அத்தியாயம் – 5_1

பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் மணியின் பேச்சு சத்தம் விழுந்தது. கண்களைத் திறந்து அவனருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளோ சாளரத்தின் கதவை மேலும் கீழுமாக இழுத்து விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுனை அதட்டிக் கொண்டிருந்தாள். 

“அதோட விளையாடாதே.” என்று உத்தம் அதட்டியவுடன், கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருக்கையில் சாய்ந்து கொண்டான் அர்ஜுன்.

“தாங்க்ஸ்” என்று அவனுக்கு நன்றி சொன்ன மணியிடம்,”ஸ்கூல் லீவ்க்கு சாரதி வீட்டுக்கு வந்திருந்தேயா?” என்று கேட்டான்.

’ஆமாம்’ என்று தலையசைத்தாள் மணி.

“சாரி..சாரதியோடு இருக்கணும்னு பிளான் போட்டிருப்ப.. பாழாகிடுச்சு.” என்று உத்தம் அவனது வருத்தத்ததை வெளியிட, ‘நிரந்தரமா என்னை அங்கே வரவழைக்க சாரதி திட்டம் போடறது தெரிய வந்தா இவங்க என்ன சொல்லுவாங்க?’ என்ற யோசனைக்கு சென்றதால் அவனது அந்த வருத்தத்திற்குப் பதில் அளிக்கவில்லை. அந்த மௌனத்தை அவளது வருத்தமாக எடுத்துக் கொண்டவன்,

“நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே நான் பெங்களூர் வந்திடுவேன்..உங்களுக்கும் டிக்கெட் புக் செய்திடறேன்..ட்ரெயின்லே டிக்கெட் கிடைக்கலைன்னா நீங்க இரண்டு பேரும் என்னோட டாக்ஸிலே வந்திடுங்க…காலைலே எட்டு மணி போல புறப்பட்டோம்னா மதியத்துக்கு மேல சாரதி வீட்டுக்குப் போயிடலாம்.” என்றான்.

 ‘நிச்சயதார்த்தமா? யாருக்கு? இவங்களுக்கா? உடனே புறப்பட மாமி விடணுமே..எனக்காகன்னு சொல்லி கிளம்பப் போறாங்களா..நான் அமைதியா இருந்தா இவங்க பாட்டுக்கு என்னைக் கேட்காம ஏதேதோ ப்ரோகரம் செய்யறாங்க..டிக்கெட் போட்டிடப் போறாங்க.’ என்று பயந்து, அவளது வாயைத் திறந்து,”இல்லை..நீங்க..” என்ற இரண்டு வார்த்தைகளுக்குப் பின் பெரும் இடைவெளி விட்டவள் எப்படியோ அவளைச் சமன் செய்து கொண்டு,” வேணாம்.” என்று ஒரு வார்த்தையில் திடமாக மறுப்பு தெரிவித்தாள்.

அவளை ஒரு நொடிக்கு ஆழ்ந்து பார்த்தவன் அதற்கு மேல் அந்த உரையாடலைத் தொடராமல், அவர்களெதிரே இருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். கடந்த வருடத்தில் நடந்த அனைத்தையும் மனத்தில் புரட்ட ஆரம்பித்தாள் மணி. 

அவளுக்கும் சாரதிக்கும் பேச்சு வார்த்தை வெகுவாக குறைந்து போயிருந்தது. சரியாகச் சொல்லப் போனால் அர்ஜுனை அவளுடன் அழைத்து வந்ததிலிருந்து அண்ணன், தங்கை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இப்போதும் கிட்டதட்ட இரண்டு வாரங்களாக சாரதியின் வீட்டில் அவளும் அர்ஜுனும் தங்கி இருந்தாலும் தேவைக்காக மட்டும் தான் பேச்சு வார்த்தை நடந்தது. ஆரம்பத்திலிருந்து அர்ஜுனுடன் அவனுக்கு எந்த ஒட்டுதலும் இருக்கவில்லை. அதனால் தான் அவனை சித்தப்பா சிதம்பரத்தின் உறவுகளிடம் தள்ளி விடத் தயாராக இருந்தான் சாரதி. அவளுடன் அவனை வைத்துக் கொள்ளப் போவதாக அவளது முடிவை தெரிவித்த போது,’நீ அழைச்சிட்டுப் போனா உன் பாடு அவன் பாடு..என்னை எதுக்கும் எதிர்பார்க்காத..மாமி கேட்டாலும் இதே பதில் தான் கொடுப்பேன்.’ என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் உரைத்தவன் தான் இப்போது அர்ஜுனுக்காக பள்ளிக்கூடம் தேடிக் கொண்டிருக்கிறான். அவர்கள் இருவரையும் அவன் வீட்டில் வைத்துக் கொள்ள ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான். 

உடன்பிறந்த தங்கையாக அவளையும் ஒன்று விட்ட தம்பியாக அர்ஜுனையும், இரத்த உறவாக அவர்களை ஒருபோதும் அவன் பார்க்கப் போவதில்லை என்று மணிக்கு தெரியும். லயாவைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவாக தான் அவளைப் பார்க்கிறான் என்று புரிந்தாலும் அதை அவனுக்குத் தெரியப்படுத்தி, அவன் செய்தது போல் முகத்தில் அடித்தாற் போல் மறுக்க மணியால் முடியாது. அவளுடைய சகோதரனைப் பற்றி நினைத்தாலே எப்படி அவளுடைய அப்பாவிற்கு சாரதி போல் ஒருவன் மகனாக பிறந்தான் என்று அவளுக்கு ஆச்சர்யம் தான் ஏற்படும். அவளுடை அப்பாவின் மனது காற்றில் இருக்கும் ஈரத்தை கூட உறிஞ்சி பிறருக்கு உபயோகமாக மாற்றும் தன்மை கொண்டது. மிகப் பெரிய நீர் நிலையை உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு வெளியே வறட்சி தன்மையக் காட்டும் மனது சாரதியினுடையது. ஒருவேளை அப்பாவின் அளப்பரிய ஈகை குணம் தான் அண்ணனின் இரக்கமில்லாக் குணத்திற்கு காரணமோ என்று சந்தேகம் வருவதுண்டு மணிக்கு. சாரதி எப்படி இருந்தாலும் அவளை எப்படி நடத்தினாலும் அவனுடன் பிறந்தவளென்பதால் அவனுக்கு அவள் மீது உரிமை இருக்கிறது.  அந்த உரிமையில் தான் இப்போது செயல்படுகிறான். எனவே, மாமியிடம் பேசி, அவரும் ஒப்புக் கொண்டு, இருவரும் சுமூகமான முடிவிற்கு வந்தால், வாயைத் திறக்காமல் அதற்கு கட்டுப்பட்டு விடுவாள் மணி. 

லயா பிறந்த போது அவளால் சாரதிக்கு உதவி செய்ய முடியவில்லை. அர்ஜுனைக் கவனிக்க வேண்டியிருந்தது. புதுப் பள்ளி, புது இடமென்று அட்ஜெஸ்ட் செய்து கொள்ள அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது. காய்ச்சல், பசியின்மை, உடல் மெலிவு, மனச் சோர்வு என அவளைப் படுத்தி எடுத்து விட்டான் அர்ஜுன். அதனால் தான் பல்லவி எத்தனை வருந்தி அழைத்தும்,’சின்னவனுக்கு உடம்பு சரியில்லை..அவனைப் பார்த்துக்கறதே அவளுக்கு பெரிய விஷயமா இருக்குது..மீனாவும் உதவி செய்யறதாலே தான் வண்டி ஓடுது…குழந்தை பிறந்த பிறகு தான் உதவி தேவைப்படும்னு சொன்ன இப்போ பிரசவத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்ற..பிரசவங்கறது மாசம் மாசம் வர்ற இரத்தப் போக்கு மாதிரியா?இவளே சின்ன பொண்ணு அதையெல்லாம் பார்த்தா பயந்துக்குவா..சரி வராது..நீ உங்க வீட்டு ஆளுங்களை வரவழைச்சுக்கோ.” என்று அவளை பெங்களூருக்கு அனுப்பி வைக்க மறுத்து விட்டார் காவேரி. மாமியின் காரணத்தை கேட்ட பின் அவளுக்குமே பிரசவத்திற்கு போக பிடிக்கவில்லை. ‘நல்ல வேளை, மாமியே மறுத்திட்டாங்க.’ என்று மாமிக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.

காவேரியின் மறுப்பினால் பல்லவிக்கு பெரும் ஏமாற்றம், கோவம். உடனே எதையும் செய்ய முடியாதென்று உணர்ந்து பொறுமையாக அர்ஜுனின் பள்ளி விடுமுறை வரை காத்திருந்தவள், இப்போது இருவரையும் நிரந்தரமாக அவர்களுடன் வைத்துக் கொள்ளும் திட்டத்துடன் மணியை வரவழைத்திருந்தாள். கடந்த சில மாதங்களாக தான் அர்ஜுன் சாதாரணமாக் இருக்கிறான். அவனது உடல் நிலையிலும் முன்னேற்றம் இருக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் புது இடம், புதுப் பள்ளி என்றால் அவனது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று மணியால் கணிக்க முடியவில்லை. அர்ஜுனை அழைத்து வந்த பின் மாமா வீடு மேலும் அந்நியமாகிப் போயிருந்தது. அவள் மட்டும் தனியாக இருந்த போது எப்படியோ சமாளித்துக் கொண்டவள் தம்பியை அழைத்து வந்த பின் அது போல் இருக்க முடியவில்லை. 

அர்ஜுனை விட மூன்று வயது பெரியவன் ஹரி. பெரியக்கா அகிலாவின் மகன். அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வருவதில்லை என்றாலும் இங்கே வரும் போதெல்லாம் பிரச்சனை தான். சாப்பாடு, விளையாட்டு, உறக்கம் என்று எல்லாவற்றிற்கும் இம்சை தான். அர்ஜுனுக்கும் அவனுக்கும் ஆகவில்லை. அமைதியாக இருந்தவனை சீண்டி சந்தோஷம் அடைந்தான் ஹரி. வாயைத் திறக்காமல் அவனைச் சகித்துக் கொண்ட அர்ஜுனைப் பார்த்து அவளது மனம் வேதனை அடைந்தது. ஹரி வரும் போது அவனிடமிர்ந்து அர்ஜுனைக் காப்பாற்றும் பொருட்டு அவனை அவளுடனே வைத்திருந்தாள். அப்படியும் ஒரு சில சமயங்களில் அவளது பாதுகாப்பு கவசத்தை உடைத்து, அர்ஜுனிடம் வம்பு செய்வான் ஹரி. வீட்டில் இருந்த அனைவர்க்கும் அது தெரிந்திருந்தாலும் யாரும் அவனைக் கண்டித்ததில்லை. ஒருமுறை மூர்த்தி மாமா கவனத்தில் அது விழ, பேரனை அவர் கடிந்து கொள்ள,’உங்களுக்கு ஊர்லே இருக்கறவங்க தான் முக்கியம்..நாங்க முக்கியமில்லை..கணக்கு பார்க்காம மத்தவங்களுக்கு செலவழிச்சு தான் இன்னைக்கு இப்படி இருக்கோம்..அம்மா மட்டும் சாமர்த்தியமா இருக்கலைன்னா ரோட்லே தான் இருப்போம்.’ என்று அவளுடைய அப்பாவிடம் மரியாதை இல்லாமல் பேசினாள் அகிலா.

ஒரே பேரன் என்ற பாசத்தில் கட்டுண்டு கிடந்ததால் ஒரு வார்த்தை கூட மகளை, பேரனை அதட்டாமல் அமைதியாக காவேரி இருக்க, மனம் வெறுத்துப் போன மூர்த்தி அதன் பின் பேரன் விஷயத்தில் தலையிடுவதை நிறுத்தி விட்டார்.  மணியை அழைத்து,’என் பேச்சுக்கு அகிலாகிட்டே மரியாதை இல்லை..ஒரே பேரன்னு உன்னோட மாமியும் அவனை எதுவும் சொல்ல மாட்டா..நீ தான் அர்ஜுனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்.’ என்றார்.

இப்போதெல்லாம் மாமாவின் பேச்சுக்கு மதிப்பேயில்லை. ஒரு காலத்தில் தாடிபத்ரியில் (tadipatri, a town near cuddapah’s limestone belt) சிவமூர்த்தியை அறியாதவர்கள் இல்லை. காவேரி மாமியின் அப்பாவுடன் சேர்ந்து கடப்பா கல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் மாமா. சில வருடங்களுக்கு முன்பு கூட வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார். கடப்பா, ராஜம்பேட் டவுன்களில் நிலம், வீடு என்று மாமிக்கு சொத்து இருந்தது. முதன்முதலில் மாமி பேசியத் தமிழைக் கேட்ட அவளுடைய சித்தி அவர் தமிழர் இல்லை என்று தோன்ற, மணியின் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். 

ஆந்திராவைச் சேர்ந்தவர்களை நம்ப முடியாதென்று முகத்திற்கு நேரே சொல்லி விட்டார். அந்த எண்ணத்தை மாற்ற மாமியும் விரும்பவில்லை. வயது வந்த பெண்ணின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மாமா தான் பிடிவாதமாக இருந்தார். அவருடைய மனைவி எந்த ஊராக இருந்தாலும் அவர் இந்த ஊர்க்காரர் தான் என்று வலியுறுத்தினார். சென்னையிலிருந்து எழுபது கிலோமீட்டர்த் தூரத்தில் இருந்த அரக்கோணத்தை ஏழு கிலோமீட்டர் போல் சொல்லி, பணத்தால் அவர்கள் மனத்தைக் கரைத்து மணியை அவருடன் அழைத்து வந்து விட்டார்.