அர்ஜுனுக்கும் விக்ரமுக்கும் மூன்று வயதுதான் வித்தியாசம். அண்ணன் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தான் மட்டும் திருமணம் செய்துகொள்வது சரியாக இருக்குமா என்ற தயக்கம் அவனுக்குள் இருந்தது.

ஆனால், இப்போதைய குடும்பச் சூழ்நிலையையும், அதில் தங்கையின் திருமணமும் சம்பந்தப்பட்டிருப்பதையும் யோசித்துப் பார்த்தவன், இந்தத் திருமணத்திற்குச் சம்மதிப்பதுதான் சரி என்று முடிவெடுத்தான்.

அவனுக்கும் இன்றைய காலத்து நவநாகரிகப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள விருப்பமில்லை.

அன்று அந்தப் பெண்ணைச் சரியாகப் பார்க்கவில்லை என்றாலும், புகைப்படத்தை வாங்கிப் பார்த்துவிட்டுத் திருமண முடிவைச் சொல்லலாம் என்று நினைத்தான்.

அதுவும் தங்கையின் கணவன் வீட்டுப் பெண் என்றால், குடும்பத்தோடு ஒத்துப்போய் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் நிம்மதியும் அமைதியும்தான் அவனுக்குத் தேவை. தன் தாயின் வாழ்க்கை முறையைப் பார்த்தே சில விஷயங்களை அவன் புரிந்துகொண்டிருந்தான்.

எப்போதும் லேடீஸ் கிளப், சமூக சேவை, ஆடம்பரம் என்று வெளியிலேயே சுற்றிக்கொண்டிருப்பதால் வீட்டையும் பிள்ளைகளையும் சரியாகக் கவனிக்காமல் போனது அவனுக்குள் எப்போதும் ஒரு குறையாகவே இருந்தது.

அதேபோல் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் அப்படியொரு நிலை வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தவன் தன் முடிவைச் சொன்னான்.

“அந்தப் பொண்ணோட போட்டோ வாங்கிக் கேளுங்க. நான் அன்னைக்கு நல்லா பார்க்கல. போட்டோ பார்த்துட்டு முடிவு சொல்லுறேன். மத்தபடி எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தான். நீங்க பேசுங்க. அடுத்த கட்டமா கல்யாண வேலையைப் பார்க்கலாம்.”

சிறிது தயக்கத்துடன் மீண்டும் தொடர்ந்தான்.

“ஆனா, அண்ணா இருக்கும்போது எனக்குக் கல்யாணம் பண்றது கொஞ்சம் நெருடலா இருக்கு. அதையும் மட்டும் என்னன்னு பாருங்க. மத்தபடி எனக்கு ஓகேதான். அந்தப் பொண்ணோட போட்டோ மட்டும் வாங்கிக் கொடுங்க. ஒரு தடவை நல்லா பார்த்துக்கிறேன்.”

அதைக் கேட்ட இந்திராணி அர்ஜுனைப் பார்த்து,

“என்ன அர்ஜுன், நல்லா தெளிவா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கியா? இல்ல, அப்பா கட்டாயப்படுத்துறாரேன்னு சம்மதம் சொல்றியா?

இதுல உன்னைக் கட்டாயப்படுத்த எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உன்னோட முடிவுதான் எங்களோட முடிவும்.

நல்லா எல்லா வகையிலும் யோசிச்சுக்கோ. அந்தப் பொண்ணு ரொம்ப எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவ. அம்மாவோட சேர்ந்து தையல் வேலை செய்றா. நீ நல்லா படிச்சிருக்க, வசதியான வாழ்க்கை வாழ்றவன். உன்னோட படிப்பு, தகுதி, அந்தஸ்துக்கு அந்தப் பொண்ணு எப்படி பொருந்தி வருவான்னு யோசிச்சுப் பாரு.

நாளைக்கு நீ ஏதாவது பார்ட்டி, மீட்டிங், ஃபங்ஷன்னு போகும்போது உனக்குப் பக்கத்துல வர்றவ உனக்குப் பொருத்தமா இருக்கணும். நீ இங்கிலீஷ்ல பேசும்போது, நீ என்ன பேசுறேன்னு புரியாம முழிக்கிற நிலைமை அவளுக்கு வரக்கூடாது. இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?

அவங்களிடம் அப்பா ரெண்டு நாள் அவகாசம் கேட்பார் தானே.. இன்னும் ரெண்டு நாள் பொறுமையா யோசிச்சுட்டு முடிவு சொல்லு. இப்பவே அவசரப்பட வேண்டாம்.”
என்று மகனிடம் கூறினார்.

இந்திராணி இப்படிப் பேசியதற்குப் பின்னால் வேறு ஒரு எண்ணமும் இருந்தது.

தன் வீட்டுக்கு அந்த ஏழை குடும்பத்துப் பெண் மருமகளாக வருவதை அவரால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய அந்தஸ்துக்கு முன்னால் அந்தப் பெண்ணின் படிப்பும் குடும்பப் பின்னணியும் மிகவும் குறைவாகவே அவருக்குத் தோன்றியது.

தன் கணவருக்கு ஏன்தான் இப்படியொரு புத்தி போனதோ என்று மனதுக்குள் புலம்பியவர், இதற்கு மேல் பேசினால் தேவையில்லாமல் சண்டைதான் வரும் என்பதால் அமைதியாக இருந்தார்.

எப்படியாவது விக்ரம் இந்தத் திருமணத்தை வேண்டாமென்று சொல்லிவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவனே மறுத்துவிட்ட நிலையில், இப்போது அர்ஜுனும் சம்மதம் சொல்லிவிட்டானே என்ற ஆதங்கம் அவருக்குள் எழுந்தது.

எப்படியாவது அர்ஜுனின் மனதைக் குழப்பி, அவனுடைய முடிவை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படியெல்லாம் பேசினார்.

இந்திராணியின் மனதுக்குள் கோபம் கொப்பளித்தது.

‘என் வீட்டு வேலைக்காரிக்குக் கூட இந்த மாலதியை விட அதிகம் படிப்பு இருக்கும். அப்படியிருக்க, அந்தப் பாக்கியலட்சுமிக்கு அவ பொண்ணை என் வீட்டு பையனுக்குக் கட்டிக்கொடுக்க எவ்வளவு ஆசை இருக்கணும்?

என்ன இருந்தாலும் அவங்க குடும்பம் நம்ம குடும்பத்துக்கு ஈடாகுமா? நான் இருக்கிற வரைக்கும் இந்தக் கல்யாணம் மட்டும் நடந்துவிடக் கூடாது. எப்படியாவது இதைத் தடுத்தே ஆகணும்!’

என்று மனதிற்குள் வஞ்சகமாகத் திட்டமிட்டார்.

அவருடைய எண்ணங்களைப் புரிந்துகொண்ட ராஜசேகர் சற்று கோபத்துடன்,

“என்ன இந்திரா, நீ அர்ஜுன் சம்மதம் சொல்லும்போது ஏன் குறுக்கே பேசி அவன் மனதைக் குழப்பப் பார்க்கிறாய்? இது சரியில்லை. அவனும் சின்னக் குழந்தை கிடையாது. அவனுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும்.”
என்றார்.

அதற்கு இந்திராணி மிகவும் நிதானமாக,

“எதிர்காலத்தில் ஒரு முறை , நாம அவசரப்பட்டு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவிட்டோமோ, நம்முடைய அந்தஸ்துக்கும் வாழ்க்கை முறைக்கும் இந்தப் பெண் பொருந்தவில்லையேன்னு நினைச்சு அர்ஜுன் வருத்தப்படக் கூடாது.

அதனால்தான் அவனுடைய படிப்பு, தகுதி, அந்தஸ்து என எல்லாவற்றுக்கும் ஏற்ற பெண்ணாக இருக்கிறாளா என்று நன்றாக யோசித்துப் பார்த்து முடிவெடுக்கச் சொல்ல வேண்டும்.

என் பையனும் நல்ல இடத்தில் திருமணம் செய்து, நல்ல பெண்ணுடன் சந்தோஷமாக வாழ வேண்டும். நம்முடைய குடும்பத்துடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

நீங்க சொல்ற மாதிரி நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையும் நமக்கு முக்கியம்தான். அதனால்தான் எல்லா விஷயங்களையும் அவனுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமைன்னு சொன்னேன்.”

என்று தன்னுடைய உண்மையான எண்ணத்தை கணவனுக்குப் புரியாத அளவுக்கு நிதானமாகப் பேசி முடித்தார்.

அதைக் கேட்ட ராஜசேகர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் மகனின் பக்கம் திரும்பினார்.

“அர்ஜுன், உங்க அம்மா சொல்றதும் ஒரு வகையில சரிதான். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இப்போ நான் கேட்டதும் நீ சம்மதம் சொல்லிவிட்டாய்.. ஆனாலும், இன்னும் இரண்டு நாள் உனக்கு அவகாசம் தர்றேன். நல்லா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு.

அந்தப் பொண்ணோட போட்டோவை தர சொல்றேன். எல்லா வகையிலும் யோசிச்சுப் பார்த்துட்டு உன் முடிவைச் சொல்லு.

என்று மகனிடம் நிதானமாகக் கூறினார்.

—

மறுபுறம்,மாலதியை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள ராஜசேகர் பாக்கியலட்சுமிக்கு தொலைபேசியில் அழைத்தார்

அந்தப் பக்கம் மாலதிதான் அலைபேசியை எடுத்தாள்.

“ஹலோ யாரும்மா…”

“ சார் நான் மாலதி. இருங்க அம்மாகிட்ட கொடுக்குறேன்..”

“ஒரு நிமிஷம் இரும்மா. உன்கிட்ட இரண்டு வார்த்தை பேசணும். அப்புறம் அம்மாகிட்ட போனைக் கொடு.”

“சொல்லுங்க சார்” என்றாள் மாலதி.

“நீ என்னம்மா படிச்சிருக்க?”

“பத்தாவது படிச்சிருக்கேன் சார். அதாவது, பாஸ் பண்ணலை. அப்புறம் எங்க குடும்பச் சூழ்நிலை காரணமா என்னால தொடர்ந்து படிக்க முடியல. அண்ணன் மட்டும்தான் வேலை பார்த்துட்டு இருந்தாரு. அம்மாவுக்குத் தையல் வேலைல உதவியா இருக்கும்னு நானும் தையல் பழகிப் வேலை பார்த்தேன் சார்.”

“சரிம்மா… உனக்கு வேற என்னென்ன தெரியும்மா?”

“எனக்கு தையல் நல்லா வரும் சார். நல்ல டிசைன்ல உடைகள் தைப்பேன். எம்பிராய்டரியும் அழகா பண்ணுவேன் சார்.”

“ஓ… அப்படியா? சரிம்மா. இன்னொரு விஷயம் கேட்கிறேன். உங்க அம்மா எங்க வீட்டு பையனை உனக்கு மாப்பிள்ளையா கேட்டது உனக்குத் தெரியுமா?”

“தெரியும்ங்க சார்.”

“உனக்கு வேற யார் மேலயாவது காதல் இருக்கா? இல்லை, யாரையாவது விரும்புறியா?”

“ஐயோ… சார்! அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார். கடைவீதிக்கோ, கோயிலுக்கோ, வீட்டை விட்டு வெளியே எங்கே போறதா இருந்தாலும் அம்மா கூடத்தான் போவேன். எங்க அம்மா உங்ககிட்ட சம்பந்தம் பேசினதும் எனக்குத் தெரியும். பெரியவங்க எல்லாரும் கலந்து பேசி முடிவு செஞ்சா எனக்குச் சம்மதம்தான் சார்.”

மாலதியின் பதில்களைக் கேட்ட ராஜசேகருக்கு ஓரளவு திருப்தி ஏற்பட்டது.

“நல்லதும்மா. இப்போ உங்க அம்மாகிட்ட போனைக் கொடு. நான் உன்கிட்ட இவ்வளவு கேள்வி கேட்டது உங்க அம்மாவுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம். நான் பேசணும்னு சொல்லி அம்மாகிட்ட போனைக் கொடு.”

“சரிங்க சார். இருங்க, அம்மாவைக் கூப்பிடுறேன்” என்றவள் பாக்கியலட்சுமியிடம் அலைபேசியைக் கொடுத்தாள்.

அவள் கொடுத்ததும் பேசத் தொடங்கினார்.

“அம்மா, உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். உங்க பையனோட திருமண விஷயமா நீங்க பேசியதற்கு ஒரு மாதம் எந்தப் பதிலும் சொல்லாமல் உங்களைக் காக்க வச்சதுக்கு முதல்ல மன்னிச்சுக்கோங்க.

என்னோட சூழ்நிலை அப்படி. நானும் விக்ரமும் பிசினஸ் விஷயமா டெல்லி வரைக்கும் போயிருந்தோம். நேற்றுதான் ஊருக்கு வந்தோம். வந்ததும் இங்கே சில வேலைகள் இருந்ததால் உடனே உங்களைத் தொடர்புகொள்ள முடியல.

உங்களை வேண்டுமென்றே காக்க வைக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. நீங்களும் எவ்வளவு நாள்தான் காத்திருப்பீங்க? அதனாலதான் இந்தச் சம்பந்தம் வேண்டாம்னு முடிவு பண்ணி ஜாதகத்தை வேறு இடத்தில் கொடுக்க நினைச்சிருக்கீங்களோன்னு தோணுது.

ஆனால், அப்படியெல்லாம் எந்த முடிவுக்கும் இப்போ வந்துடாதீங்க. நமக்குள்ள கல்யாணப் பேச்சை மேற்கொண்டு தொடரலாம்னு நினைக்கிறேன்.

முதல்ல உங்க பொண்ணோட போட்டோவையும் ஜாதகத்தையும் எங்களுக்கு அனுப்பி வைங்க. நானும் எங்க தரப்பு ஜோசியரிடம் கொடுத்து ஜாதகம் பொருந்துதான்னு பார்க்கிறேன்.

ஜாதகம் பொருந்தினால் மேற்கொண்டு பேசலாம். எங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுங்க. அதுக்குள்ள எங்களோட இறுதி முடிவைச் சொல்றோம்.”

என்று தெளிவாகப் பேசினார்.

“சரிங்க சார். நாளைக்குக் காலையிலேயே போட்டோவும் ஜாதகமும் எடுத்துட்டு வந்து கொடுக்கிறேன்.”

என்ற பாக்கியலட்சுமி, அதற்கு மேல் வேறு எதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டித்தார்.

அவர் போனை வைத்ததும் அருகில் இருந்த இந்திராணியைப் பார்த்த ராஜசேகர்,

ஸ்பீக்கரில் கைபேசியை வைத்திருந்ததால், மாலதியுடனும் பாக்கியலட்சுமியுடனும் பேசியதை அங்கிருந்த அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ராஜசேகர் பேசி முடித்ததும் அர்ஜுனைப் பார்த்து,

“அந்தப் பொண்ணைப் பத்தி அவ சொன்னதையெல்லாம் கேட்டிருப்பேன்னு நினைக்கிறேன். நாளைக்கு அந்த அம்மா பொண்ணோட போட்டோ கொண்டு வருவாங்க. பார்த்துட்டு உன்னுடைய ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்க்கலாம். எல்லாம் பொருந்தினா, நீ நல்லா யோசிச்சு உன்னுடைய முடிவைச் சொல்லு.” என்று கூறினார்.

—

ராஜசேகர் பேசிவிட்டு அழைப்பை துண்டித்ததும்..

“அப்பாடா! இவங்களுக்கெல்லாம் இப்படித்தான் ஒரே போடா போடணும். இல்லன்னா, நம்மளை கஷ்டப்பட்டவங்க, எளிமையானவங்கன்னு நினைத்து என்ன வேணாலும் செஞ்சுக்கலாம்னு நினைச்சு, நம்ம தலையிலேயே மிளகாய் அரைக்க ஆரம்பிச்சிடுவாங்க.

மயிலே மயிலேன்னா இறகு போடாது. நாமதான் புடுங்கி எடுத்தாகணும். பாக்கியலட்சுமியா கொக்கா?.. 😊😊

என்று சலிப்பும் கிண்டலுமாகப் பேசினார்.

தொடரும்…