“மாப்பிள்ளைக்கு அவ்வளவு அவசரம் ம்ம்ம்..” நக்கலடித்தவள் வேகமாய் திரும்பி செல்ல எதிரே வந்த ரகுவின் மேல் மோதத் தெரிந்தாள். சற்று நிதானித்து தெளிந்தவள், அவனை நிமிர்ந்தும் பாராது “ சாரி” என்ற ஒற்றை சொல்லுடன் வெளியேறி விட்டாள். அவளை நிதானமாய் பார்த்தபடி உள்ளே வந்தவன்,
“யாருடா இது?” என்றான்.
“என்னோட தங்கை தான் “ என்ற சரண்,
“சார் இங்க இருந்தாலும் டைம்க்கு தான் வெளிய வருவிங்களோ? ஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் யா!!” என்றான் சிரிப்புடன்.
“உனக்கு எதுக்கு மச்சான் திடீர்ன்னு இப்படி ஒரு டவுட்..?” என்றான் ரகு புரியாமல்.
“டவுட் வரத்தானே செய்யும்..! அவனும் ஆண் தானே!” என்ற நண்பர்கள் வாயை மூடி சிரிக்க,
“பின்ன என்னடா? மாப்பிள்ளை என்னமோ நான் தான். ஆனா உன்னைப் பார்த்தா தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கு! என்னா கலரு? என்னா ஸ்டைலு?எப்பவும் போல இன்னைக்கும் நான் உன்ன சைட் அடிக்கிறேன் டா” என்றான் சரண் சிரிக்காமல், பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“எதுக்கு? ஏற்கனவே உன் தங்கச்சி என்மேல கொலை காண்டுல இருக்கா? இப்போ இது வேறையா? ரெண்டு பேருக்கும் எதுல ஒத்துப் போகுதோ இல்லையோ, இதுல நல்லா ஒத்துப் போகுது. காலையில இருந்து என்னைப் பார்க்க கூட விடலடா அந்த ராட்சஷி..” என்றான் சரண் பாவமாய்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான் மச்சான். அப்பறம் வாழ்க்கை முழுசும் அவளைப் பார்த்துகிட்டே இரு” என்றான் ரகு.
“எனக்கென்னவோ இவன் உன்னைத்தான் பார்த்துகிட்டே இருப்பான்னு தோணுதுடா. மச்சான் பார்வை அப்படி” என்று மற்றொருவன் சிரிக்காமல் கூறினான்.
சரண் கூறியது போல மாப்பிள்ளை போல் தான் இருந்தான் ரகு. மாநிறத்திற்கு கூடுதல் நிறத்துடன்,லைட் பிஸ்தா கிரீன் சட்டையும் டார்க் புளு பேண்ட்டும் அணிந்து அதை டக்கின் செய்திருந்தான். ஆறடி உயரமும்,அகன்ற தோள்களும்,படிய வாரிய தலையும்,ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், அறிவுக் கலை கூத்தாடும் கண்களும் அவனை ஆணழகனாகக் காட்டியது. அவன் சாதரணமாக நின்றிருந்தது கூட படு ஸ்டைலாகவே இருந்தது.
மணமேடையில் சரண் கம்பீரமாய் அமர, முன் வரிசையில் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டான் ரகு.
“என்னப்பா ரகு? மூணாவது மனுஷங்க மாதிரி இங்க வந்து உட்கார்ந்துட்ட? மேடைல மாப்பிள்ளைக்கு பக்கத்துல இருக்கலாம்ல. உங்க சித்தப்பா வேற ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறார். ” என்று மனக்குறையுடன் கீர்த்தனாவின் தாய் சொல்ல,
“கல்யாணம் முடியட்டும் சித்தி. ஏற்கனவே அவங்க பெரிய பேமிலி. எனக்கு அங்க கொஞ்சம் அன்கம்ர்டபிலா இருக்கு. நான் இங்கயே இருக்கேன். எதுன்னாலும் கூப்பிடுங்க” என்றவன், கையில் இருந்த மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்க,
“அம்மாடி வேதா.. இங்க வாடா..! சம்மந்தி வந்திருக்காங்க பாருமா!” என்று அழைத்தார் ராமச்சந்திரன். தனக்கு அருகில் கேட்ட குரலில் நிமிர்ந்தான் ரகு.
தந்தையின் அழைப்பில் அங்கு வந்தவளின் முகம் பிரகாசமாய் ஜொலிக்க, அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டவன்,அவள் பார்வை செல்லும் திசையில் பார்த்தான். அங்கே இன்னும் ஒரு மாத காலத்தில் அவளுக்கு கணவனாகப் போகும் நந்தகுமாரும், அவனின் பெற்றோரும் வந்து கொண்டிருந்தனர்.
“வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி” என்று முகம் மலர அவர்களை வரவேற்றவள், நந்தகுமாரை பார்த்ததும் “வாங்க..!” என்று வெட்கப் புன்னகையுடன் வரவேற்க, அவளின் முகம் சிவந்து, அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.
“யு லுக் வெரி கார்ஜியஸ் வேதா ” என்றான் நந்தகுமார் ரசனையுடன். அவளுக்கு சற்றும் குறைவில்லாத அழகில் இருந்தான் அவனும். நல்ல நிறத்தில் இருந்தவனின் அழகிற்கு அவன் அணிந்திருந்த கண்ணாடி மேலும் அழகு சேர்த்தது.
“தேங்க்ஸ்!” என்று வெட்க புன்னகையுடன் கூறியவள்..
“வாங்க..! உட்காருங்க! குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” என்று கேட்க,
“நோ..நோ..! அதெல்லாம் வேண்டாம். நோ பார்மாலிட்டிஸ்..” என்றான்.
“உட்காருங்க மாப்பிள்ளை..” என்று ராமச்சந்திரன் அவர்களை உபசரிக்க, அங்கிருந்து செல்வதா? வேண்டாமா? என்ற யோசனையுடன் இருந்த வேதாவை காப்பாற்றினார் காதம்பரி.
“வேதா இங்க வாம்மா..! இந்த அட்சதையை எல்லார்கிட்டயும் கொடு..” என்று சொல்ல, அவ்விடம் விட்டு நகர்ந்தாள். ஆனால் நந்த குமார் பார்வை மட்டும் அவளை விட்டு நகரவேயில்லை. இதையெல்லாம் கவனித்த ரகு,’அடுத்த கல்யாண ஜோடி போல’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஏனோ வேத வர்ஷினி முகம் மட்டும் அவனறியாமல் அவன் மனதில் பதிந்து போனது. அவளுக்கோ நந்தகுமாரைத் தவிர யாரையும் தெரியவில்லை.
“பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்ற குரலில், மெரூன் வண்ண பட்டு உடுத்தி, மணப்பெண்ணிற்குரிய முழு அலங்காரத்துடன் அழகியாய் வந்து நின்ற கீர்த்தனாவையே சரண் பார்த்துக் கொண்டிருக்க, அவனை பார்த்திருந்த ரகு ரசனையுடன் சிரித்துக் கொண்டான்.
‘கல்யாணம்னு வந்துட்டாலே எல்லாரும் இப்படித்தான் ஆகிடுவாங்க போல..!’ என்று தனக்குள் நினைத்தவன், அந்த நிமிடங்களை முழுமையாக ரசித்திருந்தான்.
நாத்தனார் முடிச்சை கனியே போடட்டும் என்று வேதா அமைதியாக நிற்க, கனிமொழியோ இவளே போடட்டும் என்று அமைதியாக நிற்க,
“இப்ப யாராவது போடுறிங்களா? இல்லை மூணாவது முடிச்சையும் நானே போடட்டுமா?” என்று சரண் அதட்டலாய் கேட்க, வேறு வழியின்றி கனியை முறைத்துக் கொண்டே வேதாவே நாத்தனார் முடிச்சை போட்டிருந்தாள்.
“ஏண்டி அவளுக்கு விட்டுக் கொடுத்த?” என்று நீலாவதி பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,
“ம்மா..! சரணுக்கு எப்பவும் அவதான் செல்ல தங்கச்சி. அது எல்லாருக்கும் தெரியும். அதான் அவளே போடட்டும்ன்னு விட்டுட்டேன். என் தம்பி கிரிக்கு வர போற பொண்டாட்டிக்கு தான் நான் நாத்தனார் முடிச்சை போடுவேன். சரண் என்ன என் கூடப் பொறந்தவனா?” என்று பேசி, நீலாவதியின் மகள் என்பதை நிரூபித்தாள் கனிமொழி.
மனோகரனும் அவனின் மனைவி சந்தியாவும் எதிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருக்க,
“மனோ..! தாலி கட்டியாச்சு. நீ அங்க பந்தி வைக்கிற இடத்துக்கு போய் பார்த்துக்கப்பா. நம்ம ஒரு ஆள் அங்க இருக்கணும்” என்று ராமச்சந்திரன் கூற, சந்தியாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.மனைவியின் முகத்தைப் பார்க்காமல் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அங்கிருந்து சென்றான் மனோகரன்.
“நம்ம இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கவே கூடாது. பாருங்க, உங்க தம்பிக்கு எப்பவும் உங்க அண்ணன் குடும்பம் தான் பெருசு. நம்மளை ஒருத்தரும் மதிக்கிறது இல்லை” என்று நீலாவதி தனது கணவர் சிவச்சந்திரனிடம் புலம்ப,
“என் தம்பி அப்படி நினைக்க மாட்டான். நம்மளா ஒதுங்கியிருந்தா அவன் என்ன செய்வான்? எனக்கும் அண்ணனுக்கும் தான் ஆகாது. அதுக்காக என் தம்பியை விட்டுக் கொடுக்க முடியாது. நான் போய் வந்திருக்கவங்களை கவனிக்கிறேன் ” என்று பட்டென்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவச்சந்திரன்.
ஏனோ ராமச்சந்திரனை பிரித்ததைப் போல தம்பி பாலச்சந்திரனை அவரால் பிரிக்க முடியவில்லை நீலாவதியால்.முன்னால் மைதிலியுடன் சேர்ந்து அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்த காதம்பரியை பார்க்கும் போது நீலாவதிக்கு திகுதிகுவென மனதிற்குள் எறிந்தது.