“அதெல்லாம் எப்போவோ கூடி வந்துருச்சு. இன்னும் ஆறு ஏழு மாதத்துக்குள் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். என்ன ஒன்னு….” என்று நிறுத்தினார் அவர்.
“என்னங்க ஜோசியரே? எதுவா இருந்தாலும் சொல்லுங்க!”
“இந்த ஜாதகருக்கு மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட தான் கல்யாணம் நடக்கும். ஆனால் கல்யாணம் நடந்து மூனு மாசத்துக்குள்ள ஒரு பெரிய கண்டம் இவங்களுக்கு காத்து இருக்குது. அதை இவங்க தாண்டிட்டா இரண்டு பேரும் அமோகமா வாழ்வாங்க. இல்லாட்டி உங்க பையன் அதுக்கு அப்புறம் கடனேனு தான் அவரோட வாழ்க்கையை வாழ்வார்.” என்று அவர் கூற, கேட்ட இருவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது.
“நீங்கக் கடவுள் எழுதின விதியை மாத்த நினைக்கிறீங்க. அது எப்படி மாறும்னு நீங்க நம்புறீங்க? நீங்க எவ்ளோ தான் தலைகீழா தண்ணீர் குடிச்சாலும் இந்த ஜாதகர் அவர் மனசுக்குப் பிடிச்ச பொண்ணை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பார். இல்லாட்டி இவருக்கு கல்யாண பிராப்தியே இல்லை. கவலைப்படாதீங்க அந்த அம்பாளும் ஈசனும் உங்களை கை விட மாட்டாங்க. நல்லதே நடக்கும். வேற எதுவும் கேட்கனுமா?” என்று கேட்டார் அவர்.
உடனே சசிகலா தன் பையிலிருந்து காலையில் வந்த அவரது அண்ணன் கொடுத்த ஜாதகத்தை எடுத்து அவரிடம் கொடுத்து,”என் பையனுக்கும் இந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணலாமா?” என்று கேட்டார்.
அவர் அதைக் கையில் கூட எடுக்காமல் சசிகலாவைப் பார்த்து,”உங்களோட மருமகளை உங்களோட பையனே அழைச்சுட்டு வருவார். வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க. அப்படி நீங்க செய்தால் அதுக்கு அப்புறம் உங்களோட பையன் காலம் முழுசா தனியா தான் இருப்பார்.” என்று அவர் கூற, கேட்ட இருவருக்கும் பக்கென்று இருந்தது.
முகம் வெளுத்துப் போய் தான் இருவரும் வெளியே வந்தனர். அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு வந்த தண்ணீரை முதலில் பருகினர்.
“என்னங்க இவர் இப்படிச் சொல்றார்?”
“எனக்கும் ஒன்னும் புரியலை சசி. இப்போ என்ன பண்றது? இவர் சொல்ற மாதிரி பார்த்தா நம்ம விபீ யாரையாவது விரும்புறானா? அதனால் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றானா?” என்று ராஜாராம் கேட்கவும் சசிகலாவிற்கு விபீஷணனின் தற்போதைய நடவடிக்கைகள் அவரது மனதில் வந்து சென்றது.
“ஒரு வேளை இருக்குமோ!! அப்படி இருந்தா என்னங்க பண்றது? நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா? நாளைக்கு நர்மதா வீட்டுலயும் கவுதமோட புகுந்த வீட்டுலயும் கேள்வி கேட்க மாட்டாங்களா?”
“சசி இப்போவே அதைப் பத்தி எதுக்கு பேசிகிட்டு? முதல்ல வீட்டுக்குப் போவோம். ஒரு வேளை விபீ அப்படி யாரையாவது காதலிக்கிறேன்னு சொன்னாலும் அப்போ பார்த்துக்கலாம். இப்போ கடவுள் மேல பாரத்து போடு. நல்லதே நடக்கும்னு நம்புவோம்.” என்று ராஜாராம் சசிகலாவை தேற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டிற்கு வந்தும் அதைப் பத்தி யாரிடமும் சொல்லவில்லை சசிகலாவும் ராஜாராமும். ஆனால் சசிகலா மட்டும் விபீஷணனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டே இருந்தார். அதைப் பார்த்த ராஜாராம் தான் சத்தம் போட்டு சசிகலாவை அடக்கி வைத்திருக்கிறார்.
மூன்று நாட்களாகி விட்டது விபீஷணன் யது நந்தனாவைப் பார்த்து. அவளைப் பார்க்க வேண்டும் என்று இந்த மூன்று நாட்களில் பல முறை நினைத்துப் பாரத்து விட்டான். ஏன் அவனைக் கேட்காமலே அவனது கார் சில சமயம் நந்தனா பயிற்சி தரும் வீடு இருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆனால் அவளைப் பார்க்காமல் அவனது மடத்தனத்தில் தன்னையே திட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். அப்படியே அவன் சென்று இருந்தாலும் அவளைப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அவள் வார இறுதியில் மட்டுமே அங்குப் பயிற்சி தர வருவாள். அது விபீஷணனுக்குத் தெரியாமல் போய் விட்டது.
அன்று எப்போதும் போல வேலை முடித்து விட்டு அவனது காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் விபீஷணன். சாலையில் ரெட் சிக்னல் போட்டதால் காரை நிறுத்தி விட்டு அங்கும் இங்கும் அவன் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர் திசையில் உள்ள சாலையின் இடப்பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் நந்தனாவைப் போல் தெரிந்தது அவன் கண்ணுக்கு.
‘அது நந்தனா தானா? இல்லை நமக்கு அப்படித் தெரியுதா? கிட்டப் போய் பார்த்துரலாம். அதுக்குள்ள பஸ் வந்து அவள் கிளம்பிடக் கூடாது கடவுளே!! நானே அவளை மூனு நாள் பார்க்காமல் ரொம்ப அவதிப்படுறேன். ஸோ கொஞ்சம் கருணைக் காட்டு ஆண்டவா. இந்த சிக்னல் இப்போ தான் ரெட் போடனுமா’ என்று அவன் புலம்பிக் கொண்டு இருக்கும் போதே சிக்னல பச்சையாக மாற வேகமாக அவன் வண்டியை எடுத்தாலும் முன்னால் இருக்கும் கார் சென்றால் தான் இவனால் செல்ல முடியும். இவனது அவசரம் புரியாமல் முன்னால் சென்ற கார் ஊர்ந்து சென்று கொண்டிருக்க, இவன் ஹாரனை தொடர்ந்து அடிக்க அவர்கள் எரிச்சல் அடைந்து அவனுக்கு வழி விட்டனர்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தின் எதிரில் இவன் வண்டியை நிறுத்தி வெளியே வந்து பார்க்க, நின்று கொண்டிருந்தது நந்தனாவே தான். சாலையின் நடுவில் தடுப்பு இருந்ததால் அவனால் நேராக அவளிடம் செல்ல முடியவில்லை. அதனால் அவனது காரை எடுத்து சிறிது தூரம் ஓட்டிச் சென்று பின்பு வளைத்து அவள் முன்பு கொண்டு வந்து நிறுத்தினான்.
யாரோ வண்டியை நிறுத்துகிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தனா, விபீஷணன் கதவைத் திறந்து கொண்டு இறங்கவும் அதிர்ச்சியாகி விட்டாள். அங்குச் சுத்தமாக அவனை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி வந்தான் விபீஷணன்.
“ஹாய் நந்தனா இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான் அவன்.
“ம் சாப்பிட வந்தேன். கேட்கிற கேள்வியைப் பார், இங்க என்ன பண்ணுவாங்க பஸ்ஸூக்கு வெயிட்டிங்.” என்று அவள் நொடித்துக் கொண்டே கூறினாள்.
அதை ரசித்துக் கொண்டே,”அட அட செம ஜோக் நான் சிரிச்சுட்டேன். ஹீ ஹீ ஹீ.” என்று முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி அவன் சிரிப்பது போல் காட்டக் கடுப்பாகி விட்டாள் நந்தனா.
“ஓகே ஓகே கூல். எங்க போகனும்னு சொல்லு நந்தனா நான் கொண்டு போய் விடுறேன்.”
“நோ தாங்க்ஸ். நானே போயிக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவள் திரும்பிக் கொள்ள, விபீஷணன் எதுவும் பேசாமல் அவனது காரில் ஏறிக் கொண்டான். இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. சரி போகட்டும் என்று விட்டுவிட்டாள். ஆனால் விபீஷணனோ அவனது காரை சற்றுத் தள்ளி நிறுத்தி விட்டு மீண்டும் இவளிடம் வந்தான்.
“என்ன நீ சொன்னதும் அப்படியே போயிடுவேன்னு நினைச்சியா? நோ வே.” என்று அவன் கூற, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
“டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்கு. எங்க போகனும்னு சொல்லு நந்தனா நான் கொண்டு போய் விடுறேன்.” என்று மீண்டும் அவளை அழைத்தான் விபீஷணன்.
அவள் அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்பு அவளது கைப்பேசி ஒலி எழுப்ப எடுத்துப் பார்த்தவள் அவளது ஆசிரியர் தான் அழைத்திருந்தார்,”ஹலோ மேம், பஸ்க்கு வெயிட்டிங்.”
அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, மீண்டும் இவளே,”பத்து நிமிஷம் பார்க்கிறேன் மேம். இல்லாட்டி நான் ஆட்டோ ஆர் கேப் புக் பண்ணி வந்துடுறேன் மேம்.” என்று அவள் கூறிவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.
அவள் கைப்பேசியை உள்ளே வைத்ததும் விபீஷணன் அவளிடம்,”ஆட்டோ, கேப் டிரைவரை நம்புவ என்னை நம்ப மாட்டியா?” என்று அவன் கேட்க, அவளுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது.
“இல்லை அப்படிக் கிடையாது. உங்களுக்குத் தேவையில்லாத வேலை இது. நான் பார்த்துக்கிறேன்.” அமைதியாகவே கூறினாள் நந்தனா.
“திஸ் இஸ் டூ மச் நந்தனா. உன்னை ட்ராப் பண்றது எப்படி எனக்குத் தேவையில்லாத வேலையா இருக்க முடியும்? டோன்ட் திங்க் டூ மச். வா நான் ட்ராப் பண்றேன். எப்படியும் நான் வீட்டுல போய் சும்மா இருக்க தான் போறேன். அதுக்கு முன்னாடி என் சோல்மேட்டை நான் பத்திரமா ட்ராப் பண்ணிட்டு போயிட்டா நான் நிம்மதியா இருப்பேன் பார்.” என்று அவன் கூற, அவளுக்கு வயிற்றில் பல பட்டாம் பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்தாள்.
அவள் அப்படியே அவனையே பார்த்துக் கொண்டு நிற்க, அவன் சொடக்கிட்டு,”ஹலோ நந்தனா அப்புறம் என்னை சைட் அடிக்கலாம். இப்போ போகலாமா?” என்று அவன் கேட்க, அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“நான் ஒன்னும் சைட் அடிக்கலை.” நொடித்துக் கொண்டே கூறினாள் நந்தனா.
“அஹான். நம்பிட்டேன் சரி வா டைம் ஆகுது பார் உனக்கு.” என்று கூறி அவள் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு இல்லை இல்லை பிடுங்கிக் கொண்டு அவனது கார் நிற்கும் இடத்திற்குச் சென்றான். நந்தனாவும் வேற வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.