“உனக்கு என்ன தான் வேதா பிரச்சனை?” என்றான் சரண் எரிச்சலுடன்.

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லண்ணா” என்றாள்.

“அவன் வேண்டாம்னு சொன்னான். நீதான் சாப்பிடனும்னு சொன்ன. உன் பக்கத்துல உட்கார்ந்தா என்ன தப்பு. இன்பேக்ட் அவன் அதை வேணும்னு கூட பண்ணலை. ஒரு சின்ன விஷயத்துக்கு முகத்துல அடிச்ச மாதிரி இப்படி ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம்.” என்றான்.

“இல்லண்ணா, அவர் சடனா வந்து பக்கத்துல உட்காரவும்,என்னையறியாம எழுந்துட்டேன்” என்றாள் குற்ற உணர்ச்சியுடன்.

‘ஏன் இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்லையா? எல்லாம் என்னமோ புதுசா நடக்குற மாதிரி ஆக்சன் குடுக்குற” என்று அவள் மனசாட்சி அவளை கரித்துக் கொட்டத் தொடங்கியிருந்தது.

வேறு வழியின்றி மூவரும்  ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு வர, கீர்த்தனா விஜய் அருகில் முன்னிருக்கையில் இருந்தாள்.

சரண் அவளைப் பார்க்க,

“நான் எங்கண்ணா கூட இருக்கேன். நீங்க மூணு பேரும் பின்னால் போங்க.” என்றாள் வெடுக்கென்று.

அதற்கடுத்து வந்த மணி நேரங்கள் எல்லாம் அமைதியிலேயே சென்றது. வேதா இருக்கும் பக்கம் கூட விஜய் திரும்பியும் பார்த்தானில்லை. அவனைப் பொறுத்தவரை ஏற்கனவே மனதில் இருந்த வலிகளோடு இதுவும் சேர்ந்து கொண்டது,அவ்வளவு தான். அப்படித்தான் எண்ணினான்.

அமைதியான மனநிலையிலேயே வீடு வந்து சேர்ந்திருந்தனர்.சரணும் கீர்த்தனாவும் அவர்கள் வீட்டில் இறங்கிக் கொள்ள, வேதாவும் இறங்க முற்பட்டாள்.

“என்ன பண்ற?” என்றான் சரண்.

“அண்ணா நானும் இங்கயே” என்று அவள் முடிக்கவில்லை.

“நீ அங்கயே போ.. வேதா..” என்பதோடு முடித்துக் கொண்டான்.

“ம்ம்..!” என்பதோடு இவளும் முடித்துக் கொண்டாள்.

விஜய் வீட்டில் சென்று காரை நிறுத்தியதும் இறங்கிய அகரன்,

“குட் நைட்ண்ணா” என்றபடி மேலே சென்று விட்டான்.

அமைதியாக அவளின் பேக்கை அவள் கையில் கொடுத்தவன் காரை லாக் செய்துவிட்டு வர,அவனிடம் ஏதோ பேச முற்பட்டவள், பிறகு முயற்சியை கைவிட்டவளாய் திரும்பி செல்ல எத்தனித்தாள். அவளின் முயற்சி புரிந்தவனாய்,

“ஒரு நிமிஷம்” என்றான் விஜய். குரலில் அழுத்தமும், உரிமை உணர்வும் ஏகத்திற்கும் கொட்டிக் கிடந்தது. அவனது குரலில் மாடிபடியில் கால் எடுத்து வைத்தவள் அப்படியே நிற்க, அவளின் அருகில் வந்தான் விஜய்.

அவள் அவனைப் பார்க்க, அவன் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிலையிலும் மெல்லிய விளக்கொளியில் மின்னிய அவள் முகம் அவனை அதிகமாய் ஈர்க்கத்தான் செய்தது.

அவள் அவனைப் பார்ப்பதும், பிறகு தவிர்த்து  வேறொங்கோ பார்ப்பதும் என்று நிமிடங்களை நெட்டித் தள்ளியவள், பொறுமை இழந்தவளாய்,

“ப்ச்..” என்று சலித்துக் கொண்டு திரும்பி செல்ல முற்பட, அடுத்த நிமிடம் அவளை வேகமாய் இழுத்து அணைத்திருந்தான் விஜய்.

அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று நினைத்திருந்தவளுக்கு அவனின் இந்த திடீர் அணைப்பு அதிர்ச்சியாய் இருந்தது. அவள் தெளிந்து நிதானத்திற்கு வருவதற்கு முன்,அணைப்பின் இறுக்கம் கூடிக் கொண்டே போக, இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது வேதாவிற்கு. அவனோ இதெல்லாம் பத்தாது என்பதைப் போல் அவளை மேலும் தனக்குள் புதைத்துக் கொள்ள, அவஸ்தையில் நெளிந்தாள் வேதா.அவனிடமிருந்து அவள் விலக முறபட, சில நிமிடங்களில் மனமே இன்றி அவளை விடுவித்தான்.

அவள் அவனை கோபமாய் முறைக்க, அவள் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன்,

“உனக்கு என்மேல கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது சரியான காரணமா கூட இருக்கலாம்.” என்று நிறுத்தி அவளை ஆழப் பார்த்தவன்,

“ஆனா, நான் உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு ஒரே காரணம், அது ‘நீ’ங்கறதால மட்டும் தான்..” என்று அந்த ‘நீ’ யில் அழுத்தம் கொடுத்தான்.

அவனின் அந்த ஆழ்ந்த குரல் செய்த மாயத்தில், அவள் கண்ணை விரிக்க, விரிந்த அவள் இமைகளில் முத்தமிட தோன்றிய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“குட் நைட்” என்பதோடு முடித்துக் கொண்டான்.

 அவன் சென்ற பிறகும் அப்படியே இருந்தவளுக்கு தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே தெரியவில்லை.

அங்கே கீர்த்தனாவோ வீட்டிற்குள் நுழைந்தவுடன் சரணை பிடி பிடியென பிடித்துக் கொண்டாள்.

“என்ன நினைச்சுகிட்டு இருக்கா உங்க தங்கச்சி? விஜய் அண்ணா பக்கத்துல உட்கார்ந்தா பெரிய இவ மாதிரி எழுந்து போறா. எப்படி தெரியுது உங்களுக்கெல்லாம் எங்கண்ணாவைப் பார்த்தா? அவரைப் பார்த்தா வேலைவெட்டி இல்லாதவர் மாதிரி இருக்கா? இல்ல,அவர் என்ன உங்களுக்கெல்லாம்  டிரைவர் வேலை பார்க்குறதுக்குன்னே இருக்காரா? ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கா. உடம்புக்கு முடியாத பொண்ணாச்சேன்னு நானும் அமைதியா இருக்கேன். சொல்லி வச்சுக்கங்க” என்றாள் மூச்சு வாங்க.

“சரி சொல்லி வச்சுக்கிறேன்” என்றவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“சரண் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க?” என்றாள் கடுப்புடன்.

“உன்னை என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் உல்லாசமாய்.

“உங்களை..!” என்று பல்லைக் கடித்தவள்,

“ஆளை விடுங்க! நான் நாளைக்கு ஆபீஸ் போகணும்.” என்று எஸ்கேப் ஆக,

“நானும் தான் காலேஜ் போகணும். அதுக்குன்னு ஒரு மனுஷனுக்கு ரிலாக்சேஷன் வேணாம்.” என்றவன் அடுத்து அவளை பேசவே விடவில்லை.

அதற்கு பிறகான நாட்கள் வேகமாய் நகர்ந்தது.

விஜய், வேதாவின் வழிக்கே வரவில்லை. சொல்லப் போனால் அவளை நிமிர்ந்தும் பார்த்தானில்லை. வேதாவும் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவளும் இன்டெர்னல், மாடல் எக்ஸாம் என்று  படிப்பதில் பிசியாகி விட்டாள்.கல்லூரி நாட்கள் பழைய வேதாவை மீட்டுக் கொண்டிருந்தது. ஏனோ மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்த பின்னர் அவள் இன்னமும் தெளிவாய் இருந்தாள். எப்போதும் அழுது வடிந்து கொண்டிருந்த வேதா இப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே இருக்கிறாள், நண்பர்களின் உபயத்தில்.விஜயைப் பற்றி, அவனுடனான தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அவள் யோசிப்பதெல்லாம் இல்லை. ஆனால் மனதிற்குள் அவனைப் பார்த்தால் மட்டும் தோன்றும் சிறு சலனங்களை பூட்டி வைத்தாள்.

கல்லூரியில் அவன் பாடவேளையில் அவனைப் பார்ப்பதோடு சரி. அதிலும் இப்போதெல்லாம் அவன் வகுப்பிற்குள் வந்தாலே தலையைக் குனிந்து கொள்வாள். முடிந்த அளவு அமைதியாய் இருந்து கொள்வாள். மற்ற பாட வேளைகளில் கலகலப்பாக இருக்கும் வேதா, விஜய் வந்தால் மட்டும் அமைதியாகி விடுவதைப் பார்த்த ரம்யாவிற்கு ஆச்சர்யம். அப்படி

எல்லா விதத்திலும் அவனை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தாள். அவள் தன்னை தவிர்ப்பதை நன்கு உணர்ந்திருந்தான் விஜய். அதனால் அவனும் அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை.

நடப்பதையெல்லாம் பார்த்த விஜயின் சித்திக்குத் தான் ‘அய்யோ’ என்றிருந்தது. கீர்த்தனா மூலம் ஊரில் நடந்த விஷயங்களை அறிந்திருந்தவருக்கு மனதில் நம்பிக்கை பிறந்திருந்தது. எப்படியும் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று. ஆனால் அதைத் தடுப்பதைப் போலவே விஜயின் வீட்டிலும் சில விஷயங்கள் நடக்க, அது போதாதென்று வேதாவும் அவனைக் கண்டால் பத்தடி தள்ளிப் போக, அவரும் பொறுமையிழந்து விட்டார்.