மூன்று நாட்களாகச் சித்தரின் தரிசனத்திற்காகக் காத்திருந்த ஆதிவேந்தனின் பொறுமையைச் சோதித்துப் பார்த்த சித்தர், நான்காவது நாளில் அவனுக்குக் காட்சி கொடுக்க முடிவு செய்தார்.
அன்றும் ஆதிவேந்தனும் அவனுடைய பெற்றோரும் கோயிலுக்கு வந்து நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள்.
நேரம் செல்லச் செல்ல ஆதிவேந்தனின் முகத்தில் சலிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்போது, திடீரென்று அவர்களை நோக்கி வந்த ஒருவர், சித்தர் அழைப்பதாகச் சொன்னார்.
அதைக் கேட்டதும் ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் மகிழ்ச்சியுடன் மகனை அழைத்துக்கொண்டு சித்தர் இருந்த இடத்திற்குச் சென்றார்கள்.
அவர்களைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்த சித்தர், ஆதிவேந்தனை நோக்கித் தன் கையை நீட்டினார்.
“ஆதிவேந்தா! இத்தனை நாட்களாக நான் உனக்குக் காட்சி தராமல் காக்க வைத்ததற்குக் காரணம் இருக்கிறது. உன்னுடைய சோதனைக் காலம் இப்போதுதான் ஆரம்பமாகிறது!”
சித்தரின் குரல் உறுதியாக ஒலித்தது.
“நான் உனக்கு வைத்த முதல் சோதனையிலேயே நீ தோற்றுவிட்டாய். ஒரு சோதனையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய பொறுமை உனக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்கவே உன்னை இத்தனை நாட்கள் காக்க வைத்தேன். ஆனால், உன்னிடம் பொறுமையைவிட அலட்சியமும் கோபமும்தான் முன்னால் நின்றன.
தொழிலில் உனக்கு எவ்வளவு திறமையும் வெற்றியும் இருந்தாலும், வாழ்க்கை என்று வரும்போது பொறுமை மிகவும் அவசியம், மகனே! நீ ஒரு நாள்கூடப் பொறுமையாக இருக்கவில்லை. காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோதெல்லாம் கோபப்பட்டாய். உன்னுடைய நேரம் வீணாகிறது என்று நினைத்து அலட்சியப்படுத்தினாய்.
பொறுமையில்லாதவன் வாழ்க்கையில் எத்தனை பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவனுடைய அவசரமே சில நேரங்களில் அவனுக்குப் பெரிய தோல்வியைத் தேடித் தந்துவிடும்!
நான் உனக்கு வைக்கப்போகும் சோதனைகள் சாதாரணமானவை அல்ல. அவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு இருக்கிறதா என்பதுதான் எனக்குத் தெரிய வேண்டும். அதற்கான முதல் வாய்ப்பையே நீ தவறவிட்டுவிட்டாய், ஆதிவேந்தா!”
ஆதிவேந்தன் பதில் சொல்லாமல் சித்தரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது சித்தர் ஒரு சிறிய புன்னகையுடன் தொடர்ந்து பேசினார்.
“முயற்சியால் மட்டுமே யாவும் முடிந்திடாது மானிடா! சில செயல்கள் நிறைவேறக் காலம் கனிந்திடல் வேண்டும். விதைத்த விதை உடனே விருட்சமாகிடுமோ? பொறுத்திருக்கும் காலமே அதன் வேரினை ஆழப்படுத்தும்!”
சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட ஆதிவேந்தன் புரியாமல் அவரையே பார்த்தான்.
அவன் முகத்திலிருந்த குழப்பத்தை உணர்ந்த சித்தர் மீண்டும் பேசினார்.
“இதோ! இன்று இத்தருணம் கனிந்து வந்ததால்தான் நீ என் முன்னே நிற்கின்றாய்! உன் விருப்பம் பெரிதென்பதற்காகக் காலம் தன் போக்கை மாற்றிக்கொள்ளாது. காலம் கனியும்வரை காத்திருக்கும் மனமே வாழ்வின் நுட்பத்தை உணர்ந்திடும்!”
“சாமி, நீங்க சொல்றது எங்களுக்கு ஒண்ணுமே புரியலையே! எதுக்கு எங்க பையனைப் பார்த்து இப்படிச் சொல்றீங்க?” என்று மீனாட்சி பணிவாகக் கேட்டார்.
அதைக் கேட்ட சித்தர் ஆதிவேந்தனை ஆழமாகப் பார்த்தார்.
“தன் விருப்பமே விதியென எண்ணுகின்றான் இவன்! ‘நினைத்த மாத்திரத்தில் மங்கையின் கழுத்தில் மங்கலநாண் சூட்டுவேன்; என் மனம் விரும்பாத மணவினை நிகழாது தடுத்திடுவேன்’ எனத் தன்முனைப்பில் திளைக்கின்றான்!
ஆனால், மானிடா! மணவாழ்வு என்பது மனம் கொண்ட மாத்திரத்தில் கைகூடும் வணிகமன்று! உன் எண்ணத்தால் காலத்தை வென்றிட இயலாது; உன் ஆணவத்தால் விதியின் பாதையை மாற்றிட இயலாது!”
சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட ஆதிவேந்தனின் முகம் இறுகியது.
அவனுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுவதற்காகவே இத்தனை நாட்கள் காத்திருந்த நிலையில், இப்போது தன்னுடைய குணத்தையே சித்தர் குறை கூறுவது அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.
இருப்பினும், பெற்றோரின் முன்னிலையில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
சித்தர் ஆதிவேந்தனின் பெற்றோரைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்தார். அவருடைய முகத்தில் புன்னகை இருந்தாலும், கண்களில் ஆழமான சிந்தனை தெரிந்தது.
அவர்கள் இருவரும் கைகூப்பியபடி அவர் முன்னால் நின்றார்கள்.
“சாமி… எங்க பையனுக்குக் கல்யாணம் நடக்கணும். அதுக்காகத்தான் இத்தனை வருஷமா கோயில் கோயிலா ஏறி இறங்கிட்டு இருக்கோம். நீங்கதான் எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்.”
ஆதிவேந்தனின் அம்மா கண்ணீருடன் கேட்டதும், சித்தர் மெல்லச் சிரித்தார்.
பிறகு, அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி அவர்களுக்கே தெரியாத சில உண்மைகளைச் சுட்டிக்காட்டும் விதமாகப் பேசத் தொடங்கினார்.
“முற்பிறப்பின் வினையும், முன்னோர் செய்த பாவமும், தலைமுறை தாண்டியும் தொடரும் என்பதனை நீவிர் அறியீரோ?”
அவர் பேசிய தமிழ் அவர்களுக்குப் புரியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
சித்தர் மீண்டும் பேசினார்.
“முன்னோர் ஈட்டிய பொருளும், சேர்த்த செல்வமும் மட்டுமே வழிவழியாய் வந்திடுவதில்லை! அவர் செய்த வினைப்பயனும் வழித்தோன்றல் வாழ்வினைத் தொடர்ந்து வந்தடையும்!”
அவருடைய குரல் கோயிலின் அமைதிக்குள் ஆழமாக ஒலித்தது.
ஆதிவேந்தனின் அப்பா தயக்கத்துடன் கேட்டார்.
“சாமி, நீங்க என்ன சொல்றீங்கன்னு எங்களுக்குச் சரியாப் புரியலையே!”
அவரைப் பார்த்துச் சிரித்த சித்தர், இம்முறை அவர்களுக்குப் புரியும்படியே பேசினார்.
“உங்க முன்னோர்கள் சேர்த்து வச்ச சொத்தும் செல்வமும் மட்டும் உங்க குடும்பத்துக்கு வந்து சேரல. அவங்க செஞ்ச பாவங்களோட விளைவுகளும் உங்களைத் தேடி வந்திருக்குது.”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் இருவருடைய முகமும் மாறியது.
“என்ன சாமி சொல்றீங்க? எங்க முன்னோர்கள் அப்படி என்ன செய்தாங்க?” என்று ராஜேந்திரவர்மன் பதற்றத்துடன் கேட்டார்.
அதற்குச் சித்தர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.
“மூன்று தலைமுறை கடந்த வினை, நான்காம் தலைமுறையின் வாழ்வினை அலைக்கழிக்கின்றது! வினை விதைத்தோர் மறைந்தாலும், அதன் விளைவு மறைவதில்லை!”
அவருடைய வார்த்தைகளைக் கேட்ட மீனாட்சிக்குப் பயம் கலந்த குழப்பம் ஏற்பட்டது.
“அப்படின்னா, எங்க பையனுக்குக் கல்யாணம் நடக்காம இருக்கிறதுக்கு எங்க முன்னோர்கள் செஞ்ச பாவம்தான் காரணமா, சாமி?” என்று அவர் கேட்டார்.
சித்தர் அவசரப்படாமல் பதிலளித்தார்.
“நீங்க அப்படியே முடிவு பண்ணிடாதீங்க. உங்க குடும்பத்துல இப்போ நடக்கிற பிரச்சினைகளுக்கான முழுமையான காரணத்தை நீங்க இன்னும் தெரிஞ்சுக்கலை. ஆனா, உங்க குடும்பத்தின் கடந்த காலத்தைப் புரிஞ்சுக்க வேண்டிய நேரம் வந்திருக்கு.”
சில நொடிகள் கண்களை மூடியவர் மீண்டும் அவர்களைப் பார்த்தார்.
“கடந்த ஐந்து வருஷமா உங்க பையனுக்குக் கல்யாணம் நடக்கணும்னு எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கீங்க. எத்தனையோ பரிகாரங்களைச் செஞ்சிருக்கீங்க. ஆனாலும், உங்க முயற்சிக்கு இன்னும் முழுமையான பலன் கிடைக்கலை.
இதுவரைக்கும் நீங்க செஞ்ச பரிகாரங்களைவிட, இனிமேல் நீங்க செய்யப்போற காரியங்கள்தான் உங்களுடைய பொறுமையையும் மன உறுதியையும் உண்மையிலேயே சோதிக்கப் போகுது. நீங்க எடுக்கப்போற முயற்சிகள் உங்க குடும்பத்தோட வாழ்க்கையில எந்த அளவுக்கு மாற்றத்தைக் கொண்டுவரும்னு காலம்தான் பதில் சொல்லும்!”
ஆதிவேந்தனின் அம்மா கைகூப்பினார்.
“சாமி, எங்களுக்குத் தேவையான வழியைச் சொல்லுங்க. எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்ய நாங்க தயாரா இருக்கோம்.”
அவர்களைப் பார்த்துச் சிரித்த சித்தர் தன்னுடைய கட்டளையைச் சொல்லத் தொடங்கினார்.
“அறம் செய விரும்பு! பிறர் துயர் துடைத்திடு! ஈதல் இசைபட வாழ்தலின் ஆணிவேர்!”
அந்தச் சொற்கள் அவர்களுக்குப் புரியவில்லை.
சித்தர் மெல்லத் தலையசைத்துவிட்டு, எளிய தமிழில் விளக்கினார்.
“உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரும் சேர்ந்து இந்தப் பரிகாரத்தைச் செய்யணும். நீங்களும் உங்க மனைவியும், உங்க பிள்ளைகளும் இதில் முழுமையா ஈடுபடணும். இது கோயிலுக்குப் போய்ப் பணம் கொடுத்துட்டு வர்ற சாதாரணப் பரிகாரம் கிடையாது.”
அவர் சற்று இடைவெளிவிட்டு தொடர்ந்து பேசினார்.
“தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டங்களுக்கும் நீங்க குடும்பத்தோட போகணும்னு நான் சொல்லவில்லை. பழமையான சிவாலயங்கள் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களுக்குச் சென்று, அங்கே உண்மையிலேயே உதவி தேவைப்படுகிற மக்களைக் கண்டுபிடித்து, அவங்களுக்கு என்ன தேவைப்படுதோ அதைச் செய்யணும்.”
அவருடைய குரல் இப்போது அழுத்தமாக ஒலித்தது.
“ஆதி… திருமணம் செய்துகொள்ள வசதியில்லாமல் தவிக்கும் ஏழை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவி செய். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து, பொருளாதார வசதியின்றித் தவிக்கும் ஜோடிகளுக்குத் திருமணமும் செய்து வை. அவர்களுடைய புதிய வாழ்க்கை தொடங்குவதற்குத் தேவையான உதவிகளையும் உன்னால் முடிந்தவரை செய்.
அவர்களின் மனமார்ந்த ஆசீர்வாதங்கள் உன் குடும்பத்திற்குக் கிடைக்கட்டும். வசதியில்லாதவர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் பெரிய அறம்தான், மகனே!”
“சரி,” என்று தலை அசைத்தான் ஆதி.
மீண்டும் பேசினார்.
“ஆதிவேந்தா… உன்னுடைய அப்பா, அம்மா இருவரும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் நேரில் சென்று உதவ வேண்டும்.
ஆனால், பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உணவூட்டி, தேவையான சுகாதார உதவிகளைச் செய்து, அன்பாகப் பேசுங்கள். அவர்களுடைய கவலைகளைக் கேட்டு ஆறுதல் கூறுங்கள். சிலருக்குப் பணத்தைவிட அன்பும் அரவணைப்பும்தான் அதிகம் தேவைப்படும்.
நீங்கள் செலவிடும் நேரமும் காட்டும் அன்பும் அவர்களுடைய தனிமையைப் போக்கி, மனநிறைவைத் தர வேண்டும். அவர்களுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் உங்கள் குடும்பத்திற்குக் கிடைக்கட்டும்!”
ஆதிவேந்தனின் அப்பா தலையசைத்தார்.
“சரி சாமி. நாங்க அப்படியே செய்றோம்.”
“நான் சொல்றதை முழுமையா கேட்டுட்டு முடிவு பண்ணுங்க.”
சித்தர் ஆதர்ஷை நோக்கிப் பேசத் தொடங்கினார்.
“ஆதர்ஷ்… உன்னால் படிக்க முடியாமல் தவிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வாங்கிக் கொடுப்பதுடன், பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவி செய். திறமையிருந்தும் பணமில்லாத காரணத்தால் யாரும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது.
அதேபோல், படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய கல்வித்தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடு. உன்னுடைய நிறுவனத்தில் வாய்ப்பிருந்தால் வேலை கொடு; இல்லையென்றால் மற்ற நிறுவனங்களிலும் வேலை கிடைக்க உதவி செய்.
ஒருவருக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தால், அவரால் தன்னுடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல், தன் குடும்பத்தையும் முன்னேற்ற முடியும். பணத்தைக் கொடுத்து உதவுவதைவிட, ஒருவர் தன்னுடைய காலில் நிற்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது சிறந்த அறம், மகனே!”
அவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
“ஒவ்வொரு ஊருக்கும் போனதும், யாருக்கு உதவி தேவைப்படுதுன்னு விசாரிக்கணும். அவங்க சொல்றதையெல்லாம் அப்படியே நம்பிப் பணத்தைக் கொடுத்துட்டு வந்துடக் கூடாது. உண்மையிலேயே அவங்களுக்கு அந்த உதவி தேவையா என்பதைத் தெரிஞ்சுக்கணும். அவங்களுடைய தேவைக்கு ஏற்ற மாதிரி உதவி செய்யணும்.”
அவர் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாகச் சொன்னார்.
சித்தர் ஆதிவேந்தனுக்கு ஒவ்வொரு அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருக்க, ராஜேந்திரவர்மன் அந்தக் காட்சியைத் தன்னுடைய கைப்பேசியில் வீடியோ காலில் இணைந்திருந்த மகாலட்சுமி, செந்தில்குமார், ஆதர்ஷ் ஆகியோருக்குக் காட்டிக்கொண்டிருந்தார்.
மறுமுனையில் இருந்த மூவரும் சித்தர் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவருடைய பார்வை மூவரிடமும் நிலைத்தது.
“ஆதிவேந்தா… ஆதர்ஷ்… பெற்றோரின் அன்பு கிடைக்காமல் ஏங்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும். பெற்றோரை இழந்தோ, பெற்றோர் இருந்தும் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமலோ தவிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்று, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுங்கள்.
அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி உதவிகளைச் செய்வதுடன், அவர்களுடன் அன்பாகப் பேசுங்கள்; விளையாடுங்கள்; அவர்களுடைய கவலைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறுங்கள். பிறந்தநாள் கொண்டாடுவது, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை வாங்கிக் கொடுப்பது போன்ற சிறிய செயல்கள்கூட அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தரும்.
உங்கள் பிள்ளைகளிடம் எப்படி அன்பும் அக்கறையும் காட்டுவீர்களோ, அதேபோல் இவர்களிடமும் நடந்துகொள்ளுங்கள். உதவி பெறுகிறவர்கள் என்ற எண்ணத்தில் அவர்களைத் தாழ்வாக நடத்தாதீர்கள். அவர்களுக்கும் மற்ற குழந்தைகளைப் போல அன்பைப் பெறவும் மகிழ்ச்சியாக வாழவும் உரிமையுண்டு.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… குழந்தைகளின் வயிற்றுப் பசியை உணவால் போக்கலாம்; ஆனால், அன்புக்காக ஏங்கும் அவர்களின் மனப்பசியை உண்மையான அன்பால் மட்டுமே போக்க முடியும்!”
“ஆனா, ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க. உதவி செய்றவங்க மனசு நிறையணும் என்பதற்காக மட்டும் செய்யக்கூடாது. உதவி வாங்குறவங்களுடைய மனசும் காயப்படக்கூடாது!”
ஆதிவேந்தனின் அம்மா ஆர்வத்துடன் சித்தர் சொன்ன அனைத்தையும் கேட்டார்.