இரு வீட்டாரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தபோது, இரவு உணவும் முடிந்திருந்தது.
அவர்கள் கிளம்பத் தயாரான நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது.
அனைவரும் பேசிக் கொண்டிருந்தாலும், சிதம்பரத்தின் மனதில் மட்டும் ஒரு வருத்தம் அழுத்தமாக இருந்தது.
தன் பேத்திக்கு இப்படி ஒரு திருமணம் நடக்கிறது.
அதுவும் மற்ற இரண்டு ஜோடிகளோடு சேர்த்து…
அதிலும் தான் அருகில் இல்லாமல்.
அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரது முகத்தைப் பார்த்த உமாவுக்கும் அந்த வருத்தம் புரிந்தது.
ஆனால் இப்போது பிடிவாதமாக ஏதாவது செய்தால், தீபிகாவின் திருமணம் அது நடக்க அதிக நாட்கள் தடைகள் உருவாகிவிடும் என்பதை அவள் உணர்ந்திருந்தார் .
“விடுங்க… நடந்தது நடந்து விட்டு போகட்டும். இனிமேல் அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கலாம்.”
என்று கணவரை மெதுவாக ஆறுதல் படுத்திய உமா, அருளை நோக்கினாள்.
“அருள்… நீயும் கார்த்திகாவும் அங்கே போய் எல்லாம் பார்த்துக்கங்க.”
அருள் தலையசைத்தான்.
கார்த்திகாவும்,
“சரி அத்தை…”
என்றவள், அடுத்த நொடியே,
“ராம்?”
என்று கேட்டாள்.
உமா ஒரு கணம் யோசித்துவிட்டு,
“இப்ப தீபிகா என்ன மாதிரி மனநிலையில இருக்கான்னு நமக்கே தெரியல. நாம் எல்லாரும் ஒரே நேரத்துல அங்கே போனா, நம்ம குடும்ப விஷயங்கள் வெளியில் வர வாய்ப்பு இருக்கு. அது வேண்டாம்.”
“இன்னைக்கு மட்டும் இவங்க எவ்வளவு சங்கடப்பட்டு நிக்கறாங்க பாருங்க…”
என்று அவர் சொல்ல, கார்த்திகா அமைதியாக,
“நாங்க சம்பந்தக்காரங்ககிட்ட பேசிக்கறோம்.”
என்றாள்.
கார்த்திகா உடனே சம்பந்தி வீட்டாரை அழைத்து விஷயத்தை விளக்கினாள்.
அவர்களும் பதற்றத்துடன்,
“நாங்க இப்பவே நேர்ல வரவா?”
என்று கேட்டனர்.
“வேண்டாம்… காலையில பேசிக்கலாம் என்றவர் பின் வாங்க என்று விட்டர் .
அந்த நேரத்தில்தான் ராம், வாசுகி, அவர்களது மகன்கள் தீபக், கார்த்திக், செந்தில் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.
கார்த்திகா அடித்தது வரை மட்டுமே ராமுக்குத் தெரியும். செந்தில் பதமாகச் சொல்லியிருந்தாலும், என்ன நடந்திருக்குமோ என்ற கலக்கத்தோடுதான் அவன் வந்திருந்தான்.
வந்தவுடனேயே கார்த்திகாவைப் பார்த்த ராம், கண்களில் நீர் திரண்டு அழுதுவிட்டான்.
“அண்ணி … என் பொண்ணுக்கு நல்லது நடக்கணும்னுதான்…”
அவனது குரல் உடைந்தது.
மோகன் விஷயம், வாசுகியின் சொந்தம் என்பதெல்லாம் இப்போது இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டதே என்ற சங்கடம் அவனுக்கும் இருந்தது.
அருள் அனைவரையும் பார்த்து நடந்த விஷயத்தைப் பொதுவாக எடுத்துச் சொன்னார் .
“திருமணம் நாளை மறுநாள் காலையிலேயே நடக்கணும்னு முடிவு பண்ணியிருக்காங்க.”
ராம் அதிர்ச்சியுடன்,
“எப்படி அண்ணா? அந்தப் பையனைப் பற்றி நமக்கு ஒன்னுமே தெரியாதே. கொஞ்ச நாள் கழிச்சு செய்யலாமே? இவ்வளவு அவசரமா முடிவு பண்ணுற மாதிரி தெரியுதே…”
என்றான்.
அப்போது வாசுகி அமைதியாகப் பேச ஆரம்பித்தாள்.
“அந்தப் பையன் நல்ல பையன்தான். அவனைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை.”
அந்த வார்த்தை அங்கே இருந்த அனைவரையும் இன்னும் குழப்பியது.
வாசுகிக்கு மட்டும் ஆகாஷைப் பற்றிய ஒரு விஷயம் ஏற்கனவே தெரிந்திருந்தது.
ஒரு நாள் அவளது தோழி ஒருவர் அழைத்து, தீபிகாவை ஆகாஷுடன் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். ஜாஸ்மினும் உடன் இருந்ததாகக் கூறியிருந்தார்.
முதலில் வாசுகி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அதே விஷயம் மறுபடியும் சொல்லப்பட்டபோது, ஆகாஷைப் பற்றி விசாரிக்கச் சொன்னாள்.
அப்போதுதான் ஆகாஷின் விருப்பம் அவர்களுக்குத் தெரிய வந்தது.
ஆனால் தீபிகாவுக்கு அவன் காதல் பற்றி இன்னும் தெரியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
மோகன் விஷயம் வந்தபோது, “அண்ணன் மகன்” என்ற உறவு இருப்பதால் முதலில் பார்ப்போம் என்று யாரிடமும் எதையும் சொல்லாமல் இருந்திருந்தாள் வாசுகி.
அருள் தன் மகன்களைப் பார்த்து,
“நீங்க இன்னும் நல்லா விசாரிச்சுக்கோங்க. யாருக்குத் தெரியும்…”
என்றானர் .
வாசுகி மெதுவாக,
“அத்தான் பையனுக்கு வசதி இல்லன்னு மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடாது. இன்னொரு விஷயம்… தீபிகா இன்னும் யாரையும் காதலிக்கவே இல்லை. அதனாலதான் நான் யாரையும் குழப்பல.”
என்று சொல்லி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
“எனக்கு என்ன தோணுதுன்னா… மோகனை விட ஆகாஷ்தான் தீபிகாவுக்கு பொருத்தமா இருப்பான்.”
அனைவரும் அவளைப் பார்த்தனர்.
“மோகன் அண்ணன் பையன். அந்த உறவு ஒரு குடும்பம், ஒரு பிசினஸ் தொடர்பு மாதிரி இருக்கும். ஆனால் ஆகாஷ்…”
அவள் சொல்லாமல் நிறுத்தினாள்.
அப்போது கார்த்திகா அவளைப் பார்த்தாள்.
“நீ என்கிட்ட சொல்லலன்னாலும், உன் அக்காகிட்டாவது சொல்லியிருக்கலாம்.”
வாசுகி சிரித்தபடி,
“அழகான பொண்ணுன்னு நூறு பேர் பார்ப்பாங்க. அதுல யார் நெருங்குறாங்க, அவன் நல்லவனா இல்லையா என்று பார்த்தேன். தீபிகா உங்களுக்கு மட்டும் மகள் இல்ல அக்கா… எனக்கும் மகள்தான்.”
கார்த்திகாவின் கண்களில் ஈரம்.
“நீங்க அக்கா நாம வாழ்கிற வாழ்கை முறை மாதிரி அவளைப் வாழ வைக்க பார்க்கிறீங்க. அது நம்ம பழகிய வாழ்க்கை முறைக்கு ஒத்துப் போகும். அதுதான் சரின்னு நினைச்சேன். அதனால நான் எதையும் குழப்பல.”
வாசுகியின் குரலில் இப்போது ஒரு உறுதி இருந்தது.
“எனக்கு என்ன தோணுதுன்னா… தீபிகா ஒரு சராசரி பெண்ணா மாறணும். அப்பாவுக்கு மகளா… தாத்தா பாட்டிக்கு பேத்தியா… அண்ணன்களுக்கு தங்கையா… கணவனுக்கு மனைவியா… அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கணும். அது நாளைக்கே இந்தக் கல்யாணம் நடந்தாலும், நான் சரின்னுதான் சொல்வேன்.”
அந்த வார்த்தைகள் கார்த்திகாவின் மனதைத் தொட்டன.
அவளுக்குள் இருந்த ஏதோ ஒரு பாரம் கொஞ்சம் இறங்கியது.
அந்த நேரத்தில் வாசுகி ராமைப் பார்த்து,
“உங்க கொல்கத்தா கிரிக்கெட் நண்பன் பெயர் என்னன்னு சொன்னிங்க ?”
என்று கேட்டாள் .
ராம் சலிப்புடன்,
“இப்ப எதுக்கு வாசுகி ?”
என்றான்.
“சொல்லுங்க .”
“குணால் சட்டர்ஜி.”
“அவர் தம்பி பையன்?”
ராம் தெரியாது எனவும்
“ஆகாஷ் சட்டர்ஜி.”
வாசுகி சொன்னவுடன்,அனைவரின் முகத்தில் ஒரு புரிதல் தோன்றியது.
“குணால் சட்டர்ஜியோட மகனா? கிரிக்கெட் குடும்பம் தானே?”
“ஆமாம்.”
“வெஸ்ட் பெங்கால் ரஞ்சி டீம்ல நல்ல பிளேயர். அவன் படிக்கப் போறேன்னு கிரிக்கெட்டை விட்டுட்டு வந்தவன். காதலுக்காக கிரிக்கெட்டை விட்ட காதல் மன்னன் அவன் …”
என்று வாசுகி சொல்ல, சரண் ஜாஸ்மினைப் பார்த்தான்.
ஜாஸ்மின் அவனை முறைத்தாள்.
“எதுக்கு என்னையே பார்க்கிறீங்க?”
அணு மெதுவாக யாஸ்மின் கிட்ட ,
“இவருக்கு இதே வேலைதான். எது நடந்தாலும் என்னையே பார்ப்பார். இப்ப குடும்பமே நம்மளை தான் பார்க்கும் போல.”
என்று முணுமுணுத்தாள் .
ஜாஸ்மின் அதை கவனிக்காமல்,
“தீபிகாவுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பே இல்லை. தெரிந்தாலும் அவளுக்கு அதுல ஈடுபாடு இருக்காது.”
சிறிது யோசித்தவள்,
“அவளோட அம்மா கிரிக்கெட் பைத்தியம். அதனாலதான் அவங்க பாட்டி சின்ன வயசுல இருந்தே காதல், கல்யாணம், கிரிக்கெட்… இப்படியெல்லாம் சொல்லி வளர்த்திருக்கலாம்.”
அந்த வார்த்தைகள் அங்கே இருந்த பெரியவர்களுக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைத்தன.
சிவமும் சாந்தியும் தங்கள் மகளை இழந்த துக்கத்தில் எவ்வளவு அதிகமாக தீபிகாவை பாதுகாத்தார்களோ, அதன் விளைவுதான் இவள் வயதுக்குரிய ஆசைகளையே அறியாமல் வளர்ந்துவிட்டாள்.
காதல் என்றால் குழப்பம்.
திருமணம் என்றால் வெறுப்பு.
பணம், அந்தஸ்து, குடும்பத்தின் பெயர், பழைய காயங்கள்…
அவளது மனதில் இவையே முதலில் வந்திருந்தன.
சிதம்பரத்தின் மீது அவளுக்கிருந்த கோபமும், தன் அம்மாவைத் துரத்தியவர் என்ற எண்ணமும், அதற்குப் பிறகு கார்த்திகா மீது உருவான அளவற்ற அன்பும் அவளை இன்னும் ஒரு குழந்தை போலவே ஒரு வட்டத்துக்குள் வைத்திருந்தன.
ஆனால்…
ஆகாஷ் வந்த பிறகு அந்த வட்டத்தில் ஒரு சிறிய விரிசல் விழுந்திருந்தது இப்போ அது குடும்பம் எனும் பெரிய வட்டத்திற்குள் அவளை இழுக்க அதுதான் குழப்பம் அவளுக்கு .
அதை தீபிகாவே இன்னும் கவனிக்கவில்லை.
அவள் அறியாமலேயே மாறத் தொடங்கியிருந்தாள்.
வாசுகி மெதுவாகச் சொன்னாள்.
“அமுதா அக்காவுக்கு காதல் முட்டாள்தனம். கிரிக்கெட் மடத்தனம். இதுதான் தீபிகாவோட எண்ணம்.”
சிறிது சிரித்தவள்,
“ஆனா இவள் IPLன்னு சொன்னவுடனே நான் புரிஞ்சுக்கிட்டேன். அவள் நம்மை… தன்னைச் சுற்றியிருக்கிற இந்தக் குடும்பத்தை… அவளுக்கே தெரியாமல் நெருங்க ஆரம்பிச்சுட்டா.”
கார்த்திகாவைப் பார்த்தாள்.
“அக்கா… குழந்தையை மடியில் வச்சுக்கிட்டே இருந்தா, அது உலகத்தையே பார்க்காது. கொஞ்சம் கீழே இறக்கி விடுங்க. தள்ளி நின்னு பார்க்க விடுங்க. கீழே விழுந்தாலும் வலிச்சா ஓடிப்போய் தூக்கிக்கலாம்.”
கார்த்திகா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அவளை எங்கேயும் கூட்டிட்டு போறதில்லை. இந்த வீடு மட்டும் தான் உலகம்னு நினைக்க வச்சுட்டீங்க. இது சரியில்லை அக்கா.”
பின்னர்,
“தீபிகா இப்ப எங்கே?”
“மதுரை பக்கம்.”
“நீங்க அவளிடம் பேசுங்க. அக்கா மகளா மட்டும் பார்க்காதீங்க. தோழியா அணுகுங்க. எல்லாம் சரியாகும்.”
கார்த்திகா மெதுவாகத் தலையசைத்தாள்.
அதற்குள் ஜாஸ்மின், அணுவின் பெற்றோரும் வந்தனர்.
அவர்களிடம் நடந்த விஷயத்தை கார்த்திகா தயக்கத்துடன் கூறினாள்.
“இன்னும் சில நாட்கள்…”
என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், அவர்கள் கார்த்திகாவின் கையைப் பிடித்தனர்.