சில மணி நேரங்களுக்கு முன்பு வரை சிரிப்பும், பேச்சும், உறவினர்களின் நடமாட்டமும் நிறைந்திருந்த அந்த வீடு, இப்போது ஏதோ ஒன்று உடைந்து போனதைப் போல அமைதியாக இருந்தது.
சுபாவுடன் கோபமாக கிளம்பிய தீபிகா, சுபாவின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டாள்.
கார்த்திகா மட்டும் தளர்ந்து போய் ஒரு பக்கமாக அமர்ந்திருந்தார். அருகில் சரணும் கரணும் சொல்ல முடியாத வேதனையுடன் நின்றுகொண்டிருந்தனர்.
உமா தனது மருமகளை ஒரு வார்த்தை கூட கடிந்து கொள்ளவில்லை.
அவருக்குள் கோபம் இருந்தது.
ஆனால் இப்போது ஏதாவது சொன்னால், ஏற்கனவே உடைந்து போயிருக்கும் கார்த்திகா இன்னும் சிதைந்து போய்விடுவார் என்று புரிந்திருந்தது.
உறவினர்களை எல்லாம் வழியனுப்பி வைத்துவிட்டு அவர்கள் திரும்பி வருவதற்குள் தீபிகா கிளம்பிவிட்டாள்.
அவளைத் தடுக்கவோ, அவளிடம் பேசவோ யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சிதம்பரம் மட்டும் அமைதியாக தனது அறைக்குச் சென்று சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்து மேஜை மீது வைத்தார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அடுத்த நொடி, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.
அவர்களின் பார்வை ஒரே நேரத்தில் ஜாஸ்மினையும் அணுவையும் நோக்கித் திரும்பியது.
சரணும் கரணும் இருவரையும் கோபமாகப் பார்த்தனர்.
புகைப்படத்தில் ஒரு இளைஞன்.
அவன் கையில் சிகப்பு ரோஜாக்கள்.
அவனுக்கு அருகில் சிரித்த முகத்துடன் தீபிகா.
மற்றொரு புகைப்படத்தில், அந்த ரோஜாக்களை தீபிகா பெற்றுக்கொள்வது போல இருந்தது.
கார்த்திகாவின் கண்கள் அந்தப் புகைப்படத்தில் உறைந்து போனது.
அடுத்த நொடி, அவருக்கு மண்டபத்தில் சிரித்த முகத்துடன் தன்னிடம் ஏதோ சொல்ல முயன்ற தீபிகாவின் முகம் நினைவுக்கு வந்தது.
அப்போது அவள் சொல்ல வந்தது இதுதானா?
“ஐயோ…”
கார்த்திகாவின் உள்ளம் நொறுங்கியது.
ஜாஸ்மின் மெதுவாகத் தொடங்கினாள்.
“அவர் ஆகாஷ். டாக்டர். மேல்படிப்பை CMC-ல முடிச்சிருக்கிறார். சுபாவின் சித்தப்பா மகன். இப்போ கொல்கத்தாவில் இருக்கிறார். அவருடைய குடும்பமும் அங்கேதான்.”
அணு தொடர்ந்தாள்.
“மூன்று வருடத்துக்கு முன்னாடி சுபாவின் அண்ணன் கார்த்திக் கல்யாணத்துலதான் அறிமுகம். சுபா கல்யாணத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் அதிகமா மெசேஜ்ல பேச ஆரம்பிச்சாங்க. ஓரிரு முறை நேர்லயும் சந்திச்சிருக்காங்க.”
“அது எப்படி உங்களுக்குத் தெரியாமல் நடந்தது?”
கரண் கோபமாகக் கேட்டான்.
சரணும் ஜாஸ்மினை பார்த்தான்.
ஜாஸ்மின் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்தப் பார்வையிலேயே பல விஷயங்கள் இருந்தன.
எப்போதாவது பெசன்ட் நகர் பீச்சுக்கு போகும்போது அங்குள்ள சர்ச்சுக்குப் போவதும், சில நேரம் தனியாக பேசிக்கொள்வதும்… இப்போது எல்லாமே சரணுக்கு புரிந்தது.
ஜாஸ்மின் மெதுவாகச் சொன்னாள்.
“அவங்க லவ் பண்றாங்கன்னு எங்களுக்கே தெரியாது. எங்களுக்கு அது ஒரு நட்புதான்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் சொன்னாள்.
எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பாள். புதிதாக ஏதாவது உருவாக்கிக்கொண்டிருப்பாள். அண்ணன்கள் முதல் பெரியப்பா, சித்தப்பா வரை கொண்டு வரும் அலுவலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லிக்கொண்டிருப்பாள்.
ஆனால் இவ்வளவு பெரிய விஷயத்தை அவள் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தாளா?
கார்த்திகாவுக்கும் அந்த உண்மை தாங்க முடியவில்லை.
தீபிகாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தானும் அறியாமல் இருந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை உள்ளிருந்து தின்றது.
அதற்காகத்தான் தமயந்தியின் அண்ணன் மகனைப் பற்றி பேசியிருந்தார்கள்.
சொந்தம்.
நல்ல குடும்பம்.
மோகனை எப்படியும் மருமகனாக வீட்டுக்குள் கொண்டுவரலாம் என்று நினைத்திருந்தார்கள்.
அவன் நல்லவன்.
அவனுடைய குணம் அவன் தாத்தாவைப் போல.
அதனால் தீபிகாவுக்கும் அவனுக்கும் திருமணம் நடந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தார்கள்.
ஆனால்…
தீபிகா அவர்கள் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி இருந்தாள்.
அவளுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்ய இப்போ நிலைமை தலைகீழ் .
அவளே முடிவு செய்யவில்லை தானாக இழுத்து செல்கிறது ஆகாஷ் அவன் நட்பு .
அந்த நேரத்தில் சரண் தனது அலைபேசியை எடுத்தான்.
சுபாவுக்கு அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும் ஜாஸ்மினிடம் அலைபேசியைக் கொடுத்து, அனைவரும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் வைத்தான்.
ஜாஸ்மின் பேசினாள்.
“ஹலோ… சுபா?”
“என்னடி? இவ்வளவு நேரம் நீ அழைப்பு எடுத்துக்கலன்னு நான்…”
அவளது பேச்சு முடிவதற்குள் சுபா,
“இரு…”
என்று சொல்லிவிட்டு டிரைவரிடம்,
“அண்ணா, வண்டியை ஓரமா நிறுத்துங்க.”
சில நொடிகளில் டிரைவரின் குரல் கேட்டது.
“அம்மா, நாடு ரோட்டுல முடியாது நல்ல இடம் வரும்போது நிறுத்துறேன்.”
சுபாவின் குரலில் இருந்த பதற்றம் ஜாஸ்மினுக்கு புரிந்தது.
“சரி. நீ கால் பண்ணு. தீபிகா எப்படி இருக்கா?”
“தூங்குறா.”
என்றவள் அழைப்பை வைத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் மீண்டும் சுபாவிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பு எடுத்தவுடன் சுபா பட்டாசுபோல் வெடித்தாள்.
“ஜாஸ்மின், உனக்கு என்ன சொல்லணும்னே தெரியல!”
“என்னடி?”
“ஆகாஷ் எனக்கு போன் பண்ணியிருந்தான்.”
அனைவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“இன்னிக்கு உங்க கல்யாணம்னு அவனுக்குத் தெரியும். முதல்ல எதோ ஒரு முக்கியமான வேலை இருந்ததால் தெரிஞ்சதால அவனும் வரமாட்டேன்னு சொல்லியிருக்கிறான் . ஆனா இன்னிக்கு அவனுக்கு வேலை இல்லையாம். அதனால வர்றேன்னு சொன்னான்.”
சுபா சற்று மூச்சுவிட்டுவிட்டு தொடர்ந்தாள்.
“அதை நான் தீபிகாகிட்ட சொன்னேன். அவ முகத்துல ஒரு ஆர்வம் வந்துச்சு. உடனே போனைத் தேடினா. அப்போதான் அவளோட போன் ஆஃப்ல இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே ஆன் பண்ணி மெசேஜ் பார்த்தா…”
சுபாவின் குரல் மாறியது.
“அதுல, ‘நான் வருகிறேன். சேலையில் உன்னைப் பார்க்க ஆசை’ன்னு அவனோட மெசேஜ்.”
ஜாஸ்மின் அதிர்ந்தாள்.
“அதுக்குத்தான் அவ உடை மாத்தினாளா?”
“ஆமாம்.”
சுபாவின் குரலில் குழப்பம்.
“எனக்கு என்ன செய்யணும்னே தெரியலடி. இவங்களுக்குள்ள இப்படி ஒரு விஷயம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல.”
“எங்களுக்கும் தெரியாது.”
ஜாஸ்மின் மெதுவாகச் சொன்னாள்.
சுபா தொடர்ந்தாள்.
“அவன் வந்ததும் நேரா அவளைப் பார்த்தான். ரோஸ் கொடுத்தான். அப்படியே ‘Will you marry me?’ன்னு கேட்டுட்டான்.”
அந்த வார்த்தைகள் அங்கே இருந்த அனைவரையும் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.
ஜாஸ்மின் பதற்றமாக,
“அது எப்படி? நீ தானே அவனுக்கு எளிமையான குடும்பத்துல, அவன் குடும்பத்தோட இருக்கிற பொண்ணுதான் பிடிக்கும். பணக்கார குடும்பம்னா ஆகாது என்று சொன்ன?”
சுபா உடனே கோபமாகப் பதிலளித்தாள்.
“நான் என்னடி சொல்லிட்டுப் போனேன்? உங்ககிட்ட என் கல்யாணத்தோடே இந்த லூசு பார்வை சரியில்லன்னு சொல்லி, தீபிகாவைப் பார்த்துக்கோ, அவளை அவன்கிட்ட நெருங்க விடாதேன்னு சொன்னேனே!”
அணு உடனே இடையில் சொன்னாள்.
“நீ சொன்ன அவன் குடும்ப விஷயமெல்லாம் நாங்க அவள்கிட்ட சொன்னோம்டி. அவளும் கொஞ்சம் நல்லா பேசினா. பின்னாடி அவன் டாக்டர் வேற. அவன்கிட்ட பேசினா அவளுக்கு மன அழுத்தம் குறையுது போல இருந்துச்சு. அதனால ஒரு நட்புதான் நினைச்சோம்.”
“பஞ்சு கூட நெருப்பை விட்ட லூசுகளா இருக்கீங்க!”
சுபா கோபத்தில் கத்தினாள்.
“என்கிட்ட ஏண்டி சொல்லல?”
அதற்குள் டிரைவர் அருகில் வந்த சத்தம் கேட்டதும், சுபா குரலைத் தாழ்த்தினாள்.
“இன்னிக்கு கார்த்திகா அத்தைகிட்ட இவ என்ன சொல்லப் போனாலோ … அதுக்குள்ள என்னவோ நடந்து விட்டது . நல்லது, நான் எப்படியாவது அவன்கிட்ட பேசுறேன்.”
அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஜாஸ்மினும் அணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அப்போது கார்த்திகா அவர்களை நோக்கி ஒரு பார்வை பார்த்தார்.
“எல்லோரும் கல்யாணம் முடிச்சா, என் பேத்தி தனியா உழைச்சுக் கொட்டணுமா உங்க எல்லோருக்கும்?”
அணுவால் பொறுக்க முடியவில்லை.
“உங்க பேத்தி மனசுல என்ன இருக்குன்னு யாருக்குமே தெரியாது. அப்பா வேற கல்யாணம் செய்துகிட்டார். அம்மா இல்லை. இவளா எதையும் பேச முடியாது.”
அவள் கண்கள் கலங்கின.
“இன்னிக்கு கூட அத்தை அந்தப் பொம்பளையை அடிக்காம இவளை அடிச்சிட்டாங்க. இதைவிட என்ன வேணும்? அந்த லூசு கல்யாணம் கட்டிக்கிட்டு, தன்னைப்போல ஒரு குழந்தை இருந்தா எப்படி இருக்கும் என்று மனசுக்குள்ள புலம்பிக்கிட்டு இருப்பா. வெளியே சொல்லவும் மாட்டா. நாங்க கண்டுபிடிச்சதையும் சொல்ல விடல.”
அவளது குரல் உடைந்தது.
“இவளுக்கு மன அழுத்தம் இருக்கு. அதை கண்டுபிடிக்கத்தான் இவளா கொஞ்சம் நல்ல பேசுற டாக்டர் ஆகாஷை நாங்க பேச விட்டோம். வேற வழி தெரியல.”
கார்த்திகா உள்ளுக்குள் நொறுங்கிப் போனார்.
சாந்தி சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன.
‘என் பேத்தியின் ஆழ்மனசு உனக்குத் தெரியாது…’
அது உண்மை.
தான் தீபிகாவை நேசித்திருக்கலாம்.
ஆனால் அவளுடைய ஆழமான உலகத்தை அறிந்திருக்கவில்லை.
உமா சிதம்பரத்தைப் பார்த்தார்.
“இப்ப என்ன பண்ணுறது?”
சிதம்பரம் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
முன்பைப் போல இல்லாவிட்டாலும், பேத்தி விஷயத்தில் சிறு பிசகல் ஏற்பட்டாலும் அதன் விளைவு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.
அவர் சரணைப் பார்த்தார்.
சரண் உடனே புரிந்துகொண்டான்.
“தாத்தா… சுபா அண்ணனையும், அவருடைய மனைவியையும் நம்ம போஸ் டீம் மதுரைக்கு விமானத்துல அனுப்பிட்டேன். சுபா வீட்டுல இருக்கிற பெரியவங்களும் இப்போ வந்துடுவாங்க.”
சிதம்பரம் உமாவைப் பார்த்தார்.
உமா உடனே கார்த்திகாவை நோக்கி,
“உன் மகள் சம்பந்த வீட்டில் எல்லோரும் வராங்க. உடனே உன் மருமகளுடன் எல்லாம் தயார் பண்ணும்மா.”
“அத்தை, அது…”
கார்த்திகா தயங்கினார்.
“ஒரு முறை தப்பு பண்ணுனது போதும்.”
உமாவின் குரல் மென்மையாக இருந்தாலும் அதில் உறுதி இருந்தது.
“அவ இன்னொரு முறை தூரம் போறது உன்னால மட்டும் இல்ல… எங்களையும் கொன்று விடும்.”
கார்த்திகா தலைகுனிந்தார்.
“உங்க மாமா பார்த்துக்குவார். நீ தீபிகாகிட்ட இங்கே ஒரு முடிவு எடுத்ததும் பேசு.”
அடுத்த பத்து நிமிடங்களில் சுபாவின் வீட்டிலிருந்து அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி, மூத்த பெரியப்பா என அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
சுபாவின் பெரியப்பா தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. கட்சி விஷயமாக சென்னை வந்திருந்தபோது, தனது தாயையும் அழைத்து வந்திருந்தார். அவர் தம்பி வீட்டில் அவரை விட்டுவிட்டு, இந்தத் திருமணத்திற்கும் வந்திருந்தார்.
அந்த முதியவரின் கண்கள் மட்டும் வேறொன்றைக் கவனித்திருந்தன.
தனது பேரன் ஆகாஷ், சுபாவின் தோழியான தீபிகாவுடன் பேசிவிட்டு, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்றதை அவர் பார்த்திருந்தார்.
தீபிகாவைப் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியும்.
தன் மகன் மூலமாக அவளைப் பற்றிய சில விஷயங்களை அறிந்திருந்தார்.
சிதம்பரம் குடும்பம்.
வேல்ஸ் குழுமம்.
அவர்களுடைய அந்தஸ்து.
ஆனால் அதைவிட, தன் இரண்டாம் மகனின் வசதி மற்ற மகன்களைவிட பல மடங்கு உயர்ந்திருந்தாலும், குடும்பத்தில் குணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் வாழ்நாள் முழுவதும் நம்பியிருந்தார்.
அதே நேரத்தில் கார்த்திக் தனது தந்தையிடம் வந்து,
“அப்பா, சரண் என்னை உடனே மதுரை போகச் சொன்னான். வேலை விஷயமா வரச் சொன்னதாகவும், குடும்பத்தோட வரணும்… பெரியவர் கிட்ட பேசணுமாம்.”
அவரது தந்தை அவனை ஊடுருவிப் பார்த்தார்.
“என்ன விஷயம்?”
அதற்குள் பாட்டி பேச ஆரம்பித்தார்.
“இது என்னடா? அவரே உன்னை கூப்பிட்டிருக்காரே. உன் அண்ணனும் நானும் இங்கே இருக்கும்போது நல்ல வாய்ப்பு. ஒரு பெரிய இடத்து அறிமுகம் உன் அண்ணனுக்குக் கிடைக்கும். நாங்களும் அவரைப் பார்த்த மாதிரி ஆச்சு.”
கல்யாண வீட்டில் சரியாகப் பார்த்திருக்க முடியாது.
சுபா சொல்லியிருப்பாள்.
என்று எண்ணிய அவர்கள் வேறு எதையும் யோசிக்காமல் கிளம்பினர்.
அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழையும் நேரத்தில், கார்த்திகாவும் உமாவும் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றனர்.
சுபாவின் அம்மாவுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
பொதுவாக தீபிகா வீட்டில் நடக்கும் பேச்சுகளிலும், உறவுமுறைகளிலும் கார்த்திகாதான் முன் நிற்பார்.
உமா இப்படி நேரடியாக வாசலுக்கு வந்து வரவேற்பது அரிது.
அதிலும் கார்த்திகா அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றது இன்னும் வித்தியாசமாக இருந்தது.
“இவங்க உங்க அத்தையா? உள்ளே வாங்க.”
கார்த்திகா அன்புடன் அழைக்க, உமா அவருடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
சிதம்பரம் அவர்களை வரவேற்றார்.
பின் சரண், கரண் இருவரையும் அழைத்துதங்கள் துணைகளுடன், சுபாவின் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கச் சொன்னார்.
அதன் பிறகு உமா அவரை நோக்கி,
“இன்னிக்கு கல்யாணத்துல உங்களை சரியா கவனிக்க முடியல. உறவு முறையில் கொஞ்சம் சலசலப்பு…”
என்று தயக்கத்துடன் சொன்னார்.
அந்த முதியவர் மெதுவாகப் புன்னகைத்தார்.
“வயசான நாம, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யக் கற்றுக்கணும். வாழ வேண்டியவர்களின் விருப்பத்தைவிட, வாழ்ந்து முடித்தவர்களின் கௌரவம் பெரிதாக இருக்கக் கூடாது.”
அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“நான் கற்பகம். என் கணவர் ஆறுமுகம். ராணுவத்தில் பணிபுரிந்தபோது இறந்துவிட்டார். எங்களுக்கு மூன்று மகன்கள்.”
“ராஜேஷுக்கு மூன்று வயசு இருக்கும்போதே அவன் அப்பா இறந்துட்டார். அப்போ மூத்தவனுக்கு பதின்மூன்று வயசு. அடுத்தவனுக்கு பதினொன்று. சின்னவன் மேல ரொம்ப பாசம். எனக்கும் என் மகன்களுக்கும் அவனை விட்டுக் கொடுக்க மனசே இல்லை.”
அவர் சிரித்தார்.
“இப்ப எங்களுக்கு சொந்தமா ஒரு அரிசி ஆலை இருக்கு. இருபது ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அவன் அப்பா இருந்தப்போ எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலமும், ஒரு சொந்த வீடும் மட்டும்தான் இருந்தது.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் மீண்டும் தொடர்ந்தார்.
“எங்க அம்மா வீட்டு வழி உறவுகள்… குறிப்பா என் மூத்த அண்ணனும் அண்ணியும் தான் எங்களுக்கு உதவியா இருந்தாங்க.”
“சின்னவன் கல்லூரி படிப்பு முடிச்சதும் விடாப்பிடியா ராணுவத்துல சேர்ந்துட்டான்.”
அவரது முகத்தில் பெருமை தெரிந்தது.
“அவனுக்கு இருபத்தேழு வயசு இருக்கும் போது, அவன்கூட ராணுவத்துல டாக்டரா இருந்த ஒரு பெங்காலி பெண்ணை கல்யாணம் செய்துகிட்டான். இரண்டு மாதம் கழிச்சுதான் வீட்டுக்கே வந்தான்.”
அந்தப் பழைய காயம் இன்னும் அவருடைய குரலில் இருந்தது.
“அவனுக்கு எங்க அண்ணி தங்கச்சி பொண்ணை பார்த்து வைத்திருந்தோம். திடீர்னு ஒன்றுமே சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டான். எங்க அண்ணன் கோபத்துல அவனை அடிச்சிட்டார்.”
அவர் சிரித்தபடியே தலை அசைத்தார்.
“எனக்கும் கோபம். ‘நான் செத்தாலும் இங்கே வரக்கூடாது’ன்னு சொல்லிட்டேன்.”
சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“ஆனா என் இரண்டாவது பையன் அவனை எங்கோ பார்த்திருக்கான். முதலில் இவன் பேசாம போயிருக்கான். பிறகு அவன் பேசி, பல தடவை வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சதும்… என் பையனே அவனை மீண்டும் சேர்த்துக்கிட்டான்.”
அவரது கண்கள் ஈரமானது.
“நான் வளர்த்த பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வந்தாங்க. என் மூத்த மகனுக்கு மகன்கள் சரியில்லை. ஒரு மகள் படிச்சுக்கிட்டு இருக்கா. சொத்து பிரச்சனையும் குடும்பத்துல இருந்தது.”
“சுபா அப்பா நடத்திக்கிட்டிருக்கிற மொத்த சொத்தும் எங்க அப்பாவுக்குத்தான் போகணும்… ஓடிப்போனவனுக்கு எதுவும் கிடையாதுன்னு என் அண்ணன் குடும்பம் முடிவு பண்ணியிருந்தது.”
“அதை ஒரு கட்டத்தில் முடிச்சு வைக்கத்தான் கார்த்திக் கல்யாணத்துக்கு வந்தோம்.”
அவர் சிறிது நேரம் சிரித்தார்.
“அப்போதான் அவன் குடும்பத்தோட வந்தான். மன்னிப்பு கேட்டான். நானும் அவன் இரண்டாவது அண்ணனும் பேசினோம். ஊருக்கு வந்து எல்லாம் முடிச்சுக் கொடுத்தோம். இவங்க இரண்டு பேருக்கும் அங்கே ஒரு வீடு மட்டும் இருக்கு.”
“சுபா கல்யாண நேரத்துல எனக்கு ஒரு மேஜர் ஆபரேஷன். அதுக்காக என் சின்ன மருமகள் வீட்டில்தான் தங்கி, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன்.”
அவரது முகத்தில் இப்போது உண்மையான புன்னகை.
“அங்கே மூன்று மாதம் இருந்தேன். அப்படிப்பட்ட கணவன், அப்படிப்பட்ட மருமகள் நாட்டுக்காக சேவை செய்யும் … ஒரு பெரிய மருத்துவர் மருமக மகன், கர்னல் பதவி… அந்தக் குடும்பத்தைப் பார்த்தப்போ, என் இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உண்மையா சந்தோஷமா இருந்தது அங்கேதான்.”
அவர் மெதுவாகச் சொன்னார்.
“பணம் என்று ஓடாமல், குணம்தான் பிரதானம் என்பதைக் காட்டின குடும்பம் அது.”
சிதம்பரம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“அப்படின்னா உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கா?”
முதியவர் சிதம்பரத்தை நேராகப் பார்த்தார்.
“இன்னிக்கு என் பேரன் வந்து போனதை பார்த்தேன். அதோட என் மருமகள் எனக்கு போன் பண்ணினாள்.”
அவர் சிரித்தார்.
“அவளுடைய மகனுக்கு பிடித்த பெண்ணைப் பார்க்க, அவள் கணவனோடு இங்கே வருவதாக சொன்னாள். எனக்கு முடிந்தால் விசாரித்து, நல்லபடியா பேரனுக்கு அமைத்துக் கொடுக்கச் சொன்னாள்.”
சிதம்பரத்தின் முகம் சற்றே மாறியது.
“யாரைப் பற்றி?”
“அப்பா, அம்மா இல்லாமல் பெரியம்மா வீட்டில் இருக்கும் தூரத்து சொந்தப் பெண்ணைப் பற்றி.”
சிதம்பரம் உடனே கேட்டார்.
“அவளால் பேச முடியாதது… அது எதுவும் பிரச்சனையா?”
“எனக்கோ என் மகன் குடும்பத்துக்கோ அது பிரச்சனையே இல்லை.”
அவர் அமைதியாகச் சொன்னார்.
“ஆகாஷ் எல்லாம் சொல்லியிருக்கான். அவன் விருப்பம் தான் அவன் காதலிப்பது.”
ஒரு இடைவெளிக்குப் பிறகு,
“கார்த்திகா தயவில் இருக்கும் பெண். கார்த்திகாவின் மகள் அல்ல.”
சிதம்பரம் குழம்பிப் போனார்.
“அதெல்லாம் சரி… உங்களுக்கும் எங்களுக்கும் வாழ்க்கை அமைப்பு வேற.”
“அதனால்தான் நான் சொல்றேன்.”
முதியவர் அமைதியாகச் சிரித்தார்.
“அவனுக்கோ என் மகனுக்கோ உங்கள் அந்தஸ்து முக்கியமில்லை. உங்க வாழ்க்கை அமைப்பு வேற. அவங்க அமைப்பு வேற. அந்த வேறுபாட்டைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் பேசுறேன்.”
சரண் உடனே இடையில் வந்தான்.
“தாத்தா… ஆகாஷுக்கு இன்னும் தீபிகாவின் உயரம் தெரியாது. ஜாஸ்மின் ஏற்கனவே சொன்னாளே?”
அதற்கு முன்பே அருள் எழுந்து, சுபாவின் பாட்டியை உறவு முறையில் அழைத்தான்.
“அத்தை… எங்களுக்கு உங்க பேரனுக்கு எங்க பொண்ணைக் கொடுக்க விருப்பம்.”
அந்த வார்த்தைகள் அங்கே இருந்த சுபாவின் அப்பா, அம்மா இருவரையும் திகைக்க வைத்தன.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
முதியவர் மட்டும் அனைவரையும் பார்வையால் அமைதிப்படுத்தினார்.
பின்னர் உமாவை நோக்கி நேராகச் சொன்னார்.
“இதில் எங்களுக்கு மனப்பூர்வமான சம்மதம்.”
அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
“ஆனா ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். ஆகாஷ் அவன் பெரியம்மா, பெரியப்பா கிட்டதான் வளர்ந்தான். என் மகனும் மருமகளும் பல இடங்களுக்கு போக வேண்டிய வேலை. அவர்களுடைய வாழ்க்கையே அப்படித்தான்.”
“அந்தக் குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு ஆகாஷ்.”
“மூத்த அக்காவுக்கு இரண்டு பெண்கள். அடுத்த அக்காவுக்கு ஒரு பெண். பத்து வருடம் கழிச்சு பிறந்தவள் . அந்தப் பெண் இங்கேதான் படிக்கிறாள்.”
அவர் உறுதியுடன் சொன்னார்.
“ஆகாஷ் இந்த அமைப்பை விட்டு எந்தக் காலத்திலும் வரமாட்டான். அக்கா, தங்கைகளின் பொறுப்பை விடமாட்டான்.”
“விளையாட்டுத்தனமாகவும், கலகலப்பாகவும் இருப்பான். ஆனா குடும்பம் என்று வந்துவிட்டால் அந்த அமைப்புக்குக் கட்டுப்பட்டவன்.”
அவர் உமாவைப் பார்த்தார்.
“நல்ல ஜோடி. ஒருத்தர் வேகம். இன்னொருத்தர் பொறுமை.”
சிறிது இடைவெளிக்குப் பிறகு அவர் தொடர்ந்தார்.
“இன்னிக்கு நடந்த கல்யாணத்திலேயே உறவுகளுக்குள் என்னென்ன பேச்சு நடந்தது பார்த்தோம். இனிமேல் வேற மாநிலம், வேற கலாச்சாரம் என்று வந்தால் இன்னும் அதிகமாகப் பேசுவார்கள்.”
உமா அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க.”
உமா மெதுவாகச் சொன்னார்.
“எங்க குடும்பத்துல சில மனக்கஷ்டங்கள் இருக்கு. அதனால்தான் மூன்று ஜோடிகளுக்கும் நாளை மறுநாள் காலையிலேயே கல்யாணம் வைத்திருக்கோம்.”
சிறிது தயங்கி,
“அதுல ஒரு ஜோடி சரியா வரல…”
என்று இழுத்துச் சொன்னார்.
அந்த ஒரு வார்த்தையிலேயே உமாவுக்கு விஷயம் புரிந்தது.
“சரி.”
அவர் அமைதியாகச் சொன்னார்.
“அப்படின்னா அன்னைக்கே கல்யாணத்தை வைத்துவிடுவோம்.”
சிதம்பரமும் கார்த்திகாவும் உடனே ஏதோ சொல்ல முனைந்தனர்.
அதற்குள் சரண் எழுந்தான்.
“தாத்தா…”
அனைவரும் அவனைப் பார்த்தனர்.
“இது தான் எனக்கு சரின்னு படுது.”
சிதம்பரம் அமைதியாக அவனைப் பார்த்தார்.
“எல்லார்கிட்டையும் பேசிட்டு, நாள் பார்த்து, இன்னைக்கு நடந்த விஷயத்தோட விளைவுகள் இன்னும் பல வரும். அது மீண்டும் ஒரு சிக்கலாகிடும்.”
அவன் குரல் மெதுவானது.
“தீபிகா இப்போ ஒரு குழப்பத்துல இருக்கா. அவ தெளியுறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுட்டா…”
அவன் கார்த்திகாவைப் பார்த்தான்.
“அவ வாழ்ந்து பார்க்கட்டும்.”
சில நொடிகள் அமைதி.
“எல்லாம் சரியாகிடும்.”
அந்த வார்த்தைகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அனைவரும், இறுதியில் மெதுவாக சம்மதித்தனர்.
ஆனால் அந்த முடிவு…
தீபிகாவின் வாழ்க்கையில் இது வரை இருந்த இயந்திர வாழ்க்கைக்கு முற்றிலும் மாறானது.