“நான் சாப்பிட்டேன் சரி..!நடந்த கலவரத்துல விஜய் அண்ணா எங்க சாப்பிட்டார்? எனக்கு தெரிஞ்சு அவர் இன்னைக்கு காலையில இருந்தே சாப்பிடலை.” என்றான் அகரன் பல்லைக் கடித்துக் கொண்டு.
“அகரன் சொல்றதும் சரி தான். மச்சான் நீ நல்ல ஹோட்டலா பார்த்து வண்டியை நிறுத்து. சாப்பிட்டு போகலாம்” என்று சரண் சொல்ல,
“வேண்டாம் சரண். வீட்ல போய் பார்த்துக்கலாம்.” என்று பேச்சை முடித்து விட்டான் விஜய். தேவைக்கு அதிகமாய் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவனைப் பார்த்தும் பார்க்காததும் போல் பார்த்து வைத்த வேதாவிற்கு அவனின் சோர்ந்த தோற்றம் ஏதோ செய்ய,
‘ஹாஸ்பிட்டல், அது இதுன்னு என்னால அலைஞ்சதுல சாப்பிடக் கூட இல்லை. விசேஷ வீட்லயும் சாப்பிடலை. நாமளும் கவனிக்காம விட்டுட்டோமே’ என்று மனதிற்குள் குற்ற உணர்ச்சியில் உழன்றாள் வேதா.
“இதுல உன் தப்பு என்ன இருக்கு வேதா? அதான் வீட்ல அத்தனை பெரும் அத்தனை தடவை மாறி மாறி கூப்பிட்டாங்க. அவர் தான வரலை. அதுக்கு மேல யார் என்ன செய்ய முடியும்?” என்று ஒரு மனம் அவளுக்கு சாதகமாக வக்காலத்து வாங்கியது.
‘வரலைன்னா அப்படியே விட்ருவிங்களா?’ என்று மீண்டும் ஆரம்பிக்க,
“என்ன பண்ணலாம்?” என்று யோசித்தாள்.
“அண்ணி” என்று பக்கவாட்டில் திரும்ப, கீர்த்தனாவோ காதில் ஹெட்செட்டை மாட்டியபடி தீவிரமாய் போனில் எதையோ பார்த்துக் கொண்டு வந்தாள்.
“அண்ணா” என்றாள்.
“என்னடா?”
“நீங்க வேணும்னா பசிக்காத வரம் வாங்கிட்டு வந்திருக்கலாம். ஆனா, எங்களுக்கெல்லாம் பசிக்கும். வீட்ல கூட இவன்தான் மொக்கிட்டு வந்தான். நான் இல்லை. சாப்பிடனும், மெடிசன் போடணும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, கார் ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு நின்றது.
“ஆத்தி இவன் என்ன வேதா தீவிரவாதியா இல்ல இருக்கான்” என்று மனதிற்குள் நினைத்தான் சரண்.
“என்னாச்சு?” என்று கீர்த்தனா ஹெட்செட்டை கழற்ற,
“சாப்பிட போறோம் அண்ணி. வாங்க!” என்றான் அகரன்.
“அண்ணா, நிஜமாவா?” என்றாள் கீர்த்தனா.
“ஏன் அண்ணி? இதென்ன அவ்வளவு பெரிய விஷயமா?” என்றாள் வேதா புரியாமல்.
அவளைத் திரும்பி நேருக்கு நேராக பார்த்தான் விஜய். அவளும் சளைக்காது அவனைப் பார்த்து வைக்க,
“எனக்கு ஒரு போன்கால் பேசணும். நான் பேசிட்டு வர்றேன். நீங்க உள்ள போங்க சரண்” என்றான் அழுத்தமாக. பேச்சு சரணிடமும், பார்வை வேதாவிடமும் இருந்தது.
“ஒரு டின்னருக்கு இந்த அக்கப்போரா?” என்று நொந்தபடி அவர்கள் இறங்கி உள்ளே செல்ல,ஆழ்ந்து மூச்செடுத்தான். மொபைலை எடுத்து டயல் செய்தவன்,
“சொல்லுங்க சித்தி” என்றான்.
“ரெண்டு முறை கூப்பிட்டேன். ஏன் எடுக்கலை விஜய்” என்றார் அவர்.
“சித்தி டிரைவிங்ல இருந்தேன். சொல்லுங்க” என்றான்.
எதிர்புறம் அவர் என்ன சொன்னாரோ? இங்க விஜயின் முகத்தில் தகிக்கும் தணலின் வெப்பம் கூடிக் கொண்டே போனது.
“விஜய்..!” என்று அவர் தயங்க,
“நான் பார்த்துக்கிறேன் சித்தி. நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதிங்க” என்றான்.
“எனக்கென்னவோ பயமா இருக்குப்பா. ஏற்கனவே அக்கா நிலைமை இப்படி இருக்கு. இது மறுபடியும்..” என்று இழுக்க,
“நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல சித்தி. அம்மா சாப்பிட்டாங்களா? நீங்க சாப்பிட்டிங்களா? நாங்க வர மிட்னைட் ஆகும். கதவை லாக் பண்ணிட்டு நீங்க தூங்குங்க.என்கிட்ட கீ இருக்கு.” என்று சொல்லி போனை வைத்தவனுக்கு, ஆசுவாசமாய் வந்தது.
அலைச்சலும், அலைப்புருதலும், பசியும் சேர்ந்து அவன் சோர்ந்து போனான். இப்போது அவன் சித்தி கூறியது வேறு அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அனைத்தையும் யோசித்தபடியே சென்றவன், அவர்கள் அமர்ந்திருந்த டேபிளைப் பார்த்து உடன் சென்று அமர்ந்தான். எண்ணங்களில் உழன்றவன் வேதாவின் அருகில் அவளை உரசிக் கொண்டு அமர்ந்ததை உணரவில்லை. அருகில் அவன் அமர்ந்ததும் அவள் சட்டென்று எழுந்து விட, அப்போது தான் உணர்ந்தான்.
“என்னாச்சு?” என்றவனுக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது.
“வேதா” என்று சரண் கோபமாய் பார்க்க, அவள் சென்று அகரனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
கோபம் வர,பல்லைக் கடித்து உணர்வுகளை அடக்கியவன், பட்டென்று எழுந்து சென்று அருகில் இருந்த டேபிளில் அமர்ந்து கொண்டான். அவர்கள் நால்வரும் ஒன்றாய் இருக்க, இவன் தனியே அமர்ந்துவிட்டான். அவர்கள் விஜயையே பார்த்துக் கொண்டிருக்க,
“இங்க என்ன பார்வை. சாப்பிடுற வேலையை மட்டும் பாருங்க” என்று பட்டென்று கூறியவன், தனக்கு வேண்டியதை வர வைத்து அவர்களுக்கு முன் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.
அவன் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்றதை எவ்வளவு முயன்றும்,கீர்த்தனாவால் தாங்க முடியவில்லை. பெயருக்கு சாப்பிட்டவள், எழுந்து சென்று விட்டாள்.