அத்யாயம் 16:

நாட்கள் அதன் போக்கில் செல்ல, இப்போதெல்லாம் விஜயை நன்கு ஊன்றி கவனிக்க ஆரம்பித்திருந்தாள் வேதா. அவனது பழக்க வழக்கங்கள் கூட அவளுக்கு அத்துபடி ஆகியிருந்தது. இத்தனை நாட்கள் கருத்தில் படாத விஷயங்கள் ஒவ்வொன்றும் இப்போது கண்ணிலும், கருத்திலும் பட, ஒவ்வொன்றையும் கவனித்தவள், மறந்தும் எந்த இடத்திலும் தனக்கு உண்மை தெரியும் விஷயத்தை சரணைத் தவிர யாரிடமும் சொல்லவில்லை.

அன்று கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளின் மனம் அதன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க, கண்ணாடி முன் நின்றிருந்தவளின் கைகள் பின்னலிட்டுக் கொண்டிருந்தது. யோசனை முழுவதும் விஜய்யைப் பற்றி தான்.

விஜய் அவளிடம் உண்மையை மறைப்பதற்கான காரணம் என்னவென்று அவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் வாயைக் கட்டிப் போட்டதும் ஏன் என்று அவளுக்குத் தெரியாது. விருப்பட்டு தாலி கட்டினானா?இல்லை, வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் காதம்பரியின் கோரிக்கையை ஏற்று தாலி கட்டினானா? இப்படி எந்த கேள்விக்கும் அவளுக்கு பதில் தெரியாது. அது அவனே வாயைத் திறந்து சொன்னால் தான் ஆயிற்று. அது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

‘இவ்வளவு யோசிக்கிற உனக்கு முதல்ல அவனைப் பிடிச்சிருக்கா?’ என்று அவள் மனம் கேட்க, அந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.

அவளைப் பொறுத்தவரை விஜய் என்பவன் நல்லவன்,உறவுகளிடத்தில் அக்கறை உள்ளவன்,உறவினன், தங்களின் கடினமான நேரங்களில் உடன் இருந்து பார்த்துக் கொண்டவன், நலன் விரும்பி, தன் தாயின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். இதைத் தாண்டி அவளுக்கு வேறு எந்த உணர்வும் இருக்கவில்லை. அவனிடம் தோழமை உணர்வு கூட ஏற்படவில்லை. அவன் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான் சரியாக இருக்கும்.

இருந்த குழப்பங்களுக்கு எல்லாம் அவளுக்கு ஓரளவிற்கு தீர்வு கிடைத்திருந்தது. எது எப்படி இருந்தாலும், விஜய் தன் கணவன் என்பதை மனதில் அழுந்த பதித்துக் கொண்டாள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அவளுக்கு.

ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை அவன் கட்டாயத்திற்காக தாலி கட்டியிருந்தால், அதைப் பிடித்துக் கொண்டு அவனை தன் வாழ்வுடன் இணைத்து வைத்துக் கொள்ள நினைப்பது சுயநலத்தின் உச்சம் என்று நினைத்தாள்.

‘இப்ப நான் என்ன பண்றது? அப்படியே அக்சப்ட் பண்ணிக்கனுமா? இல்லை, விருப்பமில்லாத அவருக்கு விடுதலை குடுக்கணுமா?’ என்று உள்ளுக்குள் எண்ணம் ஓட,

‘அவனுக்கு விருப்பமில்லைன்னு உன்கிட்ட நேரடியா சொன்னானா?’ என்றது மனம்.

“இருக்குன்னும் சொல்லலையே?’ என்று வாதிட்டாள்.

“இங்க பாரு வேதா? நடந்தது உனக்கு எப்படி அதிர்ச்சியோ? அதே மாதிரி தான அவனுக்கும் இருக்கும்? உனக்கு எப்படி டைம் தேவைப்படுமோ, அப்படித்தான அவனுக்கும் தேவைப்படும்.நீ எந்த காரணத்துக்காக யோசிக்கிறியோ, அதே காரணத்துக்காக அவனும் யோசிக்கலாம் இல்லையா?” என்று இப்போது தான் மனம் தெளிவாக யோசித்தது.

‘ஒரு வேலை நான் நந்தகுமாரை விரும்புறதா நினைச்சிருப்பாரோ? சரண் அண்ணா கூட அப்படித்தான கேட்டான்?’ என்று யோசிக்க, அவளுக்கு குறுக்கு சந்தில் முட்டி நின்ற பாதைகள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் தெளிவாகியது. மனதின் தெளிவு முகத்திலும் இருக்க, கிளம்பி வெளியே வந்தவள்,

“அகரா ரெடியா..! டைம் ஆகிடுச்சு” என்றாள்.

“நான் எப்பவோ ரெடி..” என்றபடி அகரன் வர, இருவருக்குமான மதிய உணவையும் எடுத்துக் கொண்டாள்.

“வேதா இன்னைக்கு என்ன லஞ்ச்?” என்றான்.

“ம்ம்..! பட்டாணி புலாவும், முட்டை கிரேவியும்” என்றாள்.

“அக்கான்னா அக்காதான்..!”  என்று செல்லம் கொஞ்சியவன்,

“ஆமா, என்ன இன்னைக்கு ஓவர் பிரைட்டா இருக்க மாதிரி இருக்க.?” என்று அகரன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தான்.

அன்று மாலில் எடுத்த சிவப்பு நிற பேனல் கட் சுடிதாரை அணிந்திருந்தவள், அதே நிறத்தில் ஜிமிக்கியும் அணிந்து கூடுதல் அழகுடன் காணப்பட்டாள்.

“நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்றாள்.

“இல்லையே..! என்னமோ ஒன்னு இடிக்குதே..” என்று யோசித்தவன், அவளைச் சுற்றி சுற்றி பார்த்தான்.

“அகரா” என்று பல்லைக் கடித்தாள்.

“ரைட்டு விடு..! போகலாமா?” என்று இருவரும் கிளம்பி கீழே வர, அங்கே விஜய்யின் வீட்டின் முன் நின்றிருந்த புதிய ரக புல்லட்டைப் பார்த்தவளுக்கு கண்கள் மின்னியது. சுற்றம் மறந்து அருகே சென்றவள், ஆசையுடன் பார்க்க, அவளை உள்ளிருந்து பார்த்த விஜய்க்கு மூச்சடைத்தது.

‘என்ன இவ வரவர இவ்ளோ அழகா தெரியறா?என்னை இவ கொஞ்சம் கொஞ்சமா இவ பக்கம் இழுக்குறா. என்னை சோதிக்கவே கிளம்பி வருவாளோ?” என்று எண்ணியவன்

“இல்ல விஜய் இது சரியில்லை. மனசை அலைபாயவிடாத. பி ஸ்ட்ராங்..” என்று இதயப்பகுதி தட்டி ஆறுதல் படுத்திக் கொண்டான்.

வேதாவோ,“அகரா புல்லட்” என்றாள்.

“நான் என்ன ட்ராக்டர்னா சொன்னேன்?” என்றான்.

“இப்ப எதுக்குடா கோவிச்சுக்கற?”

“அப்பறம் என்னடி? நானே கெஞ்சி கூத்தாடி அப்பாகிட்ட இதே மாதிரி வண்டியை வாங்க அடி போட்டு வச்சிருந்தேன். ஆனா, நீ என்ன பண்ண? சின்னப் பையனுக்கு எதுக்கு இவ்வளவு காஸ்ட்லி வண்டின்னு, என் ஆசைல மண்ணை அள்ளி போட்டதுமில்லாம, வாங்கிக் குடுக்க ரெடியா இருந்த மிஸ்டர் பாலச்சந்திரனையும் கெடுத்து விட்ட. ஒரு வயசுப் பையனை ஸ்கூட்டி ஓட்ட விட்ட பாவம்லாம் உன்னை சும்மா விடாது வேதா” என்றான் கடுப்பாய்.

“சரி சரி கோவிச்சுக்காதடா? அக்கா உனக்கு வாங்கித் தரேன்.” என்றவளின் கைகள் அந்த வண்டியை வருட, அவளின் ஆசையை அறிந்தவன்,

“அதான் இன்னைக்கு ஊருக்கு போறோமே? அங்க போய் சரண் அண்ணா வண்டியை எடுத்து ஓட்டலாம். இப்ப கிளம்பலாம். லேட் ஆகிடுச்சு” என்றபடி ஸ்கூட்டியை எடுக்க, அதில் அமர்ந்தாலும் அவளின் பார்வை என்னவோ அந்த பெரிய வண்டியின் மீது தான். சிறு வயதில் இருந்து அந்த வண்டியின் மீது அவளுக்கு அலாதிப் பிரியம். ராமச்சந்திரன் ஒரு பழைய மாடல் புல்லட் வைத்திருந்தார். அதில் அமர்ந்து ஊர் சுற்றிய நினைவுகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போனது.

அவர்கள் கிளம்பும் வரை காத்திருந்த விஜய், வெளியே வந்து  மீண்டும் வண்டியை எடுத்து ஷெட்டில் நிறுத்திவிட்டு வழக்கம் போல் காரையே எடுத்தான். இன்று டூ வீலரில் செல்லாம் என்று நினைத்தவனுக்கு, ஏனோ வேதாவின் அந்த ஏக்கப் பார்வையைப் பார்த்தவுடன் அதில் செல்லும் மனம் வரவில்லை போலும்.

கல்லூரிக்குள் நுழைந்தவளை வரவேற்றது அவளின் நண்பர்கள் பட்டாளம். அந்த நண்பர்கள் கூட்டத்தில் ரம்யாவும் இவளும் மட்டுமே பெண்கள்.

“ஹேய்..!ஹாய்..” என்று இவள் கையசைக்க,

“உங்க வானரப் படைகளோட போய் ஐக்கியமாகிக்க வேதா. நான் கிளாஸ்க்கு போறேன்” என்றபடி அகரன் சென்று விட்டான்.

“வா மச்சான்..வா மச்சான் உனக்காகத் தான் வெயிட்டிங்”  என்றனர்.

“என்ன அதிசயம்? எல்லாரும் கேங்கா இங்க இருக்கீங்க? ரம்யா என்னடி விஷயம்?” என்றாள் வேதா.