பாக்கியலட்சுமி தன்னுடைய குடும்பத்தினருடன் கிளம்பிச் சென்றதும், ராஜசேகரனின் வீட்டில் சிறிது நேரம் யாருமே பேசவில்லை.
அந்த அமைதியைக் கலைத்த இந்திராணி, தன்னுடைய கணவரைப் பார்த்தார்.
“என்னங்க, அந்த அம்மா பேசிட்டுப் போனதைப் பார்த்தீங்களா? பார்க்க எவ்வளவு எளிமையா இருக்காங்க! ஆனா, பேசுற பேச்சைப் பாருங்க. அவங்க மகளுக்கும் நம்ம மகனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாத்தான், நம்ம கலைக்கும் கல்யாணம் நடக்கும்னு அடிச்சுச் சொல்லிட்டுப் போறாங்க!”
அவருடைய குரலில் பாக்கியலட்சுமியைப் பற்றிய இளக்காரமும் எரிச்சலும் வெளிப்பட்டன.
“அவங்க சும்மா இப்படிச் சொல்லியிருப்பாங்களான்னு எனக்குத் தோணல. நம்ம குடும்பத்துல ஏதோ பிரச்சினை இருக்குன்னு அவங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம். அதனாலதான் இப்படியொரு நிபந்தனையைப் போட்டிருக்காங்க.”
சிறிது நேரம் யோசித்த ராஜசேகரன், திடீரென்று மகளைத் திரும்பிப் பார்த்தார்.
“கலை, நீ ஏதாவது அவங்ககிட்ட சொல்லி வச்சியா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் கலைவாணி திடுக்கிட்டாள்.
“இல்லப்பா! நான் அவங்ககிட்ட எதுவுமே சொல்லல.”
“நல்லா யோசிச்சுச் சொல்லு. ஏதாவது பேசினியா?”
“இல்லப்பா. நான் எதுவுமே சொல்லல. அவர்தான் அவரைப் பற்றியும் அவரோட குடும்பத்தைப் பற்றியும் பேசினார். நானும் அவர்கிட்ட என்னைப் பற்றிச் சில விஷயங்களைச் சொன்னேன். அவ்வளவுதான். நீங்க சொல்ல வேண்டாம்னு சொன்னதால, நம்ம வீட்டுல நடந்த விஷயத்தைப் பற்றி நான் அவர்கிட்ட எதுவும் சொல்லல.”
கலைவாணியின் பதிலைக் கேட்ட இந்திராணி சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
அவள் சொல்வது உண்மைதான் என்று அவருக்குத் தோன்றியது. ஆனாலும், பாக்கியலட்சுமி இப்படியொரு நிபந்தனையை விதித்துவிட்டுச் சென்றதை அவரால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
“சரி, நீ போய் உன் அறையில இரு,” என்றார்.
கலைவாணியும் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் ராஜசேகரன் மனைவியைப் பார்த்தார்.
“இந்திராணி, அந்த அம்மா கேட்டதுல என்ன தப்பு இருக்கு? அவங்களுக்கும் பிள்ளைகள் இருக்காங்க. நமக்கும் பிள்ளைகள் இருக்காங்க. இரண்டு குடும்பமும் உறவாகணும்னு நினைச்சிருக்காங்க. அதுல என்ன பிரச்சினை?”
“உங்களுக்குப் புரியலையா? அந்த அம்மா நம்ம வீட்டுக்கு வரும்போது இப்படியொரு நிபந்தனையைப் போட்டாங்களா? நம்ம வசதி, வாய்ப்பைப் பார்த்த பிறகுதானே இப்படியொரு பேச்சைப் பேசிட்டுப் போயிருக்காங்க!”
“அதுக்காக?”
“அதுக்காகன்னா என்னங்க? நம்ம வீட்டுல ஏதோ பிரச்சினை இருக்குன்னு அவங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம். அதனாலதான் நம்ம பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்புறதுக்கு முன்னாடி, அவங்க பொண்ணையும் நம்ம வீட்டுக்கு மருமகளா அனுப்பணும்னு நினைக்கிறாங்க. நம்ம கலை அங்க போய் என்ன சொன்னாலும், அவங்களோட மகளை நம்ம வீட்டுக்கு அனுப்பின பிறகு நம்மால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறாங்க போல!”
இந்திராணியின் பேச்சைக் கேட்ட ராஜசேகரனும் யோசிக்கத் தொடங்கினார்.
“அப்படியெல்லாம் இருக்கும்னு எனக்குத் தோணல. இருந்தாலும், நம்ம பொண்ணோட வாழ்க்கை முக்கியம். அதனால அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்,” என்றார் ராஜசேகரன்.
அதைக் கேட்ட இந்திராணி ஆத்திரத்தில் கொதித்தார்.
“அவ காதல் கத்திரிக்காய்னு சுத்தாம ஒழுக்கமா இருந்திருக்க வேண்டியதுதானே! அவ மட்டும் அப்படி இருந்திருந்தா நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? அந்தப் பாக்கியலட்சுமி வந்து என் வீட்டுல எனக்கே கட்டளை போடுற அளவுக்கு விட்டிருக்க மாட்டேனே! எல்லாம் அந்த ஓடுகாலியால வந்தது!” என்று பல்லைக் கடித்தபடி கோபத்தில் குமுறினார்.
“அந்தக் கோபம் எனக்கும் இருக்கு. ஆனாலும், பெத்துட்டோம் இல்லையா? நம்ம பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சிடுவோம். நம்ம கடமையை ஒழுங்கா செய்வோம். முதல்ல விக்ரம்கிட்ட பேசிப் பார்ப்போம். அவனுக்கு இந்தத் திருமணத்துல விருப்பம் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்.”
ராஜசேகரன் கூறிக்கொண்டிருந்தபோதே, விக்ரம் திடீரென்று எழுந்து நின்றான்.
அவனுடைய முகத்தில் அதுவரை இருந்த அமைதி மறைந்திருந்தது.
“அப்பா, அம்மா… இந்த விஷயத்துல நான் என்ன நினைக்கிறேன்னு தெளிவா சொல்லிடுறேன்.”
இருவரும் அவனைப் பார்த்தார்கள்.
“எனக்கு இந்தத் திருமணத்துல விருப்பம் இல்லை.”
அவன் சொன்னதைக் கேட்ட இந்திராணி உடனே பேசினார்.
“விக்ரம், முதல்ல முழுசா விஷயத்தைக் கேட்டுட்டுப் பேசு. உனக்கு மாலதியைப் பற்றித் தெரியாது. அப்புறம் எப்படி உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்ற?”
“அம்மா, அந்தப் பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லைங்கிறதுக்காக மட்டும் நான் இந்தத் திருமணத்தை வேண்டாம்னு சொல்லல. என் வாழ்க்கையைப் பற்றி எனக்குச் சில எண்ணங்கள் இருக்கு. எனக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை நானே தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிறேன்.”
“அப்படியில்லைம்மா. நீங்க பார்த்துச் சொல்ற பொண்ணைப் பிடிச்சிருந்தா, நானும் சம்மதிப்பேன். ஆனா, இந்த இடத்துல இரண்டு கல்யாணத்தையும் சேர்த்துப் பேசுறது எனக்குச் சரியா படல.”
அவன் தந்தையைப் பார்த்தான்.
“அப்பா, தயவுசெய்து அந்தப் பொண்ணை மட்டும் என் வாழ்க்கையில கொண்டு வந்துடாதீங்க. எனக்கு அந்தப் பொண்ணோட முகம்கூடத் தெரியாது.”
கலைவாணியை பெண் வந்த போது அங்கே அமர்ந்திருந்த மாலதி, நடந்துகொண்டிருந்த பேச்சுகளைக் கேட்டபடி எதுவும் பேசாமல் தலைகுனிந்திருந்தாள். விக்ரமால் அவளுடைய முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
“அவங்க குடும்பத்தோட வசதி, வாய்ப்பைப் பற்றியெல்லாம் நான் பேசல. என்னோட வாழ்க்கைத் துணையை நானே தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிறேன். நான் தேர்ந்தெடுக்கிற பொண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன். அவளைப் பார்த்த பிறகு நீங்க எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்க.”
ராஜசேகரன் மகனை அமைதியாகப் பார்த்தார்.
“விக்ரம், உன் விருப்பம் எங்களுக்கு முக்கியம்தான். ஆனா, இப்போ அந்த அம்மா ஒரு நிபந்தனையைப் போட்டுட்டுப் போயிருக்காங்க. நம்ம கலைவாணிக்கும் முகிலுக்கும் திருமணம் நடக்க வேண்டும்னா, மாலதிக்கும் உனக்கும் திருமணம் நடக்கணும்னு சொல்றாங்க. இப்போ நாம இந்தச் சம்பந்தத்தை வேண்டாம்னு சொன்னா, அந்தத் திருமணமும் நின்றுபோகலாம்.”
“அதுக்காக என் வாழ்க்கையை நான் விரும்பாத ஒருத்தரோட ஆரம்பிக்க முடியுமா, அப்பா?”
விக்ரமின் குரலில் இருந்த உறுதியைக் கேட்டதும் ராஜசேகரன் அமைதியாகிவிட்டார்.
“எனக்குத் தெரியும். முகிலோட குடும்பம் நம்மைவிட வசதியில் குறைவான குடும்பம்தான். ஆனா, அதுக்காக அவங்களை நான் குறை சொல்லல. நம்ம கலைவாணிக்கு முகில் பொருத்தமானவனா இருக்கலாம். அதே மாதிரி மாலதி எனக்குப் பொருத்தமானவளா இருப்பாளான்னு எனக்குத் தெரியாது. அதைத் தெரிஞ்சுக்காம, இரண்டு குடும்பமும் ஒரு முடிவை எடுத்துக்கிறது சரியில்லை.”
சிறிது நேரம் யாரும் பேசவில்லை.
பிறகு விக்ரம் மீண்டும் தொடர்ந்தான்.
“அம்மா, இன்னொரு விஷயத்தையும் தெளிவா சொல்லிடுறேன். நான் இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக, முகிலுக்கும் கலைவாணிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்னு அவங்க முடிவு செஞ்சா, அதுக்காகவும் நம்ம முடிவை மாத்திக்க வேண்டிய அவசியமில்லை.”
சிறிது நேரம் நிறுத்தியவன் தொடர்ந்து பேசினான்.
“கலைக்கு வேற நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம். நம்ம குடும்பச் சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற எளிமையான குடும்பங்கள் நிறைய இருக்கு. அவளுக்குப் பொருத்தமான இடத்துல சம்பந்தம் பேசி முடிக்கலாம்.
“ஆனா, தயவுசெய்து இந்த ஒரு சம்பந்தத்தை மட்டும் பிடிச்சுக்கிட்டு என் வாழ்க்கையில விளையாடாதீங்க. நான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இதுல மட்டும் என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்!”
என்று சொல்லிவிட்டு விக்ரம் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த இந்திராணிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
ஒருபுறம் மகளின் வாழ்க்கையைப் பற்றிய கவலை. மறுபுறம் மகனின் உறுதியான மறுப்பு. இதற்கிடையில் பாக்கியலட்சுமி விதித்த நிபந்தனை வேறு!
“என்னங்க, இப்போ என்ன செய்யப் போறோம்?” என்று கணவரிடம் கேட்டார் இந்திராணி.
ராஜசேகரன் பெருமூச்சுவிட்டார்.
“என்ன செய்ய முடியும், இந்திராணி? முதல்ல விக்ரமோட முடிவை மதிக்கணும். அவனுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவன் தலையில கட்டி வைக்க முடியாது.”
“அப்போ நம்ம கலைவாணி?”
“அவளோட வாழ்க்கையைப் பற்றியும் நாம யோசிக்கணும். ஆனா, அதுக்காக இன்னொரு பிள்ளையோட வாழ்க்கையைப் பணயம் வைக்க முடியாது.”
இந்திராணி எதுவும் பேசவில்லை.
அந்த வீட்டில் அன்றைய மாலை தொடங்கிய குழப்பம், இரவு வரையிலும் அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
❤️
கலைவாணியின் மனம்…
தன்னுடைய அறைக்குள் வந்த கலைவாணி, கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.
வெளியில் நடந்த பேச்சுகள் அவளுடைய காதுகளிலும் விழுந்திருந்தன.
விக்ரம் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவனுடைய முடிவைக் கேட்டதும் அவளுக்கு வியப்பாக இல்லை. ஏனென்றால், அவனுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க அவனுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதை அவளும் புரிந்துகொண்டிருந்தாள்.
ஆனால், அவளுடைய மனதுக்குள் வேறொரு எண்ணம் எழுந்தது.
‘அவர் என்னைப் புரிஞ்சுக்கிட்டுப் பேசினார். என்னோட கடந்த காலத்தைப் பற்றிக் குறை சொல்லல. அவங்க வீட்டுச் சூழ்நிலையைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். ஆனா, இப்போ என்ன நடக்கும்னு தெரியலையே!’
அவளுக்குத் முகிலை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருந்தாலும், அந்தத் திருமணம் உறுதியாகும்வரை எதையும் நம்பிவிடக் கூடாது என்று நினைத்தாள்.
‘இந்த வீட்டுல எல்லாரும் இப்போ ஒரு மாதிரி பேசுறாங்க. நாளைக்கு என்ன முடிவெடுப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்? ஒரு நிமிஷம் அன்பாகப் பேசுறவங்க, அடுத்த நிமிஷமே வேற மாதிரி மாறிடுறாங்க. என் வாழ்க்கையில ஏற்கெனவே நிறைய குழப்பங்களைச் சந்திச்சுட்டேன். இனிமேல் எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக்காம அமைதியா இருக்கணும்.’
அவள் மெதுவாக எழுந்து ஜன்னலருகே சென்றாள்.
தோட்டத்தில் தெரிந்த செடிகளையும் மலர்களையும் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய மனதில் ஒரே ஒரு வேண்டுதல்தான் இருந்தது.
இந்த முறை தன்னுடைய வாழ்க்கையில் அமையப்போகும் உறவு, பாதியிலேயே முறிந்துவிடாமல் இருக்க வேண்டும்.
அதற்காக அவள் காத்திருக்கத் தயாராக இருந்தாள்.
ஆனால், அந்தக் காத்திருப்பு அவளுடைய வாழ்க்கையை எந்தத் திசையில் கொண்டு செல்லப்போகிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.