“அகரா..!” என்ற விஜய்யின் குரலில் அவன் திரும்பினானோ இல்லையோ, வேதா திரும்பி விட்டாள்.

“சண்டே அதுவுமா இவ்வளவு காலையில எங்க போற?” என்றான்.

“பால் பாக்கெட் வாங்கண்ணா” என்றான்.

“நாளையில் இருந்து உங்களுக்கும் சேர்த்து போட சொல்லியிருக்கேன்..” என்றவன், அவன் கையில் ஒரு பிளாஸ்கை திணித்து,

“இன்னைக்கு ஒரு நாள் காபி குடிங்க ரெண்டு பேரும்..” என்றான்.

“ஓகேண்ணா..! தேங்க்ஸ்” என்றான். அவன் சிறு தலையசைப்புடன் ஜாகிங் கிளம்பி சென்றான்.

“இவர் கொஞ்சம் நல்லவருதாண்டா..” என்றாள் சிரித்துக் கொண்டே.

“என்ன திடீர் ஞான உதயம் “? என்றான்.

“நமக்கு காபி எல்லாம் போட்டு கொடுத்திருக்காரே?” என்றாள்.

ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளுக்கு, அந்த அதிகாலை நேர சுகந்தமும், ஆவி பறந்து கொண்டிருந்த காபியும், அதான் நறுமணமும் இன்னும் வேண்டும் வேண்டும் என்பதைப் போல் தோன்றியது. மனதில் இருந்த வலி மாறா வடுக்கள் கூட, அவள் மகிழ்ச்சியை எண்ணி அந்த நேரத்தில் சற்று ஒதுக்கம் காட்டியிருந்தது. அதை பாராது பார்த்துக் கொண்டிருந்த அகரனுக்கும் மகிழ்ச்சியே. தான் நினைத்தது சரி தான் என்பதைப் போன்ற எண்ணம் அவனுக்கு.

காலையில் சேமியா கிச்சடி செய்து இருவரும் சாப்பிட,  சரணும் கீர்த்தனாவும் வெளியே செல்ல அவர்களை அழைத்தனர். ஆனால் இருவரும் மறுத்து விட்டனர். அவர்களுக்கான தனிப்பட்ட நேரங்களை தாங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்ற அளவிற்கு இருவருக்கும் பக்குவம் இருந்தது.

நாட்களும், நேரமும் யாருக்கும் காத்திருப்பதில்லை.  நாட்கள் அதான் போக்கில் செல்ல, வேதா சென்னை வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. இந்த இரண்டு மாதங்களில் அவள் தன்னைத் தானே மெருகேற்றியிருந்தாள். இடையில் ஒரு முறை ராமச்சந்திரன் வந்து பார்த்துவிட்டு இரண்டு நாட்கள்  அவர்களுடன் தங்கிவிட்டு சென்றிருந்தார்.

காலையில் எழுந்து  ஊஞ்சலில் அமர்ந்து ஒரு டீ. சிறிது நேரம் செடி கொடிகளுடன் உலாவி விட்டு, அதன் பிறகு சமையல். அவளுக்கும், அகரனுக்கும் மதிய உணவையும் வீட்டில் இருந்து எடுத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள். காலையில் வேகமாக கிளம்பி இருவரும் ஒன்றாகவே கல்லூரி செல்வர். மாலையில் இருவரும் ஒன்றாகவே வீடு வருவர். மீண்டும் டிபன், படிப்பு, தூக்கம் என்று இதுவே அவர்களின் வழக்கமாக இருந்தது. வார இறுதி நாட்களில் சில நாட்கள் சரணின் வீட்டிற்கு செல்வர். சில நாட்கள், சரணும் கீர்த்தனாவும் இங்கே வந்து விடுவர்.  நாட்கள் அதன் போக்கிலும், இவர்கள் நாட்களின் போக்கிலும் சென்று கொண்டிருந்தனர். 

விஜய்யை கல்லூரியில் பார்ப்பதோடு சரி. வீட்டில் அதிகம் தென்பட மாட்டான். அப்படி இருந்தாலும் அவன் நேரங்கள் அவன் அன்னையுடன் மட்டுமே இருக்கும். அவன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு செயல் அவன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

அவனைக் கண்டால் எழும் தயக்கம் மட்டும் இன்னும் வேதாவிடம் மாறவில்லை. அவனிடம் இயல்பாக அவளால் பேச முடிவதில்லை. பேச நினைத்தாலும் அவன் இறுகிய முகம் பார்த்து அப்படியே வார்த்தைகளை விழுங்கிக் கொள்வாள். சரண், கீர்த்தனா என அனைவரும் இருக்கும் போது சகஜமாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசும் விஜய், யாரும் இல்லாத போது, அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட கருத்தில் கொள்ள மாட்டான்.

அருகில் வைத்துப் பார்த்தால் பெரியதாகத் தெரியும் ஒரு பொருள், சற்று தூரம் தள்ளி வைத்துப் பார்த்தால் சிறியதாக தோன்றும். இன்னமும் சற்று தள்ளி வைத்து பார்த்தால், அளவில் மீண்டும் சிறியதாகி விடும். அப்படித்தான் பிரச்சனைகளும். நடந்தபோது  பெரியதாக தோன்றும் சில பிரச்சனைகள், சில காலம் சென்றவுடன் சிறியதாக தெரிய ஆரம்பித்து விடும். வேதாவிற்கும் அப்படித்தான் இருந்தது.

மறுநாள் அகரனுக்கு பிறந்த நாள் என்பதால், அவனுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தாள். சரணுக்கு அழைத்து விஷயத்தைக் கூற,

“இன்னைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போகலாம் வேதாம்மா. நாளைக்கு சண்டே வேற. அவுட்டிங் ஏதாவது போகலாமா?” என்றான்.

“இல்லண்ணா..! நாளைக்கு வீட்லயே செலிபரேட் பண்ணலாம். நெக்ஸ்ட் வீக் பூஜா ஹாலிடேஸ் வருது.பிளஸ் வீக்கென்ட் வேற. ஊருக்கு போகலாம்னு இருக்கேன்..” என்றாள் தயங்கியபடி.

“என்னது ஊருக்கா?” என்றான் சரண் அதிர்வாய்.

“எதுக்குண்ணா இவ்வளவு ஷாக். ஊருக்குத் தான போறேன்னு சொன்னேன். அகரன் கூட வரேன்னு தான் சொன்னான்.” என்றாள்.

“செம் லீவ்க்கு போகலாமே வேதா” என்றான்.

“எனக்கு போகணும் போல இருக்குண்ணா. நம்ம வீட்டை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.” என்றாள் கமரிய குரலில்.

“ஓகே..! அதை நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம். இன்னைக்கு ஈவ்னிங் ரெடியா இருங்க. ஷாப்பிங் போகலாம்.” என்றான்.

“சரிண்ணா” .

போனை வைத்த சரண் யோசித்தபடி இருக்க, அருகில் இருந்த விஜய் அவனை ‘என்னாச்சு’ என்பதைப் போல் பார்த்து வைத்தான். அன்று ஸ்டாப் மீட்டிங் என்பதால்,  இருவரும் காலேஜில் தான் இருந்தனர்.

“நாளைக்கு அகரனுக்கு பிறந்த நாள்” என்றான் சரண்.

“ம்ம்..” என்றான் விஜய்.

“ஈவ்னிங் ஷாப்பிங் போகணும். அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தேன். வேதா நெக்ஸ்ட் வீக் ஊருக்கு போகணும்னு சொல்றா..அதான் நானும் போகலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு? எப்ப லீவ்னாலும் நீ உன்னோட நேட்டிவ் போறது வழக்கம் தான?” என்றான் விஜய் புரியாமல்.

“இல்ல ரகு..! இப்ப வேதா அங்க போய், எங்க நீலாம்மா எதையாவது பேசி வச்சுட்டாங்கன்னா சங்கட்டமா போய்டும். இவ இப்பதான் நார்மலா இருக்கா. பழைய மாதிரி மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்றான்.

“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும் சரண். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவங்க அங்க இருந்தா தான் இயல்போட இருப்பாங்க.இங்க வந்து இந்த லைப் ஸ்டைல்க்கு அடாப்ட் ஆனதே பெரிய விஷயம். அப்படி இருக்கும் போது, ஊருக்கே போகக் கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்?” என்றான் விஜய்.

“நீ சொல்றதும் சரி தான் மச்சான். எது வந்தாலும் பார்த்துக்கலாம்..” என்றவன்,

“ஈவ்னிங் ஷாப்பிங் வரியா மச்சான். இப்பல்லாம் நாம ஒன்னா வெளிய எங்கயும் போறதில்லை” என்றான்.

“வாய்ப்பில்லை” என்றான் விஜய் பட்டென்று.

“அதெல்லாம் வாய்ப்பிருக்கு. நீயா வந்துட்டா நல்லது. இல்லைன்னா கீர்த்தனா வந்து உன்னைக் கூட்டிட்டு வர்ற மாதிரி பண்ணிடுவேன்.” என்றான்.

“என்னடா பிளாக்மெயிலா?” என்றான். 

“கண்டிப்பா” என்றான் சிரிப்புடன்.

“உங்க லவ்வுக்கு சப்போர்ட் பண்ணி, ஹெல்ப் பண்ணாம, உங்களைப் பிரிச்சு விட்ருக்கணும்னு இப்பல்லாம் அடிக்கடி தோணுது மச்சான். காரணம் என்னவா இருக்கும்?” என்று விஜய் கேட்க,

“நல்லா வருவடா நல்லவனே..!” என்று பாவமாய் பார்த்து வைத்தான் சரண்.

சொன்னதைப் போல் ஈவ்னிங் அவளை ஷாப்பிங் அழைத்து செல்ல ரெடியாக வந்து நின்றான் சரண்.

“இந்த பஞ்சுவாலிட்டில உன்னை அடிக்க ஆளே கிடையாது உடன்பிறப்பே..” என்றபடி காரினுள் ஏற, அங்கு டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் விஜய். அவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் அதிர்ந்த விழிகள் எடுத்துக் காட்ட, 

சரணை முறைத்தான் விஜய்,’இதெல்லாம் எனக்குத் தேவையா என்பதைப் போல்’

“என்ன யோசனை வேதா?” என்று அகரன் பல்லைக் கடித்தான். ஒன்றும் பேசாமல் ஏறியவள் கீர்த்தனாவின் அருகில் அமர்ந்தாள்.அவளைத் தொடர்ந்து அகரனும் ஏற, கடுப்புடன் காரை எடுத்தான் விஜய்.

“அண்ணா உங்க கார் எங்க?” என்றாள் வேதா.

“என்னோட கார் சர்வீஸ்க்கு விட்ருக்கேன்டா.” என்றான்.

‘ஏன் எங்க கார்ல எல்லாம் வரமாட்டாங்களோ’ என்று நினைத்த விஜய் சரணை முறைத்தான்.

“மச்சான் கோபமா இருக்கியா?” என்றான் மெதுவாக.

வாயை மூடிகிட்டு வாடா..” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“ரைட்டு விடு” என்றவன் 

“சாங்க்ஸ் ப்ளே பண்ணவா “ என்றான் பொதுவாய்.

“ஆணியே புடுங்க வேண்டாம்..” என்றாள் கீர்த்தனா சிரிப்புடன். வேதாவோ இரண்டு பக்கமும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டு வர,

“வேதா இப்ப எதுக்கு பட்டிக்காட்டான் பஞ்சுமிட்டாயைப் பார்த்த மாதிரி இவ்வளவு சின்சியரா வேடிக்கை பார்த்துட்டு வர்ற?” என்றான் அகரன்.

‘இவன் ஒருத்தன்.. நேரங்காலம் தெரியாம? இப்ப இந்த விஜய் சார் முன்னாடி என்ன பேசுறது? நான் வாயைத் திறந்தாலே இவருக்கு ஆகாது. அது தெரியாம இவன் வேற?” என்று எண்ணியவள்,

“தம்பி அகரா நீ மட்டும் என்ன அமெரிக்கன் சிட்டிசனா? நீயும் அதே பட்டிக்காடு தாண்டா” என்றாள்.

“ஒரு பழமொழி சொன்னது குத்தமா?” என்றான்.

“இப்ப நீ எது சொன்னாலும் குத்தம் தான். வாயை மூடிகிட்டு வரணும். இல்லன்னா பாயாசம் தாண்டா” என்றாள்.

“இவ செஞ்சாலும் செய்வா?” என்ற ரீதியில் பார்த்து வைத்தான் அகரன்.

முன்னால் இருந்த கண்ணாடியில் பின்னால் இருந்தவளின் முகத்தைக் கண்ட விஜய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளின் எண்ணங்களை அவள் முகம் அப்படியே பிரதிபலிக்க, அது அவனுக்கும் தெளிவாய் தெரிந்திருந்தது. அது என்னவோ மற்றவர்களிடம் சகஜமாய் பேசும் வேதா, விஜய்யைக் கண்டால் திக்கித் திணறுவதை அவனறியாமல் அவன் மனம் ரசிக்கத் தான் செய்தது. தவறென்று தெரிந்தும் அந்த தவறையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தான் விஜய ரகு நந்தன். இப்படியே பார்த்தால் சரி வராது என்று நினைத்தவன்,

“எங்க போகணும்?” என்றான்.

“அண்ணா, எக்ஸ்ப்ரஸ் அவென்யு மால் போகலாம்” என்று அகரன் சொல்ல,

“ஓகே” என்பதோடு முடித்துக் கொண்டான்.

மகிழ்ச்சியுடன் செல்லும் வேதா திரும்பி வரும் போது அதே மனநிலையில் வருவாளா?