உடலுக்குள் இனம் புரியாது உணர்வு தோன்றி மறைய, வயிறுக்குள் கிலி பரவியது. கழுத்தருகில் பட்ட அவனின் மூச்சுக் காத்து, ஒரு இன்ப அவஸ்தையை அவளுக்குள் பரப்ப,
“சார்..! கொஞ்சம் விலகி உட்காருங்க” என்றாள், உள்ளே போன குரலில்.
“நீதானமா உன்னை தங்கை மாதிரி நினைச்சுக்க சொன்ன? நானும் யோசிச்சு பார்த்தேன். நீ சொல்றதும் சரி தான்.” என்றவன் அவளின் ஒவ்வொரு மாற்றங்களையும் உள் வாங்கிக் கொண்டிருந்தான்.
“தெரியாம சொல்லிட்டேன் சார்..! என்ன இருந்தாலும் நான் இன்னொருத்தர் மனைவி. யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க” என்றாள் அவளும் விடாமல்.
“அப்படி யாராவது கேட்டா.. ஏன்? உன் புருஷனே வந்து கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றவன் அவளின் தோள் மேல் கையைப் போட்டு வாகாக அமர்ந்தான்.
அவன் கை போட்டதில் அதிர்ந்தவள், தன்னைக் கட்டுப்படுத்த முயன்று முடியாமல், வண்டி தடுமாறி விழுவதைப் போல் போக,
“ஹேய் வேதா..! பார்த்து..” என்று மொத்தமாய் அவள் மேல் சரிந்து அவளை முன் தள்ளி, பிரேக்கை அழுத்திப் பிடித்திருந்தான் விஜய். அவனின் நெஞ்சின் உயரத்திற்கு மட்டுமே இருந்தவளுக்கு, அவனின் இதயத் துடிப்பை உணர முடிந்தது. மொத்தமாய் அவனுக்குள் அடங்கியிருந்தவளின் இதயம் நின்று துடித்தது. உணர்வுகளின் பிடியின் கண்களை இறுக மூடிக் கொண்டாள். யாராவது பார்த்தால், அவன் அவளுக்கு வண்டி ஓட்ட கற்றுக் கொடுப்பதைப் போல் தோன்றும்.
“இடியட்..! டிரைவ் பண்ணும் போது சிந்தனை அதுல மட்டும் தான் இருக்கணும்.” என்றாள்.
அவனை முறைத்தவள்,
“இப்ப எதுக்கு என்னைத் திட்டுறிங்க? நீங்க எதுக்கு என் தோள் மேல கை போட்டிங்க? அதான் பதட்டத்துல தடுமாறிடுச்சு” என்றாள் தலையை குனிந்தபடி.
“ஏன்? சரண், அகரன் இப்படி தோள்ல கை போட்டப்ப இப்படி தான் தடுமாறினிய?” என்றான் நக்கலாய்.
“அவங்களும் நீங்களும் ஒண்ணா?” என்றாள் வேகமாய்.
“ஏன்? நீதான சொன்ன அப்படின்னு? சரண் அண்ணா பிரண்ட் எனக்கும் அண்ணா மாதிரின்னு” என்றான் வேண்டுமென்றே.
“யப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன். இனி சொல்ல மாட்டேன்.ஆளை விடுங்க” என்றாள்.
‘இவளுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு விஜய். இத்தனை நாள் இல்லாம இவ புதுசா நடந்துக்கறா? ஆனா எப்படி?’ என்று திகைத்தவன்,
இறங்கி பின்னாடி வந்து உட்கார்..!” என்றான்.
“இல்ல, நானே ஓட்றேன். நீங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்க” என்றாள்.
அப்போது தான் கவனித்தான், தான் இன்னும் அவளை அணைத்தபடி அமர்ந்திருந்ததை.
“ஹோ..! சாரி” என்று என்றவன்,
“ஆர் யு ஷயர்.டிரைவ் பண்ணிடுவியா?” என்றான்.
“ஷயர் ஷயர்” என்றவள்,
‘இவனை பிக்கப் பண்ண வந்தது தான் நான் செஞ்ச பெரிய தப்பு’ என்று புலம்பிக் கொண்டாள்.
அவளை தொந்தரவு செய்யாமல் பின்னிருந்து ரசித்துக் கொண்டு வந்தான் விஜய்.
‘நல்லா தான் டிரைவ் பண்றா’ என்று மனதிற்குள் மெச்சிக் கொள்ளவும் மறக்கவில்லை.
அங்கே சிவச்சந்திரன் வீட்டில்,
“ஏன்டி சந்தியா? நான் சொன்னது என்னாச்சு?” என்று நீலாவதி ஆரம்பிக்க,
“அட நீங்க வேற சின்ன அத்தை.. முன்னமாவது நான் சொல்றதை காது கொடுத்து கேட்டார். ஆனா, காதம்பரி அத்தை போனதுக்கு அப்பறம் சுத்தம். ஏற்கனவே தங்கச்சி மேல பாசம். இப்ப சொல்லவா வேணும். என் பேச்சு எங்க எடுபடுது. போற போக்கைப் பார்த்தா பெங்களூர் வேலையே விட்டுட்டு இங்க வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை” என்றாள்.
“அது என்னவோ உண்மைதான். மகராசி செத்தாலும் செத்தா, எல்லாரையும் ஒன்னு சேர்த்து வச்சுட்டு இல்ல போய் சேர்ந்திருக்கா. எப்படான்னு காத்துகிட்டு இருந்த உங்க மாமாவும் உடனே போய் அண்ணன் கால்ல விழுந்தாச்சு.” என்றார் நீலாவதி.
“உங்க நிலைமையே இங்க இப்படி இருக்கு. அப்பறம் என்னைப் பத்தி எல்லாம் யோசிச்சு பாருங்க? எங்க மாமியார் இல்லைன்னாலும் அவங்க இடத்தை நிரப்புறதுக்கு தான் வேதா இருக்காளே. என்ன சொக்குப் பொடி தான் போடுவாளோ தெரியாது. எல்லாரும் வேதா புராணம் தான். இப்ப புதுசா சின்ன மாமாவும் சேர்ந்திருக்காரு” என்றாள்.
“அது என்னவோ வாஸ்தவம் தான்” என்று நிறுத்தியவர்,
“ஆமா, என்னாச்சு அவ கல்யாண விவகாரம். அந்த பையன் தான் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டானாமே. தாலியையும் கட்டிட்டு எதுக்கு அப்படி சொல்லணும்?அப்ப அவனுக்கு அவளைப் பிடிக்கலையா?” என்றார் நீலாவதி.
“எனக்கும் அப்படி தான் அத்தை தோணுது. பிடிச்சு தாலி கட்டியிருந்தா ஏன் அப்படி சொல்லணும்? அதுமட்டுமில்லாம, வேதாவுக்கு விருப்பம்னா அந்த நந்தகுமார் கூடவே சேர்த்து வச்சிடுவேன்னு வேற சொல்லியிருக்கான்” என்றாள் சந்தியா.
“என்னடி வீட்டு மாப்பிள்ளையை அவன் இவன்னு சொல்லிட்டு இருக்க?”
“எனக்கென்னமோ அவனைக் கண்டாலே ஆகுறது இல்லை சின்ன அத்தை. நம்மளை சரியா கணிச்சு வச்சிருக்கான். என்னைக் கேட்டா, இவ அவன் கூட சேராம இருக்குறது தான் நமக்கு நல்லது. அதுக்கு ஒரு வழி பண்ணனும்” என்றாள்.
“அதெல்லாம் ஏற்கனவே பண்ணி தான் வச்சிருக்கேன்” என்றார் நீலாவதி.
“என்னத்தை சொல்றிங்க?” என்றாள் ஆச்சர்யமாய்.
“அட ஆமா சந்தியா. இவளுக்கு கல்யாணம் ஆன விஷயம் இன்னும் அந்த மாப்பிள்ளை பையனுக்கும் அவங்க வீட்டு ஆட்களுக்கும் தெரியலை. இப்போ கனி வளைகாப்புக்கு துணி எடுக்க, மதுரை போயிருந்தப்ப தான் அந்த பையனோட அம்மா, அப்பாவைப் பார்த்தேன். அந்த பையன் கட்டுனா இவளைத் தான் கட்டுவேன்னு சொல்லிட்டு இருக்கானாம்.மெட்ராஸ்ல ஏதோ கடைல வச்சு வேற வேதாவை பார்த்தானாம். ரொம்ப வருத்தப்பட்டு பேசுனாங்க.” என்றார்.
“அந்தம்மா அன்னைக்கு அந்த பேச்சு பேசுச்சு. இப்ப என்ன திடீர்ன்னு? அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?” என்றாள்.
“நான் ஒன்னும் சொல்லலை. கனி வளைகாப்புக்கு கண்டிப்பா வந்திடுங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அவங்களும் வருவாங்க. வந்து பேசுனா பிரச்சனை ஆகும்ல” என்று நீலாவதி விவரமாய் சொல்ல,
“சான்சே இல்லத்தை. ஆனா, அவங்க வந்து பேசுறதால நமக்கு என்ன பலன்? உண்மையை சொல்லி அனுப்பிட மாட்டாங்களா?” என்றாள்.