அன்று அவர்கள் தங்கிவிட்டு செல்வதாக இருக்க, வேதாவை கையில் பிடிக்க முடியவில்லை. அண்ணன்களுடன் பேசி அரட்டையடித்து, மைதிலியின் கையால் சாப்பிட்டு என்று பிசியாக இருந்தாள். விஜய் தான் அவளை ஏக்கமாக பார்த்து வைத்தான்.
“வாய்ப்பில்லை ராஜா” என்ற சரணின் குரலில் முறைத்தவன்,
“அதெல்லாம் உங்க தங்கச்சியா இருந்த வரைக்கும். இப்போ அவ என் பொண்டாட்டி மச்சான். இப்ப பார்ப்பா பாரு” என்றவன், அவளை விடாமல் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று திரும்பிய வேதா,
“கண்ணை நோண்டிடுவேன்” என்பதைப் போல் சைகை காட்டிவிட்டு திரும்பிவிட,
“எப்படிடா?” என்றான் சரண்.
“நம்ம ட்ரெயினிங் அந்த மாதிரி மச்சான்” என்றவன் சிரிக்க, அனைவரும் பேசுவதை விட்டுவிட்டு விஜயைத் தான் பார்த்திருந்தனர்.
“நீ இப்படி சிரிச்சு எவ்வளவு நாள் ஆச்சு மச்சான்?” என்றான் சரண்.
“இப்பல்லாம் அடிக்கடி இப்படித்தான் சிரிக்கிறேன். எல்லாம் உன் தங்கச்சி உபயம் தான்” என்றான் கண்களில் காதலைத் தேக்கி.
‘எப்பவும் இவன் இப்படியே இருக்கணும்’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான் சரண். ஆனாலும் வேண்டுதல் பலிக்கவில்லை.
அன்றைய நாளின் சந்தோஷத்துடன் தூங்கிப் போனவளை, யாரோ எழுப்புவதைப் போல் இருக்க, கிணற்றுக்குள் இருந்து சத்தம் வந்ததைப்போல் இருந்து அந்த சத்தம் அதிகமாக கண் விழித்தாள் வேதா.
“மைதிலிம்மா” என்றாள் தூக்கக் கலக்கத்துடன்.
“வேதா எந்திரிச்சு கீழ வாடா. உங்க மாமியார் தவறிட்டாங்க” என்ற மைதிலியின் வார்த்தைகளை உணரவே அவளுக்கு நிமிடங்கள் பிடித்தது.
“வேதா…வேதாம்மா” என்று அவர் உலுக்க,
“என்னம்மா சொல்றிங்க? நைட் நல்லாத் தானே இருந்தாங்க” என்றாள் சட்டென்று மூண்ட அழுகையுடன்.
“தூக்கத்துலயே உயிர் பிரிஞ்சுடுச்சுடா. டாக்டர் கன்பார்ம் பண்ணிட்டாங்க. நீ கீழ வா. விஜய் தம்பியை எங்களால பார்க்கவே முடியலை. நைட்டு முகமெல்லாம் சிரிப்பா இருந்த பிள்ளை. இப்ப எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கு. நீ வாடா” என்றவர் கீழே செல்ல, அவளால் எட்டு வைத்து கீழே செல்லவே முடியவில்லை.
தட்டுத் தடுமாறி எழுந்து சென்றவளுக்கு அங்கு எதையோ வெறித்த படி நின்றிருந்த விஜயை பார்க்க முடியவில்லை. ஆளுக்கொரு பக்கம் அழுது கொண்டிருக்க,
“இப்படி இருக்காத விஜய். அக்கா உயிர் சந்தோஷமா தான் பிரிஞ்சிருக்கு. நேத்தெல்லாம் அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம். அந்த சந்தோஷத்துலையே உயிரை விட்டிருக்காங்க” என்றார் அவனின் சித்தி.
“வேதா அவங்களை வர சொல்லு, கோலம் போட டைம் ஆச்சு” என்றான் பட்டென்று.
“அண்ணா அமுதாம்மா இப்போ இல்லை. நம்மளை விட்டு போயிட்டாங்க” என்றாள் கீர்த்தனா அழுகையுடன்.
“நீ கூப்பிடு வேதா. உன்னைய அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல. நேத்து முழுக்க உன்னையத்தான அப்படி ஆசை ஆசையா பார்த்துட்டு இருந்தாங்க. நீ கூப்பிடு வருவாங்க” என்றான் விஜய்.
“அவங்க இப்போ உயிரோட இல்லை விஜய்” என்று அவனைக் கட்டிக் கொண்டு கதறித் தீர்த்துவிட்டாள் வேதா. வேதாவின் கண்ணீரை உணர்ந்த பிறகு தான் அவன் புத்தி தெளிந்தது.
“மச்சான்” என்று சரண் விஜயை ஆறுதல் படுத்த,
“விடுடா, இவங்களுக்கும் இதுக்குமேல என்கூட இருக்க விருப்பமில்லை போல” என்றவன் தான். அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை. தனக்குள்ளாகவே மீண்டும் இறுகிப் போனான்.
ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் துரித கதியில் நடக்க, சரியாக வந்து சேர்ந்தனர் யாழினி குடும்பத்தினர்.
“அண்ணி” என்று விஜயின் அத்தை நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, “அத்தை” என்று யாழினி அழ, அவர்களைப் பார்த்த கீர்த்தனாவிற்கு எரிச்சலாய் வந்தது. விஜயோ பல்லைக் கடித்து கோபத்தை அடக்க முற்பட்டான்.
“சரண் அவங்களை போக சொல்லிடு. இல்லன்னா இங்க என்ன நடக்கும்னே சொல்ல முடியாது” என்று கத்தினான் விஜய்.
நீலாவதியும் சந்தியாவும் அந்த புதியவர்களை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நாங்க எதுக்கு போகணும்? போக முடியாது. இறந்தது என் அண்ணன் பொண்டாட்டி. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று அவனின் அத்தை பேச,
“பிளீஸ்..! அமைதியா இருங்க. இந்த நேரத்துல பிரச்சனை வேண்டாம்” என்று வேதா தான் அவனை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள்.
“ஆமா மச்சான். நாம இப்ப என்ன சொன்னாலும் அதை வச்சு ஒரு டிராமா கிரியேட் பண்ணுவாங்க. இப்போ இறுதிக் காரியத்தை நல்ல முறைக்கு முடிக்கணும். அவ்வளவு தான்” என்றான் சரண்.
விஜயின் இறுக்கம் கூடிக் கொண்டே போக, அதைப் பார்த்த வேதாவிற்கு தான் பயமாக இருந்தது.
எப்படியோ அமுதாவின் இறுதிக் காரியம் அமைதியுடன் முடிந்திருந்தது. விஜய் தான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விஜயின் சொந்தம் பந்தம் என்று யார் யாரோ வந்தார்கள், போனார்கள். வேதாவிற்கு யாரையும் தெரியவில்லை. ஆனால் மனைவியாய் அவனுக்கருகில் நின்று அனைத்து கடமைகளையும் செய்ய அதைப் பார்த்த யாழினிக்கு தான் வயிறெல்லாம் எறிந்தது.
“இது நான் இருந்திருக்க வேண்டிய இடம்மா” என்று தாயிடம் புலம்ப,
“அந்த அறிவு ஓடிப் போறதுக்கு முன்னாடி இருந்திருக்கனும்” என்றார் அவர்.
வேதாவின் குடும்பத்தினர் அனைத்தையும் முன்னிருந்து பார்த்துக் கொள்ள,
“இவ குடும்பமும் பெரிய குடும்பம் தான் போலம்மா. அதான் தெனாவெட்டா இருக்கா” என்றாள் யாழினி அதற்கும்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நீலாவதிக்கு அப்போதுதான் விஷயம் பிடிபட்டது.
‘கதை அப்படி போகுதா?’ என்று எண்ணியவர்,
“இது உங்க அண்ணா வீடு. நீங்க ஏன் உங்க உரிமைய விட்டுக் குடுக்கிறிங்க?” என்று அவர் பங்கிற்கு ஏத்திவிட்டார்.
“அப்படி சொல்லுங்கம்மா” என்றாள் யாழினி.
பெண்கள் அனைவரும் இங்கேயே தங்கி விட, ஆண்கள் மட்டும் அவ்வப்போது மதுரை சென்று வந்தனர்.
பதினாறாம் நாள் காரியம் முடிந்து சென்றவர்கள் மீண்டும் முப்பதாம் நாள் காரியத்திற்கு வந்திருந்தனர். அந்த முப்பது நாட்களும் ஒரு யுகமாய் கழிந்திருந்தது வேதாவிற்கு. கல்லூரி சென்றாலும், விஜயின் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை. வேதாவும் முடிந்தவரை அவன் உடனேயே இருந்தாள். அவள் உடன் இருக்கும் வரை கொஞ்சம் இளக்கத்துடன் இருப்பான்.