மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைப்பிற்கு வந்திருந்தனர். இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி, லேசான ஒப்பனையில் தேவதையாய் இறங்கி வந்தாள் வேத வர்ஷினி. மாப்பிள்ளை வீட்டின் சார்பில் வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரும் அவளைப் பார்த்துவிட்டு, அவள் அழகைப் பற்றியும் புடவையைப் பற்றியும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, காதம்பரியின் அருகில் சென்றவள்,

“எங்கம்மா இன்னும் அப்பத்தாவைக் காணோம்?” என்றாள்.

“அகரன் கூப்பிட போயிருக்கான். பக்கத்துல வந்துட்டாங்க..” என்றார் காதம்பரி. கனிமொழி கர்ப்பமாய் இருப்பதால் அவர் அவளிடம் சென்று ஒரு மாதம் ஆகியிருந்தது. வீம்புக்கென்று கனியும் அவரை அனுப்ப மறுத்து விட்டாள். ஒரு வழியாக அகரன் போய் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

அனைவரும் சாமி கும்பிட்டு திருநீரு வைத்துக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டார் கோதை.

“ராசாத்தி…” என்று வேதாவின் முகத்தை தடவ,

“போ அப்பத்தா..! இது தான் நீ வர்ற நேரமா? வீம்புக்குத் தான பண்றா உன் பெரிய பேத்தி. ஏதோ அவ வயித்துல பாப்பா இருக்குற ஒரு காரணத்துக்காகக் தான் உன்னைய அங்க விட்டு வச்சேன். அவளுக்கு வாந்தியெல்லாம் நின்னுருச்சா? இனி உன்னை அங்க அனுப்ப மாட்டேன் சொல்லிட்டேன்” என்றாள் வேதா உரிமையாய்.

“நானும் போக மாட்டேன். என் பேத்தி கல்யாணத்தை தவிர எனக்கு வேற என்ன முக்கியமா இருந்துட போகுது? அப்படியே அந்த மீனாட்சி தாயே நேர்ல வந்த மாதிரி இருக்கத்தா..” என்ற கோதை பாட்டி அவளுக்கு திருஷ்டி வழித்தார்.

“கீர்த்தனா எனக்கு மனசே ஆறலை. நம்ம விஜய்க்கு இந்த வேதா புள்ளைய பார்த்திருந்தா எப்படி இருந்திருக்கும்.அவன் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும். உங்க கல்யாணத்துல இருந்து எனக்கு இது தான் தோணிகிட்டே இருக்கு. இப்ப நினைச்சு என்ன பண்ண?” என்று கீர்த்தனாவின் தாய் புலம்ப,

“அம்மா..! எந்த நேரத்துல எதைப் பேசுறதுன்னு இல்ல. யாராவது கேட்டா என்ன நினைக்க மாட்டாங்க. இதை மட்டும் அண்ணா கேட்டான் அவ்வளவு தான். பேசாம இருங்க” என்று தாயை அடக்கினாள் கீர்த்தனா.

வந்திருந்தவர்கள் ஒரு வேனில் கிளம்ப, நந்தகுமாரின் அக்கா முறையில் இருந்த ஒரு பெண், வேதாவை அழைத்துக் கொண்டு காரில் செல்வதாக ஏற்பாடு. உடன் கீர்த்தனாவும் செல்வதாக இருந்தது.

வெளியே தன்னுடைய காரில் சாய்ந்து நின்றிருந்த விஜய ரகு நந்தனுக்கு ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

கையில் குத்துவிளக்குடன் வெளியே வந்த வேதாவின் முகம், மேற்கில் மறைந்து கொண்டிருந்த சூரியனின் கதிர்கள்  பட்டு தங்கமாய் மின்ன, அவளைப் பார்த்தவனின் விழிகள் அவளை விட்டு அகல மறுத்தது. இதயம் ஜெட் வேகத்தில் துடிப்பதைப் போல் இருந்தது அவனுக்கு.

‘இதென்னடா வம்பா இருக்கு. ஒரு சின்ன பொண்ணு. அவளைப் பார்த்தா எனக்கு ஏன் இப்படி ஆகணும்..?’ என்று யோசித்தவன், கை விரல்களை இறுக்கி, தன்னை சமன் செய்ய எடுத்த முயற்சிகளில் கொஞ்சம் வெற்றி பெற்று நிமிர,

வேதா செல்லும் காரில் மனோகரன் முன்னால் ஏற, வேதாவுடன் பின்னால் ஏற சென்றாள் கீர்த்தனா. அதைப் பார்த்த விஜய் என்ன நினைத்தானோ தெரியவில்லை. வேகமாய் சென்றவன், கீர்த்தனாவின் கையைப் பிடித்து தடுத்துவிட்டான்.

“என்னாச்சுண்ணா?” என்றாள் புரியாமல்.

“நீ என்கூட வாடா. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.” என்றான் மெதுவான குரலில்.

“ஏன் இப்படி பேசுறிங்க?” என்றாள் கீர்த்தனா புரியாமல்.

“எனக்கு சொல்லத் தெரியலை. ஐ பீல் லோன்லி…” என்றான் விஜய். அது வேதாவின் காதிலும் விழ,

“நீங்க உங்க அண்ணா கூட வாங்க அண்ணி. அதான் நந்தாவோட அக்கா ,மனோ அண்ணா எல்லாம் வர்றாங்களே. அகரனையும் வேணும்னா கூப்பிட்டுக்கிறேன்..!” என்றாள் வேதா.

“வேதா… அது.. நான்..” என்று கீர்த்தனா தயங்க,

“அண்ணி..! பிளீஸ்..! ஜஸ்ட் நாற்பது நிமிஷம் தானே. நீங்க போங்க” என்றாள்.

“நல்ல நேரம் முடியப் போகுது. கிளம்பலாமா?” என்று அந்த அக்கா முறையில் இருந்த பெண் சொல்ல, சரியென்று தலையாட்டிய வேதா காரினுள் அமர்ந்தாள்.

“ஏங்க..! நானும் வேதா கூடவே கிளம்புறேன். நீங்களும், உங்க தம்பியும் இருந்து வீட்டைப் பூட்டிட்டு வந்துடுங்க.சரண் நீ.. மைதிலி,அப்பத்தா, அகரனை அழைச்சுட்டு வந்துடுப்பா..” என்றவர், வேதாவுடனேயே கிளம்பிவிட்டார்.

“என்னாச்சும்மா? நீங்க அப்பா கூட வர்றதா தானே இருந்தது. இப்ப என்கூடவே கிளம்பிட்டிங்க?” என்றாள்.

“எனக்கு என் பொண்ணு கூட வரணும்னு தோணுது… அதான் வர்றேன்” என்றார். கண்கள் லேசாக கலங்கியதைப் போல் இருக்க,

“நீங்க பீல் பண்ணா, நானும் பீல் பண்ணுவேன்” என்றாள்.

“இது சந்தோஷத்துல கண்ணு கலங்குறது..” என்றவர்,

“நான் இருந்தாலும் இல்லைன்னாலும் இவங்களை எல்லாம் நீ பார்த்துப்ப தானே வேதா. ” என்றார்.

“இப்ப எதுக்கும்மா தேவையில்லாம பேசுறிங்க?. நீங்க எப்பவும் எங்க கூடத் தான் இருப்பிங்க” என்றவள் சலுகையாய் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“மேக்கப் கலையப் போகுது பாரு” என்றார்.

“கலைஞ்சா கலையட்டும்” என்று வேதா சொல்ல.. சிரித்தவர்,

“சந்தியாக்கு போன் பண்ணியா மனோ” என்றார்.

“லைன் போகலம்மா..! வந்திடுவா” என்றான்.

அதற்குமேல், அவளைப் பற்றி பேச முடியவில்லை. மாப்பிள்ளையின் உறவுக்கார பெண்ணை வைத்துக் கொண்டு.

கார் மதுரை சிட்டிக்குள் நுழையும் வேளையில், மனோவிற்கு சந்தியாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு சந்தியா கிளம்பிட்டியா?” என்றான்.

“மாப்பிள்ளை..” என்று அவளின் தாய் பேச,

“சொல்லுங்கத்தை, சந்தியா எங்க?” என்றான்.

“அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை மாப்பிள்ளை.அங்க வர கிளம்பிட்டு இருந்தவ திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. ஹாஸ்பிட்டல்  கூட்டிட்டு போயிட்டு இருக்கோம்” என்றார்.

“என்ன சொல்றிங்க?என்னாச்சு அவளுக்கு?” என்றான் குரலில் பதட்டத்துடன்.

“ஹாஸ்பிட்டல் போனா தான் தெரியும். நாங்க போயிட்டு என்னன்னு உங்களுக்கு கூப்பிடுறோம்” என்றார்.

“சரிங்கத்தை” என்று போனை வைத்தவனின் முகத்தில் இருந்த பதட்டத்தில்,

“என்னாச்சு மனோ? சந்தியாக்கு என்ன?” என்றார் காதம்பரி.

“என்னன்னு தெரியலைம்மா. திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்திருக்கா, அவங்க வீட்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க போல” என்றான்.

“நீ வேணும்னா போய் பார்த்துட்டு வா மனோ” என்றார்.

“என்னம்மா சொல்றிங்க? உங்களை இடையில விட்டுட்டு நான் எப்படி போக முடியும்? அவங்க பார்த்துப்பாங்க. நான் உங்களை மண்டபத்துல விட்டுட்டு அப்பறம் போயிக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, டிவைடருக்கு மறுபுறம் அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார், டிவைடரில் இடித்து இந்த பக்கம்  இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, ஒரு சுற்று சுற்றி, இவர்கள் சென்ற கார் மீது நடுவாக்கில் மோத, டிரைவர் சுதாரித்து பிரேக்கை போடும் முன்பு, அந்த விபத்து நடந்து முடிந்திருந்தது. மறுபுறம் இருந்த கார் கதவு உடைந்ததில் அந்த பக்கம் அமர்ந்திருந்த பெண், வெளியே தூக்கி வீசப்பட்டிருக்க, முன்புறம் இருந்த மனோவும் வெளியே விழுந்திருந்தான். டிரைவருக்கும் அவரின் பின்னால் அமர்ந்திருந்த காதம்பரிக்கும் அடி பலமாக இருக்க, அந்த நிலையிலும் வேதாவை வெளியே தள்ளி விட்டிருந்தார் அவர். முன்னால் இரண்டு கார்கள் அப்பளமாக நொறுங்கியிருக்க, இவர்கள் கார் ஒரு பக்கமாக சேதாரமாகியிருந்தது.கண் மூடி திறக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.