அத்தியாயம் – 4

விடிகாலையில் அவளுடனே எழுந்து கொண்டதால் அர்ஜுன் இப்போது உறக்கத்தைத் தழுவி இருக்க, அவள் மீது சாய்ந்து கொண்டவனை அவளோடு அணைத்துக் கொண்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மணி.

அவனது கைப்பேசியில் சென்னைக்கு டிக்கெட் தேடிக்  கொண்டிருந்த உத்தம்மிற்கு திருப்பதிக்கு டிக்கெட் இருப்பதாக தகவல் வந்தது. பழைய வீடாக இருந்தால் அந்தத் தகவலைப் புறக்கணித்து விட்டு சென்னைக்கு செல்லும் விமானத்தில் டிக்கெட் தேடுதலைத் தொடர்ந்திருப்பான். சென்னையின் எல்லைக்கு வெளியே காஞ்சிபுரம் அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரக்கோணத்திற்கு அருகே குடிபெயர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அவர்கள் வீட்டிலிருந்து சென்னை, திருப்பதி இரண்டு விமான நிலையங்களும் கிட்டதட்ட சம தொலைவு என்பதால், திருப்பதிக்கு டிக்கெட் எடுக்க முடிவு செய்தவன், பின்புறம் திரும்பி,“அந்தப் பைலே என்ன வைச்சிருக்க?” என்று மணியிடம் கேட்டான்.

அவளது எண்ணங்கள் வேறு திசையில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அவனது கேள்வி மணியிடம் போய்ச் சேரவில்லை. எனவே, அவனைக் கேள்வியாக நோக்க, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் உத்தம். அதற்கு,

 “துணிமணி.” என்றாள் மணி.

உடனே அவனுடைய கைப்பேசியை அவளிடம் கொடுத்து,”அதிலே இருக்கற எதுவும் அந்தப் பைலே இருக்கக் கூடாது..இருந்தா இங்கேயே தூக்கி போட்டிடு..புதுசா வாங்கிக்கலாம்.” என்றான்.

அவனது கைப்பேசியை வாங்கிப் பார்க்க, அதில், புகைப்படத்துடன் எந்த எந்த பொருள் விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதென்று ஒரு பெரிய பட்டியல் இருந்தது. அது எதுவும் அவளிடம் இல்லை. பேஸ்ட், ப்ரேஷ் கூட எடுத்து வருவதில்லை. இங்கே வந்தால் இங்கே ஒரு செட். அங்கே போனால் அங்கே ஒரு செட் என்று எங்கே போனாலும் சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்தடி என்று தினசரி தேவைகளோடு ஓர் இடுக்கு அவளது இருப்பிடமாக அவளுக்குத் தயாராக இருக்கும். 

கைப்பேசியை அவனிடம் திருப்பிக் கொடுத்தவள்,”அதிலே போட்டிருக்கற சாமான் எதுவும் என்கிட்டே கிடையாது.” என்று சொல்ல, 

அர்ஜுனுக்கும் அவளுக்கும் இடையே இருந்த சிறு பையைக் காட்டி,”அது என்ன?” என்று விசாரிக்க,

“டிஃபன், தண்ணீர்.” என்று பதில் அளித்தவள்,”அதையும் எடுத்திட்டுப் போகக் கூடாதா?” என்று அவனிடம் கேட்க,

“எடுத்திட்டுப் போகலாம்.” என்றான்.

விமான நிலையத்தை அடைந்தவுடன், அர்ஜுன், மணி இருவரின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு அங்கே இருந்த கௌண்டரில் அடுத்து திருப்பதிக்கு செல்லும் விமானத்தில் அவர்கள் மூன்று பேருக்கும் டிக்கெட் வாங்கினான் உத்தம். அதன் விலை தெரிந்திருந்தால், அது மாமிக்குத் தெரிய வந்தால் என்ன ஆகும் என்ற எண்ணமே.’நான் வரலை..எனக்கு விமானமெல்லாம் வேணாம்..எங்க இரண்டு பேரையும் பஸ்லே ஏத்தி விட்டிடுங்க..வேலூருக்கு போனா கூட போதும்..அகிலா அக்கா பார்த்துப்பாங்க.’ என்று அவன் காலில் விழுந்திருப்பாள். முதல்முறை விமான நிலையத்திற்கு வந்திருந்ததால் ஒரே இடத்தில் இத்தனை கார்களா என்று வியப்பில் விழிகளை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மணி. அவளருகே நின்றிருந்த அர்ஜுன் இங்கேயும் அங்கேயும் என்று அனைத்து திசைகளிலும் திரும்பி திரும்பி பார்த்து அந்த விமான நிலையத்தை அப்படியே மண்டைக்குள் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். 

விமான டிகெட்டை கையில் வாங்கியவன், அதே கையால் அர்ஜுனின் கையைப் பற்றிக் கொண்டான். “அக்கா” என்று அர்ஜுன் எதிர்க்க, அதைக் கண்டு கொள்ளாமல்,”நீ என் பின்னாடியே வா.” என்று மணிக்குக் கட்டளையிட்டு விட்டு அர்ஜுனோடு நடக்க ஆரம்பித்தான் உத்தம்.

பிறரின் கட்டளையைப் பின்பற்றுவது மணிக்குப் பழக்கமானது என்பதால் அவன் சொன்னபடி செய்தாள். வரிசையில் நின்று விமான நிலையத்தினுள் நுழைவது முதல் செக்யுரிட்டி செக் வரை அவளை வழி நடத்தி சென்றான் உத்தம். அவளின் பயணச் சீட்டு, அடையாள அட்டை, டிஃபன் பை மூன்றையும் அவளிடம் கொடுத்து விட்டு, அவளது பை, கைப்பேசி, அர்ஜுனின் அடையாள அட்டை மூன்றையும் வாங்கிக் கொண்டு, பெண்களுக்கான தனி வரிசையில் அவளை நிற்க வைத்து விட்டு ஆண்கள் வரிசையில் அர்ஜுனோடு நின்று கொண்டான். அவனும் அர்ஜுனும் பாதுகாப்பு சோதனை முடிந்து, அவர்களின் சாமான்களைப் பெற்றுக் கொண்டு மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். கிட்டதட்ட பத்து நிமிடங்கள் கடந்த பின்னும் மணி வந்தபாடில்லை. 

சாமான்களை அவனது காலருகே வைத்து விட்டு, கைப்பேசியில் உத்தம் பிஸியாக, அவனது கால்சராயைப் பற்றியபடி விமான நிலையத்தின் பிரம்மாண்டத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன். பெண்களின் வரிசை மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அக்காவைக் காணவில்லை என்று உணர சில நிமிடங்களானது. அதை உணர்ந்த நொடி, பதற்றத்துடன்,”அண்ணா” என்று உத்தமை அழைக்க, அது அவனிடம் போய்ச் சேரவில்லை. வீட்டின் கடைக்குட்டி உத்தம். அவனை யாரும் இதுவரை அண்ணா என்று அழைத்ததே இல்லை. அதனால் அந்த அழைப்பு மூளையைச் சென்றடையவில்லை. கொஞ்சம் குரலை உயர்த்தி, பேண்ட்டைப் பிடித்து இழுத்து,”அண்ணா, அக்கா எங்கே?” என்று கேட்டான் அர்ஜுன்.

கைப்பேசியில் கவனமாக இருந்தவனின் கவனத்தை கலைத்தது அர்ஜுனின் பதற்றமான குரலும் செய்கையும். பெண்கள் வரிசைக்குப் பார்வையைத் திருப்பினான் உத்தம். அங்கே அவள் இல்லை. அப்போ தான் சோதனை முடிந்து திரை மறைவிலிருந்து வெளி வந்த மணியிடம் அவளைச் சோதித்த பெண் காவலர் எதிர் திசையைக் காட்டி எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். ‘சரி, சரி’ என்று மணி அதற்கு தலையசைக்க, பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் போலீஸின் பார்வை பல தடவை மணியின் பாதத்திற்குப் பயணம் செய்தது. தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த உத்தமின் பார்வையும் அவளது பாதத்திற்கு செல்ல அதை உணர்ந்தார் போல் சட்டென்று புடவையைத் தழைத்துக் கொண்டாள் மணி. 

அந்தப் பாதையின் முடிவில், சிறிது தூரத்தில் உத்தம், அர்ஜுன் இருவரும் அவளுக்காக காத்திருந்தனர். ஏனோ மணிக்கு அவர்கள் தென்படவில்லை. அவளின் மனது சோதனைச் சாவடியில் நடந்ததை நினைத்துக் பார்த்துக் கொண்டிருந்தது. காலில் செருப்பில்லததற்குக் காரணம் சொல்லத் தெரியாமல் தடுமாறியதை நினைத்து கொஞ்சம் போல் கழிவிரக்கம், கூச்சம், கோபம் என்று பல வருடங்களாக அவள் மறைத்து வைத்திருந்த, மறந்திருந்த உணர்வுகள் வெளிப்பட்டு அவளை நிலைகுலைய வைத்திருந்தன. அந்த உணர்வுகளிருந்து மீண்டு அவற்றை மறுபடியும் மறைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அவளது கண்ணெதிரே இருந்தவர்களை அவள் சுத்தமாக பார்க்கவில்லை. எதையோ யோசித்தபடி பக்கவாட்டில் சென்று கொண்டிருந்தவளிடம் ஏதோ சரியில்லை என்று உணர்ந்த உத்தம் அவளை நோக்கி கை அசைத்தான். அவள் அந்தத் திசையைப் பார்த்தால் தானே. அர்ஜுன் தான் உத்தமின் கைகளை உதறி விட்டு மணியை நோக்கி ஓடியவன் அப்படியே பாய்ந்து சென்று அவளை இடுப்போடு அணைத்துக் கொண்டான். ‘இப்போதான் இங்கே என்னோட கையைப் பிடிச்சிட்டு இருந்தான்..எப்படி அதுக்குள்ளே அங்கே போனான்?’ என்று ஆச்சரியமடைந்தான் உத்தம்.

அவளது இடுப்பை இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தை உயர்த்தி, கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து, அவனைச் சமாதானம் செய்தபடி அர்ஜுன் வந்த திசையைப் பார்த்தாள் மணி. அங்கே உத்தமைக் கண்டதும்,”அக்கா எங்கேயும் போக மாட்டேன் டா..வா டா.” என்று ஒரு கையில் டிஃபன் பையைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையால் அவனையும் இழுத்துக் கொண்டு உத்தம் இருக்குமிடம் வந்தாள்.

மணியிடம் ஒட்டிக் கொண்டவன் மீது யோசனையாய்ப் பதிந்தது உத்தமின் பார்வை.  

டிஃபன் பையைப் பற்றியிருந்த கையால் அவனருகே இருந்த அவளது பையை எடுத்துக் கொண்டு மணி நிமிர, அவனது பையை எடுத்துக் கொள்ளாமல் அவளையே ஆராய்ந்து கொண்டிருந்த உத்தம்,”செக்கியுரிட்டிலே என்ன பிரச்சனை? உன்கிட்டே என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு திகைத்தவள்,’அந்தப் போலீஸ்காரி பேசிட்டு இருந்ததை இவங்க பார்த்திட்டாங்க போல.’ என்று சரியாக யுகித்தவள் அவளுடைய பிரச்சனையை எப்படிச் சொல்வது என்று யோசித்தவள்,”அது..” என்று ஆரம்பித்தவள் அதைத் தொடரமுடியாமல் தயங்க,”நம்மகிட்டே அதிக நேரமில்லை..என்ன விஷயம் சொல்லு.” என்று கட்டளையிட்டான்.