அந்த வயதில் மாமாவின் வீடு இருக்குமிடம் அரக்கோணம், அது சென்னை இல்லை என்று மணியின் மனத்தில் பதியவில்லை. (readers, இன்னைக்கு அரக்கோணம் சென்னை மெட்ரோபாலிட்டனைலே வருது) அவளை அழைத்து வருவதற்கு முன்பு தான் அரக்கோணம் அருகே புது வீடு கட்டி குடியேறி இருந்தார் சிவமூர்த்தி. பெரிய மகள் அகிலாவை சித்தூரிலும் சின்ன மகள் இந்திராவை வேலூரிலும் மணமுடித்துக் கொடுத்திருந்தார். பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்தபடி தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருந்தான் உத்தம். மாமாவின் குடும்பத்தினர் அனைவரும் தரவரிசைப்படி தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்ற நான்கு மொழிகளும் சரளமாக பேசினர். எனவே காவேரி மாமி தெலுங்கு என்று ஞானம் விதைத்த பய வித்து சொத்தையாகிப் போக, மாமாவின் குடும்பத்தினரோடு பழக மணிக்கு மொழி தடையாக இருக்கவில்லை.
அகிலா அக்காவின் புகுந்து வீட்டினர் அனைவரும் பெரும்பாலும் தெலுங்கில் தான் உரையாடுவார்கள். அக்கா மட்டும் தான் அழகாக தமிழ் பேசுவார் என்று அவர்களே அவர்கL வீட்டு மருமகளின் மொழிப் புலமையை மெச்சிக் கொள்வார்கள். அதில் என்ன அழகு இருக்கிறது என்று அதைக் காது கொடுத்து கேட்டு, கேட்க முடியாமல் காதைக் பொத்திக் கொண்டு போனவர்களுக்குத் தான் தெரியும். திருமணத்திக்று பின் இந்திரா அக்காவின் தமிழ் கொஞ்சம் போல் தரம் பெற்றிருந்தது. வேலூரில் வாழ்க்கை அமைந்ததால் பந்தயத்தில் தமிழ் முந்திக் கொள்ள, தெலுங்கு பின்தங்கிப் போனது. உத்தமிற்கு எந்த மொழி சரளமாக வருமென்று மணிக்குத் தெரியாது. எது பேசினாலும் சரியாகப் பேசுவது போல் தான் தோன்றியது. அவனுடைய தமிழ் மாமாவினுடையது போல. மாமாவின் வாயிலிருந்து அவளுக்குத் தெரியாத, உபயோகத்தில் இல்லாத வார்த்தைகள் சரளமாக வரும். அதாவது பிறந்த நாட்டை விட்டு வெளி இடங்களுக்குப் போனாலும் அதன் புனிதத்தை இழக்காத பரிசுத்தமான தமிழ் மாமாவினுடைய தமிழ். அதன் நம்பி தான் அவளின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் ஞானம் சித்தி.
சிவமூர்த்தி காவேரி டெல்டாவை சேர்ந்தவர். காவேரி மாமியும் காவேரிக் கரையைச் சேர்ந்தவர் தான். அதனால் தான் அவருக்கு காவேரி என்று பெயர். ஆனால் சிவமூர்த்தியைதி திருமணம் செய்யும் வரை காவேரியைப் பார்த்ததில்லை காவேரி.அவர் பார்த்தது வறண்ட பென்னார், கேட்டது ’பென்னெட்டி பாட்டா’(Penneti Paata). பென்னார் நதிக் கரையில் பிறந்து, வளர்ந்த காவேரியோடு சிவமூர்த்தி இணந்தாலும் அவரது தமிழுக்கு அழகு சேர்க்க முடியவில்லை ஆனால் சிவமூர்த்தியின் அழகு தமிழுக்கு காவேரியின் சுந்தரத் தெலுங்கு துணையாகியது.பிறந்த மண் மனதுள் நிரந்தரமாக வாசம் வீசிக் கொண்டிருந்தாலும் பிழைப்பிற்காக வந்த மண் தான் நிரந்தரமான வாசச் ஸ்தலமானது சிவமூர்த்திக்கு. நல்லது, கெட்டது அனைத்தும் சாட்சியானது.
மகள்கள் இருவருக்கும் அவர் நினைத்தபடி நிறைவானதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்க, அதே போல் மகனுக்கு செய்ய நினைத்தது இப்போதுவரை நினைப்பாக மட்டும் இருக்கிறது. அவனை அவரது கைக்குள் அடக்கி வைக்க, கண்களுக்குள் பொத்தி வைக்க முடியவில்லை. அவனது படிப்பை முடித்தவுடன் அவர்களின் கல் வியாபாரத்தை உத்தமின் கையில் ஒப்படைக்க, மொத்த வியாபாரத்தையும் விற்று விட்டான் உத்தம். பலரது வாழ்க்கையில் மண் அள்ளிப் போடும் கல் வியாபாரத்தை தொடர உத்தமிற்கு விருப்பமிருக்கவில்லை. கிட்டதட்ட முப்பது வருட வாழ்க்கையை கல் குவாரியில் கழித்திருந்த மூர்த்திக்கும் அதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க விரும்பிய காவேரியும் மகனது விருப்பத்திற்கு தடை சொல்லவில்லை. அவன் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை செய்ய அனுமதி அளித்தார்.
சிவமூர்த்திக்கு தான் அவரது ஒரே மகனை பிரிந்து வாழ்வது கடினமாக இருந்தது. வாழ்க்கையை வளமையாக்க, வியாபாரத்தை பெருக்க, குடும்பத்தினரைப் பிரிந்து இளமைக் காலத்தில் ஓடி ஓடி உழைத்தவருக்கு முதுமைக் காலம் தனிமையில் கழிந்து கொண்டிருந்தது. இருபத்திநாலு மணி நேரமும் அவர் வீட்டில் இருந்தாலும் மனைவியின் அருகாமை, அரவணைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. மகள்கள் இருவரும் மாற்றி மாற்றி ஏதாவது ஒரு காரணத்திற்காக பிறந்த வீட்டிற்கு வருகை அளித்தனர். பெரியவள், சிறியவள் இடையே இயற்கை ஏற்படுத்திய பேதத்தால் எப்போதும் சண்டை, பஞ்சாயத்து என்று நிம்மதி இல்லாமல் கழிந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் சொத்தைப் பிரித்து கொடுத்து மன நிம்மதியோடு மீதி காலத்தை வாழ வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார். அந்த எண்ணங்களுக்கு ஊடே அவரது உள்ளத்தை பெரிதும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது மீனாட்சி, மணி இருவரின் எதிர்காலம். மணிக்கு எப்படியும் சாரதி இருக்கிறான். அவருக்கு பின் மீனாட்சியின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி அவரது உறக்கத்தைக் களவாடியிருந்தது. மணி, அர்ஜுன் பொறுப்பை சாரதியிடம் ஒப்படைத்து விடமென்று மூர்த்தி எடுத்திருந்த முடிவைப் பற்றி மணி அறிந்திருக்கவில்லை. தற்போது உத்தம் பெங்களூருக்கு குடிபெயர்ந்திருப்பது அவருக்கு நம்பிக்கை அளித்து அவரது மன உளைச்சல்களை ஓரளவிற்கு குறைத்திருந்தது
கல் குவாரிகள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தன. மத்திய, மாநில அரசங்காத்தின் புது விதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலையீடு என்று நிறைய இடர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பல வருடங்களாக அதே தொழிலில் இருந்த சிலர் வேறு தொழிலுக்கு மாற முயற்சி செய்து கொண்டிருந்தனர். பூமியை பிளக்காமல், மலையை உடைக்காமல், சுற்றுப்புறத்தை சீரழிக்காமல் எப்படிப் பெரிய மலையிலிருந்து சிறிது சிறிதாக கல்லை வெட்டி எடுத்து, பாலீஷ் போட்டு விற்பது என்று யாருக்கும் புரியவில்லை. ஆனாலும் யாரும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. அனைத்தும் அரசாங்கம் விதித்திருந்த விதிப்படி தான் நடக்கிறது என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தனர். மூச்சுத்திண்றல், மூச்சடைப்பு, வயிற் கோளாறு, கண் பார்வை குறைவு என்று பல வியாதிகளும் இடையே எப்போதும் போல் திருமணம், குழந்தை என்று அடுத்த தலைமுறையை அதே பாதையில் கொண்டு வந்து சேர்த்தார்கள் தெரிவு (choice) என்று ஒரு பதார்த்தத்தை ருசித்திராத, அனுபவித்திராத சாமானியர்கள்.
அந்தப் பதார்தத்தின் சுவையை அனுபவித்த வர்க்கத்தைச் சேர்ந்தவன் உத்தம். ஆனாலும் பல தலைமுறைகளாக செய்து வந்த தொழிலை கைவிட பெரும்பாலோர் தயாராக இல்லை. சிவமூர்த்தியின் தொழிலைத் தொடர உத்தம் தயாராக இல்லை. அவனது ஆற்றல் மீது அபார நம்பிக்கை இருந்ததால் குடும்ப வியாபாரத்தை மொத்தமாக விற்று தலை முழுகிய பின் அந்தப் பக்கம் கூட அவன் திரும்பிப் பார்க்கவில்லை. புதுப் பாதையில் தனியாகப் பயணத்தை மேற்கொண்டவன் இன்று அவர்களின் குடும்பத் தொழில் மூலம் அவனுடைய தந்தை சம்பாதித்ததை விட பலமடங்கு சம்பாதித்து விட்டான். சில காலமாக அந்தப் பயணத்தில் சுவாரஸியம், சவால்கள் குறைந்து போக இப்போது மீண்டுமொரு புதுப் பயணத்தை ஆரம்பிக்கப் போகிறான். அதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. பெற்றோருடன் கலந்தலோசிக்கவில்லை. ஒரு செயலை உலகமே ஒரு வழியில் செய்தால் அதே செயலை வேறு வழியில் தான் செய்வான் உத்தம். யாருக்குமே அடங்காத மகனுக்கு எப்படி புருஷோத்தம் என்று பெயர் வைத்தோமென்று காவேரி அங்கல்யாக்கயாத நாளில்லை.
இரண்டு பெண்களுக்குப் பின் வாரிசாக பிறந்த ஆண்பிள்ளையைக் தலையில் வைத்துக் கொண்டாடினார் காவேரி.ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் இல்லை அவருடைய மகன். வாரிசாக இருந்தாலும் அவரது வார்த்தைக்கு செவி சாய்த்ததில்லை. அவனொரு ரிஸ்க் டேக்கர், டைனமோ, லைவ்வயர். எந்த நேரத்தில் அவன் என்ன செய்வானென்று அவனைத் தவிர யாராலும் கணிக்க முடியாது. அவனைப் பெற்றதிலிருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அலைகிறார் காவேரி. அவனது செயல்கள் அனைத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் வகையில் சேர்த்து விடுவார். முரட்டு மகனின் முரணான நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு நியதியை அதாவது உத்தம நியதியை சார்ந்து இருந்ததை அவர் உணரும் தருணம் இதுவரை வரவில்லை. மகனின் சில செயல்களை சிவமூர்த்தி ஏற்றுக் கொண்டாலும் அவர் சொல்வதைத் தட்டாமல் செய்யும் பிள்ளை அவருக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. தாயும் தந்தையும் உயிரோடு இருப்பதால் அக்காக்கள் இருவரும் தம்பியைப் பெரிதாக கொண்டாடுவதில்லை. சிறப்பாக, அதாவது அவனுக்காக என்று எதையும் செய்ததில்லை. அதற்காக சகோதரிகள் மீது பாசம் இல்லாதவனில்லை உத்தம். அவன் அதைக் காட்டும் விதம் வேறு.பாசம் மட்டுமில்லை கோபம், கருணை, பரிவு, ஆசை அனைத்தும் உத்தமிடமிருந்து வெளிப்படும் போது வித்தியாசமாக தான் இருக்கும்.
கடந்து போன வருடத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவள் அப்படியே கடைக்கண்ணால் பக்கத்து இருக்கையைப் பார்க்க, புத்தகத்தில் தீவிரமாக இருந்தான் உத்தம். லேசாக தலையை உயர்த்தி முன்னே, பின்னே, அக்கம் பக்கம் என்று விமானத்தைப் பார்த்தவளுக்கு வியப்பாக இருந்தது. ‘நிஜமாவே விமானத்திலே உட்கார்ந்திருக்கோமோ?’ என்று சந்தேகம் வர, அந்த நொடி மேலும் கீழுமாக விமானம் ஆடியதில் அது காணாமல் போனது. முதல் விமானப் பயணத்தை அனுபவிக்க முடியாமல் அவளது மண்டையில் காவேரி மாமி வீற்றிருந்தார். ‘இது தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ’ என்று அச்சம் கொண்டாள். அர்ஜுனை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள மாமி அனுமதி அளித்ததிலிருந்து அவருக்கு மேலும் கடமைபட்டவளாகி விட்டாள் மணி. சாரதி வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்றாலும் மாமியின் கட்டளைக்கு இணங்கி அர்ஜுனையும் அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்றாள். அங்கே போன பின் தான் லயாவைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி வேலையை விட்டுச் சென்றது சாரதியின் மூலம் தெரிய வந்தது.
அழுக்கு உடை, அழுத முகத்தோட லயாவைப் பார்த்ததும் இரக்கம் ஏற்பட, அன்னையாக லயாவை அரவணைத்துக் கொண்டாள். இரண்டு நாள்கள் கழித்து அவளோடு ஒன்றி விட்ட லயாவைக் காரணம் காட்டி அவளை நிரந்தரமாக அவனோடு வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதை அவளுக்கு தெரியப்படுத்த, முடியாதென்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாமல் மாமியின் பக்கம் அதைத் தள்ளி விட்டாள். ‘சாரதியோட திட்டம் தெரியாம இவங்க என்னவோ ஹாலிடேவே கெடுத்திட்டேன்..திரும்ப வரும் போது கூட்டிட்டு வரேன்னு உளறிட்டு இருக்காங்க..மாமிக்குத் தெரிய வந்தா என்னைக் கண்டதுண்டமா வெட்டிப் போட்டிடுவாங்க..இவங்க என்ன சொல்லுவாங்க?’ என்று உத்தமின் எதிர்வினையைப் பற்றி கேள்வி வர, அவன் புறம் பார்வையைத் திருப்ப, புத்தகம் மடிமீது வீற்றிருக்க, கைப்பேசி கைகளில் வீற்றிருந்தது.
‘திரும்ப கேட்கலாமா?’ என்று அவனை அவள் உற்றுப் பார்க்க, திடீரென்று கைப்பேசியிலிருந்து வழிகளை உயர்த்தி,’என்ன?’ என்று அவளிடம் பார்வையில் கேட்க, ‘நிச்சயதார்த்தம் உங்களுக்கா?’ என்று அவளது மனத்தில் கேள்வி வர, அதைக் கேட்க தைரியம் இல்லாமல், அதை கேட்கமால் இருக்க முடியாமல்,
“யார் வீட்டிலே ஃபங்ஷன்?” என்று கேட்டாள் மணி.
அந்தக் கேள்விக்கு உடனே பதில் அளிக்காமல் சில நொடிகளுக்கு அவளது முகத்தை ஆராய்ந்தவன்,“வீட்லே இல்லை..மண்டபத்திலே.” என்று சுருக்கமாக பதிலளித்தான்.
அந்தப் பதிலில் ‘அப்போ இவங்களோட நிச்சயதார்த்தம் தானா? ஒரே மகனோட கல்யாணத்தை பிரம்மாண்டமா செய்வேன்னு மாமி சொன்னது நடக்குது போல.’ என்று மனம் சுணங்க, அடுத்த நொடி,’பைத்தியம் பிடிச்சிருக்கு உனக்கு.’ என்று அவள்து மனத்தைச் சாடியவள் அதற்கு மேல் விசாரணையைத் தொடராமல் வாயை மூடிக் கொண்டாள் மணி. கடந்த சில வருடங்களாக உத்தமின் திருமணத்தை அனைவரும் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காவேரி மாமியின் செல்ல மகன், அகிலா, இந்திராவின் அன்புத் தம்பி, சிவமூர்த்தி மாமாவின் ஒரே வாரிசு, நல்ல குடும்பம், நல்ல வசதி, நல்ல படிப்பு, நல்ல வேலை என்று கல்யாணச் சந்தையில் உத்தமிற்கு சாதகமாக அனைத்தும் நல்ல விதமாக இருக்க, அவனுக்கு தான் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமிருக்கவில்லை.
கல்லூரி படிப்பை முடித்து கொண்டு மாமா வீட்டோடு மணி இருக்க ஆரம்பிப்பதற்கு முன்பே வெளிநாட்டில் வசித்து, வேலை பார்த்து வந்தான் உத்தம். மகன் வெளி நாட்டில் இருந்தது காவேரிக்கு பெருமையாக இருந்தாலும் கல்யாணத்திற்கு பிடி கொடுக்காமல் இருக்கும் மகனால் சமீபக் காலமாக மனத்திலொரு சஞ்சலம். ஒரு வேளை அங்கேயே ஏதாவது விருப்பம் ஏற்பட்டு விட்டதோ என்று கவலையானவர் அவரது அந்தக் கவலையை தினம் தினம் மகனிடம் இறக்கி வைக்க, எத்தனை முயன்றும் அம்மாவின் சுமையை காணாமல் போகச் செய்ய முடியாமல், வார்த்தையால் அவரை சமாதானம் செய்ய முடியாமல் இறுதியில் பெங்களூருக்கு மொத்தமாக வந்துவிட்டான் உத்தம். இந்தியா திரும்பி வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தாலும் வீட்டுக்கு செல்ல அவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. பெங்களூர் வந்து அவனைச் சந்திக்க அவன் அனுமதிக்கவில்லை. ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருந்த மகனை நேரடியாக கேள்வி கேட்க முடியாமல், மகன் சொல்லும் காரணங்களில் சமாதானம் அடையாமல், என்னவோ ஏதோயென்று ஓயாமல் சளசளத்துக் கொண்டிருந்தது காவேரியின் மனது.
அமைதியான விமானப் பயணம் ஒருவழியாக முடிவிற்கு வந்தது. திருப்பதியில் விமானம் தரையிறங்கிய போது இந்த முறை அவளது பயத்தைப் போக்க அர்ஜுனின் கையைப் பற்றிப் கொண்டாள் மணி. வீடு, விழா பற்றிய சிந்தனையில் இருந்த உத்தம் அதைக் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை. டாக்ஸிக்காக விமான நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. டாக்ஸி வந்ததும் அர்ஜுன், மணியைத் தொடர்ந்து உத்தமும் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தான். முதலில் அர்ஜுன் ஏறிக் கொள்ள, அவனுக்கு அடுத்து அவளுடைய பையோடு ஏறிய மணி, அவளுக்கு பின்னால் ஏறிய உத்தமைப் பார்த்து வியப்படைய, அதைக் கண்டு கொண்டு,”என்ன?” என்று அவன் விசாரிக்க,
’ஒண்ணுமில்லை’ என்று தலையசைவில் பதிலளித்த மணியின் மனது,’என்ன டா நடக்குது இங்கே?’ என்று ஆராய்ச்சியில் இறங்கியது.
வீட்டிலிருந்து வண்டி வந்திருக்குமென்று நினைத்தாள் மணி. டாக்ஸி என்றவுடன் பெங்களூரில் நடந்தது போல் அவன் முன்பக்கம் அமர்வான் என்று அவள் நினைக்க, அவனோ பின்பக்கம் இவர்களோடு அமர்ந்து விட்டான். ஏன்யென்று அவளால்கேட்க முடியவில்லை. உத்தமும் தானாகவே விளக்கம் கொடுக்கவில்லை. காரணம் இருந்தால் தானே சொல்ல முடியும். ஓட்டுநருக்கு அருகே அமர அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏனோ விமானத்தில் அமர்ந்தது போல் மணி அருகே அமர வேண்டுமென்று அவனது மனது பரபரத்தது. ‘என்ன டா நடக்குது இங்கே.’ என்று அவனது மனத்தை ஆராய்ந்தபடி அமைதியாக இருந்தான் உத்தம்.
**************
Vidhwan Viswam’s penneti paata which means “a song of River Penna” is very popular in Andhra Pradesh and in Raayala Seema in particular. (Source : wikipedia)
Telangana State ஐந்து இல்லை நாலாம் வகுப்பு பாடப் புத்தகத்திலே இந்தப் பாட்டு வருது. கல்லூரி பாடத் திட்டத்திலேயும் இருக்கு. பென்னார் நதியைப் பற்றியது.
*******************************
ராயலசீமா பகுதிலே, நந்தியால் மாவடத்திலே ‘belum caves’ nu பூமிக்கு கீழே, பாதாளத்திலே பெரிய குகை இருக்கு. இது ஒரு காலத்திலே அங்கே ஓடின சித்ராவதி ஆறு ஏற்படுத்தியது. இப்போது அந்த ஆறும் இல்லை.ராயலசீமாலே நிறைய சுவாரஸியமான rock formations இருக்கு.
The Belum Caves, located in Nandyala district of Andhra Pradesh’s Rayalaseema region, is the second largest cave system on the Indian subcontinent, known for its speleothems, such as stalactite and stalagmite formations. The Belum Caves have long passages, galleries, spacious caverns with fresh water and siphons. This cave system was formed over the course of tens of thousands of years by the constant flow of underground water from the now-disappeared river Chitravathi. (Source : wikipedia)