அத்யாயம் 4

விஜய ரகு நந்தனின் முன் அமர்ந்திருந்தனர் சரணும், ராமச்சந்திரனும். அவன் அமைதியே அவன் கோபத்தைக் சொல்லாமல் சொல்லியது. நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டதில் தான் அவனுக்கு இவ்வளவு கோபம். எல்லோரும் சேர்ந்து ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை பந்தாடுகிறார்கள் என்றே அவன் நினைத்தான்.

“எந்த விஷயத்தையும் யோசிக்காம செய்ய வேண்டியது. அப்பறம் பீல் பண்ண வேண்டியது. உன்னோட இந்த குணத்தை மாத்திக்க மாட்டியா சரண்?” என்றான் ரகு கோபமாய்.

‘இவன் என்ன மறுபடியும் பழைய மாதிரி டெரரா மாறிட்டான். கொஞ்ச நாள் நல்லாதான இருந்தான். இப்ப இவனை வேற சமாளிக்கனுமே’ என்று மனதிற்குள் நினைத்த சரண்,

“உன்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தது தப்புத்தான் ரகு. நீ இப்படித்தான்னு தெரிஞ்சும் வந்தேன் பாரு, நான் தான் முட்டாள்..” என்றான் சரண். கோபமே வராமல் கோபம் வந்தவனைப் போல் நடிப்பது அவனுக்கு அவ்வளவு சிரமமாக இருந்தது.

“இப்ப என்ன? நீ கோபமா இருக்கன்னு நான் நம்பனுமா?” என்று இடக்காய் கேட்ட ரகு,

“அங்கிள்..! ஏற்கனவே உங்க பொண்ணுக்கு நீங்க பண்ணியிருக்குறது சைல்ட் மேரேஜ். ஷி இஸ் ஜஸ்ட் ட்வென்டி. வீட்ல இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு. நீங்களும் ஒரு பெரிய இழப்பை சந்திச்சிருக்கிங்க. இப்படி இருக்குற சூழ்நிலையில, அவங்களை சென்னை கூட்டிட்டு வந்தது எனக்கென்னமோ சரியா படலை. அது அவங்க இயல்பை பாதிக்கும்” என்றான் ரகு. உறவினன் என்ற முறையில் நடந்த சம்பவங்கள் அவனுக்கும் தெரிந்திருந்தது.

“இப்ப உன்கிட்ட யாரும் கருத்துக் கேட்க இவ்வளவு தூரம் வரலை ரகு. நாங்க வந்த விஷயம் வேற” என்றான் சரண்.

அவனை இடுங்கிய பார்வை பார்த்த ரகு..” ஆமா, நீயும் நானும் இந்தியா பாகிஸ்தான் பாரு… சார் ரொம்ப தூரம் டிராவல் பண்ணி, பாகிஸ்தான் பார்டருக்குள்ள  வந்திருக்காரு. அதைப் பத்தி நாங்க கருத்து சொல்லிட்டு இருக்கோம்..” என்ற ரகு,

“இவனுக்காக இல்லைன்னாலும், உங்களுக்காக ஓகே அங்கிள். அவங்க இங்க மேலயே தங்கிக்கட்டும். ஆனா, இந்த அண்ணன் சார் சொன்ன மாதிரி வாடகை எல்லாம் வேண்டாம். நமக்குள்ள என்ன இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்..” என்றான்.

“அதெப்படி? வேற யார் வந்தாலும் வாடகை வாங்கிப்பதானே?” என்றான் சரண் விடாமல்.

“நான், இங்க வீடு வாடகைக்கு விடப்படும்னு போர்டு எதுவும் மாட்டியிருக்கேனா? இத்தனை நாள் என்னமோ என்கிட்ட இப்படி பெர்மிஷன் வாங்கித்தான் சார் ஒவ்வொன்னும் பண்ணிங்களோ” என்றான் ரகு நக்கலாய்.மூன்றாம் மனிதனிடம் கேட்பதைப் போல் அவர்கள் கேட்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“அப்படி இல்லை. இது உன்னோட பிரைவேட் பிளேஸ்னு தெரியும். அம்மாவும் முடியாம இருக்காங்க.  உனக்கு தொந்தரவுன்னு  நீ எதுவும் நினைச்சுக்கக் கூடாது பாரு. அதான் கேட்க வந்தோம்” என்றான் சரண்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் சரண். சும்மா என்னோட கோபத்தைத் தூண்டாத. அகரனும், வேத வர்ஷினியும் வெளி ஆள் இல்லை.  வாடகைக்கு வேணும்னா நீ வேற வீடு பார்த்துக்கோ. இல்லையா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்ற பட்சத்துல, அதாவது நானும் அம்மா மட்டும் தான். யாரும் எதுவும் நினைக்க மாட்டிங்கன்ற பட்சத்துல அவங்களை தாராளமா மேல் போர்ஷன்ல தங்கிக்க சொல்லு..” என்றான்.

“இதுல நாங்க நினைக்க என்ன தம்பி இருக்கு? அவங்களுக்கு இங்க இருக்குறது தான் பாதுகாப்பா இருக்கும். எல்லாரும் பக்கம் பக்கம் இருந்த மாதிரியும் இருக்கும். அது என்னவோ புள்ளைய ஹாஸ்ட்டல்ல விடுறதுக்கு மனசே இல்லை. அப்படி விடுற மாதிரி இருந்திருந்தா, புள்ள எடுத்த மார்க்குக்கு நாங்க முன்னமே இந்த காலேஜ்ல சேர்த்திருப்போம். பிள்ளை எங்க கைக்குள்ளவே இருக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனா, விதி அவளை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு” என்று கண் கலங்கினார்.

“என்னோட கவலையெல்லாம் உங்களை நினைச்சு தான் அங்கிள். உங்க பொண்ணு கூட மீண்டு வந்துருவாங்க. ஆனா, நீங்க தான் ரொம்ப தளர்ந்து போய்ட்டிங்க. கடந்து வந்துடுங்க அங்கிள். உங்களுக்காக இல்லைன்னாலும், உங்க பொண்ணுக்காக” என்றவன், 

“உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்றபடி எழுந்தான்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தம்பி..!” என்று அவர் மறுக்கும் முன் உள்ளே சென்றிருந்தான்.

“கவலைப் படாதிங்க ராம் அப்பா..! அவன் நல்லாவே காபி போடுவான். அவன் காபிக்கு நான் அடிமை” என்றான் சிரித்துக் கொண்டே.

“தங்கமான புள்ளைப்பா..! இந்த காலத்துல இப்படி பிள்ளைங்களைப் பார்க்குறது கஷ்ட்டம். அவங்க அம்மாவை அவரே பார்த்துக்கறார். நிதானம், பொறுப்பு, படிப்பு,வேலை, அழகுன்னு நிறைவா எல்லாமே இருக்கு. முன்னாடியே தெரிஞ்சிருந்தா, வேதாவை இந்த தம்பிக்கே பேசியிருக்கலாம்” என்றார் ஏமாற்றத்துடன்.

“அப்பா, மெதுவா பேசுங்க. அவன் காதுல எதுவும் விழுந்திடப் போகுது. அது என்னவோ அப்ப இருந்தே கல்யாணம்னா காத தூரம் ஓடுவான். இப்ப மட்டும் நீங்க பேசுறதை கேட்டான், அவ்வளவு தான்.ஏற்கனவே சார்க்கு என் மேல கோபம்” என்றான் சிரிப்புடன்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சூடான காபியுடன் வந்தான் ரகு.

“ம்ம்..! வாவ்..! என்ன சொல்லுடா விஜய்.. உன் காபி டேஸ்ட்டே தனி தான்.  இதுல கொஞ்சமாவது உன் தங்கச்சிக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். காபின்ற பேர்ல ஒன்ன கலக்கித் தருவா பாரு..” என்றபடி நிமிர அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் ரகு.

“இப்ப எதுக்கு முறைக்கிற..?” என்றான் புரியாமல்.

“உன்னை விஜய்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“தெரியாம சொல்லிட்டேன்டா..” என்றான் பாவமாய்.

“நோ..! யார் வேணும்னாலும் அப்படி கூப்பிடலாம். ஆனா, நீ எப்பவுமே கூப்பிடக் கூடாது” என்றான் கறாராய்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்டா சொல்லிட்டேன். ஏதோ அறியாம தெரியாம உன்னைக் கிண்டல் பண்ணதுக்கு, இன்னமும் மனசுல வச்சுட்டு சுத்துற” என்று சரண் சோகமாய் கேட்க, ராமச்சந்திரனை வைத்துக் கொண்டு மேற்கொண்டு அவனால் எதுவும் பேச முடியவில்லை.

அவனுடன் பேசிய பிறகு, மனதில் இருந்த பெரிய பாரமே இறங்கியதைப் போல் இருந்தது ராமச்சந்திரனுக்கு. அவர் மனதை குழப்பிக் கொண்டிருந்த அத்தனை விஷயங்களும் தூரமாய் சென்றிருந்தது.

“நீங்க மிஸ்டர் நந்தகுமார் பேரண்ட்ஸ் கிட்ட பேசுனிங்களா அங்கிள்” என்றான் அவர்கள் கிளம்பும் போது.

“இன்னும் இல்ல தம்பி. அவங்க கூட சாதரணமா பேச முடியும்னு எனக்குத் தோணலை.  அப்படி பேசுறதுல விருப்பமும் இல்ல” என்றார் ராமச்சந்திரன்.

“ஓகே அங்கிள்..! நீங்க எதை பத்தியும் கவலைப்படாதிங்க. எல்லாத்தையும் சரண் பார்த்துப்பான். அப்பறம் உங்க பொண்ணும் பேசிக்காவே கொஞ்சம் பிரேவ் தான். அதனால பிரச்சனை இல்லை..” என்றான் ரகு.

“அது என்னவோ உண்மைதான் தம்பி. என் பொண்ணுக்கு தைரியம் அதிகம் தான். எல்லாம் காதம்பரியோட வளர்ப்பு..” என்றவர் கண் கலங்க,

“இப்பத்தான் சொன்னேன் அங்கிள்” என்று அதட்டினான்.

“இல்லைத் தம்பி..!” என்று தன்னை சரி செய்தவர்,

“அம்மாவுக்கு முடியாம இருக்காங்கன்னு சொன்னிங்க..! எங்க இருக்காங்க? பார்க்கலாமா அவங்களை” என்றார்.

“தூங்குறாங்க அங்கிள்.! அவங்களால எழுந்து நடக்க முடியாது. பேரலெல் அட்டாக் வந்தப்ப இருந்து இப்படித்தான் இருக்காங்க.  நான் இல்லாதப்போ பார்த்துக்க ஒரு நர்ஸ் அரேஞ் பண்ணியிருக்கேன் அங்கிள். அவங்களும் வந்து பார்த்துப்பாங்க..” என்றான்.

“சீக்கிரம் சரியாகிடுவாங்க தம்பி” என்றார்.

“அவங்களுக்கு ஹெல்த் வைஸ் இன்னும் கொஞ்சம் பிராப்ளம் இருக்கு அங்கிள். எங்க போய் ட்ரீட்மென்ட் பார்த்தாலும், அவங்களுக்கான நாட்கள் குறைவுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க . என்னால தான் அதை அக்சப்ட் பண்ண முடியலை. எவ்வளவு தூரம் நாட்களை இப்படியே நகர்த்த முடியும்னு யோசிச்சுட்டு இருக்கேன்.” என்றவனின் கைகளை சரண் ஆதரவாக பற்ற,

“இப்போ எல்லாம் ஓகே தான் மச்சான். ஆரம்பத்துல இருந்த விஜய் மாதிரி இப்போ நான் இல்ல தானே. பாரு எவ்வளவு நிதானமா இருக்கேன். ஆனா, நான் இப்படி இருக்கனும்னு நினைச்ச அம்மா மட்டும் பழைய மாதிரி இல்லை..” என்றான் கசந்த புன்னகையுடன்.

“அதிக நிதானம் கூட, சில சமயம் ஆபத்துன்னு படிச்சிருக்கேன் விஜய்” என்றான் சரண்.

“மச்சான் ரகுன்னே கூப்பிடு. விஜய் வேண்டாம். அந்த பழைய விஜய் வேண்டாம். நான் ரகுவாவே தான் இருக்க ஆசைப்படுறேன்” என்றான்.

“கண்டிப்பா, நீ பழைய விஜய்யா மாறுவ. அதை நான் பார்க்கத்தான் போறேன்.” என்றான் சரண்.

“நெவர்” என்றான் ரகு.

அவர்கள் பேசியது காதில் விழுந்தாலும், ராமச்சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர்களுக்குள் ஏதோ பழைய விஷயம் என்பதைப் போல் அமைதியாக இருந்து கொண்டார்.

“நைட் அங்க சாப்பிட வந்திடு ரகு. கீர்த்தனா சொல்லச் சொன்னா” என்றான்.

“ இன்னொரு நாள் வரேன் சரண்” என்றான்.

“ வாங்க தம்பி..! நானும் நாளைக்கு ஊருக்குக் கிளம்பிடுவேன்” என்றார் ராம்.

“ஓகே அங்கிள்..!” என்றவன்,

“ஏண்டா என்னையும் கோர்த்து விடுற” என்று சரணை பாவமாய் பார்க்க,

“உன் தங்கச்சியோட சமையல் மகிமை உனக்கு தெரிஞ்சிருந்தும் எனக்கு கட்டி வச்ச பார்த்தியா? அதான் இப்படி உனக்கு அடிக்கடி பனிஷ்மென்ட்..” என்று சிரித்தபடி கூறியவன், ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் யோசனையுடன் அமர்ந்துவிட்டான்.

‘இதெல்லாம் சரியா வருமா?’ என்று யோசித்தவனுக்கு, மழை நாளில் பார்த்த வேத வர்ஷினியின் முகம் தான் வந்து போனது. அவளின் அந்த முகம் அவனறியாமல் அவ்வப்போது முகம் காட்டி அவனின் இயல்பை மறக்கச் செய்யும். அதை அவன் வெறுத்தான். ஒரு சிறு பெண்ணின் முகம் தன் இயல்பை மாற்றுவதை அவன் விரும்பவில்லை. மனதிற்குள் வேலியிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவனுள் வேலியில் படர்ந்த கொடியாய் படர்ந்து கொண்டிருந்தது அவளின் நினைவுகள். தலையை கைகளால் தாங்கி அமர்ந்தவனுக்குள் கடந்து போன நினைவுகளும், கடக்க நினைக்கும் நினைவுகளும்  ஆர்ப்பரித்து அவன் அமைதியை அழித்து கொண்டிருந்தது.

கடந்து போன நினைவுகளைக் கூட அவன் கடந்து விடுவான் போல. ஆனால் கடக்க நினைக்கும் வேத வர்ஷினியின் முகத்தை மட்டும் அவனால் மறக்க முடியாதது போல் தோன்றியது. 

‘நான் ஏன் அந்த பொண்ணைப் பத்தியே யோசிக்கிறேன். அவள் இன்னொருவனுக்கு சொந்தமானவள். இப்படி நினைக்கிறது தப்பு. இது தெரிஞ்சா அந்த பொண்ணு என்னைப் பத்தி என்ன நினைக்கும்.?’ என்று மனதிற்குள் எண்ணியவன், தீர்மானமா சில முடிவுகளை எடுத்துக் கொண்டான்.

‘இப்படியே விட்டால் சரி வராது..இதைப்பற்றி தெளிவாக சரணிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.  

இரவு அங்கு செல்லலாமா? வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தியவன், கொஞ்சம் தெளிவான மனநிலைக்கு வந்த பிறகு, செல்வது என்று தீர்மானித்தான். என்னதான் கீர்த்தனா தங்கையாக இருந்தாலும், சரண் நண்பனாக இருந்தாலும், அவர்களை தொந்தரவு செய்வது எப்போதும் ரகுவுக்கு பிடிக்காது. பக்கத்து வீடாகவே இருந்தாலும், கீர்த்தனாவின் திருமணத்திற்கு பிறகு, ஒன்றிரண்டு முறை தான் சென்றிருக்கிறான். அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே. அவன் ஒரு தனிமைக் காதலன். அதனால் மற்றவர்களின் தனிமையிலும் தலையிடுவதில்லை.

 அவன் சென்ற நேரம், ராமச்சந்திரன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் வேத வர்ஷினி.

அதைப் பார்த்தவனுக்கு ‘வந்திருக்க கூடாதோ’ என்று தோன்றியது. அவன் திரும்பி செல்ல எத்தனிக்க,

“உள்ள வாங்கண்ணா? நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எதுக்கு எப்ப பார்த்தாலும் தயங்கிட்டே இருக்கீங்க..?” என்றாள் கீர்த்தனா கோபமாக.

‘இனி திரும்பி போக முடியாது’ என்று நினைத்தவன்,

“எனக்கென்ன தயக்கம்? எப்படியும் நீ சமைச்சிருக்க மாட்ட. என்னைய சமைக்க வைக்கிற பிளானா தான் இருக்கும். அதான் வந்த வழியே ஓடிடலாம்னு நினைச்சேன். ஆனா, மாட்டிகிட்டேன்” என்றான் சிரிக்காமல்.

“அண்ணா..! யூ டூ” என்று முறைத்தாள்.

“எதுக்கு இந்த முறைப்பு, அவன் உண்மையைத் தான சொன்னான். சாப்பிட வாங்கண்ணான்னு அன்பா அழைக்க வேண்டியது…அப்பறம் நீங்க அது செய்றது நல்லா இருக்கும்,இது செய்றது நல்லா இருக்கும்னு சொல்லி அவனையே சமைக்க வைக்க வேண்டியது. அப்பறம் நல்லா சாப்பிட வேண்டியது. இது தான காலங்காலமா நடக்குது..” என்றான் சரணும் சிரிக்காமல்.

“எங்கண்ணா எனக்கு செஞ்சு தர்றான். நான் சாப்பிடுறேன். அதில் உங்களுக்கென்ன பிரச்சனை?” என்று சிணுங்கியவள்,

“ஆனா அண்ணா இன்னைக்கு நீங்க சமைக்க வேண்டியது இல்லை. ஏற்கனவே சமைச்சு முடிச்சாச்சு.” என்றாள்.