‘எல்லாம் சித்தியோட வேலையாத்தான் இருக்கும்’ என்று தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.
‘இன்னைக்கு வீட்ல இருந்தா ஆபத்து விஜய்.கிளம்பி வெளிய போறது தான் உத்தமம்’ என்று நினைத்தவன், வேகமாய் குளித்து கிளம்பினான். டார்க் புளு கலர் ஜீனும், வொய்ட் கலர் ஷேர்ட்டும் அணிந்தவன், கிளம்பி வெளியே வந்தான்.
அகரனுடன் அமர்ந்திருந்த வேதா, சோபாவில் பட்டும் படாமல் அமர்ந்து, மலங்க மலங்க முழித்துக் கொண்டு அந்த வீட்டினை சுற்றி பார்வையை விட, அதைப் பார்த்த விஜய்யின் கால்கள் வெளியே செல்லும் வேகத்தை குறைத்தது. அவளின் அந்த அறியாத பார்வை அவனை ஏதோ செய்ய,
‘இப்ப எதுக்கு இப்படி மலங்க மலங்க பார்த்துட்டு இருக்கா? இங்க என்ன சிங்கம் புலியா இருக்கு?’ என்று ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மனதின் ஓரம் வெண்சாரல் அடித்தது. காலையில் அணிந்திருந்த அதே ஸ்கேர்ட்டும், டாப்பும் தான் அணிந்திருந்தாள். பதட்டத்தில் முகம் சற்று வியர்த்திருந்தது. அந்த வியர்வைத் துளிகளைக் கண்டு ஒரு நிமிடத்தில் ஓராயிரம் கவிதைகள் வடிக்க தயாராய் இருந்தது விஜய்யின் நெஞ்சம்.
“என்ன மச்சான்? சண்டே அதுவுமா எங்க கிளம்பிட்ட?” என்ற சரணின் குரலில் அவன் நிஜத்திற்கு வர, அதே நேரத்தில் வேதாவும் அதிர்ந்து, நிமிர்ந்து அவனைத் தான் பார்த்திருந்தாள்.
‘இப்போது பேசாமல் இருந்தா நல்லா இருக்காது’ என்று நினைத்தவன்,
“வாடா அகரா, வாம்மா..!” என்றான் வேதாவைப் பார்த்து.
“பார்த்தியா கீர்த்தனா இவனுக்கு கொழுப்பை. ஏதோ அடுத்த வீட்டுப் பொண்ணை உள்ள உபசரிக்கிற மாதிரி வாம்மாவாம் வாம்மா” என்று அவனின் சித்தி அவனை கிட்சனிள் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார்.
அவனின் ‘வாம்மா..!!’ என்ற அழைப்பு வேதாவையும் கடுப்பேத்தியிருக்க வேண்டும். அவளின் முகம் போன போக்கில் சரண் அதை கண்டு கொண்டான்.
“அதான் ஏற்கனவே வந்துட்டோமே அண்ணா..” என்று அகரன் சொல்ல, சிரிப்பை யாரும் அறியாமல் மறைத்தவள்,
“அதானே..! நாங்கதான் ஏற்கனவே உள்ள வந்துட்டோமே ரகு அண்ணா..!” என்றாள் வேண்டுமென்றே.
அவளின் ‘ரகு அண்ணாவில்’ அவனுக்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டு போக, கிட்சனில் இருந்து வந்த அவனின் சித்திக்கு மயக்கமே வந்து விட்டது.
‘இந்தா ஆரம்பிச்சுட்டாள்ல..! ரைட்டு.. மச்சானுக்கு இன்னைக்கு சம்பவம் கன்பார்ம்’ என்று சரண் நினைக்க,
“அவனை அண்ணான்னு கூப்பிடக் கூடாது வேதா” என்றார் அவனின் சித்தி.
“ஆன்ட்டி..! எனக்கு அவரைப் பார்த்தா அந்த பீல் தான் வருது.அகரன் மட்டும் கூப்பிடுறான். நான் கூப்பிட கூடாதா? நீங்களே சொல்லுங்க சரண் அண்ணா, நான் கூப்பிட கூடாதா?” என்று சரணை இழுத்து விட்டாள்.
‘இவ வாழ்க்கை சரியாகுறதுக்குள்ள எனக்கு டைவர்ஸ் ஆகிடும் போலயே’ என்று புலம்பியவன்,
“உனக்கு எப்படி தோணுதோ, அப்படி கூப்பிடுடா வேதாம்மா” என்றான்.
விஜய் அவனை வெட்டவா, குத்தவா என்று பார்த்து பார்த்து வைக்க, கீர்த்தனாவோ பார்வையிலேயே அவனை பஸ்ப்பமாக்கிக் கொண்டிருந்தாள்.
‘அண்ணனும் தங்கச்சியும் ஒரே மாதிரி பார்த்து வைக்கிறாய்ங்க..’ என்று சரண் புலம்ப,
“விஜய் நீ போய் அக்காவைக் கூட்டிட்டு வா..! நான் எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்” என்று அவர் பேச்சை மாற்ற, சரணை முறைத்துக் கொண்டே சென்றான்.
அவன் முறைப்பையும், சரணின் முகத்தையும் பார்த்த வேதாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
என்றைக்கும் அமைதியாய் இருக்கும் வீடு, அன்று கலகலப்பாய் இருக்க, ஆட்களின் பேச்சு சத்தத்தில், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வந்தார் அமுதா. வீல் சேரில் அமர்ந்தபடியே அனைவரையும் பார்க்க, அவரின் பார்வையில் விழுந்தாள் வேதா. அவர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த வேதா,
“ஹாய் ஆன்ட்டி! எப்படி இருக்கீங்க?” என்றாள்.
“நலம்” என்பதைப் போல் அவர் தலையை ஆட்ட,
“இந்த சின்னப் பையனை ஆசீர்வாதம் பண்ணுங்க ஆன்ட்டி. இவனுக்கு இன்னைக்கு பர்த்டே” என்று அகரனை அவரின் காலில் விழ வைத்தாள். நடுங்கிய கரத்தால் அவனின் தலையை அவர் தொட,
“அப்படியே இந்த சின்ன புள்ளையையும் ஆசீர்வாதம் பண்ணிடுங்க” என்று அவளும் அகரனுடன் விழுவதைப் போல் விழுந்து எழுந்தாள்.
அமுதாவின் பின்னால் நின்றிருந்த விஜய்க்கு, அவளின் செயல் அவனின் கோபப்பட்ட மனதை கொஞ்சம் நெகிழச் செய்திருந்தது.
“புருஷனோட விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டிய பொண்ணு, தம்பியோட வாங்கிட்டு இருக்கு” என்று சித்தி கீர்த்தனாவிடம் புலம்ப,
“என் தங்கச்சி சிக்ஸரா அடிக்கிறாளே..!” என்று மனதிற்குள் சிலாகித்துக் கொண்டான் சரண்.
அமுதாவின் கண்கள் வேதாவையே ஆதுரமாய் பார்த்து வைக்க, அந்த பார்வையின் பொருள் கொஞ்சம் புரியத் தொடங்கியது வேதாவிற்கு.
விஜய் அவருக்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருக்க, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. அவ்வளவு பொறுமையாய் ஊட்டிக் கொண்டிருந்தான் அவன் , குழந்தைக்கு ஊட்டுவதைப் போல. அவளுக்கு அந்த நேரத்தில் காதம்பரியின் நினைவு வந்தது.
“என்ன வேதா அப்படி பார்க்குற?” என்றான் சரண் மெதுவான குரலில்.
“ஆன்ட்டிக்கு எப்போ சரியாகும் அண்ணா..!” என்றாள்.
“அவங்களுக்கு சரியாகாது வேதாம்மா..! டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.! அவங்க இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள் தான்” என்றான் வேதனையான குரலில்.
“உங்க பிரண்டுக்கு அவர் அம்மான்னா ரொம்ப இஷ்ட்டமோ?” என்றாள்.
“அப்போ அவங்களோட இழப்பை அவர் எப்படி தாங்கிப்பார்?” என்றாள்.
“தெரியலையே?” என்றவனுக்கு அப்போது தான் உரைத்தது, அவள் ஏன் அப்படி கேட்கிறாள் என்று.
“என்னாச்சுடா?”
“எனக்கும் காதும்மாவைப் பார்க்கணும் போல இருக்குண்ணா..! அவங்க குரலைக் கேட்கணும் போல இருக்கு. அவங்க மடியில தூங்கனும் போல இருக்கு. அவங்க கையாள ஊட்டி சாப்பிடனும் போல இருக்கு.இது எல்லாமே இருக்கு, ஆனா, காதும்மா மட்டும் இல்லை..” என்றாள். கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று விழத் தயாராய் இருந்தது.
தினமும் ஒரு முறையாவது அவள் பேச்சில் காதம்பரியின் நினைவு வந்துவிட, சரணுக்குத் தான் ‘அய்யோ’ என்றிருந்தது.
“இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த வேதா. கண்ட்ரோல் உவர் செல்ப்” என்றான்.
அவள் எவ்வளவு மெதுவாக பேசினாலும், அவள் என்று வரும் போது வார்த்தைகள் விஜய்யின் காதுகளிலும் விழுந்திருந்தது. முகமும், உடலும் ஒரு சேர இறுக, அன்னைக்கு ஊட்டி முடித்தவன், அவருக்கான மாத்திரைகளையும் எடுத்து கொடுத்து, அவரை அறைக்குள் சென்று விட்டுவிட்டு வந்தான்.
“நீயும் சாப்பிடு விஜய்”
“எனக்கு பசியில்லை சரண்”
“அதெப்படி பசிக்காம போகும்..!நீ முதல்ல உட்காரு” என்று சித்தி சொல்ல, கோபத்துடனேயே அமர்ந்தான். அவன் அமர்ந்த வேகத்தில் அருகிலிருந்த வேதா மீது இடித்துவிட,
“ஸ்ஆஆ..!” என்று தோள்பட்டையை நீவிக் கொண்டாள்.
“மூஞ்சி தான் பாறாங்கல்லு மாதிரி இருக்குன்னா, ஆளும் அப்படித்தான் போல.” என்று முகம் சுணங்கினாள்.
‘அவனைப் பார்த்தா பாறாங்கல்லு மாதிரியா இருக்கு? எங்க நல்லா பார்த்து சொல்லு?’ என்று உள் மனம் சொல்ல,
அணிந்திருந்த வொயிட் சேர்ட் அவனுக்கு தனி கலையைத் தர,ஆளை அசரடிக்கும் கம்பீரத்துடன் அமர்ந்திருந்தவனைப் பார்த்து முகத்தை சுழிக்க,
“என்ன?” என்றான் விஜய் வேண்டுமென்றே.
“இல்ல, ஒண்ணுமில்ல..!” என்றாள் வேகமாய்.
“தட்டைப் பார்த்து சாப்பிடு” என்றான்.
‘தட்டைப் பார்த்து சாப்பிடாம, உங்க மூஞ்சிய பார்த்தா சாப்பிட” என்று முனுமுனுக்க,
“எனக்கொன்னும் பிரச்சனையில்லை” என்று சொல்லிவிட்டு அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இப்ப என்ன சொன்ன?’ என்ற ரீதியில் அவள் தான் முழித்துக் கொண்டிருந்தாள். அந்த வகையில் காதம்பரியின் நினைவு கொஞ்சம் பின்னால் சென்றிருந்தது.