“நான் என்னங்க நினைக்க போறேன்” என்றான் அவனும் விடாமல்.

“நீங்க பேசிட்டு இருங்க, வந்திடுறேன்” என்று அவர்கள் அறைக்குள் சென்ற பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

“என் தலையெழுத்து? இவனை வான்னு கூப்பிடலைன்னு தெரிஞ்சா இந்த மனோ அதுக்கும் கத்துவார்” என்று நொந்து கொண்டாள். இருந்தாலும் விஜய் அங்கு தங்குவது அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

“மச்சான் இந்த ரூம் தான்..! நீ ரெஸ்ட் எடு. நான் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்..!” என்றான் சரண்.

அவன் காட்டிய அறைக்குள் நுழையப் போனவன், யோசனையுடன் திரும்பி பார்க்க, சந்தியா அவனை நோட்டம் விடுவது தெரிந்தது.

‘கதை அப்படி போகுதா?’ என்று எண்ணியவன், எதிர்புறம் இருந்த அறைக்குள் சென்று நுழைய, அதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவின் காதுகளில் புகை வராத குறை தான்.

‘என்ன? வேதா ரூம்க்குள்ள போய்ட்டான்’ என்று அதிர்ச்சியடைந்தவள்,

“இதை முதல்ல சின்ன அத்தைகிட்ட சொல்லணுமே?” என்று வெளியே செல்ல போக, மனோவும் வந்துவிட்டான்.

“என்னாச்சு? எங்க போற இவ்வளவு அவசரமா? ஏன் இந்த முழி முழிக்கிற?” என்றான்.

“இல்ல மனோ..! விஜய் வந்திருக்கார்” என்றாள்.

“ஆமா, இப்ப தான் சரண் சொல்லிட்டு போனான். எங்க அவரு?” என்றான்.

“அவர் வேதா ரூம்க்கு போய்ட்டார்” என்றாள்.

“அப்படியா?” என்று அவன் சாதரணமாக கேட்டு வைக்க,

“என்னங்க இப்படி கேட்குறிங்க?” என்றாள்.

“வேற எப்படி கேட்க? அவர் பொண்டாட்டி ரூம் தான? இதுல என்ன தப்பு?” என்றான்.

“என்ன இப்படி சொல்லிட்டிங்க? வேதாவுக்கு அது தெரியாதே. அவ அங்க மைதிலி அத்தை கூட இருக்கா. வந்து பார்த்தா ஷாக் ஆக மாட்டாளா?” என்றாள் சந்தியா.

“அப்படி ஷாக் ஆனா, என்ன சொல்லி சமாளிக்கனும்னு அவருக்குத் தெரியும். நீ மட்டும் வாயை வச்சுகிட்டு சும்மா இரு” என்றவன் அறைக்குள் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போனான்.

“நான் போய் சின்ன அத்தையை பார்த்துட்டு வரேன்” என்றாள்.

“உடனே வத்தி வைக்கணுமா? கொன்னுடுவேன் உன்னைய” என்றான் மனோ.

‘நடக்குற எதுவும் சரியா படலை. போற போக்கை பார்த்தா இவன் மருமகனா கன்பார்ம் ஆகிடுவான் போலயே.’ என்றவள் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இறங்கினாள்.

“வயித்துல நம்ம குழந்தை இருக்கு. யோசிக்கிறது கொஞ்சம் நல்ல விதமா யோசி” என்று மனோ மீண்டும் அறிவுறுத்த, வேறு வழியின்றி அமைதியாக இருந்தாள். அவளும் கர்ப்பமாக இருந்தாள்.

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த விஜய்க்கு சிரிப்பு தான் வந்தது.

சந்தியாவை வெறுப்பேற்ற வேதாவின் அறைக்குள் சென்றவனுக்கு  ஏனோ அங்கிருந்து வர மனமின்றி அங்கேயே இருந்துவிட்டான். அவளைப் போலவே அவளின் அறையும் அவ்வளவு அழகு. அங்கிருந்த அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவன், அறை முழுவதும் அவள் வாசத்தை உணர்ந்தான். 

‘இந்த பொண்ணு மனசுக்குள்ள நுழைஞ்சு ஓவரா குடைச்சல் குடுக்குறா?’ என்று ஆழ்ந்து சுவாசித்தவனுக்கு, வரும் போது தன் அணைப்பிற்குள் அடங்கி வெட்கத்தில் படபடத்தவளின்  முகம் கண்முன் வந்துபோனது. அந்த உணர்வுகளின் தாக்கத்தில் அவனின் முகம் மென்மையாக,

உடல் ஓய்விற்கு கெஞ்சியது…. சற்று தயங்கியவன், அவளின் கட்டிலிலேயே படுத்து விட்டான். அவள் வாசத்துடன், உறக்கமும் கண்களை சுழற்ற ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.

இரண்டு மணி நேரம் கழித்து அவனை சாப்பிட அழைக்க வந்த வேதா, அறைக்குள் அவனில்லாது திகைத்தாள்.

‘இங்க தான இருக்குறதா சரண் அண்ணா சொன்னாங்க.நானும் இந்த ரூம்ல தான இருக்க சொன்னேன். ஆளைக் காணோம்..?’ என்று தேட, சட்டென்று ஏதோ தோன்ற, தனது அறைக்குச் சென்றாள்.

அவள் அறையில், அவள் கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.அப்படியே நின்றுவிட்டாள். முகம் குப்பென்று சிவக்க, உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு ஓடி மறைந்தது.

‘இவர் என்ன இங்க இருக்கார்? இவர அந்த ரூம்ல தான தங்க சொன்னோம்’ என்று யோசிக்க, 

‘சரண் அண்ணா  இங்க இருக்க சொல்லியிருப்பாரோ?’ என்ற யோசனையும் வந்தது. யோசனைகளை பின் தள்ளி அவள் மனம் நிறைந்தது அவளறியாமல்.

சட்டையில் போடாது விடப்பட்டிருந்த முன் இரு பட்டன்களும், அவன் அணிந்திருந்த செயினும் அவன் ஆண்மைக்கு அழகு சேர்க்க, காற்றில் அசைந்த முன் சிகையானது அவளை அவன் பால் ஈர்த்தது. கண்ணெடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, உள்ளுக்குள் தோன்றிய உணர்வுகள் எல்லாம் புதிது. 

‘என்ன வேதா அவனை சைட் அடிக்கிறியா?’ என்று உள்மனம் கேட்க,

“நான் எங்க சைட் அடிக்கிறேன். சும்மா பார்த்தேன்” என்றாள் மனதிடம்.

‘அவனையே முழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்க? இதுக்கு பேரு சைட் அடிக்கிறது இல்லாம வேற என்ன?’ என்ற மனம் அவளை நக்கலடித்தது.

‘நல்லா தூங்குறார். எப்படி எழுப்புறது?’ என்று முனுமுனுத்தவள்,

‘சரி தூங்கட்டும். அப்பறம் எழுப்பிக்கலாம்’ என்றபடி சென்று விட்டாள்.

அவள் சென்றவுடன் கண்ணைத் திறந்தவனுக்கு, நூறு சதவிகிதம் உறுதியானது. அவள் வரும் போதே விழிப்பு வந்திருந்தது அவனுக்கு.

அவனை எழுப்பி, அவள் அறையில் தூங்கியதற்கு காரணம் கேட்பாள். என்ன பதில் சொல்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, அவளோ தூங்கட்டும் என்று அவனை எழுப்பாமல் விட்டுச் செல்ல, உல்லாச உணர்வை அனுபவித்தான் விஜய்.

மறுநாள் காலை…!

சரண் திருமணத்தில் அணிந்திருந்த அதே பட்டுப்பாவாடை தாவணியுடன் வந்து நின்றவளைப் பார்த்த விஜய்க்கு மூச்சடைத்தது.

‘அப்பவே என் கண்ணு சொன்ன பேச்சு கேட்கலை. இவ போற பக்கம் தான் என் பார்வையெல்லாம் இருந்துச்சு. மறுபடியும் அதையே வியர் பண்ணிட்டு வர்றாளே?’ என்று உள்ளுக்குள் இனிமையாய் நொந்து கொண்டான் விஜய்.

“ஹேய் வேதா நீ சாரி கட்டலையா?” என்ற கீர்த்தனாவின் கேள்விக்கு,

“இல்லண்ணி..! இந்த டிரஸ் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதான் இதையே போட்டுகிட்டேன். நல்லா இருக்கா?” என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க,

“உங்க அம்மாவுக்கு மட்டுமா பிடிக்கும்…?” என்று இங்க மனதிற்குள் பேசிக் கொண்டான் விஜய்.

“செம்மையா இருக்கு..! இன்பேக்ட் எங்க மேரேஜ் அப்போ  வியர் பண்ணியிருந்தப்பவே அவ்வளவு அழகா இருந்தது” என்று கீர்த்தனா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஆனா அண்ணி..! எனக்கு அங்க வர்றதுக்கு விருப்பமே இல்ல. என்னைக் கண்டாலே கனி அக்காவுக்கு ஆகாது. நான் சொன்னாலும் இந்த அப்பா கேட்க மாட்டேங்குறாங்க..!” என்றாள் குறையாய்.

“எனக்குக் கூடத்தான் போக விருப்பமில்லை. ஆனா, விடுவாங்களா? சில விஷயங்களை நாம அவாய்ட் பண்ண முடியாது வேதா. எங்கம்மாவைப் பார், விஜய் அண்ணாவை அங்க இருந்து பேக் பண்ணி அனுப்பியிருக்காங்க. எதுக்குன்னு நினைக்குற? எல்லாம் நீலா அத்தை வாய்க்கு பயந்து தான்” என்றவள்,

‘உன்னோட அக்கா வளைக்காப்புல உன் புருஷனும் இருக்கனும்ல. அதான் அனுப்பி வச்சிருக்காங்க’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

“இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவங்க அண்ணி” என்றவளும் சிரிப்பில் இணைந்து கொள்ள, அவர்களைப் பார்த்த சந்தியாவிற்கு தான் வயிறு எறிந்தது. மனோ வேறு அவளை நீலாவதியிடம் செல்லவும் விடாமல், சொல்லவும் விடாமல் தடுத்து வைத்திருந்தான்.

“ஏற்கனவே ஓவரா கொஞ்சிப்பாங்க. இப்ப இவ அண்ணனை அவளும், அவ அண்ணனை இவளும் கட்டியிருக்காங்க. சொல்லவா வேணும்?” என்று நொடித்துக் கொண்டாள் சந்தியா.

அப்போது சந்தியாவின் அம்மாவும், அப்பாவும் வர,

“வாங்க அத்தை, வாங்க மாமா” என்றாள் வேதா.

“என்னம்மா வேதா? நல்லா இருக்கியா? உடம்புக்கு இப்போ பரவாயில்லையா?” என்று சந்தியாவின் அம்மா கேட்ட கேள்வியில் துளிக்கும் அக்கறை இல்லை.

“நல்லா இருக்கேன் அத்தை..!” என்றவள்,

“சந்தியா அண்ணி, உங்க வீட்ல இருந்து வந்திருக்காங்க” என்றாள்.

“நான் போய் பார்த்துக்கறேன்மா.!” என்று அவர் சொல்லி செல்ல,

“இவங்களுக்கு எல்லாம் உண்மையான அக்கறையோட பேசவே தெரியாதா? எரிச்சலா வருது” என்றாள் கீர்த்தனா.

“விடுங்க அண்ணி..! நீங்க சொன்ன மாதிரி தான், நம்மளால அவாய்ட் பண்ண முடியாது” என்றாள்.

“அதுவும் சரித்தான்” என்றாள்.

இவர்கள் அனைவரும் விஜயின் காரில் செல்ல, செல்லும் வழியெங்கும் அவளை கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் விஜய்.

“மச்சான் ரோடு முன்னாடி இருக்கு” என்று சரண் சிரிக்க,

“நான் என்ன பின்னாடி இருக்குன்னா சொன்னேன்? ஆமா, அகரன் எங்க?” என்றான்.

“அவன் கிரி கூட முன்னமே போய்ட்டான்” என்றான் சரண்.

“கீர்த்தனா, சித்தி அந்த பொண்ணுக்கு கிப்ட் குடுத்து விட்டாங்க. அதை எடுத்துகிட்டியாடா?” என்றான்.

“எடுத்து வச்சுட்டேன் அண்ணா” என்றவள்,

“அதென்ன அந்த பொண்ணு? அவ பேரு கனிமொழி. என் தங்கச்சி” என்றான் சரண். 

வேதா அவனை முறைக்க, 

“ஹி..ஹி.. வேதா என்னடா அப்படி பாசமா பார்க்குற? எனக்குத் தங்கச்சின்னா உனக்கு அக்கா..!” என்றான்.

“கனிமொழி என் தங்கச்சி” டைட்டில் நல்லா இருக்கு. நீங்களே வச்சுக்கோங்க! என்றாள் வேதா உதட்டை சுழித்தபடி.

“இந்தா ஆரம்பிச்சுட்டா பழையபடி” என்று புலம்ப ஆரம்பித்தான் சரண்.

மிரர் வழியாக பார்த்த விஜயின் பார்வை என்னவோ சுழித்த அவள் இதழ்களிலேயே தேங்கி விட்டது. சட்டென்று அவளும் பார்க்க, சன்ன சிரிப்புடன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

“இப்போ இவர் பார்த்தாரா?” என்று மீண்டும் பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்தாலும், தெரியாததைப் போலவே இருந்து கொண்டான். இந்த நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரண்,

“என்ன மச்சான் சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது.” என்றான்.

“உனக்கு தெரிஞ்சிடுச்சா.. அப்ப இனி சந்தோஷமா இருந்த மாதிரித்தான்” என்றான் விஜய்.

சரண் அவனைப் பார்த்து முறைக்க,  விஜய்க்கு முதல் நாள் நடந்து ஞாபகத்திற்கு வந்தது.

மறுபடியும் அவனை எழுப்புவதற்காக சரணை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் வேதா.

“மச்சான்..டேய் மச்சான்..!” என்று அவன் எழுப்ப, அப்போது தான் தூக்கம் கலைந்து எழுவதைப் போல் எழுந்தான்.

“என்னடா?” என்றான் வேண்டுமென்றே.

“இங்க ஏன்டா வந்த? இது வேதா ரூம்” என்றான்.

“நீ தான இந்த ரூமைக் காட்டின?” என்றான் விஜய் தூக்கக் கலக்கத்தில் கேட்பவனைப் போல்.

“இல்லையே..நான் அந்த ரூமைத்தான காட்டிட்டு போனேன்” என்றான் சரண் புரியாமல்.

“போடா லூசு..! நீ சொன்னன்னு நம்பி நான் வேற பாவம் இந்த பொண்ணு ரூம்க்கு வந்திருக்கேன் பாரு!” என்று பதறி எழுபவனைப் போல் நடித்தவன்,

“சாரி..!” என்று அவளைப் பார்த்து சொன்னபடி,

“வாடா போகலாம்..!” என்று சரணையும் இழுத்துக் கொண்டு சென்றிருந்தான்.

‘என்னடா நடக்குது இங்க?’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்த வேதாவைப் பார்த்தவன், நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

அதை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் முழுவதும் புன்னகை மட்டுமே.