“நீ காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா? இல்ல, உன் வீட்டுல சொல்றதால சம்மதிக்கிறியா?” என்று நேரடியாகக் கேட்டான் முகில்.
அவனை ஒருமுறை பார்த்த கலைவாணி நிதானமாகப் பேசத் தொடங்கினாள்.
“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதைச் சொன்னதுக்குப் பிறகு உங்களுக்கு என்னைத் திருமணம் செய்துக்க விருப்பம் இருந்தா சொல்லுங்க. இல்லையென்றாலும் பரவாயில்லை.”
முகில் அமைதியாக அவளைப் பார்த்தான்.
“சொல்லு. என்ன விஷயம்?”
கலைவாணி பிரவீனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.
அவன் முதலில் தன்னிடம் அன்பாகப் பேசியது, தினமும் குறுஞ்செய்திகள் அனுப்பியது, தன்னைப் புரிந்துகொள்வதாக நம்ப வைத்தது என அனைத்தையும் கூறினாள்.
“அவன் என்னைக் காதலிக்கிறான்னு உண்மையாவே நம்பினேன். அவன் கூப்பிட்டதால அவனைப் பார்க்கப் போனேன். ஆனா, அங்கே அவன் தவறாக நடந்துக்க முயற்சி செய்த விதத்தைப் பார்த்ததும் எனக்கு அவன் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு.
“அதுக்குப் பிறகு அவன் அனுப்பின மெசேஜ்களும், அவன் பேசிய பேச்சுகளும் எனக்கு அருவருப்பா இருந்துச்சு. அப்போதான் புரிஞ்சது, நான் அவன் கூட பேசினது காதலே இல்லைன்னு.
“எனக்கு ஒரு வார்த்தை அன்பா, ‘சாப்பிட்டியா? நல்லா இருக்கியா?’ன்னு கேட்க ஆள் வேணும்னு நினைச்சேன். அந்தச் சின்ன அன்புக்காகத்தான் அவனை நம்பினேன். ஆனா, அவன் உண்மையானவன் இல்லைன்னு தெரிஞ்சதும் அந்தக் காதலை நானே முடிச்சிட்டேன்.
“அதுக்குப் பிறகு வீட்டுல என்னை வெளியே விடாமல் அடைச்சு வச்சிட்டாங்க. காலேஜுக்கும் அனுப்பல. இப்போ என் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியல.
“இதெல்லாம் உங்களுக்குத் தெரியாம இந்தக் கல்யாணம் நடந்தா, அது உங்களை ஏமாத்துற மாதிரி இருக்கும். அதனாலதான் உண்மையைச் சொல்லிட்டேன்.”
அவள் சொல்லி முடித்ததும் முகில் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பின்னர், “நீ என்னை நம்பி உண்மையைச் சொல்லியிருக்க. அதுக்கு முதல்ல நன்றி,” என்றான்.
அவன் இப்படிச் சொல்வான் என்று எதிர்பார்க்காத கலைவாணி அவனைப் பார்த்தாள்.
“நீ காதலிச்சது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். அந்த வயசுல ஒருத்தர் அன்பா பேசினா நம்பத் தோணும். ஆனா, அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தினவன்தான் தப்பு பண்ணியிருக்கான்.
“எல்லாக் காதலும் கைகூடுறதில்லை. கைகூடின காதலும் காலம் முழுக்க நிலைக்கும்னு சொல்ல முடியாது. அதுக்காக வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுன்னு நினைக்கக் கூடாது.
“நீ நடந்ததைப் புரிஞ்சுக்கிட்டு அதிலிருந்து வெளியே வந்திருக்க. அதுவே போதும். இதை நினைச்சு உன்னை நீயே குறைச்சுக்க வேண்டிய அவசியமில்லை.”
கலைவாணியின் மனதிலிருந்த பாரம் கொஞ்சம் குறைந்தது.
ஆனால், முகில் அடுத்து சொன்ன விஷயங்கள் அவளைச் சிந்திக்க வைத்தன.
“சரி, இப்போ என்னைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோ.
“என்னோட சேர்த்து எங்க வீட்டுல மொத்தம் ஏழு பேர். எனக்கு அஞ்சு உடன்பிறப்புகள். அதுல மூணு பொண்ணுங்க, ரெண்டு தம்பிங்க. நான் மூத்தவன்.
“அப்பா சின்ன வயசுலேயே இறந்துட்டாரு. அதுக்குப் பிறகு குடும்பப் பொறுப்பு முழுக்க என் மேலதான். தங்கச்சிங்களைப் படிக்க வைக்கணும், தம்பிங்களைப் பார்த்துக்கணும், அம்மாவையும் கவனிச்சுக்கணும்.
“எனக்கு ஒரு சின்ன பந்தல், சவுண்ட் சர்வீஸ் தொழில் இருக்கு. கல்யாணம், காதுகுத்து, கோயில் திருவிழா, துக்க வீடு இப்படி என்ன நிகழ்ச்சி கிடைக்குதோ அதைச் செய்வேன்.
“ஆனா, ஒவ்வொரு மாசமும் ஒரே மாதிரி வருமானம் வரும்னு சொல்ல முடியாது. இந்த மாசம் இரண்டு நிகழ்ச்சிகள் கிடைச்சிருக்கு. சில மாசம் அதுகூடக் கிடைக்காது. அப்போ கடன் வாங்கித்தான் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும். பணம் வரும்போது கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைப்பேன்.
“இப்படிப்பட்ட சூழ்நிலையிலதான் என் வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டா நீயும் இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு வாழ வேண்டியிருக்கும்.
“உன்னோட வயசு என்ன? பதினெட்டா? பத்தொன்பதா?”
“பத்தொன்பது,” என்றாள் கலைவாணி.
“என் முதல் தங்கச்சிக்கே இருபது வயசாகுது. அவளைவிட நீ சின்ன பொண்ணு. உனக்கு இப்போ படிக்க வேண்டிய வயசு. இவ்வளவு பெரிய குடும்பப் பொறுப்பை ஏத்துக்க முடியுமான்னு யோசிச்சுப் பாரு.
“உன்னைப் பார்த்தா அமைதியான பொண்ணா தெரியுற. இங்க இருக்கிற வசதிகளெல்லாம் அங்க இருக்காது. குடும்பத்துக்காக நிறைய அனுசரிச்சுப் போக வேண்டியிருக்கும்.
“உனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்னு தோணினா தயங்காம சொல்லிடு. நான் உன்னைப் படிக்க வைக்க உதவி செய்யக்கூடத் தயாரா இருக்கேன். ஆனா, எங்க குடும்பச் சூழ்நிலைக்கு உன்னால ஒத்துப்போக முடியுமான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.”
அவன் சொன்னதைக் கேட்ட கலைவாணி சிறிதும் தயங்காமல் பதிலளித்தாள்.
“குடும்பப் பொறுப்புக்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? சின்ன வயசுன்னு சொல்லி என்னை நீங்க குறைச்சு எடை போட்டுடாதீங்க.
“எனக்கு இந்த வசதி, வாய்ப்பு எல்லாம் பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போச்சு. ஆனா, அன்பா ரெண்டு வார்த்தை பேசுறதுக்கும், நம்ம கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு அரவணைக்கிறதுக்கும் ஆள் இல்லை.
“எனக்கு ஆடம்பரமான வாழ்க்கை வேண்டாம். என்னைப் புரிஞ்சுக்கிற ஒரு மனசு இருந்தா போதும். அதனால எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்.”
இவ்வளவு நடந்த பிறகு, இனியும் அந்த வீட்டில் இருக்க அவளுக்குத் தோன்றவில்லை. கார்முகிலரசனைப் பார்த்தபோது, அவன் நல்லவன் என்றும், தன்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்றும் அவளுக்குத் தோன்றியது. அதனால், தன் வாழ்க்கையை அவனிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவெடுத்தாள்.
இப்போது திருமணம் வேண்டாம் என்று மறுத்தாலும், கார்முகிலரசனைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கவில்லை என்றாலும், அவளுக்காக வேறொரு மாப்பிள்ளையைத் தேடத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், அவளைப் படிக்க அனுப்ப மட்டும் மாட்டார்கள் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது.
அதனால், வேறு வழியின்றி கார்முகிலரசனையே திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிட்டாள்.
அவள் பேசிய விதத்தைக் கேட்ட முகிலின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“நீ பேசுறதைப் பார்த்தா வயசுக்கு மீறின முதிர்ச்சி இருக்கு. ஆனாலும், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். இனிமேல் முடிவு உன்னோடது.
“இன்னொரு விஷயம். நீ என்கிட்ட சொன்ன பழைய விஷயத்தை நம்ம குடும்பத்துல வேற யாருக்கும் சொல்ல வேண்டாம். நாளைக்கு ஏதாவது சின்னப் பிரச்சினை வந்தாலும், அதைச் சொல்லி உன்னைக் காயப்படுத்த வாய்ப்பு இருக்கு.
“நீ என் வாழ்க்கைக்குள்ள வரணும்னு முடிவு பண்ணிட்டா, பழைய கசப்பையெல்லாம் இங்கேயே விட்டுட்டு வா. உன் கடந்த காலத்தை வச்சு உன்னை நான் எடை போட மாட்டேன்.”
அவன் சொன்ன வார்த்தைகள் கலைவாணியின் மனதுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைத்தன.
இருவரும் பேசிவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள்.
அங்கே ராஜசேகரன், இந்திராணி, விக்ரம், அர்ஜுன் என அனைவரும் அமர்ந்திருந்தனர்.
அவர்களைப் பார்த்த பாக்கியலட்சுமியின் மனதுக்குள் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது.
இவ்வளவு வசதியான குடும்பம் தன் மகனுக்காகப் பெண் கேட்டு வந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.
அந்தச் சந்தேகத்தை மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் நேரடியாகப் பேச ஆரம்பித்தார்.
“இங்க பாருங்க தம்பி, நீங்க இவ்வளவு வசதியா இருக்கீங்க. ஆனா, எங்க வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கீங்க. எனக்கு இன்னும் இதைப் புரிஞ்சுக்க முடியல.
“உங்க வீட்டுல ஏதோ ஒரு பிரச்சினை இருக்குன்னு மட்டும் தெரியுது. என்ன பிரச்சினைன்னு எனக்குத் தெரியாது. அதை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம்னு நீங்க நினைக்கிறதும் புரியுது.
“ஆனா, நான் சொல்றதைக் கேட்டா இந்தக் கல்யாணத்தை நடத்தலாம்.”
பாக்கியலட்சுமி என்ன சொல்லப் போகிறார் என்று அங்கிருந்த அனைவரும் அவரைப் பார்த்தார்கள்.
“நாம ஏன் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கக் கூடாது?
“எனக்கும் பொம்பளைப் பிள்ளைங்க இருக்காங்க. உங்களுக்கும் பசங்க இருக்காங்க. இப்போ மூத்தவன் முகிலனுக்கும் உங்க பொண்ணு கலைவாணிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதோட, என் மூத்த பொண்ணு மாலதிக்கும் உங்க மூத்த மகன் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமே!
“அதுவும் இல்லாம, நீங்க எங்களுக்குக் கொடுக்க நினைக்கிற வசதி, வாய்ப்பெல்லாம் கூட எங்களுக்குத் தேவையில்லை. நம்ம இரண்டு குடும்பமும் உறவாகிட்டா போதும்.”
அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த முகில் உள்ளே வந்தான்.
“அம்மா, என்ன பேசுறீங்க நீங்க?”
அவனுடைய குரலில் அதிருப்தி வெளிப்பட்டது.
“ஒரு கல்யாணமே இன்னும் முடிவாகல. அதுக்குள்ள அடுத்த கல்யாணத்தைப் பற்றிப் பேசுறீங்க! மாலதிக்கு என்ன விருப்பம், விக்ரமுக்கு என்ன விருப்பம்னு யாராவது கேட்டீங்களா?
“வந்த இடத்துல தேவையில்லாத பிரச்சினையை ஏன் உருவாக்குறீங்க?”
பாக்கியலட்சுமி அதற்கும் அசரவில்லை.
“என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா? அவ வீட்டு வாசப்படியைத் தாண்டாத பொண்ணு. அவளுக்கு இந்தக் காதல், கத்தரிக்காயெல்லாம் எதுவும் கிடையாது. அப்படித்தானே மாலதி?”
தாயின் பேச்சைக் கேட்ட மாலதி ஒரு கணம் தயங்கினாள்.
“ஆமாம்மா,” என்றாள் மெதுவாக.
அதைக் கேட்ட பாக்கியலட்சுமி பெருமையாகத் தொடர்ந்தார்.
“பார்த்தீங்களா? என் வளர்ப்பு எப்பவுமே பொய்யாகாது. ஆறு பிள்ளைகளை ஒத்த ஆளா நின்னு வளர்க்கிறது சாதாரண விஷயமா?
“என் பொண்ணுங்களும் சரி, பசங்களும் சரி, நான் பார்த்துச் சொல்றவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பாங்க.
“எனக்கு அடுத்தடுத்து கல்யாண வயசுல பிள்ளைங்க இருக்காங்க. உங்களுக்கும் இருக்காங்க. அதனால முகிலனுக்கும் கலைவாணிக்கும் கல்யாணம் முடிவு பண்ணுறதோட, மாலதிக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ணுறதைப் பத்தியும் வீட்டுல கலந்து பேசுங்க.
“எல்லாரும் சம்மதிச்சா அடுத்த கல்யாண வேலையையும் பார்க்கலாம்.”
பாக்கியலட்சுமி பேசி முடித்ததும், அந்த இடத்தில் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.
அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக, பாக்கியலட்சுமியே மீண்டும் பேசத் தொடங்கினார்.
“எங்களுக்கு திடீர்னு பெரிய பணக்காரங்க ஆகணும், வசதி வாய்ப்போட வாழணும்னு எல்லாம் பெரிய ஆசை கிடையாது. அன்றாட வாழ்க்கையில நிம்மதியா மூணு வேளை சாப்பிட்டு, நல்லா உடுத்தி, கௌரவமா வாழணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்.
நீங்க உங்க விக்ரமுக்கு எங்க மாலதியைக் கல்யாணம் செய்து வைக்கிறதா இருந்தா மட்டும்தான் இந்தக் கல்யாணம் நடக்கும். அப்படி இல்லன்னா, எங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை.
நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம். என் மகனும் அதைத் தட்டிப் பேச மாட்டான். நாங்க எங்க வசதிக்கு ஏத்த மாதிரி இடத்துல பொண்ணு பார்த்துக்கிறோம். எதுவா இருந்தாலும், இனி முடிவு உங்க கையிலதான் இருக்கு!”
அவர் சொன்னதைக் கேட்டு ராஜசேகரனும் இந்திராணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
விக்ரமின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. மாலதியோ தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
முகிலுக்கோ தன் தாய் இப்படியொரு முடிவைத் திடீரென்று அறிவித்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஆனால், பாக்கியலட்சுமி யாருடைய பதிலுக்காகவும் காத்திருக்கவில்லை.
“சரி, நாங்க கிளம்புறோம். வீட்டுல பேசிட்டு உங்க முடிவைச் சொல்லுங்க,” என்று கூறிவிட்டு, தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவர்கள் சென்ற பிறகும் அந்த வீட்டில் நிலவிய அமைதி விலகவில்லை.
ஒரு பக்கம் முகிலுக்கும் கலைவாணிக்கும் திருமணப் பேச்சு நின்று போனது..
இன்னொரு பக்கம், யாரும் எதிர்பார்க்காத வகையில் மாலதிக்கும் விக்ரமுக்கும் புதிய திருமணப் பேச்சைத் தொடங்கி வைத்திருந்தார் பாக்கியலட்சுமி.
அந்தப் பேச்சு இரண்டு குடும்பங்களையும் எந்தத் திசையில் கொண்டு செல்லப் போகிறது? ❤️