“வேண்டாம் சித்தி..! இதுல நீங்க யாரும் தலையிடாதிங்க” என்றான்.
“எனக்கு அந்த உரிமை இல்லையா விஜய்? என்ன இருந்தாலும் நான் உன்னைப் பெத்தவ கிடையாது. சித்தி தான?” என்றார்.
“உங்களுக்கு இல்லாத உரிமைன்னு இங்க எதுவுமே இல்லை. நான் அம்மாவையும் உங்களையும் எப்பவும் பிரிச்சுப் பார்த்ததில்லை. இப்பவும் சொல்றேன் என்னோட வாழ்க்கைக்காக ஏன் அந்த பொண்ணு ஆசையை அழிச்சு, அவ வாழ்க்கையையும் கெடுக்கணும்?” என்றான்.
“அப்போ கடைசி வரைக்கும் நீ இப்படியே தான் இருக்கப் போற? ஏற்கனவே உன் வாழ்க்கையை பத்தி யோசிச்சு தான் அக்கா நிலைமை தான் இப்படி ஆகிடுச்சு. அடுத்து எங்க நிலைமையும் அப்படி ஆகணும். அப்படித்தான?” என்றார்.
“சரி விடுறேன்..! கடைசியா என் கேள்விக்கு பதில் சொல்லு விஜய்..” என்றார்.
அவன் அவரையே பார்த்திருக்க…
“இத்தனை நாள்ல ஒரு நாள் கூடவா வேதா பொண்ணை உனக்குப் பிடிக்கலை. ஒரு நாள் கூடவா மனைவின்ற உரிமையோட நீ பார்க்கலை…எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றார்.
அவரின் கேள்வியில் அதிர்ந்தவன்,
‘எனக்கு அவளைப் பிடிக்கலையா?’ என்று பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல், தலை கோதி சமன் செய்தும் மனம் சமன் ஆகாமல் தவித்தது.
அவனின் பார்வையும் தவிப்பும் கீர்த்தனாவுக்கு புதிதாய் தெரிந்தது. அவளுக்குத் தெரிந்த விஜய் உணர்வுகளை அதிகம் முகத்தில் காட்டாதவன். அவன் நினைப்பதை அவனே வாயைத் திறந்து சொன்னால் தான் தெரியும். அந்த அளவிற்கு இறுகிப் போயிருந்தான். அதுவும் ஒரு சில வருடங்களாகத் தான். அதே சமயத்தில்,
குறும்பும், பாசமும், ஹீரோயிசமும், அசட்டு தைரியமும் கொண்ட விஜயின் மற்றொரு முகமும் அவளுக்கு ஞாபகத்தில் வந்து போனது.
“பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் விஜய்?” என்றார் மீண்டும்.
அவரை ஒரு முடிவுடன் பார்த்தவன்,
“நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறிங்க” என்று நிறுத்தியவன்,
“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு சித்தி. அவளை மட்டும் தான் பிடிச்சிருக்கு. அதனால தான் அவளுக்காக யோசிக்கிறேன். போதுமா? இனி உங்களுக்கு எந்த சந்தேகமும் வராது தான?” என்றவன் சட்டென்று அவன் அறைக்குள் சென்று விட்டான்.
அவனின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் கீர்த்தனாவோ சோபாவில் இருந்து எழுந்து நின்றே விட்டாள். அவளின் அம்மாவுக்கு முகமெல்லாம் அப்படி ஒரு சந்தோசம்.
“ம்மா..! என்னை கொஞ்சம் கிள்ளுங்க..! நான் கேட்டது எல்லாம் நிஜம் தான? அண்ணா சொன்னதை கேட்டிங்களா?” என்றாள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்த குரலில்.
“அவன் சொன்னதும் நிஜம் தான். நீ கேட்டதும் நிஜம் தான்..” என்றார்.
“சூப்பர்ம்மா ..! நான் கூட எதுக்கு இப்படி ஓவர் பெர்பார்மன்ஸ் பன்றிங்கன்னு யோசிச்சேன். வேற லெவல்மா..! அண்ணன் வாயாலையே வேதாவை பிடிச்சிருக்குன்னு சொல்ல வச்சுட்டிங்களே?” என்றாள்.
“அவளைப் பிடிச்சிருக்குன்னு நான் சொல்ல வைக்கலை. அவனுக்கு நிஜமாவே வேதாவைப் பிடிச்சிருக்கு. அதைத் தான் சொல்லிட்டு போறான்.” என்றார்.
“இப்ப என்ன பண்ண போறீங்க?” என்றாள்.
“அதான் என் பையனுக்கு மருமகளைப் பிடிச்சிருக்கே. எனக்கு இதுவே போதும்” என்றார்.
“ஆனா, அண்ணன் தான் வேதாவுக்கு பிடிச்சதைத் தான் செய்வேன்னு சொல்லிட்டு போறானே” என்றாள்.
“வேதாவுக்கு பிடிச்சது உங்கண்ணா இருந்தா, அவனால ஒன்னும் செய்ய முடியாது தான?” என்றார்.
“எப்படிம்மா இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க? ஆனா, வேதாவுக்கு பிடிக்கனுமே? ஏற்கனவே அண்ணனை கண்டா நாலடி தள்ளிப் போவா? நாலு வார்த்தை பேசுறதுக்கு காசு கேட்பா? நீங்க நினைக்குறது எல்லாம் எப்படி நடக்கும்?” என்றாள்.
“அதெல்லாம் புருஷன்னு தெரிஞ்சா அதுவே தன்னால நடக்கும். இப்போதைக்கு விஜய்க்கு வேதாவை பிடிச்சிருக்கு. எனக்கு அது போதும்..” என்றவர்,
“நீ நல்லா யோசிச்சு பாரு கீர்த்தனா, உங்க அண்ணன் என்னைக்கு அவன் சம்பந்தப்பட்டதை மத்தவங்களுக்கு விட்டுக் குடுத்திருக்கான். அவன் எப்படியும் வேதாவை விட மாட்டான்னு எனக்குத் தெளிவா தெரியும். இருந்தாலும் அவன் வாயால கேட்கணுமேன்னு தான் இவ்வளவு வாயாடுனதே” என்றார்.
“இனி எல்லாமே நல்லாதவே நடக்கும். அம்மா எதுக்கு இருக்கேன். என் மருமகளை எப்படி வீட்டுக்குள்ள வர வைக்கிறேன்னு மட்டும் பாரு” என்றவர்,
“நீ என்ன பண்ற? மாப்பிள்ளையையும், வேதா, அகரன் மூணு பேரையும் இப்போ டிபன் சாப்பிட கூப்பிட்டு வர்ற.” என்றார்.
“ம்மா ! வேதா வர மாட்டா..! இன்னைக்கு அகரனுக்கு பர்த்டே. சோ இந்நேரம் டிபன் செய்ய ஸ்டார்ட் பண்ணியிருப்பா.” என்றாள்.
“அதெல்லாம் சரண் மாப்பிள்ளைகிட்ட காலையிலேயே போன் பண்ணி பேசிட்டேன். நான் சொன்னதை மட்டும் செய்.” என்றார்.
“சரித்தான்..! இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கிங்க?” என்ற கீர்த்தனா அவர்களை அழைக்க மேலே சென்றாள்.
அறைக்குள் சென்ற விஜய்க்கு மனம் முழுவதும் கண்மண் தெரியாத கோபமும் வேதனையும் அப்பிக் கிடந்தது.
ஏற்கனவே அவளை மறக்கவும் முடியாமல், நினைக்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருப்பவனுக்கு, என்ன செய்வதென்று தெரியாத நிலை. நந்தகுமாரை பார்த்து வேதா அதிர்ந்ததை விட, விஜய் தான் அதிகம் அதிர்ந்திருந்தான். அதிலும் அவர்கள் இருவரும் தனியாக பேச செல்ல, இவனுக்கோ இதயத்தில் ஈட்டி பாய்ந்த நிலை தான். எவ்வளவு தான் அவன் விலகி விலகி போனாலும், விதி என்னவோ அவளை அவனுக்கு அருகிலேயே கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. இதில் இப்போது வேதா வேறு அடிக்கடி அண்ணா என்று அழைக்க, அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. விட்டால் அவளை அடித்துவிடும் அளவிற்கு கோபம் வரத்தான் செய்கிறது அவனுக்கு.
‘உனக்கு ஏன் கோபம் வருது விஜய். உனக்குத் தான் அவ வேண்டாமே? அவளுக்கும் உன்னைக் கண்டாலே பயம். வேண்டாம்னு நினைக்கிறவன், எதுக்காக அவளையே நினைக்கிற? அவ நந்தகுமாரை பார்த்தா என்ன? இல்ல வேற யாரையும் பார்த்தா என்ன?’ என்று ஒரு மனம் கேள்வி கேட்க,
“அவளை எனக்கு பிடிக்கும் தான். அதுக்காக நினைக்கவெல்லாம் இல்லை” என்றது இன்னொரு மனம்.
‘அப்படியா? அப்பறம் அவ உன்னை என்ன சொல்லிக் கூப்பிட்டா என்ன? அண்ணன் சொன்னா ஏன் கோபம் வருது’ என்று ஒரு மனம் கேட்க,
“அவ நான் தாலி கட்டுன பொண்டாட்டி. அவ எப்படி என்னை அண்ணான்னு சொல்ல முடியும்” என்று பதில் சொல்ல,
“இதைத் தான எல்லாரும் சொல்றாங்க. வேதா உன்னோட மனைவி. அதை முதல்ல மனசுல பதிய வை. மத்ததெல்லாம் நடக்குற படி நடக்கட்டும்” என்று அவனின் மனசாட்சி அவனிடம் தீர்மானமாய் சொல்ல,
‘அய்யோ..! நான் பேசாம நிம்மதியா இருந்தேன். எப்ப இவ என் வாழ்க்கையில வந்தாளோ, அப்போ ஆரம்பிச்சது பிரச்சனை’ என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு,
“உள்ள வாடா வேதா” என்ற சித்தியின் குரலில் ஏகத்திற்கும் அதிர்ந்தான். அறைக்குள் இருந்து வேகமாய் வெளியேறத் துடித்த கால்களை அடக்கினான்.
வேதா தயங்கி நிற்க,
“எதுக்குடா இவ்வளவு தயக்கம். இதுவும் நம்ம வீடு தான்.” என்று சொல்ல, அவளே அறியாமல் வலது காலை எடுத்து வைத்து சென்றாள். அதைப் பார்த்திருந்த அனைவருக்கும் திருப்தி.
வேதா இங்கு வந்த இத்தனை மாதங்களில் இதுவரை அவன் வீட்டினுள் ஒரு முறை கூட வந்ததில்லை.ஏன்? அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கூட கண்டு கொண்டதில்லை.