“எஸ்..! டென் டேஸ் முன்ன தான் வந்தேன். வந்ததும் உன்னை வந்து பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட், ஆபீஸ்ல கொஞ்சம் டைட் வொர்க். இன்னைக்கு இங்க எதிர்பார்க்காம சந்திப்பேன்னு நினைக்கலை..” என்றான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. அவனைப் பார்ப்பதற்கு முன்பு கூட, அவனைப் பார்க்க வேண்டும்,பேச வேண்டும் என்று சில நேரங்களில் தோன்றியதுண்டு. ஆனால் இன்று கண் எதிரே அமர்ந்திருக்கிறான். அவள் உணர்வுக் குவியல்களில் ஒன்று கூட வேலை செய்யவில்லை. பேச வார்த்தைகளின்றி அவள் அமர்ந்திருக்க, சற்று தூரத்தில் இருந்த சரணுக்கு நிமிடத்திற்கு நிமிடம் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
“எதுக்கு இவ்வளவு டென்ஷன் சரண்? உன்னால நார்மலா இருக்க முடியாதா?” என்று விஜய் அவனை அதட்ட,
“எப்படி மச்சான் அமைதியா இருக்க சொல்ற? கொஞ்சம் கூட அவனுக்கு குற்ற உணர்ச்சியாவே இல்லையா?” என்று பொரிந்தான்.
“ஏற்கனவே உன் தங்கையை அவன் கூட பேசச் சொன்னவன் தான நீ? இப்ப என்ன புதுசா கோபம்?” என்றான் நக்கலாக.
“விஜய்..!!!” என்று சரண் பல்லைக் கடிக்க..
“டோன்ட் கால் மீ விஜய். கால் மீ ரகு..” என்று பல்லைக் கடிக்க,
“இப்ப இது தான் ரொம்ப முக்கியமாடா..? எப்ப இருந்தாலும் எனக்கு நீ விஜய் தான். அப்படி கூப்பிட்டதாத்தான் ஞாபகம். உனக்குப் பிடிச்சாலும், பிடிக்காட்டியும் இனி அப்படித்தான் கூப்பிடுவேன்..” என்றான் எரிச்சலான குரலில்.
“இப்ப எதுக்காக நீங்க ரெண்டு பெரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க? அங்க வேதா முகமே சரியில்லை. ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா இருக்குமோ?” என்று கீர்த்தனா பேச்சை மாற்ற,
“என்னவா இருந்தா என்ன? இவன் ஒரு முட்டாள், இவன் தங்கச்சி அதை விட ஒரு முட்டாள். இவங்க குடும்பமே ஒரு செண்டிமெண்டல் இடியட்ஸ்..” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
“இப்ப உன் அண்ணனுக்கு என்னடி பிரச்சனை..? நாங்க சென்டிமென்டல் இடியட்ஸாவே இருந்துட்டு போறோம். அப்பறம் இவனை மாதிரி பாறாங்கல்லு மாதிரியா இருக்க முடியும்?” என்றான் சரண் கோபமாய்.
“அப்போ அவன் மட்டும் எங்களைப் பேசலாமா? நான் எவ்வளவு டென்ஷன்ல இருக்கேன்னு அவனுக்குத் தெரியும் தானே. தெரிஞ்சுகிட்டும் கடுப்பேத்துற மாதிரி பேசுறான்..” என்றான்.
“இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை வேதா..! ஆன்ட்டிக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம். ஐம் சாரி பார் யுவர் லாஸ்..” என்றான்.
காதம்பரியைப் பற்றிய பேச்சில் அவளுடைய கண்கள் தானாகக் கலங்கியது. இரண்டு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக பிணைத்து, அழுத்தம் மொத்தத்தையும் அந்த விரல்களில் கொடுத்திருந்தாள். அவள் கலங்கிய கண்கள் அவனை ஏதோ செய்ய, தன் இரண்டு கைகளையும் நீட்டி அவள் கைகளின் மேல் வைத்து அழுத்தினான். ஆறுதலுக்காகவே அவள் கைகளைப் பற்றினான். அதில் எந்த உள் நோக்கமும் இருக்கவில்லை அவனுக்கு.
ஆனால் வேதாவிற்கோ.. அவன் கைகள் தன் கைகளை பற்றிய அந்த நிமிடங்கள் சூறாவளியாய் சுழன்று அடிக்கத் தொடங்கியிருந்தது மனம். அவள் ஏதோ யோசனையிலும், உணர்வுகளின் தாக்கத்திலும் இருக்க, முகம் பேயறைந்ததைப் போல் மாறிக் கொண்டிருந்தது. ஏதேதோ கலவையான எண்ணங்கள் வந்து மனதில் அலைமோத, தன்னைச்சுற்றி எல்லாமே இருண்டதைப் போல் இருந்தது அவளுக்கு. பட்டென்று அவனிடமிருந்து கைகளை உருவிக் கொண்டாள்.
அவளின் செய்கையில் புரியாமல் விழித்த நந்தா,
“என்னாச்சு வேதா..? ஐ யாம் சாரி. தப்பா எதுவும் மீன் பண்ணாத. நீ ரொம்ப டௌனா பீல் பண்ற மாதிரி இருந்தது. அதான் ஒரு சபோர்ட்டுக்காக கையைப் பிடிச்சேன்..” என்று அவன் விளக்கிக் கொண்டிருந்த விளக்கம் எதுவும் அவள் மூளையை சென்றடையவில்லை.
அவள் கண்கள் மீண்டும் கண்ணீர் உற்பத்தியை ஆரம்பிக்க, கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட மனமின்றி பட்டென்று எழுந்தவள், அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
“வேதா.. வேதா..!” என்று நந்தகுமார் அழைத்துக் கொண்டே பின்னால் செல்ல, அங்கு ஏதோ சரியில்லை என்று உணர்ந்த மூவரும் வேகமாக அவ்விடம் வர,
“என்னாச்சு? ஏன் வேதா அழுதுகிட்டு போறா?” என்றான் சரண் வேகமாக.
“தெரியலை..! பட் அவ அழற அளவுக்கு நான் எதுவும் பேசவும் இல்லை. ஹேர்ட் பண்ணவும் இல்லை..” என்றான் அவன் புரியாமல். அவனை முறைத்த சரண் , வேதாவைத் தேடி சென்றான்.
அவளோ.. எப்படி செல்கிறோம், எங்கு செல்கிறோம் என்று புரியாமல்,கைகள் சுவாதீனமாக அவள் கண்ணீரைத் துடைத்தபடி கால் போன போக்கில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தவள், எஸ்கலேட்டர் அருகில் வந்து, நிதானமின்றி நிலை தடுமாறி கீழே விழப் போனாள். அப்போது, எஸ்கலேட்டர் மூலம் மேலே வந்த விஜய், வினாடியில் சுதாரித்து,
“ஹேய்..! வேதா..பார்த்து பார்த்து..” என்று வேகமாக அவளைப் பிடித்துத் தாங்கியிருந்தான். அவன் ஒரு கை அவள் இடையிலும், மற்றொரு கை அவள் கைகளையும் பற்றியிருக்க,
“என்னாச்சு? எதுக்கு இந்த பதட்டம்?” என்றான்.
தன் முகத்திற்கு அருகில் நெருக்கமாக அவன் முகம் தெரிய மின்சாரம் தாக்கிய உணர்வில் அதிர்ந்து விழித்தாள்.
விழிகள் தெறித்து வெளியே வந்துவிடும் அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே விஜய்யின் கைகளில் மயங்கி சரிந்திருந்தாள்.
“வேதா..” என்று விஜய் அவள் கன்னத்தை தட்ட, கண்களைத் திறக்கவில்லை அவள்.
“என்னாச்சு விஜய்?” என்று அவர்கள் மூவரும் பதறியபடி வர, அவர்கள் பின்னால் நந்த குமாரும் வந்தான்.
“என்ன என்னாச்சு விஜய்? முட்டாள் என்ன நடக்குது இங்க? நான் மட்டும் இல்லைன்னா, இந்நேரம் என்ன ஆகியிருக்கும்? என்னாச்சு? நிதானம் இல்லாம வந்து மயக்கம் போடுற அளவுக்கு? என்ன பண்ணிட்டு இருந்திங்க நீங்க எல்லாம்?” என்று அவன் கத்த,
“ஒன்னும் ஆகலைடா. ஆனா, வேதா ஏன் இப்படி ரியாக்ட் பண்ணான்னு எங்களுக்கே ஒன்னும் புரியலை..” என்றான் சரண் புரியாமல்.
“அவ மயங்கிக் கிடக்குறா! முதல்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்.” என்று நந்த குமார் பதற,
“அது எங்களுக்குத் தெரியாதா? இப்ப என்ன புதுசா அக்கறை?” என்றான் விஜய் கோபமாய். அவன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.
“அண்ணா, அக்காவை பர்ஸ்ட் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போகலாம்..” என்று அகரன் சொல்ல,
“போய் காரை எடு..” என்று சாவியை சரணின் கைகளில் திணித்தவன், பட்டென்று அவளைத் தூக்கிக் கொண்டான். அகரன் வாயப் பிளந்து கொண்டு பார்க்க,
“என்னடா?” என்றான் முறைப்பாய்.
“எப்படிண்ணா? இவளை அசால்ட்டா இப்படி தூக்குனிங்க..?” என்று கேட்க,
“உங்க குடும்பத்துக்கே எப்ப எதைப் பேசணும்னு, கேட்கணும்ன்னு விவஸ்தை இருக்காதாடா..?” என்று எரிச்சலாய் கூறியவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அருகில் இருந்த ஹாஸ்பிட்டலில் அவளை சேர்த்திருந்தான்.
அவன் அவளைத் தூக்கி கொண்டு செல்வதைப் பார்த்த நந்தகுமாருக்கு அதிர்ச்சி ஒரு புறம் என்றாலும், தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான். ‘நான் பண்ண வேண்டியதை எல்லாம் இவன் பண்ணிட்டு இருக்கான்..’ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“வேதாக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல..” என்று சரண் கேட்க, “பெருசா எதுவும் இருக்காதுடா. நீ கொஞ்சம் டென்ஷன் ஆகாம இரு” என்றான் விஜய்.
வெளியே வந்த டாக்டர்…
“அவங்களுக்கு சாதாரண மயக்கம் தான். ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்திருக்காங்க. பிபி கொஞ்சம் அதிகமா இருக்கு. இப்ப ஓகே தான்.நல்லா தூங்கி எந்திருச்சா சரியாகிடும்” என்று சொல்லி செல்லும் வரை, சரண் அமைதியாவில்லை. அதற்கு பிறகே கொஞ்சம் தணிந்தான்.
வீடு வந்து சேரும் வரையிலும் வேதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கார் கதவின் மேல் தலை சாய்த்திருந்தவளின் அமைதி அங்கிருந்த மற்றவர்களை பாதித்ததோ இல்லையோ, விஜய்யை பாதித்தது. அவன் அதிகம் பேச மாட்டான் என்றாலும், அவள் பேசுவதை கேட்கப் பிடிக்கும் அவளுக்கு.
அவளின் பேச்சு, சரணுடன் வார்த்தையாடல், அகரனுடன் சண்டை, தந்தையுடன் கொஞ்சுவது, காதம்பரியிடம் மிஞ்சுவது, அவனைப் பார்த்தால் தயங்குவது,கல்லூரியில் ஒரு முகம் என்று அவளின் ஒவ்வொரு பரிமாணங்களையும் பார்த்திருக்கிறான். அதை ரசிக்கவும் செய்திருக்கிறான். அதை ஒரு வகையான ஈர்ப்பு என்று நினைத்திருந்தான் இத்தனை நாட்களும். ஆனால் அவளின் இந்த சில நிமிட அமைதியே அவனை ஏதோ செய்தது. அந்த உணர்விற்கு பெயர் வைக்க விரும்பவில்லை. ஸ்டியரிங்கில் இருந்து ஒரு கையை எடுத்து தலையை அழுந்த கோதியவன், அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு பாடலை ஒலிக்க விட்டான்.