விபீஷணன் வேகமாக அவள் முன்னால் வந்து,”வித் யுவர் பெர்மிஷன்.” என்று கூறி அவளது கையிலிருந்த கைப்பேசியை எடுத்தான். அவனது செயல் நந்தனாவை திடுக்கிடச் செய்தது.

“எதுக்கு என் மொபைல இப்போ எடுத்தீங்க?”

“அட என்ன டா நந்தான இப்போ தான வித் யுவர் பெர்மிஷன்னு சொன்னேன். அப்போ என்ன அர்த்தம் உன்னோட பெர்மிஷனோட தான் நான் எடுத்தேன்னு அர்த்தம்.” என்று கூறி அவளது கைப்பேசியை இயக்க, அதுவோ பாஸ்வேர்ட் கேட்டது.

விபீஷணன் கைப்பேசியை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பி பார்த்து விட்டு மீண்டும் அவளிடம்,”இப்போ நல்லா கேட்டுக்கோ வித் யுவர் பெர்மிஷன்.” என்று கூறி அவளது ஆட்காட்டி விரலை தொட்டு அதை கைப்பேசியில் ஸ்கேன் செய்ய, தொடு திறையில் நந்தனா கண்ணத்தில் கை வைத்துச் சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம் இருந்தது. 

அதை அப்படியே கைகளால் வருடி,”ப்யூட்டிஃபுல்.” என்று கூறிவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டான் விபீஷணன்.

நந்தனா இவன் என்ன செய்கிறான் என்று யோசிக்கும் முன்பே அவளது கைப்பேசியிலிருந்து அவனது கைப்பேசிக்கு அழைத்து விட்டான். அவனது நோக்கம் புரிந்து அவளை முறைத்துப் பார்த்தாள் நந்தனா.

விபீஷணன் அவனது கைகளை அவள் முகத்தின் முன்பு கொண்டு வந்து அப்படியே பூ போல் அனைத்து விரல்களையும் ஒன்று சேர்த்துக் குவித்து விட்டு அவனது உதட்டில் வைத்து முத்தம் கொடுக்க பாவையவளின் முகமோ குங்குமம் போல் சிவந்து விட்டது. அதைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் விபீஷணன்.

அவர்களது அந்த நிலையை நந்தனாவின் கைப்பேசி அழைப்பு ஒலி தடுக்க, வேகமாக அவனிடமிருந்தக் கைப்பேசியைப் பிடுங்கிக் கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள் நந்தனா.

விபீஷணனோ நந்தனா சென்ற பின்பும் அவள் போன வழியையே பார்த்துக் கொண்டு ஐந்து நிமிடமாவது நின்றிருந்தான். பின்னர் தான் சூழ்நிலை உணர்ந்து தலையைக் கோதிக் கொண்டான். அங்கிருந்து செல்லவே மனசில்லை அவனுக்கு. அப்போது தான் அவனுக்குத் தானும் உள்ளே சென்று அவளது நடனத்தைப் பார்த்தால் என்ன என்று தோன்ற, நுழைவுச் எங்குக் கிடைக்கும் என்று விசாரிக்கச் சென்றான். அவனது நல்ல நேரம் நகரம் அவனுக்கு நுழைவுச் சீட்டு கிடைத்து விட்டது. மிகுந்த உற்சாகத்துடன் அவன் உள்ளே சென்றான்.

நந்தனா ஒரு வித மயக்கத்தில் தான் இருந்தாள் என்று தான் கூற வேண்டும். இதுவே வேற யாராவதாக இருந்தால் விபீஷணனின் செயலில் கொந்தளித்து இருப்பார்கள். அவன் பெரிதாகத் தவறு செய்யவில்லை என்றாலும் அவனது செயல் சற்று அதிகப்படியாகத் தான் இருந்தது. ஆனால் நந்தனாவுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. அவனது செயலை ரசித்தாள் என்றே கூறலாம். இப்போதும் ரசித்துக் கொண்டு தான் இருந்தாள்.

அவள் இங்கு இல்லை என்று அவளது ஆசிரியர் புரிந்து கொண்டு அவளிடம் வந்து,”என்ன யோசனை நந்தனா? ஆல்ரெடி லேட்டா வந்துட்டு இப்போ மேக்அப் போட்டுக்காமல் அப்படியே இருந்தால் என்ன அர்த்தம்?” என்று சத்தம் போட்டார்.

“சாரி மேம்.” என்று கூறவிட்டு மனதை ஒருநிலைப் படுத்தி விட்டு வேகமாகத் தயாராக ஆரம்பித்தாள் நந்தனா.

விபீஷணன் எப்போதடா நந்தனா வருவாள் என்று சுவாரஸ்யம் இல்லாமல் அமர்ந்திருந்தான். சரியாக நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு மணிநேரத்தில் நந்தனாவின் நடனம் ஆரம்பித்தது. நந்தனா வருகிறாள் என்று புரியவுமே அவன் இருக்கையிலிருந்து எழுந்து சற்று முன்னால் வந்து அவள் நடனமாடுவதை அவனது கைப்பேசியில் வீடியோ எடுக்க ஆரம்பித்தான்.

நந்தனாவின் கண்கள் ஒவ்வொரு அசைவிற்கும் ஆயிரம் ஆயிரம் பாவனைகளைக் கொடுக்க அதில் விபீஷணன் சொக்கித் தான் போனான். ஏற்கனவே அவன் நந்தனாவின் மேல் பைத்தியமாக இருக்கிறான். இப்போது சொல்லவா வேண்டும். அப்படியே அவளை அணைத்துக் கொஞ்ச கைகள் பரபரத்தது. ஆனால் நந்தனா இன்னும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை என்ற உண்மைப் புரிய அமைதியாக இருந்தான்.

அவள் நடனமாடி முடித்ததும் அரங்கத்தில் பலமான கரகோஷம் எழும்ப, விபீஷணன் அவனது நிலையிலிருந்து வெளியே வந்தான். எப்படியாவது அவளின் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்து வெளியே வந்து அவளுக்கு அழைத்தான்.

அப்போது தான் ஆடி முடித்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் நந்தனா. அவளது கைப்பேசி ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தாள். விபீஷணனின் எண்ணை அவள் குறித்து வைக்கவில்லை. அதனால் அழைப்பது அவன் தான் என்று தெரியாது. யாராக இருக்கும் என்ற யோசனையுடனே அழைப்பை எடுத்தாள். சத்தியமாக அவள் அது விபீஷணன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

அவள் எடுப்பதற்குள் கால் கட்டாக, இப்போது என்ன செய்வதென அவள் யோசிக்கும் முன்பு அவனே மறுபடியும் அழைத்தான். அவள் பேசாமல் அவன் விடமாட்டான் என்று புரிந்து ஆன் செய்து அவள் காதில் வைத்தாள்.

இவள் ஹலோ சொல்வதற்கு முன்பே விபீஷணன்,”நந்தனா நான் இங்கத் தான் இருக்கேன். இன்னும் போகலை. உனக்கு அங்க எந்த வொர்க்கும் இல்லாட்டி வெளில வரியா?” என்று கேட்டான்.

அவன் இன்னும் அங்கிருப்பான் என்று கனவில் கூட யோசிக்கவில்லை நந்தனா. ஆனால் அவன் இன்னும் இங்கேயே இருப்பது அவளுக்கு மனதில் இதத்தை அளித்தது.

“நான் இப்போ தான் பெர்ஃபார்மன்ஸ் முடிச்சுட்டு வந்தேன். ட்ரெஸ் செயிஞ் பண்ணிட்டு வரேன்.”

“ஐ ஆம் வெயிட்டிங்.” என்று தளபதி விஜய் போல் கூறிவிட்டு அவனது காரில் ஏறி அமர்ந்தான் விபீஷணன்.

சரியாக இருபது நிமிடம் கழித்து தன் உடைமைகளுடன் வெளியே வந்தாள் நந்தனா. அவள் வருவதைப் பார்த்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் விபீஷணன்.

“என்ன பேசனும்?” என்று நேரடியாக அவள் அவனிடம் வினவினாள்.

விபீஷணன் பதில் சொல்லாமல் அவளது கையிலிருந்த உடைமைகளை வாங்கி காரின் பின் சீட்டில் வைத்து விட்டு அவளுக்குக் கதவைத் திறந்து கண்களால் ஏறு என்றான். அவளோ ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல் எதுவும் பேசாமல் அமைதியாக ஏறினாள்.

அவன் சிரித்துக் கொண்டே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் விபீஷணன். பின்னர் காரை அங்கிருந்து எடுத்தான். சிறிது தூரம் சென்றதும் ஓரமாக நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து,”உங்க வீட்டு அட்ரெஸ் சொல்லு நந்தனா. நான் உன்னை ட்ராப் பண்ணிடுறேன்.” என்றான் அவன்.

“என்னை ட்ராப் பண்ணவா இவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

“எஸ் இந்த நைட் நேரத்துல நீ தனியா போறது எனக்கு ஸேஃப்பா(safe) படலை. அப்புறம் உன்னோட டான்ஸூம் பார்க்கனும் போல இருந்துச்சு. மேக்அப் இல்லாமல் சாதாரண ட்ரெஸ்ல நீ ஆடும் போதே நான் ப்ளாட்டாகிட்டேன். அதெல்லாம் போட்டு நீ ஆடுனா எப்படி இருக்குமனு பார்க்க ரொம்ப ஆவலா இருந்தது. அதான் டக்குனு டிக்கெட் வாங்கி உள்ள வந்துட்டேன். செமயா ஆடுன தெரியுமா. ஐ வாஸ் மெஸ்மரைஸ்ட் பை யுவர் ஃபெர்ஃபார்மென்ஸ்.” என்று அவன் கூறவும் அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்ற என்று தெரியவில்லை.

“எனக்கு உன்னோட நிலை புரியுது நந்தனா. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ற மாதிரி தெரியுது. எனக்கு இப்போ யோசிச்சாலும் எப்படி மூனே சந்திப்புல உன் மேல நான் பைத்தியமா ஆனேன்னு தெரியலை. பட் ஒன் திங்க் இஸ் ஃபார் சுயர். நீ மட்டும் தான் என்னோட லைஃப் பார்ட்னர். அதுல எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. பட் நீ இதைப் பத்தியெல்லாம் எதுவும் நினைக்காத. உன் மனசுல என்ன இருக்குனு மட்டும் சொல்லு. எனிதிங்க் இஸ் ஓகே. எனக்கே என்னமோ நான் உன்னைத் தொந்தரவு பண்ற மாதிரி ஒரு ஃபீலிங் வருது. அதனால தான் இந்த முடிவு. இப்போ உடனே சொல்ல உனக்கு தோனாட்டி நல்லா யோசிச்சு நீ உன் பதிலை சொல்லு. ஐ வில் அக்செப்ட் எனிதிங்க்.” என்று அவன் கூறினான்.

நந்தனாவோ அவனையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது கண்களில் தன்னைக் கண்டால் எவ்வளவு காதல் பொங்கி வடிகிறது. அந்த அளவுக்குத் தான் என்ன செய்தோம் அவனுக்கு என்று தான் அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் பதில் எதுவும் பேசாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது விபீஷணனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவள் இப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள் ஏதாவது விபரீதம் நடந்து அவள் தன்னை அடித்து காரி துப்பினாலும் துப்பிடுவாள் என்று அவன் முகத்தை உலுக்க, அதில் தெளிந்த நந்தனா இத்தனை நேரம் அவனது முகத்தையே  வா பார்த்துக் கொண்டிருந்தோம் என்று புரிந்து குப்பென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது.

அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் விபீஷணன் அவளது வீட்டு முகவரியைக் கேட்டான். அவளும் கூற, அதன் பின் இருவரும் எதுவும் பேசவில்லை.

வீடு வந்து சேரும் வரை நந்தனா மிகுந்த யோசனையில் இருந்தாள். அவள் வாழ்க்கையில் முதல் முறையாகத் தன்னை நிலை நிறுத்திப் பார்த்துப் பார்த்துச் செய்வது விபீஷணன் தான். அவளுக்கு அவன் வாழ்க்கையில் முக்கியத்துவம் இருக்கிறது என்று நினைக்கும் போது மனம் குளிர்ந்து போனது. ஆனால் காதல் என்ற வார்த்தை அவளை யோசிக்க வைத்தது. அவனைத் தான் காதலிக்கிறோமா என்று பலவாறு சிந்தித்துப் பார்த்தும் விடை மட்டும் தெரியவில்லை.

அவள் அவளது வீடு இருக்கும் பகுதியை மட்டும் தான் சொன்னாள். வீட்டின் முன்பு வேறு ஒரு ஆணுடன் வந்து இறங்கினால் எந்த வீட்டில் தான் சும்மா இருப்பார்கள். அதனால் அவள் அவளது வீடு எங்கு இருக்கிறது என்று கூறவில்லை.

“நந்தனா இங்க இருந்து எங்க போகனும்?”

“இல்லை இனி நான் போயிக்கிறேன். வீட்டுல யாராவது நான் உங்க கூட வரதைப் பார்த்தால் தேவையில்லாதப் பிரச்சனை வரும்.” என்று தயங்கித் தயங்கியே கூறினாள். எங்கு அவன் தன்னைத் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று.

“ஓ ஓகே எனக்கும் அக்கா இருக்காங்க. ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் யூ.” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டான்.

நந்தனா மாலையில் அவன் செய்தது போல் இப்போதும் வந்துக் கதவைத் திறந்து விடுவானா என்று பார்க்க, அவளது எண்ணம் அவனுக்கும் புரிந்ததோ என்னவோ நமட்டுச்சிரிப்புடன் இறங்கி அவளுக்குக் கதவைத் திறந்தான்.

அவள் இறங்கியதும் அவளது உடைமைகளைப் பின் சீட்டிலிருந்து எடுத்து அவளிடம் தந்தான். பின் அவளைப் பார்த்து,”உன் மனசு எனக்குப் புரியுது நந்தனா. ஆனால் அது உனக்கு இன்னும் புரியலைனும் எனக்கு நல்லா தெரியுது. அதனால டைம் எடுத்துக்கோ நந்தனா. நான் முன்னாடியே சொன்ன மாதிரி என் லைஃப் உன் கூடத் தான். அதனால நீ என்னை நினைச்சு பயப்படத் தேவையில்லை. ம் நீ எனக்குச் சாதகமாகத் தான் சொல்லுவனு நம்பிக்கை இருக்கு. என்னால உன்னை வேற எவன் கூடவும்… ப்ச் சொல்லக் கூடப் பிடிக்கலை, அந்த நிலைமை எனக்கு வராதுனு நினைக்கிறேன். ஸோ என்னையே ஓகே பண்ணிடு சரியா.” என்று கூறிவிட்டு அவளது பதிலை எதிர்பாராமல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து விட்டான்.

பின்னர் காரை அனைத்து விட்டு அவளைப் பார்த்து,”நீ உன்னோட முடிவைச் சொல்ற வரைக்கும் நான் உன்னைக் கண்டிப்பா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஸோ நல்லா யோசிச்சு பதில் சொல்லு. நீ ஓகேனு சொன்னால் நான் உன்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்குவேன் நந்தனா. கீப் தேட் இன் மைன்ட். அப்புறம் உன்னோட டெசிஷன் என்னன்னு எனக்குச் சீக்கிரமே மெஸேஜ் பண்ணி சொல்லிடு. ஐ வில் பீ வெயிடிங் ஃபார் யு.” என்று கூறிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து சிட்டாகப் பறந்து விட்டான் விபீஷணன்.