அத்யாயம் 28:

பிங்க் நிற அனார்கலியில் கூடுதல் அழகுடன் ஜொலிஜொலிப்பாய் கல்லூரி வந்தவளை பிடித்துக் கொண்டது நண்பர்கள் கூட்டம்.

ரம்யாவும் ஆனந்தும் அவளையே சுற்றி சுற்றி பார்க்க,

“இப்ப எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் சிரிப்புடன்.

“இல்ல, எங்க வேதா தானா? இல்லை வேற யாருமான்னு பார்த்துட்டு இருக்கோம். இல்லையா ஆனந்து?” என்றாள் ரம்யா.

“ஆமா மச்சான். அது தான் எனக்கும் புரியலை. ஏற்கனவே அழகா இருப்பா. இன்னைக்கு என்ன சும்மா அசரடிக்கிறா?” என்றான் ஆனந்த்.

“அட நீ வேற ஏண்டா? நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்றாள் சிரிப்புடன்.

“இல்லையே? முகம் எல்லாம் சிவந்து இருக்கு. கன்னமெல்லாம் ஜொலிக்குது. ஏதோ புதுசா கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மாதிரி சும்மா ஜம்முன்னு இருக்கியே?” என்றாள் ரம்யா.

“இது உங்களுக்கே ஓவரா தெரியலை. எப்பவும் காலேஜ் வர மாதிரி தான் வந்திருக்கேன்.உங்க ரெண்டு பேருக்கும் கண்ணுல கோளாறு” என்றாள்.

“இல்ல என்னவோ இருக்கு. கோளாறு எங்களுக்கா இல்லை உனக்கான்னு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோம்” என்று ரம்யா சொல்ல,

“நீ வேணும்னா பாரேன். இன்னைக்கு நம்ம கேங் பசங்க வடிக்கிற ஜொல்லுல கிளாசே மிதக்கப் போகுது” என்றான் ஆனந்த்.

“சரி அதெல்லாம் விடுங்க. இன்னைக்குத் தான செம் ரிசல்ட்” என்றாள் வேதா.

“அதை வேற ஏண்டி ஞாபகப்படுத்துற?” என்று ரம்யா கடுப்புடன் சொல்ல,

“எக்ஸாம் நல்லா தானே எழுதியிருக்கோம். அப்பறம் என்ன சலிப்பு? விடு பார்த்துக்கலாம்.” என்றாள் வேதா.

“சரி சரி கிளாஸ்க்கு டைம் ஆச்சு. பர்ஸ்ட் ஹவரே விஜய் சார் தான்.” என்று ரம்யா அவர்களை இழுத்துக் கொண்டு செல்ல,

“டைம் இருக்குடி. மெதுவா போவோம்” என்றாள் வேதா.

“எதுக்கு பேச்சு வாங்குறதுக்கா? ஏற்கனவே ரிசல்ட் டென்ஷன்ல இருக்கேன் நானெல்லாம். சார் பேப்பர்ல மட்டும் அரியர் விழுந்துச்சு அவ்வளவு தான். ஏற்கனவே சீனியர் எல்லாம் சொல்லியிருக்காங்க. அதான் எதுல அரியர் விழுந்தாலும் சார் பேப்பர்ல மட்டும் அரியர் வந்துட கூடாதுன்னு சாமியை வேண்டிகிட்டு வந்திருக்கேன்” என்றாள் பாவமாய்.

“ரொம்ப புலம்பாம வாடி” என்று வேதா சொல்ல,

“உனக்கெல்லாம் பயமே இல்லையா?” என்றாள்.

“நான் எக்ஸாம் நல்லா பண்ணியிருக்கேன். நான் ஏன் பயப்படுனும்?” என்றாள்.

“அதானே, நீ ஏன் பயப்பட போற. மேடம் தான் படிப்புல புலி ஆச்சே”

“அப்படியெல்லாம் இல்லை.” என்று அவர்கள் பேசிக் கொண்டே வகுப்பிற்குள் நுழைய, அவளைப் பார்த்த ஹரிணி வாயைப் பிளந்தாள்.

“வேதா டுடே யு லுக்கிங் சோ பியூட்டிபுல்” என்றாள் அருகில் இருந்த லயாவை மறந்து.

ஹரிணியை ஆச்சர்யமாக பார்த்த வேதா,

“தேங்க்ஸ் ஹரிணி” என்றாள்.

“வேதா மச்சான் இன்னைக்கும் ஐ லவ் யு” என்று எப்போதும் சொல்லும் மாணவன் சொல்ல,

“சாரி மச்சான் இன்னைக்கும் ஐஹேட் யு” என்றாள் சிரிப்புடன்.

“இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என் இதயத்தை இப்படி உடைப்ப வேதா?” என்று அவன் நெஞ்சைப் பிடிக்க,

“என்ன நெஞ்சு வலிக்குதா?” என்றாள் சிரிப்புடன்.

“ஆமா வேதா ஆமா” என்றான் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.

“அப்ப செத்துடு. எதுக்கு நீயெல்லாம் பூமிக்கு பாரமா” என்று ரம்யா சொல்ல அங்கே சிரிப்பலை பரவியது.

“மச்சான் அப்ப நான் அப்ளிகேஷன் போடலாமா?” என்று மற்றோருவன் கேட்க,

“சாரி மச்சான்ஸ், எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. அப்ளிகேஷன் டைம் முடிஞ்சு கவுன்டர் குளோஸ் பண்ணியாச்சு” என்றாள் சிரிப்புடன்.

“என்னது ஆள் இருக்கா?மச்சான் சாய்ச்சு புட்டா மச்சான்” என்று இதயத்தைப் பிடித்தவன்,

“அடுத்த ஜென்மத்துக்கு வழி இருக்கா?” என்றான் பாவமாய்.

“மச்சான் அடுத்த ஜென்மத்துக்கும் அதே ஆளைத்தான் புக் பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“ரைட்டு விடு”என்றவன்,

“ஆனா ஒன்னு வேதா, இந்த இதயம் கடைசி வரைக்கும் உனக்காக மட்டும் தான் துடிக்கும்மா… துடிக்கும். அட பொண்ணான மனசே.. பூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆசை..” என்று டி.ஆர். பாணியில் சொல்ல,

“இதயம் என்னவோ வேதாவுக்குத் தான், ஆனா அப்பப்ப வாடகைக்கு வந்து யார் வேணும்னாலும் தங்கிட்டு போகலாம் இல்லையா மச்சான். ரெண்ட்டல் பர்பஸ் ஒன்லி.” என்றான் இன்னொருவன்.

வேதா பட்டென்று சிரித்து வைக்க,

“ஏண்டா? ஏன்? என்னை பெர்பார்ம் பண்ண விடுங்கடா” என்று கதறிக் கொண்டிருந்தான் அவன்.

“கிளாஸ்ல ஒருத்தனுக்கும் இந்த வேதாவைத் தவிர யாரையும் கண்ணுக்குத் தெரியாது போல” என்று லயா பல்லைக் கடிக்க,

“அது அப்படியில்லை மச்சி. அவனுங்க எப்படி பேசினாலும் அவ சிரிச்சுட்டே கௌன்ட்டர் குடுக்குறா. அது மட்டுமில்லாம அவங்க எல்லாம் பிரண்ட்ஸ் கேங்கா மிங்கிள் ஆகிட்டாங்க. உன்னையும் தான் ஆரம்பத்துல சைட் அடிச்சானுக. ஜாலிய பேசுன பசங்ககிட்ட நீ தான் ரொம்ப ஹார்ஷா நடந்துகிட்ட. அதான் எதுக்கு வம்புன்னு அமைதியா இருக்கானுக” என்றாள் ஹரிணி.

“நீ என்ன வந்ததுல இருந்து இன்னைக்கு அந்த வேதா புராணம் பாடிட்டு இருக்க?” என்றாள் எரிச்சலுடன்.

“ஹேய் நான் உண்மையைத் தான் சொன்னேன் லயா. அவ இன்னைக்கு நிஜமாவே ரொம்ப அழகா தான் இருக்கா.அதான் அப்படி சொன்னேன். நம்ம கிளாஸ்லயே காலேஜ் லைப்ப என்ஜாய் பண்ணாம இருக்குறது நாம ரெண்டு பேர் மட்டும் தான்” என்றாள்.

“அது என்னவோ உண்மைதான். ஆனா எல்லாம் செம் ரிசல்ட்டுல தெரியும் பாரு” என்ற லயா, வேதாவைப் பார்த்து முறைத்து வைத்தாள்.

விஜய் வகுப்பிற்குள் நுழையவும் அந்த இடமே கப்சிப் என்று அமைதியாக, வேதாவோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

பிளாக் பேண்ட், லைட் பிங்க் கலர் ஷேர்ட் இன் செய்து,கிளீன் ஷேவ், ஜெல் வைத்து படிய வாரிய தலை, ஷூ, ஐடி கார்ட் என்று பக்கா பார்மலான உடையில் தனி மிடுக்குடன், கம்பீரமாய்  இருந்தவனைப் பார்த்து அன்று மாணவர்களும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பார்வையை கண்டவன்,

“என்னாச்சு?” என்றான் கேள்வியாய்.

“சார் இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க” என்றான் ஆனந்த் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

அவனைப் பார்த்து சிரித்த விஜய்,

“அப்போ இத்தனை நாள் ஸ்மார்ட்டா இல்லையா?” என்றான் அதே சிரிப்புடன்.

“வேதா விஜய் சார் சிரிக்கவெல்லாம் செய்யறார்டி” என்றாள் அதிர்ச்சியுடன் ரம்யா.

“இதென்ன உலக அதிசயமா?” என்றாள் வேதா.

“இல்லையா பின்ன? எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு இருப்பாரு. இல்லைன்னா அமைதியா இருப்பாரு. இப்படி சிரிச்சே நாங்க இன்னைக்குத் தாண்டி பார்க்குறோம். எதுக்கும் என்னைய கிள்ளு. நிஜமான்னு கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்றாள் ரம்யா.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்டி” என்ற வேதா அவனைப் பார்த்தும் பார்க்காததைப் போல் பார்த்து வைத்தாள்.

‘இவங்கல்லாம் சொல்ற மாதிரி கொஞ்சம் ஓவர் அழகாத்தான் இருக்காரோ?’ என்று மனதிற்குள் நினைத்தவள், லயாவைப் பார்க்க, அவளோ அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இவ ஒருத்தி.. எப்ப பார்த்தும் முழுங்குற மாதிரி பார்த்துகிட்டு.’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவளுக்கு, லேசாக கோபமும் வந்தது.

‘அவ எப்பவும் அப்படித்தான் பார்ப்பா. இன்னைக்கென்ன? எனக்கு புதுசா கோபமெல்லாம் வருது. அய்யோ வேதா, உனக்கு என்னமோ ஆகிடுச்சு. ஒழுங்கா படிக்கிறதுல கான்சன்ரேட் பண்ணு’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

“டி வேதா” என்று ரம்யா ஆரம்பிக்க,

“இந்தா ஆரம்பிச்சுட்டா. இவர் கிளாஸ்ல தான் இவளும் ஆரம்பிப்பா.” என்று சலித்தவள்,

“ம்ம்” என்றாள்.

“உனக்கு ஆள் இருக்குன்னு சொல்லவே இல்ல” என்றாள் குறையாய்.

“நீ கேட்கவே இல்லையே?” என்றாள்.

“சரி..! உன் ஆள் யாரு?” என்றாள்.

“அதை கேட்கவேண்டிய நேரமாடி இது. தயவு செஞ்சு அமைதியா இரு. முக்கியமான யூனிட் கிளாஸ் எடுத்துட்டு இருக்காரு. இன்னைக்கெல்லாம் வெளிய போக முடியாது” என்று பல்லைக் கடித்தாள் வேதா.