அத்யாயம் 18:

வேதாவை அங்கு எதிர்பார்க்காதவன், அவள் வந்து நின்ற விதத்தைப் பார்த்து இன்பமாய் அதிர்ந்தான்.

“நீ எங்க இங்க?” என்றான்.

“இந்த கேள்வியை நான் கேட்கணும்? ஏன் பஸ் ஸ்டான்ட்ல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு உங்களுக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா?” என்றாள்.

“நான் உன்னை வரச்சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே?” என்றான் ஒரு மாதிரி பார்வையுடன்.

“எனக்கும் கூப்பிட வரணும்னு இல்லை. சரண் அண்ணா வீட்ல இல்லை. இன்பாக்ட் உங்களை பிக்கப் பண்ண யாருமில்லை. போனா போகுதேன்னு நான் பிக்கப் பண்ண வந்தேன்” என்று அந்த பிக்கப்பில் அழுத்தம் கொடுத்தம் கூறினாள்.

‘இவ பேச்சு இன்னைக்கு ஒரு தினுசா இருக்கே’ என்று நினைத்தவன்,

“சரண் வரமுடியாதுன்னு சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன். எதுக்குத் தேவையில்லாம நீ வந்திருக்க?” என்றான்.

“இதைத்தான் நானும் சொன்னேன். சரண் அண்ணா எங்க கேட்டான்?” என்றவள்,

“உங்க விசாரணை கமிஷன் முடிஞ்சதுன்னா கிளம்பலாமா?” என்றாள்.

“இவ கூட ஒண்ணா உட்கார்ந்து போறதா? என்னைய சோலிய முடிக்காம விட மாட்டா போல இருக்கே”  என்று பெருமூச்சு விட்டவன்,

“இறங்கு” என்றான்.

“எதுக்கு?” என்றாள்.

“நான் டிரைவ் பண்றேன். நீ பேக்ல உட்கார்” என்றான்.

“ஹெலோ சார்..! உங்களை பிக்கப் பண்ண வந்தது நானு. உங்க அளவுக்கு இல்லைன்னாலும் நாங்களும் நல்லா தான் வண்டி ஓட்டுவோம். நம்பி உட்காருங்க. பத்திரமா கொண்டு போய் சேர்த்துடுவேன்” என்றாள். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தமாய் இருக்க, அவள் ஏதோ பொடி வைத்து பேசுவதைப் போன்றே தோன்றியது அவனுக்கு.

அவனின் யோசனையான முகத்தைப் பார்த்தவள்,

“அட ஏறுங்க ரகு அண்ணா..! என்னைய உங்க தங்கையா நினைச்சுக்கோங்க” என்றாள், உதட்டோரம் பூத்த சிரிப்புடன்.

“ஏய்ய்..!!!” என்று குரலை உயர்த்தியவன், இருக்கும் இடம் அறிந்து,பல்லைக் கடித்து பொறுமை காத்தான்.

“ஹோ..சாரி..சாரி..! உங்களுக்கு தான் அண்ணான்னு சொன்னா பிடிக்காதில்ல? சரி ஏறுங்க பிரதர்” என்றாள் மீண்டும்.

“ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நீ கிளம்பு. எனக்கு வரத் தெரியும்” என்றான் பட்டென்று.

“என்னா சார் நீங்க? இதுக்கும் ஒத்துக்க மாட்டிக்கிறிங்க? அதுக்கும் ஒத்துக்க மாட்டிக்கிறிங்க? இப்ப வந்து நான் என்ன பண்றது?” என்று வடிவேல் பாணியில் சொல்ல, கோபத்தையும் மீறி அவன் இதழோரம் புன்னகை பூக்க,

“இங்க சிரிக்கிறதுக்கு யாரும் காசு கேட்க மாட்டாங்க. சோ, நீங்க நல்லாவே சிரிக்கலாம். ஆனா, வண்டில ஏறிட்டு சிரிங்க. இது சென்னை இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே நின்னுட்டு இருந்தா, போறவங்க வர்றவங்க எல்லாம் வித்யாசமா பார்ப்பாங்க” என்றாள்.

“ஹோ..! நீ புல்லட் ஓட்டிட்டு வந்ததை மட்டும் வித்யாசமா பார்க்க மாட்டாங்களா?” என்றான்.

“அதெல்லாம் மாட்டாங்க.! நான் எப்பவும் ஓட்டுவேன். சீக்கிரம் ஏறுங்க பிரதர்” என்றாள்.

“தயவு செஞ்சு உன்னைக் கெஞ்சி கேட்கிறேன். இந்த அண்ணா, பிரதர் இப்படியெல்லாம் கூப்பிடாத..” என்றான்.

“அப்பறம் எப்படித்தான் உங்களை கூப்பிடுறது?” என்றாள் பாவமாய்.

“அண்ணான்ற வார்த்தையைத் தவிர்த்து நீ எப்படி கூப்பிட்டாலும் எனக்கு பிரச்சனையில்லை. ஈவன், போடா, வாடான்னு கூப்பிட்டா கூட பிரச்சனை இல்லை” என்றான் பொறுமையாக.

“அதெப்படி சார் உங்களை மரியாதை இல்லாம கூப்பிட முடியும்? உங்க கஷ்ட்டம் எனக்குப் புரியுது. என்னை மாதிரி ஒரு சூப்பர் பிகர் உங்களை அண்ணான்னு கூப்பிட்டா மனசு வலிக்கத் தான் செய்யும். ஆனா பாருங்க.. நீங்க ரொம்ப லேட். எனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே. நான் மிசஸ். நந்தா. அது உங்களுக்கு ஞாபகம் இருக்குல்ல. கல்யாணம் ஆன நான் உங்களை எப்படி கூப்பிட்டா என்ன சார்?” என்றாள்.

‘முன்னாடியெல்லாம் என்னைப் பார்த்து நாலு வார்த்தை பேசவே அப்படி பயப்படுற பொண்ணு, இப்ப இந்த அளவுக்கு வாயாடுறாளே? என்னவோ தப்பா இருக்கே?’ என்று விஜய் யோசிக்க,

“சார் வர்றீங்களா இல்லையா? என் பொறுமை ஒரு அளவுக்குத் தான். இதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியாது” என்றாள். விஜய் அவளை கூர் பார்வையுடன் பார்க்க,

‘அய்யோ..வேதா ஓவரா பேசி மாட்டிக்காத. பார்வையே லேசர் மாதிரி இருக்கு. அடக்கி வாசி’ என்று தனக்குள் பேசிக் கொண்டவள்,

“ப்ளீஸ் ஏறுங்க..! நம்பிக்கையில்லைன்னா, நீங்க கூட டிரைவ் பண்ணுங்க” என்றபடி அவள் இறங்க போக,

“தேவையில்லை” என்றவள் அவளின் பின்னால் அமர்ந்தான். முதன் முறையாக ஒரு பெண்ணின் பின்னால் அமர்ந்து செல்வது, அவனுக்குத் தான் புதுவித அனுபவமாக இருந்தது. அவள் பேசிய விதத்தை யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் அமர்ந்த அடுத்த நிமிடம் வண்டியை கிளப்பியவளுக்கு, அவனின் அருகாமையும், நெருக்கமும் ஒரு புது வித உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை அகரன், சரண் என அனைவரையும் வைத்து ஓட்டியிருக்கிறாள். அப்போதெல்லாம் தடுமாறாத கை, இப்போது தடுமாறுவதைப் போன்று தோன்றியது. பின்னால் அமர்ந்திருந்தவனின் பெர்ப்யூம் வாசனை அவளுக்குள் பரவி, ஒரு சுகந்தத்தையும், மயக்க உணர்வையும் தர, ஒரு வித மயக்கத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளின் அவஸ்தை கூடிக் கொண்டு போனதே தவிர குறையவில்லை.

அவ்வளவு நேரம் யோசனையுடன் இருந்தவன் அப்போது தான் அவளின் பதட்டத்தை கவனித்தான்.

‘இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறா? இவ பேச்சுக்கும் பதட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையே? ஒரு வேளை நான் பின்னாடி இருக்குறது அன்ஈசியா இருக்கா?’ என்று தன்னை ஆராய, அவளை விட்டு தள்ளி தான் அமர்ந்திருந்தான்.

‘நான் நெருங்கிக் கூட உட்காரலையே?’ என்று யோசித்தவன்,

“இப்போ ஏன் இவ்ளோ நெர்வஸா டிரைவ் பண்ற” என்றான்.

“அ..அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..! நான் நல்லா கேஷுவலா தான் இருக்கேன்” என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க,

“இல்லையே..! கண்டிப்பா ஏதோ தப்பா இருக்கு. என்னைப் பார்த்தா எப்பவும் பயம் தான் கண்ல தெரியும். இப்போ பதட்டம் தெரியுதே. யாரும் எதுவும் சொல்லியிருப்பாங்களோ?” என்று அவன் யோசிக்க, வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது. இருந்தாலும் தோன்றிய சந்தேகத்தை உறுதிப் படுத்த எண்ணினான்.

அவளுக்கு பின்னால் தள்ளி அமர்ந்திருந்தவன், சற்று நெருங்கி அமர்ந்தான். வேதாவிற்கு தான் அவஸ்தையாய் இருந்தது.