ஓரக்கண்ணால் அவள் லயாவைப் பார்க்க, அவளோ விஜய்யை பார்ப்பதே தன் வேலை என்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு நடக்கும் அனைத்தும் விஜய்யின் கண்களில் இருந்து தப்பாமல் விழுந்திருக்க, எதையும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான்.
“வேதா..!” என்றாள் ரம்யா, அவள் புறம் திரும்பாமலே.
“ம்ம்..!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“ஒரு விஷயம் கவனிச்சியா?” என்றாள் மெதுவாக.
“என்ன?”
“விஜய் சாரும் நீயும் இன்னைக்கு ஒரே கலர் ட்ரஸ்.” என்றாள் ரம்யா. அப்போது தான் அவனுடைய சட்டையை கவனித்தாள் வேதா. மெரூன் கலர் சட்டையில் அட்டகாசமாய் இருந்தான்.
“ஒரே கலர் எல்லாம் இல்லை. நான் ரெட் கலர். சார் மெரூன் கலர்” என்றாள்.
“எல்லாம் ரெட் பேமிலி தான?” என்றாள் ரம்யா.
“இப்ப இது ரொம்ப முக்கியம். ஏற்கனவே நம்மளைக் கண்டால் ஆகாது அவருக்கு. கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருடி” என்று பல்லைக் கடித்தாள் வேதா. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே..
“வேத வர்ஷினி அன்ட் ரம்யா” என்ற விஜயின் குரலில் இருவரும் எழுந்து நிற்க,
‘இந்த ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ? கரெக்ட்டா நான் பேசுறது மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும் போல’ என்று நொந்து கொண்டாள்.’
“வாட் டாப்பிக் டிட் ஐ டேக் அ கிளாஸ் ஆன்” என்றான் எரிச்சலுடன்.
ரம்யா எதுவும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அவனின் பார்வை வேதாவிடம் திரும்ப,
‘ வேணும்னே பழி வாங்குறார்..’ என்று உள்ளுக்குள் அவனை மென்று தின்றபடி, வேகமாய் சென்று மார்க்கரை எடுத்தவள், ஒருநிமிடம் யோசித்து விட்டு, கடகடவென்று அதை செய்து முடித்தாள். அவன் மிகக் கடினமான ஒன்றிற்கு அவளை விடையளிக்க சொல்லியிருந்தான். அவள் அதை அசால்ட்டாக செய்து முடித்ததை வகுப்பில் இருந்த அனைவரும் ‘ஆ’ வென்று பார்த்துக் கொண்டிருந்தனர். விஜய்யின் கண்களில் ஒரு மெச்சுதல் இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“விடுடி, இந்த ஒரு சம் போட்டுட்டா இவ பெரிய அறிவாளியா?” என்று அசால்ட்டாய் கூறினாள் லயா. அவளுக்கு எப்பொதும் அறிவில் தனக்குக் கீழ் தான் அனைவரும் என்ற எண்ணம்.
“வேதாவை சாதரணமா எடை போடாத.ஷி இஸ் சோ பிரிலியண்ட்” என்று ஹரிணி எச்சரிக்க,
“இந்த பட்டிக்காடு எல்லாம் எனக்கு மேட்டரே இல்லை.” என்றாள் லயா.
வகுப்பும் முடிந்து அனைவரும் லஞ்சிற்கு கலைந்து செல்ல,
“வேற லெவல், கலக்கிட்ட மச்சான்..” என்று அவளின் நண்பர்கள் பாராட்டித் தள்ள,
“பேசாம போய்டு. செம்ம காண்டுல இருக்கேன். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஒரு நாள் இல்ல ஒரு நாள் இருக்கு அந்த வாத்து மூக்கனுக்கு..” என்றபடி திரும்ப, அங்கே வகுப்பறையின் வாயிலில் கைகளைக் கட்டியபடி சாய்ந்து நின்றிருந்தான் விஜய ரகு நந்தன்.
“ஆத்தி..” என்று ஜெர்க் ஆனவள்,
“இவர் எப்படி ரம்யா வந்தார்?” என்றாள் பல்லிடுக்கில் சிக்கிய வார்த்தைகளுடன்.
“நீ ஸ்டார்ட் பண்ணும் போதே வந்துட்டார்” என்றாள் ரம்யாவும். அவளை முறைத்தபடி நின்றவன், பின் உள்ளே சென்று டேபிளில் அவன் வைத்து விட்டு சென்ற புக்கை எடுத்துக் கொண்டு போனான்.
வேதா “முன்னாடியே சொல்றதுக்கு என்னடி?”
“எங்கடி சொல்ல விட்ட? இஷ்ட்டத்துக்கு பேசிட்டே போற. நீ பேசுனதை எல்லாம் ஒன்னுவிடாம கேட்டுட்டார். எப்படியும் பிரின்சிகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவார். ” என்ற ரம்யா பாவமாய் முழித்தாள்.
“கம்ப்ளைன்ட் எல்லாம் பண்ண மாட்டார். ஆனா, ஏற்கனவே நம்மளைக் கண்டா ஆகாது. இனி எல்லா கிளாஸ்லயும் வச்சு செய்வார்” என்றாள் வேத வர்ஷினி.
அவள் பேசியதையும், பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டுக் கொண்டு சென்ற விஜய்யின் இதழ்கடையோரம் புன்னகை பூத்திருந்தது.
ரம்யாவுடன் கேண்டீனுக்குள் நுழைய, சரணும் விஜய்யும் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர்.
“அங்க பாருடி உங்க சரண் அண்ணா..!விஜய் சார் அவர்கிட்ட எதுவும் சொல்லிட்டு இருக்காரோ” என்று ரம்யா பயந்தபடி கேட்டாள்.
“அப்படியெல்லாம் இருக்காது. அப்படி சொன்னாலும் பார்த்துக்கலாம் விடு. நீ போ, நான் வர்றேன்” என்றாள்.
சரண் தன்னுடைய அண்ணன் என்றுஅவள் நண்பர்கள் வட்டத்திற்கு மட்டும் சொல்லியிருந்தாள்.
“சரண் அண்ணா..! என்ன லஞ்ச் சாப்பிட கேண்டீன் வந்திருக்கிங்க. அண்ணி குடுத்து விடலையா?” என்றாள். விஜய் என்ற ஒருவன் இருப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
‘இந்நேரம் வரைக்கும் என்னை கழுவி ஊத்திட்டு, எப்படி ஒண்ணுமே தெரியாத பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்கா பாரு’ என்று பல்லைக் கடித்தான் விஜய்
“அவ சமைச்சு அப்போதைக்கு சாப்பிட்டாலே உசுருக்கு உத்தரவாதம் இல்லை. இதுல லஞ்ச் வரைக்கும் தாங்குமா?” என்ற சரண்,
“நீ எங்க இங்க? நீ வீட்ல இருந்து தான எடுத்துட்டு வருவ?” என்றான்.
“இந்தாங்க..! இதை சாப்பிடுங்க..!” என்று கையிலிருந்த டிபனை அவனிடம் திணித்துவிட்டு சென்றாள்.
“நீ சாப்பிடுற அளவெல்லாம் எனக்கு எப்படி பத்தும் வேதாம்மா?” என்றான்.
“இன்னைக்கு நிறைய தான் எடுத்துட்டு வந்தேன். எப்படியும் அந்த தடிமாடுங்க பங்கு கேட்பானுங்கன்னு..” என்றவள் அருகில் இருந்தவனை பார்த்தும் பார்க்காததைப் போல் செல்ல,
‘திமிரு..! உடம்பு முழுக்க திமிரு’ என்று முனங்கினான் விஜய்.
“ஏதாவது சொன்னியா மச்சான்?” என்றான் சரண்.
“ம்ம்..! என்ன லஞ்ச்?” என்றான்.
“பாட்டாணி புலாவும், முட்டை கிரேவியும். என் தங்கச்சின்னா தங்கச்சி தான்..” என்று அவன் வாசம் பிடிக்க, பட்டென்று தன் புறம் டிபன் பாக்ஸை இழுத்தான் விஜய்.
“சும்மா சொல்லக் கூடாது மச்சான். உன் சிஸ்டர் நல்லாத்தான் சமைக்கிறா. க்வாண்டிட்டி அதிகமா தான் இருக்கு. நீயும் எடுத்துக்கோ மச்சான் என்றான் போனால் போகுதென்று.
“எல்லாம் என் நேரம்டா” என்று புலம்பிய சரண் தங்கையின் சமையலை ருசி பார்க்கவும் மறக்கவில்லை.
எதையோ வாங்குவதைப் போல் இரண்டு முறை எழுந்து சென்று வந்த வேதாவின் கண்களில் இவை அனைத்தும் பட,
“சாருக்கு என்னைக் கண்டா தான் ஆகாது போல. நான் சமைச்ச சாப்பாடு மட்டும் ஆகும்” என்று சிலுப்பிக் கொண்டு சென்றாள். அவளறியாமல் மனதிற்குள் ஏற்பட்ட நிறைவை அவள் உணரவேயில்லை.
அன்றைய சந்தோஷ மனநிலை அப்படியே நீடிக்கப் போவதில்லை என்று அவள் அறிந்திருக்கவில்லை பாவம்.