சிவம் உட்கார்ந்தபடியே சிறிது நேரம் எதுவும் பேசவில்லை..
சாந்தி அவரை நேராகப் பார்த்தார்.
“நமக்கு வயசாகிக்கிட்டு இருக்கு சிவம். நம்ம காலத்துக்கு அப்புறம் அவளுக்கு யார் இருப்பாங்கன்னு நாம யோசிக்க வேண்டிய நேரம் இது.”
சிறிது நேரம் அமைதியாக இருந்த சாந்தி மீண்டும் பேசத் தொடங்கினார்.
“அமுதா இறந்தப்போ யாரும் வரல. இப்போ எல்லோரும் வருவாங்க. உள்ளே நுழைவாங்க. நம்ம இருந்தோம், தடுத்தோம்.
தீபிகாவோட பொறுப்பு நம்மகிட்ட இருக்கணும்னு நீதிமன்றம் மூலமா கூட வாங்கினோம்.”
சிவம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“ஆனா இப்ப நிலைமை வேற,” என்றார் சாந்தி.
அந்த ஒரு வார்த்தை சிவத்தின் மனதிலும் ஒரு சிறு பொறியைத் தட்டியது.
தீபிகா.
அவள் வளர்ந்த விதம்.
அவள் அறிவு.
அவள் காரணமாக பல மடங்கு உயர்ந்திருந்த தொழில் வளர்ச்சி.
அதோடு அந்த AR நிறுவனம்.
மேலும் வேல்ஸ் குழுமத்தின் பங்குகள்.
தீபிகாவின் பின்னால் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக அறிந்துகொண்டது சமீப காலத்தில்தான்.
அதை முதலில் தீபிகா தாத்தா, பாட்டியிடம் கூட சொல்லவில்லை.
“ஆனா இது எப்படி சாத்தியம்?” என்று சிவம் கேட்டார்.
சாந்தி மெதுவாகத் தலை அசைத்தார்.
“அதுக்கு விடை கார்த்திகா.”
சிவம் அவளைப் பார்த்தார்.
சாந்தி கடந்த காலத்தை நினைவுபடுத்தத் தொடங்கினார்.
தீபிகாவின் சடங்குகளில், அமுதாவின் தம்பி உறவிலிருந்து யாராவது ஒருவர் தீபிகாவின் சடங்குகளை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தபோது, சிவம் தயங்கினார்.
அப்போது கார்த்திகாதான் சாந்தியிடம் வந்து, “தீபிகாவோட பொறுப்பை நான் எடுத்துக்கிறேன்,” என்று கேட்டுக்கொண்டார்.
பிறந்த நாளிலிருந்தே கார்த்திகா தீபிகாவிடம் காட்டிய பாசத்தை சாந்தி பார்த்திருந்தார்.
அந்தப் பாசத்தை மறுக்க அவரால் முடியவில்லை.
மனநிறைவுடன் சம்மதித்தார்கள் சிவமும் சாந்தியும்.
அந்தச் சடங்கையே கார்த்திகா தன் சொந்த மகளுக்குச் செய்வதைப் போல நடத்தினார்.
மேளதாளம்.
சீர்வரிசை.
உறவினர்கள்.
விருந்தோம்பல்.
எல்லாமே அமர்க்களமாக நடந்தது.
கார்த்திகாவின் அண்ணன் முரளியும் அங்கே இருந்தார்.
மதுரையில் அரசியல் செல்வாக்கும், தொழில் செல்வாக்கும் கொண்டவர்.
தீபிகாவுக்கு தாய்மாமன் முறை. அவர் செய்ய
அவர் தன் மனைவி, குடும்பத்துடன் வந்து நின்றபோது, சிதம்பரமும் தன் குடும்பத்துடன் அங்கே முன்னால் நின்றார்.
அந்தக் காட்சியைப் பார்த்த சாந்தியின் மனதில் ஒரு நிறைவு பிறந்தது.
பல வருடங்களாக தங்களை விட்டு விலகியிருந்த சொந்தங்கள் ஒவ்வொருவராக மீண்டும் உறவைப் புதுப்பிக்க ஆரம்பித்திருந்தனர்.
ஆனால் சாந்திக்கு அது முழுமையான பாசமாகத் தோன்றவில்லை.
சிலரின் கண்களில் சிவத்தின் வளர்ச்சி தெரிந்திருந்தது.
அந்த வளர்ச்சியின் பின்னால் தீபிகா இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
தெரியவிடவும் இல்லை.
அவளுடைய பாதுகாப்புக்காக.
தீபிகாவின் வயது.
அவளுடைய பேசமுடியா நிலை .
சிவம், சாந்தியின் வயோதிகம்.
இவற்றையெல்லாம் காரணமாக வைத்து, சில உறவுகள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றன.
அதில் முக்கியமான ஒன்று—
தீபிகாவின் வாழ்க்கையில் கார்த்திகாவுக்கு இருந்த இடம்.
அதை சிவம் சாந்தி உறவினர்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அமுதாவையே ஏற்றுக்கொள்ளாதவர்கள், இப்போது எப்படி தீபிகாவை ஏற்றுக்கொள்வார்கள்?
தீபிகாவிடம் ஒன்றுக்கு பலவாறு சொல்லி குழப்ப முயன்றார்கள்.
ஆனால் அவள் கார்த்திகாவை விட்டு விலக ஒரு கணம் கூட முயற்சிக்கவில்லை.
அவர்களுடைய பிணைப்பு அதற்குள் அவ்வளவு வலுவாகி இருந்தது.
அதைப் பார்த்த சாந்திக்கு மனதுக்குள் பேரானந்தம்.
தீபிகா யாரிடமும் எளிதாக ஒட்டிக்கொள்ளும் பெண் அல்ல.
அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருந்தது.
அந்த உலகத்தில் அவளுடைய நண்பிகளுக்கு மட்டுமே இடம்.
வேறு யாரையும் அவள் எளிதாக உள்ளே அனுமதிக்க மாட்டாள்.
அதனால்தான் சாந்தி கார்த்திகாவைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.
சந்தேகத்தால் அல்ல.
தன் வாழ்க்கையில் பார்த்த அனுபவத்தால்.
அமுதாவுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் எதுவும் தீபிகாவுக்கு வரக்கூடாது என்பதற்காக.
அந்தச் சடங்கின் போது ஒரு சம்பவம் சாந்தியின் கவனத்தை ஈர்த்தது.
கார்த்திகா செய்த சில விஷயங்களுக்காகத் தன் அண்ணன் முரளியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அண்ணா… நான்…”
அவளுடைய குரல் உடைந்தது.
முரளி அவளைப் பார்த்து அதட்டினார்.
“என் சொந்த மருமகளுக்கு இல்லாத உரிமையா உனக்கு?”
கார்த்திகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அந்த ஒரு வார்த்தை அவளுடைய பழைய வலியைத் தொட்டது.
கார்த்திகாவுக்கு பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்திருந்தது.
அந்தக் குழந்தையை கையில் ஏந்தி இறுதிக்காரியம் செய்ததே முரளிதான்.
அந்த நாளிலிருந்து கார்த்திகாவின் மனதில் இருந்த வெற்றிடத்தை தீபிகா நிரப்பியிருந்தாள்.
அவளைத் தன் சொந்த மகளாகவே பாவித்துக் கொண்டிருந்தாள்.
அதைப் புரிந்துகொண்ட முரளிக்கும் ஒரு மகிழ்ச்சி.
தன் தங்கை பழைய வலியிலிருந்து மீண்டு வந்திருந்தாள்.
அதனால்தான் அந்தச் சபையின் முன்னிலேயே, தீபிகாவை கார்த்திகாவின் மகளாக அங்கீகரிப்பது போல நடந்துகொண்டார்.
அந்தக் காட்சியைப் பார்த்த சிதம்பரத்தின் உள்ளத்தில் ஏதோ அசைந்தது.
அண்ணன்–தங்கை பாசம்.
குடும்பத்தின் பழைய காயங்கள்.
அனைத்தையும் தாண்டி தீபிகா மையமாக மாறியிருந்தாள்.
அதுவரை தீபிகாவை நெருங்காத சிதம்பரம், அன்று முதல் முறையாக அவளை நெருங்கினார்.
“இது என் பேத்தி,” என்று ஒவ்வொரு நிமிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்.
சிவமும் சாந்தியும் உட்பட அனைவரும் அவர் உருவாக்கிய அந்த வட்டத்திற்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் தீபிகா மட்டும் கார்த்திகாவைத் தேடி அலைந்துகொண்டிருந்தாள்.
கார்த்திகாவும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள்.
தீபிகா தெளிவாகவே சொல்லியிருந்தாள்.
சிதம்பரம் தன்னிடம் வரக்கூடாது என்று.
ஆனால் சிதம்பரம் அந்த எல்லையை அன்றே உடைத்தார்.
“இது என் பேத்தி.”
அவர் குரலில் இருந்த உறுதி அனைவரையும் அமைதியாக்கியது.
ராம் ஏதோ சொல்ல முயன்றான்.
“அப்பா… பாப்பாவுக்கு பிடிக்கலன்னா…”
சிதம்பரம் அவனை ஒரு பார்வை பார்த்தார்.
“அவள் உன் மகள். என் பேத்தி. அந்த உரிமையை யாராலும் மறுக்க முடியாது.”
சிறிது இடைவெளிக்குப் பிறகு அவர் தொடர்ந்தார்.
“அதைவிட, இங்கே நிற்கிற இந்தச் சபை அங்கீகரிச்சிருக்கிறது. வேல்ஸ் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு அவள். அந்த உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.”
“எனக்கு கோபம் இருந்தது. ராம் விஷயத்தில்…”
அவரது குரல் தளர்ந்தது.
“அது வெறுப்பு இல்லை. ராமும் அமுதாவும் சேர்ந்து கொஞ்ச நாள் வாழ்ந்திருந்தால், என் கோபம் போயிருக்கும். நானே ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் விதி வேற மாதிரி இருந்தது.”
அவர் கண்களைத் தாழ்த்தினார்.
“என் மகன் உயிர் முக்கியம்னு நினைச்சேன். தொழில் சரிவு வேற எதையும் சிந்திக்க விடல. அதனால்தான் தீபிகா என்னை விட்டு இவ்வளவு தூரம் போயிருக்கிறாள்னு இப்ப புரியுது.”
அவரது குரல் நடுங்கியது.
“ராமுக்கு நான் செய்தது தப்பு. அந்தத் தப்புக்கான தண்டனையை தீபிகா அனுபவிக்கக் கூடாது.”
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
“இனிமேல் என் பேத்தி விஷயத்தில் அப்படி ஒரு தப்பு நடக்காது.”
ஜமீன் பரம்பரை ஆணவம், கௌரவம், அதிகாரம் என்று வாழ்ந்த சிதம்பரம் இப்படி அனைவரின் முன்னாலும் தன தவறை ஒப்புக்கொண்டது , அங்கே இருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சிவமும் சாந்தியும் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றனர்.
அமுதா இல்லை.
ஆனால் இன்று அமுதாவின் மகள் இருந்தாள்.
அவளுடைய எதிர்காலம் இருந்தது.
பழையதை நினைத்து யாரையும் தண்டிப்பதில் பயன் இல்லை.
இரு குடும்பங்களும் இணைந்து தீபிகாவின் சடங்கை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
தீபிகாவை அமைதிப்படுத்த சாந்தியும் கார்த்திகாவும் பெரிதும் பாடுபட்டனர்.
அப்போது முரளி கார்த்திகாவிடம் மெதுவாகக் கேட்டார்.
“மாமாவுக்கு தெரியுமா?”
கார்த்திகா அவரைப் பார்த்தாள்.
“எது?”
“தீபிகா விஷயமெல்லாம்.”
கார்த்திகா பதில் சொல்லும் முன்பே முரளி சிரித்தார்.
“அவருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போல.”
கார்த்திகாவின் முகம் மாறியது.
“அப்போ…?”
“ஆமா.”
முரளியின் குரல் தாழ்ந்தது.
“அந்த கம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகி விஷயத்திலேயே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.”
அந்த நினைவு கார்த்திகாவின் மனதில் மீண்டும் எழுந்தது.
எப்போதும் மெசேஜ் செய்வாள் தீபிகா.
அன்று மட்டும் போன் செய்திருந்தாள்.
அதுவும் நடுங்கிய குரலில்.
அவன் சொன்ன வார்த்தைகள்—
“உன்னை சிதைத்துவிடுவேன்.”
அதைக் கேட்ட அந்த நொடியில் கார்த்திகா மாறிப்போனாள்.
அவளுக்குள் இருந்த தாய் விழித்துக்கொண்டாள்.
அதன்பிறகு நடந்தது விஷயத்தை வேறு நிலைக்கு கொண்டு சென்றது.
முரளி தலையிட்டார்.
சிவம் அழுத்தம் கொடுத்தார்.
அந்த நிர்வாகி பணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் அதன் பின்னால் இன்னும் பெரிய வலை இருந்தது.
அந்த நிர்வாகி முரளியையும் கார்த்திகாவையும் அரசியல் வழியாக பழிவாங்க முயன்றிருந்தான்.
ஒரு கட்டத்தில் அண்ணன்–தங்கை இருவரும் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் வந்தது.
அப்போது அவர்களுக்கு தங்களைப் பற்றிய கவலை இல்லை.
குடும்பத்தைப் பற்றித்தான் யோசித்தார்கள்.
அந்த பிரச்சனை எப்படி திடீரென்று விலகியது என்பது மட்டும் அப்போது புரியவில்லை.இப்போது புரிந்தது.
சாந்தி சிறிது நேரம் யோசித்தார்
இப்போது சாந்திக்கு அந்த நூலின் முனை கிடைத்தது.
சிதம்பரம்.
சிவகாமியின் மகன்.
அவர் எல்லாவற்றையும் வேர் வரை பிடுங்கியிருந்தார்.
யாருக்கும் தெரியாமல் தீபிகாவை ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தார்.
தன் மகன்களை AR நிறுவனத்தின் பின்னால் நிறுத்தியிருந்தார்.
கார்த்திகாவுக்குக் கூட முழுமையாகத் தெரியாமல், அவள் மூலமாகவே தீபிகாவை பாதுகாத்திருந்தார்.
தீபிகாவின் அறிவு ஒரு கத்தி என்றால், அதை கூர்மைப்படுத்தியது கார்த்திகாதான்.
அவள் ஒரு வழிகாட்டி.
தீபிகா எதையும் கார்த்திகாவிடம் சொல்லித்தான் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
தீபிகா அவரை வெறுமனே “சிதம்பரம்” என்று பெயர் சொல்லி அழைத்துவிடுவதால், அவருடைய உயரம் குறைந்துவிடப் போவதில்லை.ராம் முதலில் சந்திக்க வந்தபோது கோபத்தில் மலரை கொண்டு சிதம்பரம் என்று அழைத்ததை.
ஒரு காலத்தில் அழகேசன் ஜமீன் குடும்பம் நிலவரையறைச் சட்டம் வந்தபோது பதறியிருந்தது.
அப்போது குடும்பத்தில் மருமகளாக வந்திருந்த சிவகாமி, அந்த நிலைமையைப் புரிந்துகொண்டு தன் அறிவை பயன்படுத்தியிருந்தார்.
நிலத்தை அப்படியே வைத்திருப்பதற்குப் பதிலாக, சிமெண்ட் தொழில், உரத் தொழில், சாலை வசதி, தொழிலாளர் குடியிருப்புகள் என அனைத்தையும் உருவாக்கி அந்தப் பெரும் சொத்து அமைப்பை வேல்ஸ் குழுமமாக மாற்றியதில் அழகேசனுக்கும் முக்கிய பங்கு இருந்தது.
அந்தப் பேரரசுக்கு ஒரு மகனை இளவரசனாக உருவாக்கிய காலம் கடந்தது.
அதன்பின் சிதம்பரம் அதை குறைய விடாமல் ராஜாவாக நடத்தினார்.
ஆனால் அந்த ராஜ்யத்தைத் தானாகப் பெற வேண்டும் என்ற எண்ணம் இப்போது தீபிகாவின் உள்ளத்திலும் மெதுவாக உருவானது.
சிதம்பரம் பேத்தி என்பதற்காகத் தரும் அதிகாரம் அவளுக்குத் தேவையில்லை.
அம்மாவுக்கு கிடைக்காத மதிப்பு தனக்குத் தானாகக் கொடுக்கப்படுவது போலத் தோன்றினால்?
அது அவளுக்கு பிச்சை.
அவமானம்.
அந்த நொடியிலேயே அவள் மனதில் ஒரு முடிவு பிறந்தது.
அந்தச் சாம்ராஜ்யம் தனக்கு வேண்டும்.
யாருடைய இரக்கத்தாலும் அல்ல.
தன் திறமையால்.
அதற்காகத்தான் சிறு வயதிலிருந்தே வேல்ஸ் குழுமத்தின் பங்குகள் மீது அவளுடைய பார்வை விழுந்தது.
கார்த்திகாவும் முரளியும் அவளுக்குத் துணையாக நின்றனர்.
அவள் கணிசமாகப் பங்குகளை வாங்க ஆரம்பித்தாள்.
அந்த நகர்வை சிதம்பரம் கவனிக்காமல் இருக்கவில்லை.
“பிரச்சனை வருமோ?” என்று கார்த்திகா நினைத்தாள்.
ஆனால் சிதம்பரம் அமைதியாகவே இருந்தார்.
அவள் பதின்மூன்று வயதில் நடந்த அந்தப் பிரச்சனையிலேயே அவர் பல விஷயங்களைப் புரிந்துகொண்டிருந்தார்.
அந்தப் பெண் தன் அம்மாவின் பிரதிபிம்பம்.
அதிலும் மேலாக—
தன் மகன்களிடம் இல்லாத ஒரு பாய்ச்சல் அவளிடம் இருந்தது.
அவளுடைய ஒவ்வொரு அசைவும்.
ஒவ்வொரு முடிவும்.
ஒவ்வொரு புத்திசாலித்தனமான நகர்வும்.
அவரை மெய்சிலிர்க்க வைத்தது.
அவர் அதை ரசித்தார்.
ஆனால் நெருங்க முயற்சிக்கவில்லை.
தீபிகாவும் அவரை நெருங்கவிடவில்லை.
அதை எல்லாம் கவனித்த சாந்திக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது.
“சிவம்…”
“என்ன?”
“நம்ம தீபிகாவை வளர்த்தோம். ஆனா அவள் அமுதாவைப் போல இல்லை.”
சிவம் அமைதியாகப் பார்த்தார்.
“அமுதாவுக்கு இருந்த உலகம் வேற. தீபிகாவுக்கு உலகமே வேற.”
சாந்தியின் குரலில் கவலை.
ஒரு பிரச்சன்னை அதை நாம் சரி செய்தோம் என்று நினைத்தால் அதில் அவர்கள் தலையீடு தான் நம்மளை அந்த நேரம் காப்பாத்தி உள்ளது.
“அவளுக்குள் மகிழ்ச்சியைவிட வெறுப்பு அதிகம். யாரிடமும் ஓட்டமாட்டாள். தொழிலில் அவளுக்கு வயதுக்கு மீறிய புரிதல் இருக்கு. குடும்பத்தைப் பற்றி புரிதல் இல்லை வளர்ந்த விதமே வேற.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
“நமக்குப் பின்னால் அவளுக்கு பாதுகாப்பு தேவை. முக்கியமா… ஒரு குடும்ப அமைப்பு தேவை. அதை நம்மால கொடுக்க முடியாது.”
சிவம் நீண்ட நேரம் யோசித்தார்.
“கார்த்திகாவுக்கு அவளோட ஆழ்மனசு முழுசா தெரியாது.”
“அதனால்தான் இன்னும் அவளை உணரணும்.”
“அவளோட பொறுப்பு கார்த்திகாவிடம் வந்தால்…”
சாந்தி மெதுவாகத் தலையசைத்தார்.
“அவளுக்குள்ள இருக்கிற நல்லது வெளியில் வரும்.”
சிவமும் அந்த முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் கார்த்திகா தன் கணவனை முன்னிறுத்தியே வேல்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய நிர்வாக விஷயங்களை கவனித்தாள்.
வெளிப்படையாக வேல்ஸ் குழுமத்துடன் தொடர்பு இருப்பது தெரியாதபடி இருந்தாலும், நெருங்கியவர்களுக்கு மட்டும் உண்மை தெரியும்.
ராமுக்கும் இதில் ஒரு விதமான மகிழ்ச்சி இருந்தது.
அவன் இன்னும் லண்டனில்தான் இருந்தான்.
தன் வாழ்க்கை வேறு பாதையில் சென்றிருந்தாலும், தீபிகா அவனிடமிருந்து முழுமையாக விலகவில்லை.
சடங்கின் போது அவள் அருகில் ராம் இருந்ததை தீபிகா தடுக்கவில்லை.
அதே நேரத்தில் தீபிகாவும் அவனை நெருங்கவில்லை.
சில மாதங்கள் கடந்தன.
சிவம், சாந்தி இருவரும் வயதாகிவிட்ட நிலையில் சாந்தியின் உடல்நலம் திடீரெனக் குறைந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி, கார்த்திகாவை தனியாக அழைத்தார்.
அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டார்.
“என் பேத்தி நல்லா பார்த்துக்கோ.”
கார்த்திகாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.
சாந்தி தீபிகாவை அருகில் அழைத்தார்.
“நீ கார்த்திகா பொண்ணுதானே?”
தீபிகா அவளைப் பார்த்தாள்.
சாந்தி அவளுடைய நெற்றியில் மெதுவாக முத்தமிட்டார்.
“அங்கே இருடா…”
அந்த வார்த்தைக்குப் பிறகு சாந்தி மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.
சில மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
விடியற்காலையில்…
அவர் தவறிவிட்டார்.
அந்த இரவு சிவம் அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, எதிரே ராம் நின்றிருந்தான்.
அவனுக்கு அருகில் கார்த்திகாவின் மடியில் தீபிகா.
அவளுடைய அருகில் பெரியப்பா.
அந்தக் காட்சியைப் பார்த்த சிவத்தின் மனதில் ஒரு நிறைவு பிறந்தது.
“இனி என் பேத்தியின் வருங்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.”
ராமுக்கு வேறு குடும்பம்.
அதில் அவன் தவறு இல்லை.
ஆனால் தீபிகா அவனை நெருங்கப் போவதில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.
அவள் தனியாக நின்றாலும், கார்த்திகா மட்டுமல்ல—
சிதம்பரம் குடும்பமும் அவளை கண்ணின் மணிபோல் பார்த்துக்கொள்ளும்.
சிவத்தைப் பார்த்த ராம்,
“மாமா…” என்று அழைக்க முயன்றான்.
சிவம் உடனே சைகை செய்தார்.
“தீபிகா தூங்குறா. அவளை எழுப்பாத.”
ராம் புரிந்துகொண்டான்.
கையால் மாமா என்று சைகை செய்தான்.
சிவம் அவனை அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
சில வார்த்தைகள் மட்டும் பேசினார்.
“தீபிகாவைப் பார்த்துக்கோ.”
அதன்பின் சிவம் மீண்டும் விழிக்கவில்லை.
சாந்திக்கு அது முன்பே தெரிந்திருந்தது.
தன் கணவன் நான் இல்லாமல் இந்த உலகில் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை என்று.
அதனால்தான் தங்கள் கடமைகள் அனைத்தையும் சரி செய்து முடித்திருந்தார்.
தீபிகாவின் பொறுப்பை கார்த்திகா குடும்பத்திடம் மனநிறைவோடு ஒப்படைத்துவிட்டு, தன் செல்ல மகளிடம் சென்றுவிட்டார்.
______________
ஒரு மாதம் கடந்தது.
சிவம்–சாந்தி தம்பதியரின் இறுதிச்சடங்குகளை ராம் முன்னின்று நடத்தி முடித்தான்.
அந்த நாட்களில் தீபிகாவை ஆறுதல்படுத்தியது கார்த்திகாதான்.
ஆனால் ஒரே நேரத்தில் தாத்தாவையும் பாட்டியையும் இழந்த வலி, தீபிகாவால் ஜீரணிக்க முடியவில்லை.
அவள் அமைதியாக இருந்தாள்.
அந்த அமைதிக்குள் ஒரு பெரிய வெறுமை.
அப்போது மலர் கார்த்திகாவிடம் மெதுவாகச் சொன்னாள்.
“இங்கே இருந்தா இன்னும் அவங்களோட நினைவுலயே சுருண்டு போயிடுவா. இடத்தை மாற்றணும்.”
கார்த்திகா தீபிகாவிடம் பேசிப் பார்த்தாள்.
“நம்ம பெசன்ட் நகர் பங்களாவுக்கு போயிடலாம்.”
தீபிகா ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டாள்.
“வேண்டாம்.”
“ஏன்?”
தீபிகா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
பிறகு மெதுவாகச் சொன்னாள்.
“அம்மா வாழ்ந்த கெஸ்ட் ஹவுஸுக்குத்தான் நான் போறேன்.”
கார்த்திகா அவளைப் பார்த்தபடி நின்றாள்.
அந்த முடிவின் பின்னால்,தீபிகா இப்போது தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகிறாள்