“இதோ வந்துட்டோம். உங்க சித்தர் எங்கே காணோம்?” என்று ஆதிவேந்தன் கேட்டான்.
“இதோ வந்துடுவார். கொஞ்சம் பொறுமையா இரு, ஆதி.”
ஆதிவேந்தன் எதுவும் பேசாமல் கோயிலின் ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் சித்தர் காட்சி தந்தார்.
அவரைப் பார்த்ததும் ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் எழுந்து நின்றார்கள். ஆதிவேந்தனும் எழுந்து அவரைப் பார்த்தான்.
ஆனால், சித்தர் அவனைப் பார்த்தும் பார்க்காததுபோலக் கடந்து சென்றார்.
அருகில் அமர்ந்திருந்த சிலரிடம் பேசத் தொடங்கினார்.
ஆதிவேந்தன் புருவத்தைச் சுருக்கினான்.
‘இவர்தானே என்னை வரச் சொன்னது? இப்போ என்னைப் பார்த்தும் பேசாமல் போறாரே!’
அவனுக்கு எரிச்சல் வந்தது.
ஆனாலும், பெற்றோருக்காக அமைதியாக அமர்ந்திருந்தான்.
நேரம் ஓடியது.
சித்தர் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாரே தவிர, ஆதிவேந்தனை அழைக்கவில்லை. அவனுடைய பெற்றோரும் அவர் எப்போது தங்களை அழைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
மதிய நேரம் நெருங்கியபோது ஆதிவேந்தன் தன்னுடைய கைப்பேசியைப் பார்த்தான்.
அலுவலகத்திலிருந்து ஏற்கெனவே பல அழைப்புகள் வந்திருந்தன.
முக்கியமான மீட்டிங் தொடங்க வேண்டிய நேரம் கடந்துவிட்டது.
அவன் உடனே தன்னுடைய மேலாளருக்குத் தொலைபேசி செய்தான்.
அங்கிருந்து வந்த செய்தி அவனுடைய முகத்தையே மாற்றியது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த பெரிய ஒப்பந்தம், ஆதிவேந்தனின் நிறுவனத்திற்குப் பதிலாக வேறொரு நிறுவனத்துக்குச் சென்றுவிட்டது.
அந்த ஒப்பந்தத்தை நம்பி ஏற்கெனவே சில ஏற்பாடுகளைச் செய்திருந்ததால், நிறுவனத்துக்குக் கணிசமான இழப்பு ஏற்பட வாய்ப்பிருந்தது.
“ச்சே!”
என்று பற்களைக் கடித்தவன், தொலைபேசியை அணைத்துவிட்டு எழுந்தான்.
“அப்பா, நாம கிளம்பலாம்.”
“என்ன ஆச்சு ஆதி?”
“என்ன ஆகணும்? முக்கியமான மீட்டிங்கைத் தவறவிட்டுட்டேன். நாம பேசின டீல் வேறொரு கம்பெனிக்குப் போயிடுச்சு. இப்போ எனக்கு ஏற்பட்டிருக்கிற நஷ்டத்தை யார் ஈடுகட்டுவாங்க?”
அவன் குரலில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.
“கொஞ்சம் பொறுமையா இரு ஆதி. சித்தர் நம்மைக் கூப்பிடுவார்.”
“காலைல இருந்து காத்திருக்கோம் அப்பா. இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கணும்?”
ராஜேந்திரவர்மன் பதில் சொல்ல முடியாமல் நின்றார்.
மீனாட்சியோ மகனுடைய கோபத்தையும் கணவரின் தவிப்பையும் மாறி மாறிப் பார்த்தார்.
சித்தர் மட்டும் எதுவுமே நடக்காததுபோல மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
வேறு வழியில்லாமல் அன்று அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.
“ஆதி, நீயும் கிளம்பு. இன்னைக்கு மறுபடியும் போய்ப் பார்க்கலாம்.”
“என்னால முடியாது அப்பா.”
“ஏன்?”
“நேத்து என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாதா? முக்கியமான மீட்டிங்கைத் தவறவிட்டேன். பெரிய நஷ்டம். இன்னைக்கும் அதே மாதிரி என்னை உட்கார வச்சு வேடிக்கை பார்க்கச் சொல்றீங்களா?”
“அவர் ஏதோ காரணத்துக்காகத்தான் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருப்பார். இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.”
“அப்பா, நான் தெளிவா சொல்றேன். எனக்குத் திருமணமே வேண்டாம். இதுக்காக இனிமேல் என் வேலையை விட்டுட்டு அலைய முடியாது.”
ஆதிவேந்தனின் குரல் உயர்ந்தது.
அந்த நேரத்தில் அறைக்கு வெளியே வந்த மீனாட்சி, மகனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டார்.
“என்னடா சொன்ன? உனக்குத் திருமணமே வேண்டாமா?”
அவருடைய குரல் நடுங்கியது.
ஆதிவேந்தன் தாயைப் பார்த்தான்.
“அம்மா, நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோங்க. எனக்குத் தொழிலில் எவ்வளவு பொறுப்புகள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் விட்டுட்டு இப்படியே கோயில் கோயிலா அலைய முடியாது.”
“அப்போ நாங்க என்னடா செய்யணும்? உனக்குக் கல்யாணம் நடக்கணும்னு எத்தனை வருஷமா ஆசையா இருக்கோம். உனக்கு ஒரு வாழ்க்கை அமையணும்னு நினைக்கிறது தப்பா?”
“நான் அப்படிச் சொல்லலம்மா…”
“வேற என்ன சொல்ல வர்ற? உனக்காகத்தானே நாங்க எல்லாம் செய்யறோம்!”
மீனாட்சியின் குரல் உடைந்தது.
“நான் உன்னைப் பெத்தது, உனக்காக இப்படி ஏங்கிக்கிட்டு இருக்கவா? உனக்குன்னு ஒரு குடும்பம் அமையணும். உன் வாழ்க்கையில சந்தோஷம் வரணும்னு ஆசைப்படுறது தப்பா?”
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே முகம் வெளிறியது.
“அம்மா…”
என்று ஆதிவேந்தன் அருகில் செல்லும் முன்பே, மீனாட்சி திடீரென மயங்கி விழுந்தார்.
“அம்மா!”
ஆதிவேந்தனும் ராஜேந்திரவர்மனும் பதறிப்போய் அவரைத் தாங்கிப் பிடித்தார்கள்.
—
மீனாட்சியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
மருத்துவர் பரிசோதித்துவிட்டு, அதிகமான மன அழுத்தமும் உடல் சோர்வும் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகக் கூறினார்.
“இப்போதைக்கு பயப்பட வேண்டியதில்லை. ஆனா, அவங்க உடம்பை நல்லா பார்த்துக்கணும். சரியான நேரத்துக்கு உணவு கொடுக்கணும். மன அழுத்தம் வராமல் பார்த்துக்கோங்க. ஏற்கெனவே ரத்த அழுத்தமும் சர்க்கரையும் இருக்கிறதால அலட்சியமாக இருக்க வேண்டாம்.”
மருத்துவரின் அறிவுரைகளைக் கேட்ட ஆதிவேந்தன் அமைதியாகத் தலையசைத்தான்.
அம்மாவின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த அவனுடைய முகத்தில் கவலை படர்ந்திருந்தது.
தன்னுடைய கோபத்தால் அம்மா மனம் உடைந்துவிட்டாரோ என்ற எண்ணம் அவனை உறுத்தியது.
சிறிது நேரத்தில் மீனாட்சி கண்விழித்தார்.
“அம்மா… இப்போ எப்படி இருக்கு?”
ஆதிவேந்தன் அவருடைய கையைப் பிடித்துக் கேட்டான்.
“ஒண்ணுமில்லைடா…”
“பேசாதீங்கம்மா. டாக்டர் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கார்.”
மகனின் குரலில் இருந்த அக்கறையை உணர்ந்த மீனாட்சி, அவனுடைய கையை மெதுவாக அழுத்திப் பிடித்தார்.
அந்தச் சிறிய அசைவே ஆதிவேந்தனின் மனதை இன்னும் கனக்கச் செய்தது.
தன்னுடைய தொழில், தன்னுடைய நேரம் என்று எப்போதும் ஓடிக்கொண்டிருந்தவன், அந்த நிமிடத்தில் அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தான்.
அவனுக்குத் திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அம்மாவின் கண்ணீரையும் வலியையும் அவனால் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.
மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மீனாட்சியை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
அன்று முழுவதும் ஆதிவேந்தன் அவருடைய அருகிலேயே இருந்தான். நேரத்துக்கு உணவு கொடுத்தான். மருந்துகளை எடுத்துக்கொள்ளச் செய்தான். ஓய்வெடுக்கும்படி பார்த்துக்கொண்டான்.
மாலையில் அவருக்குப் பால் எடுத்துக்கொண்டு வந்தபோது, ராஜேந்திரவர்மன் மகனிடம் மெதுவாகப் பேசினார்.
“ஆதி…”
“சொல்லுங்கப்பா.”
“நம்ம இன்னொரு முறை கோயிலுக்குப் போய்ப் பார்க்கலாமா?”
ஆதிவேந்தன் தந்தையைப் பார்த்தான்.
அவருடைய முகத்தில் தெரிந்த கவலையைப் புரிந்துகொள்ள அவனுக்குச் சில நொடிகளே போதுமானதாக இருந்தது.
அவரைப் பார்த்ததும் ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் எழுந்து நின்றார்கள்.
ஆதிவேந்தனும் எழுந்தான்.
சித்தரின் பார்வை அவன் மீது ஒரு கணம் விழுந்தது.
ஆதிவேந்தன் அவரைப் பார்த்தான்.
‘இப்போதாவது என்னிடம் பேசுவாரா?’
என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.
ஆனால், சித்தர் அவனைக் கடந்து சென்று, அங்கே காத்திருந்த மற்றவர்களிடம் பேசத் தொடங்கினார்.
ஒருவரின் குறையைக் கேட்டார். இன்னொருவருக்கு அறிவுரை கூறினார். அடுத்ததாக வந்தவரின் பிரச்சினையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆதிவேந்தன் அங்கேயே நின்றிருந்தான்.
முதல் நாள் ஏற்பட்ட கோபத்தைவிட இப்போது அவனுக்குள் எரிச்சல் அதிகமாக இருந்தது.
‘என்னை வரச் சொன்னது இவர்தானே? அப்புறம் ஏன் என்னைப் பார்க்கவே மறுக்கிறார்?’
அவன் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் சித்தர் தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார்கள்.
ஆனால், அவர்களை அழைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
சித்தர் மற்றவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தார்.
ஆதிவேந்தனின் முகத்தில் எரிச்சல் தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும், அம்மாவின் உடல்நிலையை நினைத்துக்கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
அவனுடைய பொறுமையை ஒவ்வொரு நிமிடமும் சோதிப்பதுபோல அந்தக் காத்திருப்பு நீண்டுகொண்டே சென்றது.
இறுதியில் சித்தர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
ஆதிவேந்தனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
“அப்பா…”
என்று ஆதிவேந்தன் அழைத்தான்.
ராஜேந்திரவர்மன் மகனைப் பார்த்தார்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே காத்திருக்கணும்? அவர் என்னைப் பார்க்கவே விரும்பலையா? அப்படியென்றால் நேராகச் சொல்லிவிட வேண்டியதுதானே!”
அவனுடைய குரலில் கோபம் இருந்தது. ஆனால், பெற்றோரின் நம்பிக்கையை உடைத்துவிடவும் அவனுக்கு மனமில்லை.
“கொஞ்சம் பொறுமையா இரு ஆதி. அவர் நம்மைக் கவனிக்காம இருக்க மாட்டார். ஏதோ காரணம் இருக்கும்.”
தந்தையின் பதிலைக் கேட்ட ஆதிவேந்தன் எதுவும் பேசவில்லை.
தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ பெரிய முடிவுகளை எடுத்தவன் அவன். பலருடைய பேச்சையும் எதிர்ப்பையும் சமாளித்தவன். தொழிலில் எத்தனையோ சிக்கல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவன்.
ஆனால், இங்கே ஒரு மனிதருக்காக இப்படி நாட்கணக்கில் காத்திருப்பது மட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
அவன் எதற்காகக் காத்திருக்கிறான் என்பதே அவனுக்குப் புரியவில்லை.
தன்னுடைய திருமணப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்பதற்காகவா? இல்லை, தன்னைப் பார்க்கவே மறுக்கும் அந்தச் சித்தரின் மௌனத்துக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவா?
அவனுக்கே தெரியவில்லை.
ஆனால், ஆதிவேந்தன் அறியாத ஒரு விஷயம் இருந்தது.
அவனுடைய பொறுமையைச் சோதிக்கும் அந்தக் காத்திருப்புதான், அவனுடைய வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்களுக்கான முதல் படி!
அந்த மாற்றம் என்னவென்று தெரிந்துகொள்ள, அவன் இன்னும் காத்திருக்க வேண்டியிருந்தது… ❤️