கல்லூரி முடிந்து வெளியே வந்தவளை வரவேற்றது என்னவோ நந்த குமார் தான். அகரனுக்காக காத்திருந்தவள் நிச்சயம் அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை. அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியும், இதமும் துணி கொண்டு துடைத்ததைப் போன்று இருந்தது.
“ஹாய் வேதா..!”
“ஹாய்..!” என்றவள்,
“நீங்க எப்படி இங்க?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஜஸ்ட் ஒரு கெஸ் தான். உங்க சரண் அண்ணா இந்த காலேஜ்ல தான் வொர்க் பண்றார். சோ எப்படியும் நீ இங்க தான் ஜாயின்ட் பண்ணியிருப்பன்னு நினைச்சேன். என்னோட கெஸ் கரெக்ட் தான்” என்றான்.
“ம்ம்..!” என்றாள். அவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அகரன் வந்துவிட்டால் நன்றாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு வேதா? ஏன் இவ்வளவு அமைதியா இருக்க? அன்னைக்கு மால்ல பார்த்தப்ப பர்ஸ்ட் நல்லா தான் இருந்த. அப்பறம் ஏன் திடீர்ன்னு அப்படி எழுந்து போன? நான் ஏதாவது மிஸ் பிகேவ் பண்ணிட்டேனா? ஜஸ்ட் நான் கேஷுவலா தான் உன்னோட ஹேண்ட்ஸ ஹெல்ட் பண்ணேன். பட், நீ ஏன் அப்படி ரியாக்ட் பண்ணன்னு புரியாம டென்ஷன் ஆகிடுச்சு. இப்போ ஹெல்த் ஓகே வா?” என்றான் அக்கறையாய்.
“ஐம் ஓகே..!” என்றாள்.
“நான் இவ்ளோ பேசுறேன். ஆனா, நீ ரொம்ப ஷார்ட்ட பதில் சொல்ற? என்கிட்டே பேச விருப்பம் இல்லையா?” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை. உங்களை திடீர்ன்னு பார்க்கவும் கொஞ்சம் ஷாக். அவ்வளவு தான்” என்றாள்.
“எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும் வேதா” என்றான் மன்றாடும் குரலில்.
“என்ன பேசணும்? ஏன் பேசணும்?” என்றாள்.
“கண்டிப்பா என் மேல கோபமா இருப்பன்னு எனக்குத் தெரியும். பட் அப்ப இருந்த சிச்சுவேஷன் அப்படி. கொஞ்ச நாள் கழிச்சு எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு தான் அமெரிக்கா கிளம்பி போனேன்.” என்றான் புரிய வைக்கும் நோக்கத்துடன்.
அவள் அமைதியாக இருக்க,
“ஸ்டில் ஐ லவ் யு வேதா” என்றான் நந்தகுமார்.
“அது..!” என்று அவள் எதையோ சொல்ல வாயெடுக்க,
“எக்ஸ்க்யூஸ்மி..!” என்ற குரலில் இருவரும் திரும்ப, விஜய் நின்றிருந்தான். அவனைப் பார்த்து அதிர்ந்தான் நந்தகுமார். ஏனோ விஜயை அவனுக்குப் பிடிக்கவில்லை. அன்று வேதாவை உரிமையாக தூக்கிக் கொண்டு சென்றவனைக் கண்டவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.
“நீங்க எப்படி இங்க?” என்றான் சற்று எரிச்சல் கலந்த குரலில்.
“நீங்க இங்க வொர்க் பண்றதுல எனக்கென்ன ப்ராப்ளம் இருக்க போகுது பிரதர்” என்று நார்மலாக பேசுபவன் போல் பேசி வைக்க, அவன் குரலில் இருந்த பேதம் விஜய்க்கு தெரியாமல் இல்லை.
வேதாவிற்கு தான் அவஸ்தையாக இருந்தது. தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று சொல்வதற்காகத் தான் வாயைத் திறந்தாள். அதற்குள் விஜய் வந்துவிட்டிருந்தான். அவன் முன்னால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. விஷயம் தனக்குத் தெரியும் என்று அவன் முன் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவள்.
“நாங்க கொஞ்சம் பேசணும்.” என்று நந்தகுமார் விஜயை பார்த்து சொல்ல,
“பேசுங்க..! யார் வேண்டாம்னு சொன்னா?” என்றான் எரிச்சலுடன்.
‘நீ போனா தாண்டா என்னால பேச முடியும்’ என்ற ரீதியில் பார்த்து வைக்க,
“ரெண்டு பேரும் கொஞ்சம் விலகுறிங்களா? என்னோட காரை எடுக்கணும்” என்றான் பட்டென்று. அப்போது தான் விஜய்யின் கார் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாள் வேதா.
“ஹோ..! சாரி ப்ரதர்..!யு கேரி ஆன்..” என்ற நந்தகுமார், வேதாவின் கையைப் சட்டென்று பிடித்து நகர்த்த, விஜய்யின் பார்வையோ நந்தகுமார் பிடித்திருந்த வேதாவின் கைகளின் மீது பதிந்து மீண்டது. வேதா சட்டென்று கையை உருவ, அதை கண்டு கொள்ளாதவனாய் காரில் ஏறிய விஜய், கதவை பட்டென்று அடித்து சாற்றினான். அவனின் செயல் வேதாவிற்கு முகத்தில் அறைந்ததைப் போல் இருந்தது. அதற்குள் அகரனும் வந்துவிட்டான்.
“சாரி வேதா..!லைப்ரரி வரைக்கும் போயிருந்தேன். அதான் லேட்” என்றவன் அப்போது தான் நந்தகுமாரை கவனித்தான். பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.
“நீங்க எங்க இங்க?” என்றான் பட்டென்று.
“இதென்ன கேள்வி அகரா? நான் வேதாவைப் பார்க்க வந்தேன். முன்னெல்லாம் என்னைப் பார்த்தா அவ்வளவு அன்பா பேசுவ. இப்ப ஏதோ வேண்டா வெறுப்பா பேசுற?” என்றான் நந்தா ஆதங்கமான குரலில்.
“ஹோ..! சின்னப் பையன் அகரன் இப்போ பெரிய பையனாகிட்டானா?” என்றான் நந்தா.
“சின்னப் பையனோ, பெரிய பையனோ? வேதாவோட தம்பி நான். அது எப்பவும் மாறாது. வேதாவை பார்க்க வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க. அன்னைக்கு உங்ககிட்ட பேசுனதுக்கு அப்பறம் தான் அவளுக்கு முடியாம போச்சு. எதுவா இருந்தாலும் வீட்ல பெரியவங்க கிட்ட பேசிக்கங்க” என்றான் கோபம் கலந்த குரலில்.
“அகரா” என்று வேதா அவன் கையைப் பிடிக்க,
“இப்போ என்னக்கா சொல்லப் போற? நான் அமைதியா இருக்கணும்னா?” என்றான்.
“இது காலேஜ்..!” என்றாள்.
“பச் போக்கா..!” என்றவன் அப்போது தான் காரினுள் இருந்த விஜய்யை கவனித்தான்.
‘அய்யோ..! இவரும் இங்க தான் இருக்காரா’ என்று நொந்தவன்,
“வேதா எனக்கு உன்கிட்ட பேசணும்” என்றான் நந்தா மீண்டும்.
“டைம் ஆச்சு வேதாக்கா..! கிளம்பு..” என்றபடி அகரன் ஸ்கூட்டியை எடுக்க, அவனின் பின்னால் அமர்ந்தாள் வேதா. ஒன்றும் செய்ய முடியாமல் அவளைத் தவிப்பாக பார்த்தான் நந்தா.
காரினுள் இருந்த விஜய்க்கு கோபம் ஏன் வருகிறது என்று தெரியாமலேயே வந்து கொண்டிருந்தது. வேதாவின் கையைப் பிடித்திருந்த நந்தாவின் கையை உடைக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
அதிலும் அவன் சொன்ன,’ஐ லவ் யு ‘ விஜயின் காதில் விழுந்திருக்க, தன்னை அடக்க பெரும்பாடு பட்டான்.
‘இவன் வரான்னு இவளுக்கு முன்னமே தெரியும் போல. அதான் மார்னிங் ஸ்பெஷலா கிளம்பி வந்தாளோ?’ என்று நினைக்க,
“உனக்கு இவ்வளவு கோபம் வர்றதுல ஞாயமே இல்லை விஜய். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது தான உன் எண்ணம். அப்ப கோபமெல்லாம் வரக் கூடாது” என்று ஒரு மனம் அவனை கழுவி ஊத்தியது.
‘எனக்குள்ள என்ன நடக்குது?நான் ஏன் இப்படி மாறிகிட்டு இருக்கேன்.வரவர நீ ரொம்ப பலகீனமாகிட்டு வர்ற விஜய்’ என்று எண்ணியவன்,
ஸ்டேரிங்கை இறுகப் பிடித்து உணர்வுகளையும், ஆத்திரத்தையும் கட்டுப்படுத்தி, காரை எடுத்தான்.
‘ச்ச்ச..! நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டேன். வேதாவை அப்படியே வெளிய கூட்டிட்டு போய் பேசலாம்னு இருந்தேன். எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டான் இந்த அகரன்” என்று நொந்தபடி கிளம்பி சென்றான் நந்தகுமார்.
பல சிந்தனைகளில் காரை ஓட்டிக் கொண்டிருந்த விஜய், தூரத்தில் அகரன் ஸ்கூட்டியை மிதித்துக் கொண்டிருக்க, வேதா கடுப்புடன் நின்றிருப்பது தெரிந்தது.
‘நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிற அடுத்த நிமிஷம் கண்ணு முன்னாடி வந்து நினைக்க வைக்கிறா இந்த பொண்ணு’ என்று எண்ணியவள், அவர்கள் அருகில் காரை நிறுத்த,
“என்னாச்சு அகரா?” என்றான்.
“என்னன்னு தெரியலண்ணா..!ஸ்டார்ட் ஆகலை” என்றான்.
“மெக்கானிக்கு கால் பண்ணியா?”
“மெக்கானிக் ஷெட் பக்கத்துல தாண்ணா. நான் ஷெட்ல வண்டியை விட்டுட்டு வர்றேன். நீங்க வேதாவை வீட்ல டிராப் பண்ணிடுறிங்களா?” என்றான். விஜய் அவனை சந்தேகமாய் பார்க்க,
“அண்ணா..! நிஜமாவே வண்டி ஸ்டார்ட் ஆகலை. நீங்க வேணும்னா வந்து செக் பண்ணுங்க” என்றான் பாவமாய்.
“வர சொல்லு” என்றான்.
அவன் குரல் வேண்டா வெறுப்பாய் இருப்பதைப் போன்று தோணியது வேதாவிற்கு.