்டு அவனிடம் கேட்டாள்.
அவளது அந்தக் கேள்வி அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் மனதில் தான் இருக்கிறோம் என்று இப்போது உறுதியாக நம்பினான். ஆனால் அவள் அதைப் புரிந்து கொள்ளாமல் மனதில் எதையோ நினைத்து மறுகுகிறாள் என்று நன்றாகப் புரிந்தது விபீஷணனுக்கு.
அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவனது பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் நந்தனா அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“ஏன் அப்படிக் கேட்ட நந்தனா?” என்று கேட்டான்.
அவன் கேட்டப் பிறகுத் தான் அவள் கேட்ட கேள்வியின் அபத்தமே புரிந்தது. தன் தலையிலே அடித்துக் கொண்டு அவனைப் பார்க்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
சரியாக அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் அமைதியாகச் சாப்பிட்டனர். கொஞ்சம் சாப்பிட்டு முடித்தவுடன் விபீஷணன்,”என்னோட விருப்பத்துல எப்பவும் மாற்றம் இருக்காது நந்தனா. உனக்கு அதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம்.” என்று அழுத்தமாகக் கூறினான்.
அவள் பதில் ஏதும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டாள். பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் விபீஷணன் இருவருக்கும் டெஸர்ட் ஆர்டர் செய்தான்.
“சரி சொல்லு நந்தனா என்ன பேசனும் என்கிட்ட?” என்று கேட்டான் விபீஷணன்.
இன்று அவனிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிட வேண்டுமென மனதை ஒருநிலை படுத்திவிட்டு, “உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்?” என்று கேட்டாள்.
“உன் பேர் யது நந்தனா. நீ ஒரு க்ளாசிக்கல் டான்சர்.” என்றான் அவன்.
“அதைத் தவிர வேற ஏதாவது தெரியுமா? ஐ மீன் என் ஃபேமிலி பத்தி எதுவும் தெரியுமா?” என்று கேட்டாள். இல்லை என்று அவன் தலை அசைத்தாள்.
“எனக்கும் உங்க பேர் அப்புறம் நீங்க ஒரு டாக்டர். இதைத் தவிர வேற எதுவும் தெரியாது. அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு என் மேல காதல் வந்துச்சு?” என்று கேட்டாள்.
“இங்கே பார் நந்தனா யார் எப்படினு எல்லாம் தெரிஞ்சு எல்லாம் லவ் வராது. எனக்கு உன்னைப் பார்த்ததும் ரொம்ப பிடிச்சுடுச்சு. அவ்ளோ தான். மத்தபடி உன்னைப் பத்தி மெதுவா தெரிஞ்சுக்கலாம். இப்போ அதுக்கு என்ன அவசரம்?” என்றான்.
“உங்களுக்கு வேணா அப்படி இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. உங்களைப் பத்தி எதுவும் தெரியாமல் என்னால உங்களை லவ் பண்ண முடியாது.” என்று தெளிவாகக் கூறினாள்.
“அப்போ என்னைப் பத்தித் தெரிஞ்சால் நீ லவ் பண்ணுவ அப்படித் தான?” என்று கேட்டான்.
அவன் கேள்விக்கு அவளால் உடனே பதிலளிக்க முடியவில்லை. அவள் ஒன்று நினைத்துக் கூற, அவன் வேறு விதமாக நினைத்துக் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.
“சொல்லு நந்தனா என்னைப் பத்தி எதுவும் தெரியாமல் தான லவ் பண்ண முடியாதுனு சொன்ன? அதுக்கு ஒரு சொல்யூஷன் சொல்றேன். நாம கொஞ்ச நாள் பழகிப் பார்க்கலாம். அப்போ உன் லவ்வை சொல்றியா?” என்று கேட்க அவளோ இது சரி வருமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு அவனைப் பிடிக்கும். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை அவளுக்கு. ஆனால் அவனைக் காதலிக்கும் அளவிற்குப் பிடிக்குமா என்று கேட்டால் பதிலில்லை. அதே போல் அவனது காதலையும் அவளால் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளது குடும்பச் சூழ்நிலை அவளை யோசிக்க வைத்தது.
“நந்தனா நீ ரொம்ப யோசிக்கிற. எனக்குப் புரியுது இப்போ உள்ள சொசைட்டில யாரையும் அவ்ளோ சுலபமா நம்ப முடியவில்லை. நிறையக் கெட்ட விஷயங்கள் நம்ம காதுக்கு வருது. அதை எல்லாம் கேட்டு எங்க நமக்கும் இப்படி நடந்திடுமோனு பயப்படுறது இயல்பு தான் நந்தனா. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் யு. நான் உன்னை எப்பவும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் நந்தனா. நீ கேர்ஃபுல்லா இருக்கிறது சரி தான். ஆனால் நீ என்னைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லைனு நீ போகப் போகப் புரிஞ்சுப்ப.” என்றான் விபீஷணன்.
அவளது மனதில் உள்ளதும் அதே கவலை தான். அவனை அவள் சந்தேகிக்க வில்லை. ஆனால் ஏதோ ஒரு பயம் அவளது வாயைக் கட்டிப் போட்டுவிட்டது.
விபீஷணன் எதுவும் பேசவில்லை. அவளே புரிந்து கொள்ள வேண்டுமென அமைதியாகி விட்டான். பின்னர் அவளை அழைத்து வந்த இடத்தில் அவளை இறக்கி விட்டுச் சென்று விட்டான்.