“நீங்க தான் சார் பிரச்சனை. ஏன் சார் இவ்வளவு ஹேண்ட்ஸமா இருந்துகிட்டு டீச்சிங் ப்ரோபஷன் வந்திங்க. ஒரு டோலியும் எங்களைத் திரும்பிப் பார்க்குறது இல்லை. சரின்னு மனசைத் தேத்திக்கிட்டு காலேஜ் வந்துகிட்டு இருந்தோம். அப்போ தான் எங்க வாழ்க்கையில ஒளி ஏத்த வந்தா வேதா. வேதா டார்லிங் எங்க தேவதை சார். அடுத்த காலேஜ்ல இருந்து வந்தாலும் எங்க கஷ்ட்டத்தை புரிஞ்சுகிட்டு “சைட் அடிக்கிறியா அடிச்சுக்கன்னு” பெருந்தன்மையா இருந்த ஒரே நல்ல உள்ளத்தையும் இப்படி கட்டம் கட்டி கல்யாணம் பண்ணி தூக்கிட்டிங்களே சார். உங்களுக்கே இது சரின்னு படுதா? “ என்று வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, மற்ற மாணவர்கள் சிரித்து வைத்தனர்.

“ஏன்டா?” என்பதைப் போல் பார்த்து வைத்தாள் வேதா.

“பேசி முடிச்சாச்சா தருண். இப்போ நான் கிளாஸ் எடுக்கலாமா?” என்றான் விஜய்.

“சார் கொஞ்சமாவது எங்க பீலிங்க்ஸ புரிஞ்சுக்கங்க. எப்படி சார் இப்படி எதுவுமே நடக்காத மாதிரி கிளாஸ் போகலாமான்னு கேட்குறிங்க?” என்றான் தருண் மீண்டும்.

“இப்ப என்னடா பண்ண சொல்றிங்க?” என்றான் பொறுமையிழந்து.

“உங்க மேரேஜ் ஸ்டோரி சொல்லுங்க” என்றனர் அனைவரும்.

“என்கிட்டே மேரேஜ் ஸ்டோரி இல்லை. என் மேரேஜே ஒரு ஸ்டோரி தான்டா” என்றவன்,

“ஆமா அதையேன் நான் சொல்லணும்?” என்றான்.

“சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு சார். கேட்க வேண்டிய உரிமை எனக்கு இருக்கு” என்றான் தருண் வேகமாய்.

“யாருடா நீ?” என்றான் விஜய் சிரிப்புடன்.

“வேதா டார்லிங். சார் நான் யாருன்னு கேட்குறாரு. அவருக்கு நான் யாருன்னு சொல்லு டார்லிங்” என்றான் தருண்.

“யாருடா நீ?” என்றாள் வேதா. அவளின் கேள்வியில் மீண்டும் ஒரு முறை அவன் இதயம் வெடிக்க,

“என்னைய பார்த்தா அப்படி ஒரு கேள்வியை கேட்ட?” என்ற தருண் நெஞ்சைப் பிடித்தான்.

“எழுதுங்கள் என் கல்லறையில்” என்றான்.

“என்னன்னு?” என்றாள் ரம்யா வேகமாக.

“நான் இதயமில்லாதவன்  என்று”

“அது தான் ஏற்கனவே நொறுங்கிப் போச்சுன்னு தெரியுமே? அதை எதுக்கு தனியா கல்லறையில எழுதிகிட்டு” என்றாள் ரம்யா.

“டேமேஜ் பண்ணிட்டாளே” என்றவன்,

“பாடுங்கள் என் கல்லறையில்”

“என்னன்னு?”

“நான் பைத்தியக்காரன் என்று?”

“இதை தனியா வேற பாடணுமா? அது ஊரு உலகத்துக்கே தெரியுமே” என்றாள் ரம்யா.

 “தருண் அண்ணா” என்றாள் வேதா.

“ஏதே அண்ணனா?” என்றவன்,

“பார்த்திங்களா சார் என் நிலைமையை. மனசுல இவ்வளவு வலியையும் தாங்கிகிட்டு ஏன் காலேஜ் வந்தேன் தெரியுமா?” என்று அவன் வசனம் பேச,

“எப்படியும் வேதா இன்னைக்கு ட்ரீட் வைப்பா. வகை வகையா வாங்கித் தருவான்னு தான” என்றாள் ரம்யா சிரிப்புடன்.

“இதுக்கு மேல ஒரு டேமேஜை என் மனசும் தாங்காது. பாடியும் தாங்காது சார். எனிவே கங்ராட்ஸ் யுவர் மேரேஜ் லைப் சார்” என்றான்.

“உனக்கு கிளாஸ் டைமை எப்படியாவது ஒப்பேத்தனும். அதுக்கு இன்னைக்கு ஒரு கன்டென்ட் கிடைச்சிருச்சு. அப்படித்தான?”என்றான் விஜய் சிரிப்புடன்.

“அப்படியும் வச்சுக்கலாம் சார்” என்று சிரித்தவன்,

“ஆனா,வேதாவுக்கு ஒண்ணுன்னா, ஒரு அண்ணனா நான் வந்து நிப்பேன் சார்” என்றான் வேகமாய்.

“மச்சான் நிஜமா உனக்கு வெட்கமாவே இல்லையாடா?” என்றான் ஆனந்த்.

“அது என்னைக்கு நம்மகிட்ட இருந்திருக்கு?” என்றவனின் பதில் கிளாஸ் ரூமே சிரிக்க,

“ஓகே..! ஜோக்ஸ் அப்பார்ட். கேம்பஸ்குள்ள வந்துட்டா ரிலேஷன்ஷிப்புக்கு எல்லாம் இடம் கிடையாது. ஆஸ்யூஸ்வல் ஷி இஸ் அ ஸ்டூடன்ட். அன்ட் ஐ ஆம் அ ப்ரொபசர். தட்ஸ் ஆல். வி ஷுட் லீவ் திஸ் கான்வேர்சேஷன் ஹியர் ஓகே” என்றான் விஜய்.

“ஓகே சார்” என்றனர்.

“கேன் ஐ டேக் லெசன் நவ்” என்றான்.

“ஷ்யர் சார்”

“ஆனாலும் வேதா, இவரை எப்படித்தான் வச்சு சமாளிக்கிறியோ. வீட்லயும் இப்படித்தான் நடந்துப்பாரா? அநியாயத்துக்கு புரொப்பசரா இருக்கார்” என்றாள் ரம்யா.

அவன் வீட்டில் நடந்து கொள்ளும் முறையை நினைத்துப் பார்த்தவளுக்கு சிரிப்புடன் முகமும் சிவக்க, பாராது பார்த்திருந்த விஜய் அந்த முகத்தை அப்படியே தனக்குள் சேமித்துக் கொண்டான்.

அதற்கடுத்து வந்த நாட்கள் எல்லாம் விஜய் வேதாவின் வாழ்வில் மகிழ்ச்சியான நாட்களே.  ஓவ்வொரு நாளும் அவளை கொண்டாடித் தீர்த்தான் என்று தான் சொல்ல வேண்டும்.  அவள் வாழ்வில் ஏற்பட்ட அத்தனை வலிகளுக்கும் வடிகாலாய் இருந்தது விஜயின் அன்பு.அவன் தனிமையின் தேவதையானாள் வேதா.

இப்படித்தான் காதலிக்க வேண்டும், எப்படியும் காதலிக்கலாம், இப்படித்தான் வாழவேண்டும், எப்படியும் வாழலாம் போன்ற எந்த நியதிகளுக்குள்ளும் சிக்காமல் அவர்களுக்கென்று சில நியதிகளை அவர்களாகவே உருவாக்கியிருந்தனர்.

இதோ சந்தியாவின் வளைகாப்பிற்காக மதுரை வந்திருந்தனர். வந்ததில் இருந்து குடும்பத்தோடு ஐக்கியமாகி விட்டளைக் கண்டு முறைத்துக் கொண்டிருந்தான் விஜய்.

“அட விடுங்க விஜய் அண்ணா. இத்தனை நாளுக்கு அப்பறம் இப்ப தான் அவ கண்ணுக்கே நாங்கல்லாம் தெரிஞ்சிருக்கோம். இப்பவும் முறைக்கிறிங்களே? ரொம்ப ஓவரா தான்பா லவ் பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான் அகரன் சிரிப்புடன்.

“எனக்குன்னே வருவீங்களாடா?” என்றான் விஜய்.

“விடு மச்சான். அவ டிசைன் அப்படி. அதையெல்லாம் மாத்த முடியாது” என்றான் சரண்.

“அதெல்லாம் மாத்தியாச்சு. இப்ப பாரு” என்றவன் வேண்டுமென்றே அவளைப் பார்த்து வைக்க, அவனின் பார்வையில் முகம் சிவந்தவள்.. அவனை முறைக்க முயன்று தோற்றாள்.

“அன்னைக்கு கண்ணை நோண்டிடுவேன்னு சொன்ன என் தங்கச்சியா இது?” என்றான் சரண் அதிர்ச்சியாய்.

“உன் தங்கச்சி எல்லாம் போன மாசம். இப்ப என் பொண்டாட்டி” என்றான் விஜய் நமட்டுச் சிரிப்புடன்.

“நானும் பெர்பார்ம் பண்றேன்டா” என்றவன் கீர்த்தனாவையே பார்த்து வைக்க, சரணை பார்த்த கீர்த்தனா,

“என்னாச்சு உங்களுக்கு? எதையோ முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம பார்க்கற மாதிரி பார்க்குறிங்க?” என்றாலே பார்க்கலாம், அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்து விட்டான் விஜய்.

“கிராதகி..! ஒரு ரொமாண்டிக் லுக்கை பீல் பண்றாளா பாரு?” என்று நொந்து கொண்டான் சரண்.

“ஏதே, இப்ப பார்த்ததுக்கு பேரு ரொமாண்டிக் லுக்கு” என்று விஜய் கிண்டல் பண்ண,

“வர வர உன்னோட காமெடி சென்சுக்கு அளவே இல்லண்ணா” என்று அகரன் போகிற போக்கில் சொல்லிவிட்டு போக,

“அடக் கடவுளே” என்று பார்த்திருந்தான் சரண்.

இரவு எப்போதும் போல் தாமதமாக தூங்க வந்தவளை பிடித்துக் கொண்டான் விஜய்.

“அப்படி என்னத்த தாண்டி பேசுவிங்க? குடும்பமா சேர்ந்துட்டா, மேடம்க்கு என்னையெல்லாம் மறந்துடுது” என்றான் அவளை இழுத்து மடியில் அமர்த்தியபடி.

“அது நீலாம்மா கீழ விழுந்து கை பிராக்சர் ஆகிடுச்சுல்ல. அதைத்தான் பேசிட்டு இருந்தோம்” என்றாள்.

“கையோட போச்சேன்னு நானே கவலையில இருக்கேன்” என்றான் விஜய். அவள் அவனை முறைக்க,

“என்ன முறைப்பு? உன்னை மாதிரி அவ்வளவு நல்லவன் எல்லாம் நான் கிடையாது” என்றான் சிரிப்புடன்.

“நீங்க சிரிக்கிறதை பார்த்தா அவங்க தெரியாம விழுந்த மாதிரி தெரியலை. நீங்களே விழ வச்ச மாதிரி தெரியுது” என்றாள் சந்தேகமாய்.

“எஸ் அப்கோர்ஸ்” என்றான். வேதா வாயைப் பிளக்க,

“இப்படியெல்லாம் பார்த்து மனுஷனை டெம்ப்ட் பண்ண கூடாது” என்றான்.

“ஏன் இப்படி பண்ணிங்க?” என்றாள்.

“நான் தான் சொன்னேனே உங்க அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லைன்னு. செஞ்ச தப்புக்கு கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாம்?” என்றான்.

“என்ன இப்படி சொல்றிங்க? அவங்க கை சரியாக குறைஞ்சது மூணு மாசமாவது ஆகும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்றாள் கவலையாய்.

“ஆறு மாசமே ஆனாலும் அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை” என்றான்.

நடந்தது இது தான். கடைக்கு செல்வதற்காக கிரியுடன் பைக்கில் கிளம்ப ஆயத்தமான நீலாவதியை, தானே அழைத்து செல்வதாக கூறினான் விஜய். அவனின் திடீர் பாசத்தில் மயங்கிய நீலாவதியும் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடன் செல்ல, வேண்டுமென்றே கீழே விழ வைத்திருந்தான் விஜய். கீழே விழுந்து கையை ஊன்றியதில் அவரின் ஒரு கையில் முறிவு ஏற்பட்டிருந்தது.

“இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்” என்றாள் வேதா.

“வா, நான் எவ்வளவு மோசம்னு காட்றேன்” என்றான்.

“ஆளை விடுங்க சாமி”

“விடுறதுக்கா இவ்வளவு கஷ்ட்டப்பட்டு கட்டியிருக்கேன்” என்றான்.

“நீங்க இந்த அளவுக்கு பேசுவிங்கன்னு நான் நினைக்கவே இல்லை. அப்படியே டெரரா வச்சிருப்பிங்க முகத்தை. உங்களை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும்” என்றாள் சட்டை பட்டனை திருகியபடி.

“இப்போ பயம் விட்டு போச்சு, அப்படித்தான?” என்றான்.

“ஆமா” என்றாள்.

“நீ கூடத்தான் ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருந்த. ஆனா இப்ப அப்படியா இருக்க?” என்றான்.

“நான் என்ன பண்ணேன்?”

“நீ என்னடி பண்ணலை? நல்லா இருந்தவனை கெடுத்தவளே நீதான்” என்றான் மந்தகாசமாய்.

“யாரு நானு?”

“இல்லையா பின்ன?” என்றவனிடம்

“எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.

“என்ன?”

“நிஜமாவே எங்கம்மா சொன்னதுக்காகத் தான் என்னை மேரேஜ் பண்ணிங்களா?” என்றாள் நக்கலாக.

“எஸ் அப்கோர்ஸ்” என்றான்.

“நம்பிட்டேன்” என்றாள்.

“என்ன திடீர்னு?” என்றான்.

“இந்த போட்டோ எப்ப எடுத்திங்க?” என்றாள்.

“இந்த போட்டோ பர்ஸ்ல தான இருந்துச்சு?” என்றான் சந்தேகமாய்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல்.

தலைமுடியை பின் தலையோடு கோதியவன்,

“அது, கீர்த்தனாவை மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தோமே அப்ப. அன்னைக்கு லேசான மழை. அப்போ ஒரு பொண்ணு காலேஜ் பஸ்ல இருந்து இறங்கி தேவதை மாதிரி வந்தா. சின்ன பிள்ளை மாதிரி அந்த மரத்தைப் பிடிச்சு ஆட்டி விளையாடிட்டு இருந்தா. ஏன்னு தெரியலை அவகிட்ட இருந்து பார்வையை எடுக்க முடியலை. யோசிக்காம மொபைல்ல கேப்ஷர் பண்ணிட்டேன்” என்றான் ரசனையுடன்.