ஆதியின் திருமணத்தை நினைத்துக் கவலைப்படும் மீனாட்சிக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருந்ததால், அவருடைய உடல்நிலையைக் கண்டு ராஜேந்திரவர்மனும் அஞ்சினார்.
அப்படியொரு சூழ்நிலையில்தான் அவர்களுக்கு அந்தக் கோயிலைப் பற்றித் தெரிய வந்தது.
சென்னையிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த பழமையான கோயில் அது. அங்கே அவ்வப்போது வந்து செல்லும் ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட ராஜேந்திரவர்மன், மனைவியையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்றார்.
கோயிலுக்குச் சென்றதும் அங்கிருந்த பெரியவரிடம் தங்களுடைய பிரச்சினையைச் சொன்னார்கள்.
அவர்களுடைய கவலையைக் கேட்டவர்,
“நீங்க கவலைப்படாதீங்க. இங்கே ஒரு சித்தர் வருவார். அவர் எப்போ வருவார்னு யாருக்கும் தெரியாது. சில நேரம் ஒரு வாரம் தங்குவார். சில நேரம் வந்ததும் போயிடுவார். அவர் வந்தா உங்க பிரச்சினையைச் சொல்லிப் பாருங்க. ஏதாவது வழி கிடைக்கலாம்.”
என்று கூறினார்.
அந்த வார்த்தைகள் இருவருக்கும் ஒரு சிறிய நம்பிக்கையைக் கொடுத்தன.
அன்றிலிருந்து அந்தச் சித்தரைப் பார்ப்பதற்காகவே அங்கே காத்திருக்கத் தொடங்கினார்கள்.
ஒரு நாள்… இரண்டு நாள்…
என்று நாட்கள் கடந்தன.
பத்து நாட்களாகியும் சித்தர் வரவில்லை.
இருந்தாலும், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை.
ஒருவேளை இன்று வருவாரோ… நாளை வருவாரோ என்ற எதிர்பார்ப்பிலேயே நாட்களைக் கடத்தினார்கள்.
பத்தாவது நாள் மாலை நேரத்தில், கோயிலுக்குள் நுழைந்த சித்தரைப் பார்த்ததும் ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“அவர்தானா?” என்று மீனாட்சி மெதுவாகக் கேட்டார்.
“ஆமாம்… நாம கேட்ட சித்தர் இவர்தான் போலிருக்கு.”
இருவரும் உடனே அவரை நோக்கிச் சென்றார்கள்.
அவரிடம் தங்களுடைய பிரச்சினையைச் சொன்னார்கள். மகனுக்கு முப்பத்திரண்டு வயதாகியும் திருமணம் தள்ளிப்போவதையும், எத்தனையோ முயற்சிகள் செய்தும் எதுவும் நடக்கவில்லை என்பதையும் விளக்கினார்கள்.
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சித்தர், அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு,
“உங்க மகனை நாளைக்கு இங்கே கூட்டிட்டு வாங்க.”
என்று மட்டும் கூறினார்.
“சாமி… அவருக்கு ஏதாவது தோஷம் இருக்கா? எதனால இப்படி நடக்குது?” என்று மீனாட்சி அவசரமாகக் கேட்டார்.
“நாளைக்கு வாங்க.”
அதற்கு மேல் அவர் எதுவும் சொல்லவில்லை.
இருவரும் மனதில் புதிதாகப் பிறந்த நம்பிக்கையுடன் கோயிலைவிட்டு வெளியேறினார்கள்.
—
அன்று இரவு அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றதும் ராஜேந்திரவர்மன் மகனுக்குத் அழைத்தார்..
அந்த நேரத்தில் ஆதிவேந்தன் தன்னுடைய அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்தான்.
“சொல்லுங்கப்பா.”
“ஆதி, நாளைக்குக் காலையில நீ கொஞ்சம் சீக்கிரமா நாங்க சொல்லுற கோயிலுக்கு வரணும். அதுக்கு ஏத்த மாதிரி இப்பவே புறப்பட்டு நாங்க தங்கியிருக்கிற இடத்துக்கு வந்துடு. நான் உனக்கு லொக்கேஷன் அனுப்புறேன்.”
“கோயிலுக்கா? எதுக்குப்பா?”
“நாங்க ஒரு சித்தரைப் பார்க்க வந்திருக்கோம். உன்னோட ஜாதகத்தைப் பற்றிச் சொன்னதும், நாளைக்கு உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னார்.”
“அப்பா, நாளைக்கு எனக்கு முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருக்கு. ஒரு பெரிய டீல் பேசப்போறோம். அதை விட்டுட்டு என்னால வர முடியாது.”
ஆதிவேந்தன் சொன்னதும் ராஜேந்திரவர்மனின் முகம் மாறியது.
“ஆதி, எத்தனை வருஷமா உனக்குத் திருமணம் நடக்கணும்னு நாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். இப்போ ஒருத்தர் நாளைக்கு வரச் சொல்லியிருக்கார். அதைக்கூட உன்னால செய்ய முடியாதா?”
“அப்பா, நான் வர முடியாதுன்னு சொல்லல. நாளைக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றேன். அந்த மீட்டிங் கைநழுவிப் போனா நமக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும்.”
“உனக்குத் தொழில் முக்கியம்தான். அதுக்காக உன் வாழ்க்கையையே இப்படியே விட்டுட முடியுமா? உங்க அம்மா இந்த விஷயத்தை நினைச்சு எவ்வளவு கவலைப்படுறாங்கன்னு உனக்குத் தெரியாதா? அவளுக்கு உடம்பும் சரியில்லை. அவ நிம்மதிக்காகவாவது வா, ஆதி.”
அந்தக் கடைசி வார்த்தை ஆதிவேந்தனைச் சற்றே அமைதிப்படுத்தியது.
அம்மாவின் உடல்நிலை அவனுக்குத் தெரியும். அவர் தன்னுடைய திருமணத்துக்காக எவ்வளவு ஏங்குகிறார் என்பதும் தெரியும்.
“சரி. வர்றேன். ஆனா, என்னால ரொம்ப நேரம் அங்க இருக்க முடியாது. மீட்டிங் நடக்கிற நேரத்துல நான் இங்க இருக்கணும். என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம்.”
என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தான்.
அவனுடைய மனதுக்குள் மட்டும் எரிச்சல் இருந்துகொண்டே இருந்தது.
திருமணத்துக்காகத் தன்னுடைய நேரத்தையும் தொழிலையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே!
அவனுக்கு இதெல்லாம் தேவையில்லாத அலைச்சலாகவே தோன்றியது.
—
அன்று இரவே ஆதிவேந்தன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான்.
“நான் நினைச்சா நாளைக்கே ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டி, உங்க மருமகளா நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வர முடியும்!”
அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“ஆனா, எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. அதனாலதான் இத்தனை வருஷமா அதைப் பத்தி நான் யோசிக்கவே இல்லை. நீங்க ஆசைப்படுறீங்கன்னு உங்க விருப்பத்துக்கு விட்டேன். அதுக்காக என் வாழ்க்கையில ஏதோ பெரிய பிரச்சினை இருக்கிற மாதிரி ஜாதகம் பார்க்கிறீங்க, தோஷம் சொல்றீங்க, கோயில் கோயிலா சுத்திப் பரிகாரம் பண்றீங்க!”
என்றவன் ஏளனமாகச் சிரித்தான்.
“எனக்கு இதுல எதிலுமே நம்பிக்கை கிடையாது, அப்பா. ஜாதகத்துல தோஷம் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? நான் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்தா, இதெல்லாம் என்னைத் தடுத்துட முடியுமா?”
“அம்மா, உங்க அன்பும் அக்கறையும் எனக்குப் புரியுது. ஆனா, அதுக்காக எனக்கே தெரியாத ஏதோ தோஷம் இருக்கிறதா நினைச்சு நீங்க ஏன் கவலைப்படணும்?”
என்றவன் தந்தையின் கண்களை நேராகப் பார்த்தான்.
“நான் மட்டும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்பட்டிருந்தா, இந்நேரம் உங்களுக்கு மருமகள், பேரன், பேத்தி எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து ஐந்து வருஷம் ஆகியிருக்கும்! நான் விருப்பம் காட்டாததாலதான் இன்னைக்கு வரைக்கும் கல்யாணம் நடக்கல. இதுக்குப் போய் ஜாதகம், தோஷம், பரிகாரம்னு எதுக்கு இவ்வளவு அலையணும்?”
அவனுடைய குரலில் இருந்த திமிர் குறையவில்லை.
“ஆதி, நீ நினைக்கிற மாதிரி எதுவும் நம்ம கையில இல்லப்பா. புரிஞ்சுக்கோ. காலம் வேற கணக்கு வச்சிருந்தா நம்மால எதுவும் பண்ண முடியாது. கொஞ்சம் பொறுமையா, அமைதியா இரு.”
என்றார் மீனாட்சி.
“அம்மா, உங்க பேச்சைக் கேட்டு எனக்குச் சுத்தமா அலுப்புத்தட்டிப் போச்சு!”
என்றான் ஆதிவேந்தன் சலிப்புடன்.
“எனக்குத் தொழில் இருக்கு. அதுல கவனம் செலுத்த வேண்டியிருக்கு. அதை விட்டுட்டு, ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு சித்தரைத் தேடி அலைய எனக்கு நேரமில்லை. என்னோட வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு எனக்குத் தெரியும்!”
ராஜேந்திரவர்மன் மகனைச் சமாதானப்படுத்த முயன்றார்.
“நீ சொல்றது சரிதான் ஆதி. ஆனா, உன் அம்மாவோட ஆசைக்காகவாவது ஒருமுறை வந்து அந்தச் சித்தரைப் பார்த்துட்டுப் போயேன்.”
தாயின் முகத்தைப் பார்த்த ஆதிவேந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
பிறகு பெருமூச்சு விட்டான்.
“சரி, நாளைக்கு வர்றேன். ஆனா, என்னால ரொம்ப நேரம் காத்திருக்க முடியாது. எனக்கு முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருக்கு. அதைத் தவறவிட்டா பெரிய நஷ்டம் ஏற்படும்.”
என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு எழுந்தான்.
அவனைப் பொறுத்தவரை, திருமணம் என்பது அவன் விருப்பப்பட்டால் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு மட்டுமே! ஜாதகமும் தோஷமும் அவனுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது என்பதில் அவனுக்கு அத்தனை உறுதி.
ஆனால், அவனுடைய அந்தத் திமிரையும் அவசரத்தையும் உடைத்துப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கக் காலம் ஒரு பாடத்தைத் தயாராக வைத்திருந்தது! ❤️