“ம்ம். நீயே தான். மேடம் தான் பெரிய ரைடர் ஆச்சே” என்று சிரிப்பை உதட்டில் தேக்க,

“இதுல எந்த உள் குத்தும் இல்லையே?” என்றாள் முன்னெச்சரிக்கையாய்.

“ச்ச்சா..அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்றவன், சரணுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டு, அவள் பின்னால் அமர்ந்து கொண்டான்.

“எனக்கு இங்க ரூட் எல்லாம் தெரியாது” என்றாள்.

“நான் எதுக்கு இருக்கேன்” என்றான்.

“ரைட்” என்றவளுக்கு, அது புது வித அனுபவமாய் இருந்தது.

“நாம எங்க போறோம்?” என்றாள்.

“அப்படியே போய்கிட்டே இருப்போம்” என்றவன் அவளை இடுப்போடு அணைக்க,

“ஆத்தாடி” என்றவளுக்கு உடலின் அனைத்து உறுப்புகளும் உழன்று சதி செய்தது.

“நீங்க தள்ளியே உட்காருங்க” என்றாள் திக்கித் திணறியபடி.

“தள்ளி தள்ளி உட்கார்ந்து போறதுக்கு எதுக்கு பைக்ல போகணும்? கார்லயே போயிருக்கலாமே” என்றான் கடுப்புடன்.

“இல்ல..எனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுது” என்றாள்.

“என்ன பீல் ஆகுது?” என்று காதோரத்தில் கேட்டவனின் குரலில்,

“ஏங்க கூசுது” என்றாள் சிணுங்கலுடன்.

“நீ ஏன் இதையெல்லாம் கவனிக்கிற? நீ ரோட்டைப் பார்த்து ஓட்டு” என்றான் சிரிப்புடன். அவன் அருகாமை கொடுத்த அவஸ்தையில் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்.

“என்னாச்சு?” என்றபடி இறங்க,

“நீங்களே டிரைவ் பண்ணுங்க” என்றவள் பின்னால் வந்துவிட்டாள்.

சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்தவனின் கரங்களில் வண்டி சீறிப் பாய்ந்தது.

“நான் உன்ன மாதிரியெல்லாம் கிடையாது.தாராளமா என்னைப் கட்டிப்பிடிச்சிக்கலாம்” என்றான்.

“நீங்க சொல்லனும்னு அவசியமில்லை” என்று சிலுப்பியவள் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டாள்.

“சூப்பர் சூப்பர்.செம்மையா டிரைவ் பண்றிங்க. சரண் அண்ணா இவ்ளோ ஸ்பீட் எல்லாம் போக மாட்டான்” என்றாள்.

“ஏண்டி உனக்கு பயமா இல்லையா?” என்றான் ஆச்சர்யமாய்.

“உங்க கூட தானே இருக்கேன். அப்பறம் ஏன் பயப்படனும்” என்றாள். அவளின் பதிலில் வண்டியின் வேகம் தன்னால் குறைந்தது.

“என்னாச்சு?” என்றாள்.

“நம்பி ஒருத்தி பின்னாடி இருக்கும் போது, நானும் பொறுப்பா ஓட்டனும்ல. அதான்” என்றான் ஆழ்ந்த குரலில்.

நீண்ட சாலையில் நீள் வழிப் பயணம்.அந்த பயணம் அவர்களின் நெருக்கத்தை இன்னமும் அதிகப்படுத்தியிருந்தது. செல்லும் வழியெங்கும் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்து, கெஞ்சி,கொஞ்சி ,மிரட்டி, அதட்டி என மொத்தமாய் அவளை விஜயின் வேதாவாக மாற்றியிருந்தான். குளிரில் மேலும் அவனுடன் ஒன்றி அவன் உணர்வுகளுடன் சதிராட்டம் ஆடிக் கொண்டிருந்தாள் வேதா. நடு இரவில் வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு உடைக்கு மாறி மாறியவள், விஜயை தேடி வர, அவனோ ஊஞ்சலில் அமர்ந்து நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.

“பனி விழுது. ஏன் இங்க உட்கார்ந்திருக்கிங்க?” என்று வந்தவளை இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டான்.

“தூங்கலையா? எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

அவனோ அமைதியாய் இருக்க,

“என்னாச்சு?” என்றாள், கைகளை அவன் கைகளோடு பிணைத்து, அவன் மேல் சாய்ந்து கொண்டு.

“வேதா” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ம்ம்”

“விஜயை பிடிச்சிருக்கா?” என்றான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,

“விஜயை மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்றாள்.

“நீ கேட்க மாட்டியா?”

“என்னன்னு?”

“வேதாவை பிடிச்சிருக்கான்னு?” என்றான்.

“அது தான் எனக்கே தெரியுமே?” என்றாள்.

“உனக்கு என்ன தெரியும்?”

“இங்க முழுக்க இருக்குறது நான் தான்னு தெரியும்” என்றாள் அவன் இதயத்தை சுட்டிக் காட்டி.

அவன் ஆச்சர்யமாய் பார்க்க,

“இன்பேக்ட்..! இந்த பிரச்சனையெல்லாம் நடக்குறதுக்கு முன்னமே எனக்குத் தெரியும்” என்றாள் அவன் முகம் பார்த்து. அவள் உள்ளத்து உணர்வுகள் எல்லாம் நிலவொளியில் அவள் முகத்தை ஜொலிக்க செய்து கொண்டிருந்தது.

“எப்படி?” என்றான்.

“பர்ஸ்ட் டைம் மால் போனோமே, அப்போ” என்றாள்.

“அப்பவேவா?” என்றவனுக்குத் தான் அதிர்ச்சி.

“ம்ம்..!! நந்தகுமார் என் கையை பிடிச்ச அந்த நிமிஷம் எனக்கு தெரிஞ்சது அது நீங்க இல்லைன்னு. நீங்க என்னைத் தாங்கிப் பிடிச்சப்பவே தெரிஞ்சது அது நீங்க தான்னு” என்றாள் தலை சாய்த்து.

“வேதா” என்றனுக்கு கண்கள் லேசாக கலங்கியது.

“எஸ்..! ஹாஸ்பிட்டல்ல நீங்க வாயைத் திறந்து என்கிட்டே பேசலைன்னாலும், உங்க ப்ரன்சன்ஸ உணர வச்சிங்க தானே. இதோ இப்படி என்னோட கை விரல்களை உங்களுக்குள்ள மொத்தமா அடக்கி அதுல ஒரு இறுக்கம் குடுப்பிங்க பாருங்க, அதுல உங்க தவிப்பும் உணர்வும் எனக்கு தெளிவா புரிஞ்சது. நீங்க சொன்ன அந்த ஈர்ப்பு ஹாஸ்பிட்டல்ல தான் எனக்கு வந்தது. உருவம் மட்டும் தான் நந்தகுமார். உணர்வுகள் நீங்க தான. நான், நீங்க என்கிட்டே கடத்தின உணர்வுகளைத் தான் விரும்பினேன். அப்படி பார்த்தா என்னோட முதல் காதல் நீங்க தான?” என்றாள் தலைசாய்த்து.

அவன் அவளையே இமைக்காமல் பார்க்க,

“அப்பறம் அன்னைக்கு நந்தகுமார் நம்பர்ன்னு நினைச்சு உங்க நம்பருக்கு ஒரு ஹாய் மெசேஜ் போட்டேனே..! நீங்க கூட மறுநாள் விடிஞ்சும் விடியாம சரண் அண்ணா வீட்டுல வந்து நின்னிங்களே அப்போ உங்க முகத்துல அவ்வளவு தவிப்பு இருந்தது. எனக்கு அப்போ புரியலை. அதுக்கு அப்பறம் தான் அந்த தவிப்புக்கான காரணம் புரிஞ்சது. இப்படி சொல்லிட்டே போகலாம்” என்றாள்.

“அப்பறம் ஏன்டி அன்னைக்கு என்கிட்டே அவ்வளவு ஹார்ஷா பேசுன?” என்றான்.

“அப்படி பேசுனதுனால தான உங்க வாயால உண்மையை சொன்னிங்க. இல்லைன்னா தியாகிப் பட்டம் வாங்க தயாரா இருந்தவர் தான நீங்க. அதான் அப்படி பேசுனேன்” என்றாள்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன்,

“வேதா” என்றான் கரகரப்பான குரலில்.

“ம்ம்”

“இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் எதையும் எதிர்பார்த்தது இல்லை” என்றான்.

“அதுக்கு”

“இப்போ உன்கிட்ட எதிர்பார்க்குறேன்” என்றான்.

“என்ன?” என்றாள் புரியாமல்.

“உன்னோட மொத்த காதலும் எனக்குத் தான் வேணும். நீ இல்லைன்னா நான் இருப்பேனான்னு தெரியாது. ஆனா, நான் இருக்குற வரைக்கும் நீ என்கூட இருக்கணும். அன்னைக்கு உன் வீட்டு மாடியில சொன்ன பாரு, அதே மாதிரி ஆயிரம் பேர் உன்னை ரசிச்சாலும், அணு அணுவா ரசிக்கிறது நானா மட்டும் தான் இருக்கணும். எனக்குன்னு வாழ்க்கைல சுயநலமா எடுத்த ஒரே முடிவு நீ தாண்டி” என்றான் அவளை இறுக அணைத்து.

அவன் வார்த்தைகள் அவளுள் இறங்கி, இதயம் தழுவி செல்ல,

“வேதா”

“ம்ம்”

“ஒரு சாரி சொல்லுடி”

“நான் தான் ஒன்னும் பண்ணலையே?” என்றாள்.

“ஒன்னும் பண்ணாததுக்கு தான் சாரி சொல்லுடி” என்றான் மந்தகாசமாய்.

“உங்களை” என்று விலக முற்பட்டவளை,அள்ளி எடுத்து அறைக்குள் சென்றான்.

“நீ சொல்லலைன்னா என்ன? நான் சாரி சொல்றேன். நீ கேட்டுக்கோ” என்றவன், அவள் முகம் முழுவதையும் முத்தத்தால் நிரப்பி, இதழ்களில் இளைப்பாறினான்.

“வேதா”

“ம்ம்”

“எனக்கு அமைதி வேணும்”

“அதுக்கு”

“நீ வேணும்” என்றவன் அவள் வெட்கச் சிரிப்பில், அவளுள் முழுமையாய் புதைந்து போனான். அவன் மூச்சுக் காற்றால் காதோரம் கோலமிட்டு,இதழ்களில் முத்தமிட்டு கழுத்தோரம் விரல்கள் தீண்டி, தவிப்புகள் பெருகி, அணைப்புகள் இறுகி, தாம்பத்யத்தின் ஆரம்பம்  முதல் அரிச்சுவடி வரை கற்றுக் கொடுத்த பின்பே ஓய்ந்தான். மூச்சு சத்தமும், முத்த சந்தங்களுமே அந்த அறை முழுவதும் பரவியிருந்தது.

“வேதாமா”

“ம்ம்”

“வேத மார்க்கத்தை திரும்ப படிக்கலாமா?” என்றான்.

“ஏதே” என்றவள் விழிக்க,

“அது அவசர அவரசமா படிச்சுட்டேன். மண்டையில ஏறலை. கொஞ்சம் நிதானமா படிச்சாத்தான் புரியும்னு நினைக்கிறன்” என்றான் சிரிப்புடன்.

“உங்களை” என்றவளை அவன் மீண்டும் இழுத்து அணைத்துக் கொள்ள,

“விஜய்”

“ம்ம்”

“நீங்க என்னை பேசியே மயக்கப் பாக்குறிங்க!!” என்றாள்.

“மயங்கிட்டியா?”

“மயக்கிட்டிங்க?” என்றாள்.

“ஏன் மயங்குனதுல வருத்தமா?” என்றான்.

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்றாள்.

“எப்படி எப்பிடியோ தெரியுது. அதெல்லாம் சொல்ல முடியுமா?” என்றான் உல்லாசமாய். அவனையே பார்த்திருந்தவள்,

“எனக்கு சாரி முத்தம் வேணும்” என்றாள்.

அவனின் மொத்த உணர்வுகளையும் கூட்டி அவள் நெற்றியில் முத்தமிட, அந்த ஒற்றை முத்தத்தில் அந்த நிமிடம் வாழ்வின் நிறைவை உணர்ந்தாள்.

தன் மொத்த தவிப்புகளையும், ஏக்கங்களையும், காதலையும் அவளிடம் பகிர்ந்து கொண்டவனின் மனமும், முகமும் அத்தனை தெளிவாய் இருந்தது.

தன் கையணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தைப் பார்க்க பார்க்க  சலிக்கவில்லை அவனுக்கு. அவளை ரசித்தபடியே நடந்த அனைத்தையும்  மனதிற்குள் உருபோட்டுக் கொண்டிருந்தான்  வேதாவின் விஜய்.