“அது தான் நமக்கு வேணும். அவளுக்கு அவனும் புருஷனாகக் கூடாது. தாலி கட்டுனவனும் வேணாம்னு சொல்லணும்.  அவளுக்கு தான் அதிர்ச்சியா சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்களாமே? அப்ப இதெல்லாம் தெரிஞ்சா எப்படி இருக்கும்?” என்றார்.

“அய்யோ சின்ன அத்தை..! வேதாவுக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது? இதெல்லாம் வேண்டாம். எனக்கு அந்த விஜய் தான் வேதாவுக்கு புருஷனா வரக் கூடாது. மத்தபடி அவ அவ நந்தகுமாரையே கட்டிக்கட்டும்.” என்றாள்.

“அவளுக்கு ஏதாவது ஆகணும்னு நான் நினைப்பேனா?அந்த பையன் சொன்னதைக் கேட்டு, எத்தனை நாளைக்கு தான் உன் மாமனார் இந்த விஷயத்தை எல்லாம் மூடி மூடி வைப்பாரு. கலகம் பிறந்தா தான வழி பிறக்கும். எனக்கும் அந்த விஜய் பயலை பிடிக்காது. அதுமட்டுமில்லாம, அந்த நந்தகுமாரை விட இவன் ரொம்ப வசதியானவனாமே. கனிக்கு இதுல ரொம்ப வருத்தம்.” என்று அப்படியே பேச்சை மாற்றினார் நீலாவதி.

அவரின் பேச்சை அப்படியே நம்பிய சந்தியா,

“அது என்னவோ உண்மை தான் சின்ன அத்தை. அவசரத்துல கிடைச்ச மாப்பிள்ளையா இருந்தாலும், அவளுக்கு மட்டும் தான் இப்படி பெரிய இடமா சிக்குது. அது சரி, நாம மட்டும் என்ன குறைஞ்சவங்களா?” என்று விட்டுக் குடுக்காமல் பேசினாள்.

“கீர்த்தனா அம்மா சொன்னதை வச்சுப் பார்க்கும் போது அவன் பெரிய இடம் தான். நம்மல்லாம் எம்மாத்திரம் அவனுக்கு?” என்று அங்கலாய்த்தார் நீலாவதி. விஜயைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களை விட இவர்களுக்கே அதிகம் தெரிந்திருந்தது.

“அவன் எவ்வளவு பெரிய இடமா இருந்தாலும் அவனுக்குத் தான் வேதாவை பிடிக்கலையே” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, புல்லட் வந்து நிற்கும் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தவர்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.

விஜய்யும் வேதாவும் ஒன்றாக பைக்கில் வந்து இறங்கியதைப் பார்த்தவர்கள் அப்படியே சிலையாக நின்று விட்டார்கள்.

“எப்படியத்தை இது சாத்தியம்?” என்றாள் சந்தியா.

“எனக்கும் அது தாண்டி புரியலை” என்றார் நீலாவதி திறந்த வாயை மூடாமல்.

வேதாவை இறக்கி விட்டு வண்டியை நிறுத்திய விஜய், சரண் வீட்டை நோக்கி செல்ல,

“எங்க போறீங்க?” என்றாள்.

“சரண் வீட்டுக்கு” என்றான்.

“அவங்க யாருமில்லை. மைதிலிம்மா மட்டும் தான் இருப்பாங்க. சரண் அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. உள்ள வாங்க!” என்றாள் உபசரிப்பாய்.

“இட்ஸ் ஓகே..! சரண் வந்த பிறகு வர்றேன்” என்றான் பட்டும் படாமல்.

“அப்பத்தா இருக்காங்க. பயப்படாம வாங்க சார்” என்றாள்.

“ஓகே..!” என்றபடி அவன் உள்ளே செல்ல, அவனுடன் இணைந்தே அவளும் சென்றாள். இருவரும் ஜோடியாக உள்ளே செல்வதைப் பார்த்த நீலாவதி,

“என்னடி சந்தியா? நாம ஒன்னு நினைச்சா இங்க ஒன்னு நடக்குது? இதெல்லாம் நிஜமா? என்னால நம்பவே முடியலை. நீ போய் என்னன்னு பாரு” என்றார்.

“என்னாலையும் தான் நம்ப முடியலை. இருங்க என்ன தான் நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம். அப்பத்தா இருக்காங்க. நான் போகலை. அவனை கண்டாலே எனக்கு காண்டாகுது” என்றாள்.

“வண்டியை எடுத்துட்டு எங்க வேதாம்மா போன? உன்னைய சரண் அந்த வண்டியை எடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கான்ல” என்று அப்பாத்த கேட்க,

“இவங்களை கூப்பிட போனேன் அப்பத்தா. சரண் அண்ணா தான் போக சொன்னான்.” என்றாள். அப்போது தான் விஜய்யை கவனித்தார் கோதை. பார்த்தவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

“ராசா வாப்பா..!” என்று அவனின் கையயை பற்றிக் கொள்ள,

“எப்படி இருக்கீங்க?” என்றான் சன்ன சிரிப்புடன்.

“எனக்கென்னய்யா? நல்லா இருக்கேன்? வீட்ல அம்மா சௌக்கியமா?” என்றார்.

“ம்ம் நல்லா இருக்காங்க பாட்டிமா” என்றான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர்,

வேதா, தம்பிக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..! என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் சுடசுட டீயுடன் வந்தாள்.

“சாரி எனக்கு டீ பிடிக்காது” என்றான் பட்டென்று. அவனை முறைத்தவள்,

“எனக்குக் கூட தான் காபி பிடிக்காது. உங்க வீட்டுக்கு வந்தா நான் குடிக்கிறது இல்ல. அதே மாதிரி பழகிக்கோங்க!” என்றாள் அவளும் பட்டென்று.

“நான் கட்டாயப்படுத்தி உங்களை குடிக்க சொன்னதா ஞாபகம் இல்லை” என்றான்.

“நானும் கட்டாயப்படுத்தலை. இஷ்ட்டம்னா குடிங்க. இல்லைன்னா விடுங்க. ஆனா, சூடு ஆறமுன்ன குடிச்சுடுங்க. மறுபடியும் சூடு பண்ணா டேஸ்ட் மாறிடும்” என்றாள்.

பேச்சு காபி, டீ பற்றி போவதாய் அவனுக்குத் தெரியவில்லை. உறுத்திக் கொண்டிருந்த சந்தேகம் அவனுக்கு உறுதியாகிக் கொண்டே சென்றது.

அவன் டீயை குடிப்பானா? மாட்டானா? என்று ஆர்வமுடன் அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவள் முகத்தில் தெரிந்த ஆர்வத்தில் விஜய் உறுதியே பண்ணிவிட்டான்.

“சாரிடா மச்சான். நீ வர்றேன்னு ஏன் முன்னமே சொல்லலை.” என்று சரியாக கீர்த்தனாவுடன் உள்ளே வந்தான் சரண்.

“சித்தி எங்க இருக்க விடுறாங்க? அடிச்சு பத்தாத குறைதான்” என்றான் விஜய் சிரித்துக் கொண்டு.

“அம்மாவைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமேண்ணா” என்றாள் கீர்த்தனா.

விஜய் கையில் இருந்த டீ கப்பை பார்த்த சரண்,

“ஹேய் வேதா..! அவனுக்கு டீ பிடிக்காது. காபி தான் எப்பவும் குடிப்பான்.  போய் காபி போட்டு எடுத்துட்டு வாடா..! அண்ணனுக்கு தான் இப்போ இந்த சூடான டீ தேவைப்படுது” என்றவன், விஜய் கையில் இருந்த டீ கப்பை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.

வேதாவின் முகம் சட்டென்று வாட, சரணை முறைத்தாள். அவளின் செய்கைகள் அனைத்தும் விஜய்யின் கண்களில் தப்பாமல் பட்டது.

மீண்டும் அவனுக்கு காபி போட சென்றாள். பாலை அடுப்பில் வைத்தவளுக்கு,

ஏனோ விஜய் டீயை குடிக்காமல் வைத்திருந்தது, அவளுக்கு குறிப்பால் எதையோ உணர்த்தியதைப் போன்று இருந்தது. அவளறியாமல் கண்கள் கலங்கியது. கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று கன்னத்தில் விழ காத்திருக்க,

சமையலறை கதவின் அருகில் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்திருந்தான் விஜய்.

“என்ன பண்ற?” என்றவனின் குரலில் திடுக்கிட்டவள், வேகமாய் கண்ணீரை உள்ளே இழுக்க, அப்படியும் அது அவன் கண்ணில் பட்டு மீண்டது.

அவன் நின்றிருந்த தோரணையில் கவரப்பட்டவள்,

“உங்களுக்கு காபி போடுறேன்” என்றாள். இதற்கு முன் அவள் குரலில் இருந்த துள்ளல் இப்போது இல்லை. குரல் கமறியதோ என்னவோ?

“நான் கேட்கலையே?” என்றான் ஒரு மாதிரி குரலில்.

“உங்களுக்குத் தான் டீ பிடிக்காதே” என்றாள் பால் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டே.

“பிடிக்காது தான். ஆனா, இனி பழகிக்கிறேன்” என்ற குரலில் அவனை சட்டென்று பார்த்தாள். கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு அவள் பார்த்து வைக்க, அந்த பார்வையில் தொலைந்து போனான்.

அவள் பார்வையில் இருந்தது அதிர்ச்சியா? இல்லை ஆச்சர்யமா? என்று தெரியவில்லை.

 “மசாலா டீ ரொம்ப நல்லா போடுவியாமே? கிடைக்குமா?” என்றான் அவளையே பார்த்துக் கொண்டு.

வார்த்தை வராமல் ‘சரி’ என்பதைப் போல் அவள் தலை மட்டும் ஆடியது.

திரும்பி சென்றவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் உள்ளே எப்படி உணர்ந்தாள் என்றே புரியவில்லை. அவ்வளவு நேரம் இருந்த பாரம் எல்லாம் சட்டென்று மறந்ததைப் போல் இருந்தது. அதைவிட அதிக மன பாரம் ஏறப் போவதை அறியாமல்..!!!!